உண்மையான வாழ்க்கை மற்றும் கற்பனை வாழ்க்கை
ஒரே நேரத்தில் அவள் இரட்டை வாழ்க்கை வாழ்கின்றாள். அவளது கற்பனை ஒன்றாக இருக்கும் ஆனால் நிஜம் வேறாக இருக்கும். அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வேறு ஏதோ ஒன்றினை தம் விருப்பப்படி செய்து கொண்டிருப்பாள்.
அவளது உருவம் மாத்திரம் ஓரிடத்தில் இருக்கும். ஆனால் அவளது எண்ணம் மற்றும் நினைவு மற்றும் கற்பனை எங்கோ இருக்கும். அவளது நிஜ வாழ்க்கை நன்றாக இருந்த போதிலும் என்ன நடக்கின்றது என்பதனை பொருட்படுத்தாமல் கவனத்தை சிதற விட்டு அவள் அவளது சொந்த கற்பனையிலேயே மிதந்து கொண்டிருப்பாள்.
அவள் தனியாக இருப்பது போல் அனைவரது பார்வைக்குத் தெரிந்தாலும் யாரோ ஒருவருடன் கற்பனை வாழ்க்கையில் லயித்து வாழ்ந்து கொண்டிருப்பாள். அவள் என்ன நினைக்கின்றாளோ அதனைச் செய்து கொண்டு அவள் விருப்பப்படி யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருக்கவே விரும்புவாள்.
அவள் யாரையும் துன்புறுத்தவில்லை. யாரையும் எதிர்த்துப் பேசவில்லை. யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கவில்லை. யாருடனும் சண்டை போடவில்லை. யாரையும் கெடுக்க நினைக்கவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என தனக்கு என்ன தோணுகின்றதோ அது சரியா அல்லது தவறா என்பது கூடத் தெரியாமல் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயலாற்றி வருகின்றாள்.
தனிமையிலே காலத்தைக் கழிப்பது. தனிமையையே விரும்புவது. தனியாகவே இருக்க முயற்சிப்பது. தனியறையிலேயே காலத்தைக் கழிப்பது என வீட்டில் இருக்கும் சமயத்திலும் தனியே கோயில் குளங்களுக்குச் செல்வது தனியே நின்று கடவுளிடத்தில் பிரார்த்தனை மேற்கொள்வது தனியே சில பொழுது போக்கு இடங்களுக்கு வெளியில் சென்று வருவது என இருப்பாள்.
அவளது இளமை அழகு மற்றும் வசீகரம் ஆகியவற்றின் காரணமாக அவளுக்கு ஏதேனும் விபரீதம் நடந்து விட்டால் என்ன செய்வது என அவளது உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கவலைப்பட்ட போதிலும் யார் பேச்சினையும் கேட்காமல் யாரையும் தலையிட விடாமல் தான் செய்வது சரி தான் நினைப்பது சரி என நினைப்பது வாடிக்கையாகி விட்டது. இவை எல்லாம் சில மாதங்களாகத் தான். அதற்குக் காரணம் அவளது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சோகம்.
அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி மேற்கொண்டனர். மணப் பெண் பார்ப்பதற்கு அழகாகவும் அடக்கமாகவும் லட்சணமாகவும் வசீகரமாகவும் இருந்த படியால் அனைவருக்கும் பிடிக்கும். அவளைப் பெண் பார்க்க வருகின்ற சமயத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கு வகை குணங்களுடன் நன்கு சீவி முடித்து சிங்காரித்து தலையில் பூச்சுடி பட்டுப் புடவையுடன் வருகின்ற சமயம் வந்து பார்க்கின்ற வரன்கள் திருமணம் என்று ஒன்று செய்து கொண்டால் அவள் தான் மணமகள் என பார்த்த மாத்திரத்திலேயே முடிவெடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவளது தோற்றம் இருக்கும்.
பெண் பார்க்க வருகின்ற மணமகன் வீட்டார் மணப் பெண்ணிடத்தில் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி மணப் பெண்ணின் பெயர் அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் சித்தப்பா சித்திகள் மாமன் அத்தைகள் என்னும் உறவு முறைகளைக் கேட்ட பின்னர் படிப்பு மற்றும் உத்தியோகம் மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றைக் கேட்ட பின்னர் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா பாடத் தெரியுமா எந்த விளையாட்டில் ஆர்வம் எனக் கேட்பார்கள். பெற்றோர் சொல்லிக் கொடுத்துள்ள பதில்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதே மணப்பெண்ணின் கடமையாக இருக்கும். அதன் பின்னர் மணமகனுக்கு மணப்பெண்ணையும் மணப்பெண்ணுக்கு மணமகனையும் பிடித்திருந்தால் தனிமையில் பேசிக் கொள்ள அனுமதி கொடுப்பார்கள். இது அனைவர் வீட்டிலும் வழக்கமாக இருந்து வருகின்றது.
ஒரு மணமகன் நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த மணப் பெண்ணை முதன் முதலாகக் காண வந்த சமயத்தில் மணப் பெண்ணுக்கு மண மகனை பார்த்த மாத்திரத்திலேயே மிகவும் பிடித்து விட்டது. எனவே மணமகன் வீட்டார் யாரையும் பேச விடாமல் மணப்பெண் மணமகனுடன் தனிமையில் பேச வேண்டும் என அழைத்துச் சென்றார். அதே நிலை தான் மணமகனுக்கும்.
மணமகள் மணமகனிடத்தில் சில கேள்விகளைக் கேட்டதற்கு மணமகன் சற்றும் தயக்கமின்றி பதில் சொன்னார்.
என்னைத் திருமணம் செய்து கொள்ள வரதட்சிணை கேட்பீர்களா என மணமகள் கேட்ட கேள்விக்கு அது போன்ற ஒரு முறை பணம் வாங்கும் பழக்கம் எங்கள் குடும்பத்தினருக்கு அறவே கிடையாது.
இரண்டாவதாக மணமகள் கட்டாயம் இவ்வளவு நகைகள் தான் போட்டுக் கொண்டு வர வேண்டுமென சொல்வீர்களா எனக் கேட்டதற்கு எங்களிடத்தில் நினைய நகைகள் இருக்கின்றன என்பதனால் மணமகள் நகைகள் போட்டுக் கொண்டு வந்தால் தான் திருமணம் எனச் சொல்ல மாட்டோம்.
மூன்றாவதாக திருமணம் செய்து கொள்வதன் நோக்கம் எனவெனக் கேட்டதற்கு காலத்தே பயிர் செய் எனச் சொன்னது போல எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அதனைச் செய்து கொள்ள வேண்டுமே தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்கக் கூடாது.
நான்காவதாக குழந்தைப் பேறு உடனே வேண்டுமென எதிர் பார்ப்பீர்களா எனக் கேட்டமைக்கு சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ உல்லாசமாக இருந்து விட்டு அதன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
திருமணத்திற்குப் பின்னர் வேலை கிடைத்தால் வேலைக்குச் செல்ல அனுமதிப்பீர்களா எனக் கேட்டதற்கு நமது கல்வியறிவு பிறருக்குப் பயன் படுமெனில் கட்டாயம் அதனை வீணடிக்கக் கூடாது. எனவே வேலை கிடைத்தால் கட்டாயம் போகலாம்.
வேலையில் சேர்ந்த பின்னர் யாரேனும் ஒருவர் தாமதமாக வர நேரிட்டால் முதலில் யார் வருகின்றார்களோ அவர்கள் தான் சமைக்க வேண்டுமெனில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு தாமதமாக வர நேரிடும் பட்சத்தில் தாமதமாக வந்த காரணத்தால் தாமதமாக சமைத்தால் தாமதமாக சாப்பிட்டு விட்டு தாமதமாக படுக்கைக்குச் செல்ல வேண்டும். எனவே யாரேனும் தாமதமாக வந்தால் கூட முன்னர் வருபவர் சமைத்து முடிப்பது நல்லது.
திருமணத்திற்குப் பின்னர் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டால் யார் பக்கம் ஆதரவு கொடுப்பீர்கள் எனக் கேட்டதற்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட பின்னர் அக்னி தேவனிடத்தில் என்ன சொல்லி திருமணம் செய்து கொள்கின்றோமோ அதனை காப்பாற்றுவது தான் முறை. அது நமது பெற்றோருக்கும் பொருந்தும்.
பிற்காலத்தில் வாழ்க்கைத் துணையில் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படுமேயானால் பிரிகின்ற சூழ்நிலை உருவாகுமா எனக் கேட்டதற்கு சத்தான உணவு சாப்பிட்டு நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் உடல் நலக் குறைவு என்பதற்கே வாய்ப்பில்லை. தேக ஆரோக்கியம் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர பிரிகின்ற எண்ணம் அறவே ஏற்படக்கூடாது.
எந்த வகையான திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆடம்பரமாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திருமண மண்டபத்திலா அல்லது சிக்கனமாக குல தெய்வம் கோவிலிலா எனக் கேட்டதற்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டாலும் சிக்கனமாகத் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு மற்றும் அன்பு மாறப் போவதில்லை.
பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பஞ்சுமெத்தை கட்டில் போட்டு குளிர்சாதன அறையில் உறங்கினாலும் பத்து ரூபாய்க்கு கோரப்பாய் வாங்கி இரண்டு தலையணைகள் மட்டும் போட்டுக் கொண்டு உறங்கினாலும் உள்ளன்பு என்பது மாறப் போவதில்லை.
அதே போல தேனிலவு என்னும் பெயரில் வெளிநாடு சென்றாலும் உள்நாட்டிலேயே உள்ள குளிர் பிரதேசங்களுக்குச் சென்றாலும் அல்லது கயிற்றுக் கட்டிலில் நிலா வெளிச்சத்தில் உறங்கினாலும் பத்து மாதத்தில் தான் குழந்தை பிறக்கும். வசதி வாய்ப்புகளின் காரணமாக முன் கூட்டி எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை.
அதே போல குழந்தை பெறுகின்ற சமயத்தில் குழந்தையை கருவில் சுமந்த தாய் எப்படி இன்பத்தை அனுபவித்தாளோ அதே போல பிரசவ வலியையும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்பதில் எந்த விதமான வித்தியாசமுமில்லை.
வரன் பார்க்க வந்த நேரத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் அளித்த பதில் திருமணத்திற்குப் பின்னர் மாறுமா எனக் கேட்டதற்கு கேட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில் இருவருக்கும் பொதுவானது. எனவே எந்த வித மாற்றமும் இருக்காது என பதில் வந்தது.
பெண் பார்க்க வந்த இடத்தில் மணப்பெண் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மணமகன் பதிலளித்தது மணமகளுக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல தாம் கேட்க நினைத்ததனை மணமகளே முன் வந்து கேட்டது மணமகனுக்கும் ரொம்ப பிடித்து விட்டது.
கடைசியாக ஒரு கேள்வி எனச் சொல்லி விட்டு மணமகள் மணமகனிடத்தில் என்னை உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா எனக் கேட்க பிடித்த காரணத்தால் தான் அழைத்தவுடன் முன் பின் யோசிக்காமல் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்பதனைக் கூட கருத்தில் கொள்ளாமல் தனிமையில் பேசுவதற்கு முழு மனதுடன் வந்ததாக பதில் வந்தது.
இருவரது பெற்றோரும் வீட்டில் காத்திருந்த சமயத்தில் இருவரும் அந்த இடத்திற்கு வந்து இரண்டு வீட்டுப் பெற்றோரையும் நிற்குமாறு கேட்டுக் கொண்டனர். என்னவென்று தெரியாமல் மணமகனின் பெற்றோர் மற்றும் மணமகளின் பெற்றோர் எழுந்து நின்ற போது இருவரையும் அருகருகே நிற்கச் சொல்லி கேட்டுக் கொண்டு அதன் பின்னர் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து திருமணம் செய்து வையுங்கள் என ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டனர்.
பெற்றோரும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு அருகருகே அமர வைத்து பொருத்தம் பார்த்துக் கொண்டே இருவரைப் பற்றியும் கேட்டறிந்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க இருவரிடத்திலும் ஆவல் மற்றும் நெருக்கம் மற்றும் தொலைபேசி உரையாடல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஆனால் இருவரது துரதிருஷ்டம் திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இருவரும் சேர்ந்து சென்று திருமணத்திற்கான பொருட்கள் வாங்கி வருகின்ற வழியில் சாலை விபத்து ஏற்பட்டு இரண்டு குடும்ப உறுப்பினர்களில் இருவர் மருத்துவ மனையில் சிகிச்கை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக திருமணம் 6 மாத காலம் ஒத்தி வகக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தான் மணப்பெண் இந்த நிலைக்கு வந்துள்ளாள். இந்த நிலைமை கட்டாயம் மாறும். திருமணம் நடந்தேறியவுடன் மீண்டும் பழைய நிலைக்கு மணப்பெண் வந்து விடுவாள். அச்சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவரது இல்லறமும் நன்கு அமைந்தே தீரும்.
திருணத்திற்காகப் பெண் பார்க்க வந்த சமயத்தில் மணமகன் வீட்டார் கேள்விகள் கேட்டு மணமகள் பதில் சொல்லும் சம்பிரதாயத்திலிருந்து மாறுபட்டு மணப்பெண் மணமகனை தனியே அழைத்துச் சென்று கலந்துரையாடிய பின்னர் இருந்த எதிர்பார்ப்பிற்கும் திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் நடந்த அசம்பாவித சம்பவத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகளினால் ஏற்பட்டுள்ள நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது நிச்சயம் ஒரு நாள் விடியல் வரும் என்னும் நம்பிக்கை அனைவர் மனதிலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.