விவாகரத்து திரும்பப் பெறுதல்
இருமனம் கலந்தால் திருமணம். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஆயிரம் பொய் (ஆயிரம் பேரிடம் போய்) சொல்லி திருமணம் செய்து கொள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்றெல்லாம் சொல்லக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்துள்ளோம்.
திருமணமான பின்னர் தம்பதியரிடையே சந்தோஷம் இருந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் அது இல்லறம்.
தம்பதியரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு தம்பதியர் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்குப் பெயர் விவாகரத்து.
காதல் திருமணமாக இருந்தாலும் சரி. பெற்றோர்களாகப் பார்த்து திருமணம் செய்து வைத்ததாக இருந்தாலும் சரி. ஒருவர் மீது மற்றொருவர் அன்பு செலுத்தி வரும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது மாறுங்கால் விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன.
சட்டப்படி விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தால் கணவன் மனைவி இருவரும் கருத்து வேற்றுமைக்கான காரணத்தை தெரிவிப்பதோடு ஒரு வருட காலம் கட்டாயம் பிரிந்திருக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறி வருகின்ற நிலையில் நீதி மன்றம் அல்லாத ஒரு இடத்தில் அதற்கான பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டு அறிவுறைகள் வழங்கப்படுகின்றன.
அவ்வாறு வழங்கப்படும் அறிவுறைகளை ஏற்றுக் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ தம்பதியர் விரும்பினால் தொடர்ந்து வாழலாம். அதற்கு விருப்பமில்லையெனில் நீதி மன்றத்தை அணுகி சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம்.
அறிவுறைகள் வழங்குபவர்கள் சட்டம் படித்தவர்களோ அல்லது மனோதத்துவ மருத்துவம் படித்தவர்களோ அல்ல. மனதினை படித்தவர்கள். உள் மனதில் உள்ள எண்ணங்களை கேட்டறிந்து கொள்பவர்கள். பிரச்சினைக்கான மூல காரணங்களை அறிந்து கொண்டு அதனை அலசி ஆராய்ந்து அறிவுறை வழங்குபவர்கள்.
இந்த இடத்திற்கு வருவோரிடமிருந்து குறைந்து பட்ச தொகை அவரவர் வசதிக்கேற்ப அவரவர் விருப்பப்படி ரூபாய் 100-லிருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை நன்கொடையாக பெறப்பட்டு அந்த தொகை முழுவதும் விவாகரத்து பெற்ற பின்னர் பிழைப்புக்கு வழியில்லாத ஆதரவற்ற ஜீவனாம்சம் பெற இயலாத பெண்கள் மற்றும் விவாகரத்தின் காரணமாக கணவன் மனைவி இருவராலும் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்தப் படுகின்றது. அதற்கென “விவாகரத்து அனாதைகள் இல்லம்” உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வாறான ஒரு Divorce Orphanage மூலம் எப்படி விவாகரத்து பிரச்சினைகள் கையாளப்பட்டு தீர்த்து வைக்கப் படுகின்றன என்பது மிகவும் சுவையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.
விவாகரத்து கோறுகின்ற தம்பதியர் தனித்தனி அறைகளில் அவரவர் பெற்றோர்களுடன் அமர வைக்கப்பட்டு அவர்களிடத்தில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விகள் கேட்கப்படுவது மற்றும் பதில் சொல்வது அந்த அறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும். பதில்கள் சொல்வதில் வித்தியாசம் காணப்பட்டால் குறுக்குக் கேள்விகள் கேட்கப்படும்
கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் சொல்கின்ற பதில்கள் எதுவும் வேறு அறையிலுள்ள மனைவி மற்றும் மனைவி குடும்பத்தாருக்கு கேட்காது. அது போல மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் சொல்கின்ற பதில்கள் எதுவும் வேறு அறையில் உள்ள கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கு கேட்காது. குடும்ப உறுப்பினர்களால் பிரச்சினை என்றால் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள்.
கேள்வி கேட்பவர்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய F.M. Mike மற்றும் Headphone உடன் அமர்ந்து இருப்பார்கள். ஆலோசகர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் எதிரில் அமர்ந்துள்ளவர்களின் பதில்கள் ஆலோசகர்களுக்கு மட்டுமே கேட்கும். இந்த கலந்தாலோசனை சுப முகூர்த்த நாட்களில் மட்டுமே நடைபெறும். விவாகரத்து பெற நினைத்த தம்பதியர் ஒன்று சேர விரும்பினால் அன்றைய தினமே ஒன்று சேர்ந்து விடலாம்.
விவாகரத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கேட்கப்படும் கேள்விகளும் அவைகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதற்குப் பின்னர் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கப்படும்.
ஆலோசகர்கள் கேட்கும் கேள்விகள்:
1. உங்கள் பெயர்
2. உங்கள் வயது
3. உங்கள் படிப்பு விவரம்
4. உங்கள் உத்தியோகம்
5. உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமா?
6. திருமணத்திற்கு முன்னர் யாருடனாவது நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதா? அது தெரிய வந்து சந்தேகம் ஏதேனும் வந்துள்ளதா?
7. உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? குழந்தைகள் எத்தனை?
8. உங்கள் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய விவரம்
9. விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம்.
உங்கள் பெயர் என்னும் 1-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். அன்புக்கரசன்
மனைவி. அன்புக்கரசி
உங்கள் வயது என்னும் 2-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். 28
மனைவி. 25
உங்கள் படிப்பு விவரம் என்னும் 3-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். B.Tech
மனைவி. B.E
உங்கள் உத்தியோகம் என்னும் 4-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். Team Leader Software Development
மனைவி. Software Development (I.T)
உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமா என்னும் 5-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். பெற்றோர் நிச்சயித்த திருமணம்
மனைவி. பெற்றோர் நிச்சயித்த திருமணம்.
திருமணத்திற்கு முன்னர் யாருடனாவது நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதா? அது தெரிய வந்து சந்தேகம் ஏதேனும் வந்துள்ளதா? என்னும் 6-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன்: திருமணத்திற்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண்ணுடன் மிக மிக நெருக்கமாக பழகி காதல் ஏற்பட்டது. தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கம் கிடையாது. ஆனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜாதகப் பொருத்தம் வசதி வாய்ப்பு அந்தஸ்து வித்தியாசத்தின் காரணமாக அவள் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடன் உயிருக்கு உயிராக பழகி விட்டு பெற்றோர் சொல்லுக்கு கட்டுப் படுகின்றேன் எனச்சொல்லி வேறு ஒருவனுக்கு மனைவியாகப் போய் விட்ட காரணத்தால் அவளை காதலித்த எண்ணங்களை என் இதயத்திலிருந்து நீக்கி விட்டேன். அவளிடமிருந்து வருகின்ற கைபேசி அழைப்புகளை கூட நான் தவிர்த்து விடுவேன். இது என் மனைவிக்கும் தெரியும் என் மனைவி என் மீது சந்தேகம் கொள்ளவில்லை.
மனைவி: திருமணத்திற்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவருடன் மிக மிக நெருக்கமாக பழகி காதல் ஏற்பட்டது. தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கம் கிடையாது. ஆனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு வசதி வாய்ப்பு அந்தஸ்து கார் பங்களா வெளி நாட்டில் முதலிறவுக்கான பயணம் ஆகியவற்றின் மீது ஆசைப்பட்டு அவன் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடன் உயிருக்கு உயிராக பழகி விட்டு பெற்றோர் சொல்லுக்கு கட்டுப் படுகின்றேன் எனச்சொல்லி 100 பவுன் நகை மற்றும் கார் பங்களா கிடைக்கும் இடத்தில் உள்ள பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டான்.
இதயத்தில் உள்ள அன்பினை மதிக்காமல் சொத்து பத்து கிடைத்தால் போதும் என நினைத்து வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவனை காதலித்த எண்ணங்களை என் இதயத்திலிருந்து நீக்கி விட்டேன். அவனிடமிருந்து வருகின்ற கைபேசி அழைப்புகளை கூட நான் தவிர்த்து விடுவேன். இது என் கணவருக்கும் தெரியும் ஆனால் அவர் என் மீது சந்தேகம் கொள்ளவில்லை.
உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? குழந்தைகள் எத்தனை? என்னும் 7-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. இல்லறத்தில் இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்து வந்துள்ளோம். குழந்தைகள் கிடையாது.
மனைவி: உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. இல்லறத்தில் இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்து வந்துள்ளோம். குழந்தைகள் கிடையாது.
உங்கள் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய விவரம் என்னும் 8-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். வருடாந்திர வருமானம் ரூபாய் 18 லட்சம்
மனைவி. வருடாந்திர வருமானம் ரூபாய் 3.6 லட்சம்.
விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம் என்னும் 9-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:
கணவன். எனது மாமனார் மாமியாருக்கு இரண்டு மகள்கள். என்னை மணமுடித்துக் கொண்டவள் முதல் பெண். இன்னுமொரு தங்கை மருத்துவம் படித்து வருகின்றாள். முதல் மகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்த்து விட்டார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டது. வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றார்கள்.
அவர்களால் வேறு எங்கும் சென்று உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியாது என்னும் காரணத்தால் திருமணத்திற்கு முன்னர் பெண் பார்க்கச் சென்றிருந்த சமயம் மணப்பெண் அதாவது எனது தற்கால மனைவி ஒரு நிபந்தனை விதித்தாள். அது என்னவெனில் அவளுக்கு வருகின்ற மாதாந்திர சம்பளம் முழுவரையும் தங்கையின் மருத்துவப் படிப்பிற்காகவும் பெற்றோர் வீட்டுச் செலவுகளுக்காகவும் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களிடமே கொடுப்பேன். புகுந்த வீட்டில் கொடுக்க மாட்டேன் என்பது. நான் அதற்கு முழுமையாக சம்மதம் தெரிவித்து விட்டேன். காரணம் என்னுடைய சம்பளம் எனக்கு வரப்போகின்ற மனைவியின் சம்பளத்தை விட அதிகம். அந்த Gentleman Agreement-ன் படி நான் தற்போது வரையில் செயல்பட்டு வருகின்றேன்.
எனக்கு ஒரு தம்பி இருக்கின்றான். தம்பியின் பெயர் அன்புச்செல்வன். என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பம் மற்றும் வருகின்ற விருந்தாளிகள் தங்குமளவிற்கு ஒரு பெரிய வீட்டினை சொந்தமாக வாங்கியுள்ளேன். அந்த வீடு வாங்கிய கடனுக்கு மாதாந்திரத் தவணை செலுத்தி வருகின்றேன். குடும்பத்தாருடன் வெளியில் சென்று வருவதற்கு ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் நான் அலுவலகத்திற்குச் சென்று வர ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் தொலைக்காட்சி. குளிர்சாதன பெட்டி மற்றும் மிக்சி கிரைண்டர் போன்ற அனைத்தையும் கடனில் வாங்கி EMI செலுத்தி வருகின்றேன். எனது தம்பியின் படிப்பிற்காக செலவு செய்து வருகின்றேன். இது போன்ற காரணங்களால் நான் மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி வருகின்றேன்.
மனைவி. வருடாந்திர வருமானம் ரூபாய் 3.6 லட்சம். என் பெற்றோருக்கு இரண்டு பெண்கள் மட்டுமே. எனக்கு ஒரு தங்கை இருக்கின்றாள். பெயர் அன்புச்செல்வி. ஆண் வாரிசுகள் கிடையாது. இரண்டு பெண்களையும் படிக்க வைக்க எனது தந்தை கடினமாக உழைத்து வந்தார். நான் பொறியியல் பட்டம் பெற்று உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டேன். தற்போது என் பெற்றோருக்கு வயதாகி விட்ட படியால் எங்கும் சென்று வேலை செய்ய முடியாத நிலையில் என்னுடைய முழுச் சம்பளத்தையும் எனது பெற்றோர் செலவுகளுக்காகவும் வீட்டு வாடகைக்கும் தங்கையின் மருத்துவப் படிப்பிற்கும் என என் பெற்றோரிடம் கொடுத்து விடுவேன். எனது சம்பளத்தைத் தவிர வேறு பண உதவி எதுவும் செய்ய மாட்டேன்.
இதற்குப் பின்னர் விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம் என்னும் 9-வது கேள்வியினைக் கேட்டனர்.
கணவன்: நான் எவ்வளவு அதிகம் சம்பளம் வாங்குகின்றேனோ அந்த அளவிற்குக் கடனும் வாங்கியுள்ளேன். வீடு மற்றும் இதர பொருட்களை வாங்கியதற்கான கடனையும் வட்டியையும் செலுத்தி முடித்த பின்னர் என் கூட்டுக் குடும்ப செலவு மற்றும் என் தம்பியின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக செலவு செய்து வருகின்றேன். தம்பி படித்து முடித்த பின்னர் என் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து தம்பிக்கு தனியாக ஒரு மருத்துவ மனை ஏற்பாடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி வைக்கின்றோம். நான் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்து வருமான வரியிலிருந்து வரி விலக்கு பெற்று வருகின்றேன். இந்த நிலையில் நான் அதிகமான சம்பளம் பெற்ற போதிலும் கணக்குப் பார்த்துத் தான் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது.
என் மனைவி எப்படி அவளது சம்பளத்தை அவளது பெற்றோரிடம் கொடுக்கின்றாளோ அதே போல என் சம்பளத்தை என் பெற்றோரிடம் முழுவதுமாக கொடுத்து நான் எனது செலவிற்கும் எனது மனைவியில் செலவிற்கும் அவர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றேன். என் பெற்றோர் குடும்பத்தை நல்ல முறையில் வீண் செலவுகள் எதுவும் செய்யாமல் நிர்வகித்து வருகின்றார்கள்.
நிறைய கடன்கள் இருக்கின்றன என்னும் காரணத்தால் வருகின்ற சம்பளம் போதவில்லை. இந்த நிலைமை வெகு சீக்கிரத்தில் மாறி இயல்பு நிலைக்கு வந்து விடும்.
இந்த நிலையில் என் மனைவி என்னிடத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த வேண்டும். விரும்பிய பொருட்கள் வாங்கியே தீர வேண்டும் என நினைக்கின்றாள். நான் அலுவல் காரணமாக எங்கேனும் வெளியூர் செல்ல நேர்ந்தால் அந்த சமயத்தில் செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றாள். இந்தக் காரணத்தால் நான் வெளியூர் செல்லும் சமயம் சொல்லி விட்டுச் செல்வதில்லை. எனவே என் மனைவியிடத்தில் என்னுடைய நிலைமையினை நன்கு புரிய வைத்து என்னோடு சேர்ந்து வாழ அறிவுறைகள் வழங்க வேண்டும். எனக்கு விவாகரத்தில் ஒப்புதல் இல்லை.
மனைவி: என் கணவர் நிறைய சம்பளம் பெறுகின்றார் என்பதன் காரணமாக மிக மிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியும் என எதிர் பார்த்தேன். ஆனால் அவருக்கு நிறைய கடன்கள் இருக்கின்றன என்னும் காரணத்தால் அவருக்கு வருகின்ற சம்பளம் போதவில்லை. என்னை எங்கும் அழைத்துச் செல்ல முடியாது எனச் சொல்லி கஷ்டப்படுத்துகின்றார். எதனையும் வாங்கித் தர மறுக்கின்றார். எனவே இவரோடு இனிமேல் என்னால் தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது எனத் தோன்றுகின்றது.
தம்பதியர் இருவரும் தத்தமது குடும்பத்தாருடன் தனித்தனியே அமர்ந்து அவர்கள் சொன்ன அத்தனை விவரங்களையும் கேட்டவர்கள் இறுதியாக அறிவுறை மற்றும் ஆலோசனை வழங்க ஆரம்பித்தார்கள்.
விவாகரத்து தொடர்பான அறிவுறைகள் வேண்டி நம்மை நாடி வந்துள்ள கணவர் தமது வருமானத்தில் பெரும்பங்கினை குடும்ப செலவுகளுக்கும் வீடு வாங்கிய கடனுக்கும் மற்றும் இதர பொருட்கள் வாங்கிய கடனுக்கும் செலுத்தி வருகின்றார். அதே சமயம் தமது தம்பியின் மருத்துவப் படிப்பிற்கும் செலவு செய்து வருகின்றார். இந்த நிலைமை கடன் சுமைகள் குறைந்தவுடன் சரியாகி விடும். அதே சமயம் அவரது மனைவி தமக்கு வருகின்ற சம்பளம் முழுவதையும் தமது பெற்றோரிடத்தில் கொடுத்து விட்டு அன்றாட செலவுகளுக்காக கணவரையும் கணவர் வீட்டாரையும் நம்பி இருக்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோருவது சரியாக இருக்காது. இருந்தாலும் கடைசியாக இருவரும் ஏதேனும் சொல்ல முடிந்தால் அதனை தெரிவித்தால் முடிவான ஆலோசனை வழங்குவோம்.
கணவர்: எனக்கு மட்டுமே தெரிந்த என் மனைவிக்கோ அல்லது இருவரது குடும்பத்தாருக்கோ தெரியாத ஒரு ரகசியத்தினைக் கேட்ட பின்னர் முடிவினை அறிவிக்கலாம் எனத் தெரிவித்து விட்டு எனது தம்பி அன்புச்செல்வன் என் மைத்துனியான அன்புச்செல்வியை காதலித்து வருகின்றான். இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றார்கள். படிப்பு முடிந்தவுடன் ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனக்குத் தெரிய வந்துள்ளது. எனவே எனது தம்பி படித்து முடித்த பின்னர் ஆரம்பிக்கப் போகும் அன்பு மருத்துவ மனையில் என் மைத்துனியும் பங்கு வகிக்கப் போகின்றாள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்பு மருத்துவ மனை எனப் பெயர் வைப்பதற்கான காரணம் நம் நால்வர் பெயரிலும் பொதுவாக அன்பு என்னும் வார்த்தை அடங்கியுள்ளது. இந்த விவரம் கேட்ட இரண்டு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதற்குப் பின்னர் கணவர் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் முடிந்து விடும். அதே சமயம் ஒரு தம்பதியினர் விவாகரத்து கேட்டு அது கொடுக்கப்பட்டால் அதற்குப் பின்னர் அதே பெற்றோர் மீண்டும் சம்மந்திகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து தமது மக்களுக்கு அறிவுறை வழங்கி சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என சொன்னார்கள். இவற்றைக் கேட்ட விவாகரத்து கோரிய கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரே குரலில் நம் உடன் பிறப்புகளின் நலன் கருதி விவாகரத்து பேச்சினை இத்துடன் கைவிடுகின்றோம் என்று சொன்னார்கள்.
பெற்றோர் அறிவுறைகள் சொல்வதற்கு முன்பாகவே தனித்தனியே வந்த கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் அருகருகே அமர்ந்து கொண்டு கணவன் இல்லத்திற்கு மிக மிகச் சந்தோஷமாகத் திரும்பினர். ஆனால் சம்மந்திகள் இருவரும் ஒரே காரில் அமர்ந்து கொண்டு தமது வருங்கால மருமகளை முன்கூட்டியே பார்ப்பதன் பொருட்டு புறப்பட்டனர். மணமகள் வீட்டாரை தமது இல்லத்திலேயே வந்து ஒன்றாக தங்கிக் கொள்றுமாறு மணமகன் வீட்டார் வற்புறுத்த திருமணம் நடக்கும் வரையில் மணமக்கள் தனித்தனியே இருந்தால் தான் திருமண நிகழ்ச்சி குதூகலமாக இருக்கும் எனச் சொல்லி விட்டனர்.
ஆட்டோவில் சென்ற தம்பதியர் இருவரும் பெற்றோர் வருவதற்குள் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்காக குளிர் பிரதேசத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.
விவாகரத்து பெறுவது தொடர்பான ஆலோசனைக்கு புறப்பட்டுச் செல்லும் சமயம் கணவன் மனைவி மற்றும் இரண்டு சம்மந்திகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்துச் சென்ற எதிர்பார்ப்புகளுக்கும் ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் தமது மக்கள் திருமணம் செய்து கொண்டு சம்மந்திகள் ஆகப் போகின்றார்கள் மறு முறையும் இரண்டு குடும்பத்தாரும் சம்மந்திகள் ஆகப் போகின்றோம் என்னும் நிஜமான நிகழ்வுகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்த போதிலும் இரண்டு குடும்பத்தாருக்கும் அளவில்லாத ஆனந்தம்.