ராஜா ராணி தட்டு
எப்போதுமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் வெயிலே படாமல் முழுவதுமாக துணியால் மூடி மறைத்த எனது மேனியை வேலை கிடைத்ததன் காரணமாக அனைவரும் போல சேலை ரவிக்கை உடுத்திக் கொண்டு எனக்கு பணி நியமன ஆணை கிடைத்த அலுவலகத்திற்குச் சென்றேன். எனது தந்தையும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றி வந்தமையால் அவரும் கூட வந்தார்.
அலுவலகத்தில் பணியில் சேருவதற்கான (Joining Report) கடிதத்தினை உயர் அலுவலரிடத்தில் கொடுத்தேன். எனது கடிதத்தினை அலுவலர் பெற்றுக் கொண்டவுடன் எனக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவில் பணி ஒதுக்கீடு செய்து அந்த பிரிவில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். நானும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்தப் பிரிவுக்குச் சென்றடைந்தேன்.
எனக்கு அலுவலகத்தைப் பற்றியோ அல்லது அலுவலக வேலைகள் பற்றியோ அல்லது அலுவலக நடைமுறைகள் பற்றியோ எதுவும் தெரியாது. வேலையில் சேரும் நாள் வரையில் எந்த ஒரு அலுவலகத்திலும் மழைக்குக் கூட ஒதுங்கியது கிடையாது. எனக்கு ஒதுக்கப்பட்ட பணிப்பிரிவில் எனது இருக்கைக்கு அருகாமையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
எனது தந்தை அவரிடத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் என் மகளுக்கு அலுவலக நடைமுறைகள் எதுவும் தெரியாது. என் மகளுக்கு நீங்கள் தான் வேலைகளில் உதவியாக இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரிடத்தில் என் தந்தை பேசிக் கொண்டிருக்கும் சமயம் அதே அலுவலகத்தில் பணியாற்றும் சில பெண்கள் தேனீர் அருந்தச் செல்வோமா எனக் கேட்டனர். அச்சமயத்தில் என்னை அனைவரிடத்திம் அறிமுகம் செய்து வைத்து விட்டு இன்று முதல் இவர்களும் நமது குழுவில் ஒரு உறுப்பினர் எனச் சொல்லி என்னையும் என் தந்தையையும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவருக்குப் பெண் தோழிகள் நாற்பதுக்கு மேற்பட்டோர் உள்ளனர் என்பது. நானும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். என்னுடைய தந்தைக்கு என்னை மிகச் சரியான இடத்தில் ஒப்படைத்து விட்டதாக ஒரு உட்புற மகிழ்ச்சி. அவர் எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அனைவரும் பிஸ்கட் மற்றும் காபி டீ ஆகியவை சாப்பிட்டு முடித்த பின்னர் என் தந்தை பணம் தருவதாகச் சொன்னதற்கு நீங்கள் எங்கள் விருந்தாளி எனச் சொல்லி விட்டு பணம் கொடுக்க விடவில்லை. அனைவரும் போட்டி போட்டு பணம் செலுத்துவதாகச் சொன்ன சமயம் அவர் பணம் செலுத்தினார். அதன் பின்னர் என்னுடைய தந்தை இல்லம் திரும்பினார்.
முதல் நாள் என்பதால் நான் மதிய உணவு எதுவும் கொண்டு செல்லவில்லை. எனக்கு அருகில் அமர்ந்து பணியாற்றியவர் அவரது இல்லத்திலிருந்து எதுவும் கொண்டு வராத காரணத்தால் மதிய உணவுக்கு கேன்டீன் செல்வோமா எனக் கேட்டார். அதற்கு நான் நாம் இருவர் மட்டுமா எனக் கேட்டதற்கு அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பணியாற்றி வருகின்ற அந்தப் பெண்ணும் கூட வரப் போகின்றாள் என்றும் கேன்டீனில் நிறையப் பேர் நமது வருகைக்காகக் காத்து இருப்பார்கள் எனவும் சொல்லி விட்டு நாங்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் எனச் சொன்னார்.
பணியாற்றும் இடத்திலிருந்து கேன்டீன் செல்லவதற்குள் அவரது தோழிகளில் சிலர் சேர்ந்து கொண்டார்கள். நான் என்னையும் அறியாமல் நீங்கள் எப்போதும் உங்கள் தோழிகள் புடைசூழத் தான் டீ காபி மற்றும் உணவருந்த கேன்டீன் செல்வீர்களா எனக் கேட்டேன். எனக்கு மட்டும் தோழிகள் அல்ல இன்று முதல் அனைவரும் உனக்கும் தோழிகள் எனச் சொன்னார். அவர் அனைவரும் நம் இருவருக்கும் தோழிகள் எனச் சொன்னதைக் கேட்ட எனக்கு ஒரே நாளில் இவ்வளவு தோழிகளா என ஆச்சர்யமாக இருந்தது.
நான் பணியில் சேர்ந்த சில நாட்களில் அவருடன் மிக மிக நெருக்கமாக பேசிப் பழகி விட்டேன். ஆனால் அவர் என்னிடத்தில் மாத்திரம் நெருக்கமாக பழகாமல் அனைவரிடத்திலும் நெருக்கமாகப் பழகுவது எனக்கு உறுத்தலாக இருந்தது. குறிப்பாக அவருக்கு வலது பக்கத்தில் எனக்கு முன்னரே பணியில் சேர்ந்து பணியாற்றும் பெண்ணுடன் என்னுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டிலும் அதிக நெருக்கமாக இருப்பது கண்டு எனக்கு பொறாமையக இருந்தது.
அவர் எதுவும் பேசாமல் மிக மிக பொறுமையாக இருப்பார். காரணம் அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பணியாற்றும் பெண் எப்போதும் அவரது வலது காதிற்கு மிக மிக பக்கத்தில் வந்து ஏதாவது கிசு கிசுத்துக் கொண்டேயிருப்பாள். அவரையோ அல்லது என்னையோ பேச விடமாட்டாள்.
அவரிடத்தில் அந்தப் பெண் எப்படியெல்லாம் பேசுகின்றாள் என்பதனை உற்றுக் கவனித்த நானும் அவளைப் போல பேச ஆரம்பித்தேன். அலுவலக நேரத்தில் நான் அவருடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலையில் அலுவலகம் முடிந்ததும் அவரை என்னுடன் பேசிக் கொண்டே வருமாறு அழைத்தேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அவரும் நானும் அலுவலகத்திற்கு நேர் எதிரே பேருந்தில் ஏறாமல் அடுத்த பஸ் ஸ்டேஜ் வரை பேசிக்கொண்டே நடந்து செல்வோம். அங்கிருந்து பஸ்ஸில் சென்று என்னுடைய இல்லம் உள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவருடன் என் இல்லம் அமைந்துள்ள தெரு வரையில் பேசிக் கொண்டே நடந்து வந்த பின்னர் அவருக்கு விடை கொடுத்து அனுப்புவேன். அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. அதன் காரணமாக நடந்த களைப்பு எதுவும் எனக்குத் தெரியாது.
அவருக்கு வலது புறம் அமர்ந்து பணியாற்றும் பெண் சுத்த சைவம். அதுவும் தவிர அடிக்கடி அந்த நோன்பு இந்த நோன்பு அந்த விரதம் இந்த விரதம் எனச் சொல்லி வீட்டிலிருந்து ஏதாவது பண்டங்கள் கொண்டு வந்து கொண்டே இருப்பாள். அவள் என்ன கொண்டு வந்தாலும் எப்போது கொண்டு வந்தாலும் எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவார். ஆனால் நான் கொடுக்கும் உணவினை சில குறிப்பிட்ட நாட்களில் வேண்டாம் எனச் சொல்லும் போது எனது மனது மிகவும் சங்கடப்படும்.
சில நாட்கள் கவனித்த பின்னர் அவரிடத்தில் ஏன் வேண்டாம் எனச் சொல்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் திங்கள் மற்றும் சனி ஆகிய தினங்களில் அசைவம் தொடுவதில்லை என்பது. அவர் சொன்ன காரணத்தால் வருடத்தில் 104 நாட்கள் என்னால் அவருக்கு அசைவம் கொடுக்க முடியாது. அதுவும் தவிர எங்கள் பண்டிகை நாட்களில் பல நாட்கள் விடுமுறையாகப் போய் விடும். ஆனால் அவள் கடைப்பிடிக்கும் விரதம் மற்றும் நோன்பு நாட்களில் அலுவலக நாளாக இருக்கும். எனவே அவளுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது.
எனக்கு இது ஒரு நெருடலாகவே இருந்தது. இந்த நிலையில் நான் தினந்தோறும் எனது வீட்டிலிருந்து அசைவ உணவுகள் கொண்டு சென்று இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தோம்.
அவருக்காகவும் எனக்காகவும் ராஜா ராணி தட்டுகள் ஒரு செட் வாங்கி அந்த தட்டுகளில் பகல் உணவு உட்கொள்ள ஆரம்பித்தோம். அவரிடத்தில் அவருக்கு எந்தத் தட்டு வேண்டும் எனக் கேட்டதற்கு ராணி படம் பொறித்த தட்டினைத் தேர்வு செய்தார். காரணம் கேட்டமைக்கு நானே என்னை ராஜாவாகக் கருதினால் கர்வம் தலைக்கேறி விடும் எனவும் ராணி தான் தேவை எனவும் சொன்னார். ஆமாம். ராணி உருவம் பொறித்த தட்டு அவருடையது. ராஜா உருவம் பொறித்த தட்டு என்னுடையது. அவர் சாப்பிட்ட தட்டினைக் கூட நானே கழுவ ஆரம்பித்தேன். இதனைக் கண்ணுற்ற அலுவலகத் தோழிகள் எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரே ஒரு சாக்லெட் மட்டும் கொடுத்து பகிர்ந்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்து அது வழக்கம் ஆகி விட்டது.
நமது நெருக்கம் அதிகமாகிக் கொண்டிருந்த அதே வேளையில் அந்தப் பெண் அவரது கையில் நோன்புக் கயிற்றினைக் கட்டி விட்டு குறைந்தது மூன்று நாட்கள் அசைவம் தொடக் கூடாது எனச் சொல்வாள். அவள் கொண்டு வருகின்ற சித்திரான்னத்தை அவள் கொண்டு வரும் தட்டில் வைத்து தான் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடும் தட்டில் சாப்பிடக் கூடாது என்பாள்.
அவள் சொல்லுக்கு அவர் பல நேரங்களில் கட்டுப்படுவதால் நான் சில நாட்களில் ஆத்திரப்படுவேன். அச்சமயத்தில் அவர் என்னைக் காட்டிலும் குறைவான எடையுடன் இருப்பதால் அவர் எடையினைக் கூட்ட வேண்டும். 10 பைசா கயிறு கட்டிவிட்டு சாப்பாட்டில் கட்டுப்பாடு விதித்தால் எப்படி உடம்பு தேறும்? சத்தான உணவு சாப்பிட்டால் நோய் என்பது அண்டாது என அவளிடத்தில் சண்டை போடுவேன். காரணம் அவர் என்னைக் காட்டிலும் 10 கிலோ எடை குறைவு. அவர் எனக்கே சொந்தம் என நினைப்பேன்.
வீட்டிலே என் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அவரது நலம் விசாரிக்கும் சமயம் என் தந்தையிடத்தில் என்னுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றியது போல அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பேன் எனச் சொன்னேன். மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வீட்டில் யாரிடத்திலும் சொல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து அவரிடத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனச் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை. என் தந்தை அவரிடத்தில் துலுக்க நாச்சியார் பற்றி எடுத்துச் சொல்லியும் கூட அவர் சம்மதிக்கவில்லை.
அதன் பின்னர் அதே அலுவலகத்தில் உள்ள சில முக்கிய மனிதர்களை வைத்து அறிவுறைகள் சொல்லி பார்த்ததில் அவர் உடன்படவில்லை. என் தந்தை அவரிடத்தில் பெற்றோருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வீட்டார் இருவரையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள் எனவும் என் தந்தை பூரண மனதுடன் திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் மதமாற்றம் இல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
எனது தந்தை பதிவுத் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் என்னை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து வரன் நிச்சயம் செய்தார்கள். அவரிடத்தில் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து திருமணம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் அதற்கு முழு ஒத்துழைப்பு தேவை எனவும் சொல்ல அவர் சரியென ஒப்புக்கொண்டார்.
எனக்கு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை முடிவு செய்து திருமண தேதியினைக் குறித்து விட்டார்கள். நான் என் தந்தையிடத்தில் திருமண நிகழ்ச்சியில் அவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அவர் கலந்து கொண்டால் மட்டுமே திருமண பதிவுப் பதிவேட்டில் கையெழுத்திடுவேன் எனச் சொன்னேன். அவரிடத்திலும் சொல்லி விட்டேன்.
திருமண நாள் வந்தது. திருமணத்திற்கான பரிசுப் பொருளை தேர்வு செய்வது முதல் திருமணம் நடக்கும் இடம் வரையில் கொண்டு வருகின்ற பொறுப்புக்கள் அனைத்தையும் அவரிடத்தில் தோழிகள் ஒப்படைத்து விட்டார்கள். எனவே அவரால் வராமல் தப்பிக்க முடியாது. நான் சொன்னது போலவே அவர் வந்தவுடன் அவர் கொண்டு வந்துள்ள பரிசுப் பொருட்களில் ஒன்றை அணிந்து கொண்ட பின்னர் திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டேன்.
திருமணம் முடிந்த ஒரு மாத காலத்தில் என் கணவர் மீண்டும் வெளி நாட்டுக்குப் புறப்பட்டு விட்டார். எனக்கு திருமணம் ஆகியும் கூட கணவர் வெளி நாட்டில் இருப்பதன் காரணமாக தனிமை. மீண்டும் ஒரு வசந்தம் என்பது போல் பழைய படி ராஜா ராணி தட்டில் அவருடன் உணவருந்த ஆரம்பித்தேன். மாலை வேளையில் வழக்கம் போல் அவருடன் உல்லாசமாக நடந்து செல்ல ஆரம்பித்தேன்.
எனக்கு திருமணம் ஆனதே மறந்து போய் விட்டது. காரணம் என் கணவர் திருமணத்திற்கு ஒரு மாத விடுமுறையில் வந்து உல்லாசமாக இருந்து விட்டு திரும்பிச் சென்று விட்டார். அந்த ஒரு மாத காலத்தில் கூட உறவினர்களைப் பார்க்கவும் நண்பர்களைப் பார்க்கவும் எனச் சொல்லி வெளியே சென்று விட்ட காரணத்தால் கணவருடன் பேசவே முடியாது. எனக்கும் விருப்பம் இருக்காது. முதல் குழந்தை பிறந்ததற்கே பார்க்க வராமல் வழக்கம் போல் ஓராண்டிற்குப் பின்னர் தான் வருகை தந்தார்.
அவருக்கு பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணுடன் திருமணம் நடந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் என்னிடத்தில் மாலையைக் கொடுத்து அவரது மனைவி கழுத்தில் அணிவிக்குமாறு அங்கு குழுமி இருந்தவர்கள் கேட்டுக்கொள்ள நான் மாலையுடன் அருகில் சென்ற சமயம் சில தோழிகள் பழைய ஞாபகத்தில் அவர் கழுத்தில் போட்டு விடாதே என கலாட்டா செய்தனர். எனக்கு அங்கேயே கண்ணீர் வந்து விட்டது.
திருமணத்திற்குப் பின்னர் அவர் வெளியூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். வருடத்தில் ஒரு முறை என்னைப் பார்க்க அவர் கட்டாயம் அலுவலகத்திற்கு வருவார். நான் திருமணம் ஆன பின்னரும் கூட வெளிநாடு செல்லாத காரணத்தால் அலுவலகத்தில் பணியாற்றியபடி தாய் வீட்டிலேயே தங்கி விட்டேன். ஒரு நாள் என்னைப் பார்க்க அவர் வந்த சமயத்தில் அவரிடத்தில் என்னுடைய வங்கிக் கணக்கு பாஸ் புத்தகத்தை காட்டி அதில் உள்ள 6.5 லட்சம் ரூபாய்க்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டு மனைக்கு அடுத்த மனையை அவர் பெயரில் வாங்க கேட்டுக் கொண்டேன்.
நான் திருமணம் செய்து கொள்ள முடியாத அவர் எப்போதும் என்னருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி விட்டது. ஒன்றாக Living Together வாழ்க்கை நடத்துவதற்காக அல்ல. எப்போதும் அவர் அருகே இருக்க வேண்டும். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். அவர் ஒற்றை வருமானத்தில் கஷ்டப்படுவது எனக்கு மிகுந்த மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.
எனது குழந்தை காணாமல் போன சமயம் வெளி நாட்டிலிருந்து வந்த என் கணவர் 15 நாட்கள் தங்கி உல்லாசம் அனுபவித்து விட்டு குழந்தை கிடைப்பதற்கு முன்னர் வெளி நாடு திரும்பி விட்டார். ஆனால் அவருக்கு எழுதிய கடிதத்தில் I want to weep on your laps என ஒரே வாக்கியம் எழுதினேன். தமிழ் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் கையெழுத்திட்டு அனுப்பிய மறு நாள் வந்து அவரது உறவினர் வீட்டில் தங்கி என்னை அலுவலகத்தில் சந்தித்த பின்னர் காவல் துறை உயர் அலுவலரிடம் அழைத்துச் சென்று ஐந்து நாட்களில் குழந்தை கிடைத்த பின்னர் ஊருக்குத் திரும்பினார். என் கணவரிடத்தில் செலுத்தும் அன்பை விட அவரிடத்தில் செலுத்தும் அன்பு பன்மடற்கு பெருகி விட்டது
நானும் அவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாமல் Living Together என்னும் கலாச்சாரத்தையும் பின்பற்றாமல் இருந்த சமயத்திலும் கூட என் குழந்தை கிடைப்பதற்கு அவர் செலுத்திய அக்கறை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ராஜா தட்டில் தான் நான் இன்று வரையில் சாப்பிட்டு வருகின்றேன்.
நான் அவரிடத்தில் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 6.5 லட்சத்திற்கு எனது வீட்டு மனைக்கு அடுத்த படியாக அமைந்துள்ள வீட்டு மனையினை வாங்கச் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் கட்டாயம் மனமாற்றம் ஏற்படும் சமயம் அவர் என்னருகில் வரக்கூடும் என்பதற்காக நானே என் பெயரில் அந்த மனையினை வாங்கி விட்டேன். எனது எதிர்பார்ப்பு வீணாகி விட்டது.
பிற்காலத்தில் நான் சொந்தமாக பல நான்கு சக்கர வாகனங்களை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்த சமயம் அவருக்காக நான் வாங்கிய மனை வாகனங்கள் நிறுத்தத் தான் பயன்பட்டது. அவருக்காக நான் வாங்கிய வீட்டு மனையில் பல நான்கு சக்கர வாகனங்கள் இருந்த போதிலும் அவர் இரு சக்கர வாகனத்தில் தான் பயணம் செய்கின்றார் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கின்றது. அவர் வாழ வேண்டிய இடம் எனது கண்களில் தெரியும் சமயம் அவரது பிரிவு எனக்கு துயரத்தைக் கொடுக்கின்றது.
ராணித் தட்டு அவர் ஞாபகமாக ஷோ கேசில் கேடயம் போல பத்திரமாக இருக்கின்றது. யாரையும் தொடக்கூட அனுமதிக்க மாட்டேன். அந்தத் தட்டினை கையில் எடுத்துப் பார்க்கும் போது ராணித் தட்டில் உள்ள உருவம் எப்படி எப்போதும் இளமையாக இருக்கின்றதோ அப்படி எனது மனம் கன்னிப் பெணணின் வயதிற்கு மாறி விடும். எனக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் பேதெல்லாம் அந்தத் தட்டினை தடவிக் கொண்டேயிருந்தால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். ஏனெனில் அவர் கரங்கள் பட்ட தட்டு.
திருமணத்திற்குப் பின்னர் இருவரது அந்தஸ்தில் நிறைய வித்தியாசம். நான் கோடீஸ்வரியாக மாறி நம் இருவருக்கும் உள்ள வாரிசுகளுக்கு திருமண வயது வந்த பின்னரும் கூட ராஜா ராணித் தட்டுகளில் நானும் அவரும் உணவருந்திய சமயம் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் இருந்த சந்தோஷத்திற்கும் நிஜ வாழ்க்கையில் நான் அனுபவிக்கும் சந்தோஷத்திற்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசத்தினை எண்ணும் போது எனக்கு அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்னும் ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எனக்கு உறவுகள் இருக்கின்றன. எத்தனை உறவுகள் இருந்த போதிலும் நான் அவர் மீதும் அவர் என் மீதும் செலுத்தியது போன்ற உள்ளன்பு இல்லை.
இல்லை. இல்லை. இல்லவே இல்லை.