குங்குமச் சிமிழ்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற ஒரு அலுவலகத்தில் நானும் பணியாற்றி வந்தேன். எனக்கு நிறைய தோழிகள் உண்டு. நான் எளிதில் யாருடனும் பழகி விட மாட்டேன். என்னுடைய பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப் போகின்றவர்களிடத்தில் மட்டுமே பழகுவேன்.
அதே சமயத்தில் தோழர்களிடத்தில் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்து நீண்ட நாட்கள் யோசித்து அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து அதன் பின்னரே அவர்களிடத்தில் பேசுவேன். ஆனால் பழக மாட்டேன்.
அதே சமயம் எனக்கு ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவருக்காக என் உயிரைக் கூட கொடுக்கத் தயங்க மாட்டேன். அந்த அளவிற்கு நான் மிக மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்து விடுவேன். அந்த வகையில் நான் அனைவருடனும் சகஜமாகப் பேசிப் பழகுகின்ற ஒருவருடன் மிக மிக நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டேன்.
அவருக்கு அழகு முக்கியமில்லை. ஆடை முக்கியமில்லை. ஆடம்பரம் முக்கியமில்லை. நிறம் முக்கியமில்லை. வசதி வாய்ப்பு முக்கியமில்லை. பணம் காசு இன்று வரும் நாளை போகும். ஆனால் உண்மையான அன்பு மட்டும் என்றும் நிலைத்து நிற்கும் என்னும் எண்ணம் கொண்டவர். எனக்கும் அதே நிலை தான்.
அலுவல் நிமித்தமாக அவர் அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அச்சமயங்களில் தோழியர்கள் அனைவரிடத்திலும் எங்கு செல்லப் போகின்றார் எனவும் எப்போது திரும்புவார் எனவும் தெரிவித்து விட்டு புறப்பட்டுச் செல்வார். அவர் வெளியூர்களுக்குச் செல்லும் சமயங்களில் எந்தெந்த ஊர்களில் எது பிரபலமோ அவற்றை எல்லாம் யாரும் சொல்லாமலேயே வாங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் பாகுபாடின்றிக் கொடுப்பார். யாராவது விடுமுறையில் இருந்தால் அவர் திரும்ப வரும் சமயம் அந்தப் பொருளின் தரம் கெடாமல் இருக்குமாயின் கொடுத்து மகிழ்வார்.
உதாரணத்திற்கு மதுரைக்குப் போனால் மல்லிகைப் பூ. சேலத்திற்குப் போனால் மாம்பழம். திருநெல்வேலிக்குப் போனால் அல்வா. தஞ்சாவூருக்குப் போனால் தலையாட்டி பொம்மை. பன்ருட்டிக்குப் போனால் பலாப்பழம். கும்பகோணம் போனால் வெற்றிலை சீவல். பழநிக்குப் போனால் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி. ஊட்டிக்குப் போனால் வர்க்கி. திருப்பதி போனால் லட்டு என வகை வகையாக தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து சந்தோஷப் படுத்துவார்.
அவர் எங்களுக்காக இது வரையில் வாங்கி வராதது திண்டுக்கல்லிருந்து பூட்டு மட்டும் தான். காரணம் எங்கள் வாயை எந்தப் பூட்டும் போட்டு பூட்டி விட முடியாது என்பதனை அவர் நன்கு அறிந்திருப்பார்.
சில ஊர்களில் சில பொருட்கள் கலை நயமுள்ளதாக இருக்கும். அவர் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் சமயத்தில் முன் கூட்டியே சொல்வோமேயானால் அவற்றையும் என்ன விலை கொடுத்தும் வாங்கி வந்து விடுவார். உதாரணத்திற்கு தஞ்சாவூர் தட்டு. கும்பகோணம் குத்து விளக்கு. மதுரை சுங்கடி சேலை மற்றும் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இன்னும் பல.
அவர் வாங்கி வருகின்ற பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களிலேயோ அல்லது மொத்த விற்பனை செய்பவர்களிடத்திலோ வாங்குவதனால் விலை மலிவானதாகவும் அடக்க விலையிலும் தரம் உயர்வானதாகவும் இருக்கும். அனைவருக்கும் பிடித்தமான பொருட்களை அனைவரது நிறம் மற்றும் உயரம் ஆகியவற்றுக்குப் பொருந்தும் வகையில் வாங்கி வருவார்.
நேராக கோடு போட்ட சேலைகள் வாங்கினால் உயரம் அதிகமாகத் தோன்றும் எனவும் குறுக்கே கோடு போட்ட சேலைகள் வாங்கினால் உயரம் குறைவாக அதாவது குள்ளமாகத் தோன்றும் எனவும் நினைத்து கட்டம் போட்ட அல்லது புட்டா டிசைன் போட்ட சேலைகளையே வாங்கி வருவார். அதே சமயம் உடலின் நிறம் கருப்பாக இருந்தாலும் சிகப்பாக இருந்தாலும் இருவருக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிறம் கொண்ட புடவைகள் தேர்வு செய்வார். அனைத்துத் தோழியர்களும் ஒரே நாளில் ஒரே டிசைன் ஒரே நிறமுள்ள புடவைகளில் சீருடை போல அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
எனவே உள்ளுரில் உள்ள கடைகளுக்கு நாம் சென்று நமது தோள் மீது சேலையினை வைத்துப் பார்த்து தேர்வு செய்து நேரத்தை விரயமாக்கி அதிக விலை கொடுத்து வாங்குவதனை விட அவர் வாங்கி வருகின்ற ஆடைகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் என்பதால் அவரைச் சுற்றி நிறையப் பெண்கள் இருப்பார்கள். எல்லோரிடத்திலும் என்னென்ன வேண்டும் என்பதனை பட்டியலிட்டுத் தாருங்கள் என கேட்டு வாங்கிக் கொண்டு வருவார்.
நான் ஒரு முறை கேட்டுக் கொண்டபடி எனக்கு இரண்டு மூன்று முறை சுங்கடி சேலைகள் வாங்கி வந்து கொடுத்தார். ஒரு முறை பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்தார். நான் பணம் கொடுக்கும் சமயம் என்னிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ள மறுத்து விடுவார். நானும் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுக்கப் பார்ப்பேன். என்னிடத்தில் மட்டும் பணம் வாங்கவே மாட்டார்.
நான் அவரிடத்தில் ஏன் என்னிடமிருந்து மட்டும் பணம் வாங்கவில்லை நான் உங்கள் உறவா என்று நாம் இருவர் மட்டும் தனிமையில் இருக்கும் சமயம் கேட்டேன். அதற்கு அவர் அதற்கான பதில் எதிர்காலத்தில் எனக்கு சொல்லாமலேயே தெரியவரும் எனச் சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு அது புரியவில்லை.
சில நாட்களுக்குப் பின்னர் நான் உடுத்திக் கொண்டு வந்த சுங்கடி சேலைகளைக் கண்ட என்னுடைய தோழியர்கள் சேலை நன்றாக இருக்கின்றது என்ன விலை எங்கே வாங்கினாய் எனக் கேட்ட சமயம் அவர் தான் வாங்கிக் கொடுத்தார் என அவரைக் காண்பித்து விடுவேன்.
உடனே அனைத்து தோழியர்களும் அவரிடத்தில் எனக்கு மட்டும் சேலை வாங்கி வந்து கொடுத்து இருப்பதாகவும் அவர்களுக்கு இல்லையா எனவும் கேட்பார்கள். அச்சமயம் நான் கேட்டுக் கொண்ட காரணத்தால் வாங்கி வந்ததாகவும் அதே டிசைன் அதே நிறம் கொண்ட புடவைகள் வேண்டுமெனில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வாங்கித் தருவதாகவும் சொல்வார். சற்று நேரத்தில் அவரிடத்தில் ஐம்பது முதல் நூறு சேலைகள் வரையில் வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி விடுவார்கள். பின்னாளில் அது அவருக்கு பொழுது போக்கான வேலையாக மாறி விட்டது.
எனது இல்லங்களில் நடைபெறுகின்ற பூஜை மற்றும் விரதம் மற்றும் நோன்புகளின் போது புத்தாடைகள் உடுத்திக் கொள்வேன். அது கட்டாயம் அவர் வாங்கிக் கொடுத்ததாகத் தான் இருக்கும். என் தாயார் இது எப்போது வாங்கினாய் எனக் கேட்பார்கள். அவ்வப்போது அவர்களும் அவர் வாங்கிக் கொடுக்கும் சேலைகளை ஆர்வமுடன் உடுத்திக் கொள்வார்கள். என் தாயார் கேட்கும் சமயம் நான் இந்த ஊரில் உள்ள கடைகளில் வாங்கவில்லை. அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் வாங்கி வந்தார் எனச் சொல்வேன்.
ஒவ்வொரு புடவை கட்டும் சமயத்திலும் புத்தாடை உடுத்துவதற்கு முன்னர் உடையின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவும் சமயம் அவர் ஞாபகம் கட்டாயம் எனக்கு வந்து விடும். அதன் பின்னர் பூஜை செய்யும் போது அவர் பெயரினை கட்டாயம் சொல்லி பூஜையினை முடிப்பேன்.
இவ்வாறான செயல் எனக்கு காலப்போக்கில் அவர் மீது காதல் வளர வித்திட்டது. ஆமாம் நான் என் உள் மனதில் அவரை என்னையும் அறியாமல் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்றுக் கொள்வாரா எனத் தெரியவில்லை. எனவே அவர் என்னைக் காதலிக்கின்றாரா எனத் தெரிந்து கொள்ளும் வகையில் பூஜைப் பிரசாதங்கள் மற்றும் நோன்பு பிரசாதங்கள் ஆகியவற்றை அவருக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்.
நான் நோன்புக் கயிறு கொண்டு சென்று அவர் கையில் கட்டும் சமயம் முதலில் வேண்டாம் எனச் சொன்னார். அதற்கு காரணமாக என்னிடமிருந்து மட்டும் அவர் ராக்கி கட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பார். நானும் இது ராக்கி கயிறு அல்ல. நோன்புக் கயிறு எனச் சொல்லி அவரது மணிக் கட்டில் கட்டுவேன்.
ஒவ்வொரு முறையும் அவரிடத்தில் இன்று காரடையான் நோன்பு. இன்று வரலெட்சுமி நோன்பு. இன்று சுமங்கலி நோன்பு எனச் சொல்வேன். நான் சுமங்கலி நோன்பு கயிறு கட்டும் சமயத்தில் இன்னும் திருமணமே ஆகவில்லை. அதற்குள் சுமங்கலி நோன்பு கடைப்பிடிக்கின்றாயா எனச் கேலியாக கேட்டு விட்டு அவர் சந்தோஷமாக கட்டிக் கொள்வார். அச்சமயம் திருமணம் ஆகாவிட்டால் கூட நமக்கு விருப்பமானவர்கள் நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிக் கொள்ளலாம் எனச் சொல்வேன்.
ஒரு முறை அவர் என்னிடத்தில் மதுரைக்குச் செல்வதாக முன்கூட்டியே தெரிவித்தார். அச்சமயத்தில் நான் எனக்கு மட்டும் மதுரையிலிருந்து குங்குமம் வாங்கி வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவர் மற்றவர்களுக்கு வேண்டாமா எனக் கேட்ட சமயம் குங்குமத்தை எனக்கு மட்டும் தான் நீங்கள் வாங்கி வர வேண்டும் எனவும் வேறு யாருக்கும் வாங்கி வரக் கூடாது எனவும் தெரிவித்தேன். அப்படியானால் குங்குமத்தை இங்கேயே வாங்கிக் கொடுத்து விட்டு பின்னர் மதுரைக்குச் சென்று வருகின்றேன் எனச் சொன்னார். நான் என்ன குங்குமம் எனக் கேட்டதற்கு வாரப் பத்திரிக்கை குங்குமம் தானே எனக் கேட்டார்.
எனக்கு கோபம் வந்ததனை அடக்கிக் கொண்டு (உள் மனதில் மர மண்டை இது கூடவாடா புரியவில்லை என நினைத்துக் கொண்டே) ஒரு பெண். அதுவும் அழகான பெண். பருவ வயதுடைய திருமணமாகாத பெண். மதுரையிலிருந்து மதுரை மீனாட்சி குங்குமத்தை வாங்கி வாருங்கள் எனச் சொல்லும் சமயம் நான் மதுரை மீனாட்சி குங்குமத்தை நெற்றியில் உங்கள் கரங்களால் திலகமாக இட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் புன்முறுவலுடன் எனக்கு நன்றாக விளங்கி விட்டது. ஆனால் இன்றல்ல. எனக்குக் கொடுக்கப் படுகின்ற பொருட்கள் எதற்கும் பணம் வாங்காமல் இருந்தது ஏன் எனக் கேட்ட சமயத்தில் காலம் வரும் சமயம் நானே அறிந்து கொள்வேன் எனச் சொன்னதிலேயே அடங்கி விட்டது எனச் சொன்னார்.
ஆமாம் அவர் என்னை ஏற்கனவே எப்போதோ காதலிக்க ஆரம்பித்து பரிசுப் பொருட்கள் வாங்கி பரிசளித்துக் கொண்டு வருகின்றார். நான் தான் தாமதமாகப் புரிந்து கொண்டு இப்போது எனது காதலை வெளிப் படுத்துகின்றேன் என அறிந்த சமயம் என் அறியாமை மீது எனக்கே கோபம் வந்து எனது ஆள் காட்டி விரலால் என் இரண்டு புருவங்களுக்கு இடையே சுட்டிக் காட்டி என்னை நானே திட்டிக் கொண்டேன். அந்த சமயம் அவர் என்னிடத்தில் டியுப் லைட் இப்போதாவது புரிந்ததே எனச் சொன்னார் சிரித்துக் கொண்டே.
இரவில் படுக்கைக்குப் போன பின்னர் பகலில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்த சமயத்தில் அவர் இப்போதாவது புரிந்ததே எனச் சொன்ன சமயம் அவர் என்னை எப்போதோ காதலிக்க ஆரம்பித்து விட்டார் என்பது தெரிய வந்தது.
நான் கேட்டுக் கொண்டிபடி அவர் மதுரை சென்ற சமயத்தில் எனக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பிரார்த்தனை மேற்கொண்டு குங்குமம் வாங்கி வந்தார். வாழ்நாள் முழுவதும் குங்குமம் வைத்துக் கொள்ளக் கூடிய வெள்ளியிலானான அழகான குங்குமச் சிமிழ் ஒன்றையும் வாங்கி வந்திருந்தார். அவற்றை என்னிடத்தில் கொடுத்த சமயம் நான் மீனாட்சியம்மனுக்கு யார் பெயரில் அர்ச்சனை செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் சாமி பெயரில் எனச் சொன்னார்.
நம் இருவரது பெயரினைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டுமெனத் தோணவில்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர் எனது கோத்திரம் பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாத காரணத்தால் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்தேன் எனச் சொன்னார். இவ்வளவு நெருக்கமாகப் பழகிய பின்னரும் கூட நான் எனது குலம் கோத்திரம் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை அவரிடத்தில் சொல்லாமல் விட்டது எனது குற்றம் என்பதனை அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் என்னுடைய பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றுடன் குலம் கோத்திரம் ராசி நட்சத்திரம் யாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டேன். அவர் அதனைப் பெற்றுக் கொண்டு லேசாக சிரித்தமைக்குக் காரணம் கேட்டதற்கு நான் அவரை விட ஒரே ஒரு நாள் முன்னதாகப் பிறந்தவள் எனச் சொன்னார். நல்ல வேளை அக்கா எனச் சொல்லவில்லை.
அதன் பின்னர் குங்குமத்தை அவர் கரங்களால் எனது நெற்றியில் வைக்கச் சொன்ன சமயத்தில் இப்போது வேண்டாம். அலுவலகம் முடிந்து செல்லும் சமயம் வைப்பதாகத் தெரிவித்தார். அதற்குக் காரணம் கேட்டதற்கு எனது குங்குமத்தை அனைவரும் கேட்பார்கள் எனவும் பகிர்ந்து கொடுக்க எனது இதயம் இடம் கொடுக்குமா எனவும் கேட்டார்.
நான் உடனே குங்குமத்தை அல்ல உங்களைக் கூட நான் பங்கு போட விட்டுக் கொடுக்க மாட்டேன் எனச் சொன்னேன். என்னைப் பொறுத்த வரையில் அவர் எனக்கே சொந்தம் என்னும் பேராசை உள் மனதில் வேரூன்றி விட்டது. இதன் காரணமாக இன்னொரு சுப முகூர்த்த நாளன்று உள்ளுரில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று அவர் கைகளால் என்னுடைய தாயார் முன்னிலையில் குங்குமம் வைத்துக் கொள்வதென முடிவு செய்தேன்.
அதன்படி நான் என் தாயாரிடத்தில் முன்னமேயே சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு அவரை என்னுடைய இல்லத்திற்கு ஒரு நாள் மாலையில் வரச் சொன்னேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் கோயிலுக்குச் சென்று என் தாயார் முன்னிலையில் குங்குமம் வைத்துக் கொள்வதன் பொருட்டு வருகை தருமாறு கேட்டுக் கொண்டேன். என்னுடைய வருகை இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றது என என்னை பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்த்த என்னுடைய தாயார் எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.
அவரும் அந்த குறிப்பிட்ட நாளன்று என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் என்னுடைய தாயார் திடீரென மயங்கி விழுந்து மூச்சுப் பேச்சில்லாமல் போன காரணத்தால் அவருடன் சேர்ந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. நாம் இருவரும் மருத்துவ மனைக்கு அடிக்கடி சென்று வந்தோம்.
என் தாயார் மயங்கி விழுந்ததற்கு மருத்துவர்கள் சொன்ன காரணம் திடீரென ஏற்பட்ட ஏதோ ஒரு சோகமான சம்பவம் அல்லது அளவுக்கு அதிகமான சந்தோஷம் அல்லது இன்ப அதிர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் எனச் சொன்னார்கள்.
உடல் நிலை சரியான பின்னர் என் தாயார் என்னிடத்தில் மிகவும் வருத்தப் பட்டார்கள். என் தாயாரின் உடல் நலம் பற்றி விசாரிக்கவும் என் தாயாரைப் பார்க்கவும் அவர் அடிக்கடி எனது இல்லத்திற்கு வந்து சென்று கொண்டு இருந்தார் என்னுடைய தாயாருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
மீண்டுமொரு முறை அவர் எனது நெற்றியில் திலகமிட நாள் குறித்தோம். அந்த நாளில் நான் அவரிடத்தில் அலுவலக நேரத்தில் பேசிக் கொண்டிருந்த சமயம் திடீரென அவருக்கு வந்த தந்தியில் அவரது தாயாருக்கு சர்க்கரை நோயின் காரணமாக உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்த்து இருப்பதாகவும் உடனடியாக புறப்பட்டு வருமாறும் இருந்தது கண்டு உடனே சொந்த ஊருக்குப் புறப்பட்டார். நானும் கூட வருகின்றேன் எனச் சொன்னமைக்கு நான் எனது வலது காலை எடுத்து வைத்து வரும் நாள் வரையில் காத்திருக்க வேண்டுமெனச் சொல்லி விட்டு அவர் மட்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டார். எனவே இரண்டாம் முறையும் என்னுடைய நெற்றியில் அவர் திலகம் வைப்பது தடைப்பட்டது.
இரண்டு முறையும் எனது நெற்றியில் அவர் கோயிலுக்கு அழைத்துச் சென்று குங்குமம் வைப்பது தடைப்பட்ட காரணத்தை சுட்டிக் காட்டி இரண்டு முறை சகுனத்தடை ஏற்பட்டதனை கருத்தில் கொண்டு இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதனை மறு பரிசீலனை செய்யுமாறு என்னுடைய தாயார் நம் இருவரையும் வைத்துக் கொண்டு அறிவுரைகள் வழங்கினாhகள்.
அதற்கு அவர் என் நெற்றியில் திலகம் வைப்பதற்குப் பதில் நேரடியாக திருமணம் செய்து கொண்டால் நல்லதாக இருக்குமே எனச் சொல்லி விட்டு பதிவுத் திருமணம் செய்து கொள்ள தேதி பார்க்கலாமே எனச் சொன்னதனை என் தாயார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு சோகம் கவ்விக் கொண்டது.
நானும் அவரும் வாழ்க்கையில் ஒன்றாக இணைவதற்கு ஏதோ ஒரு சக்தி தடுக்கின்றது என என்னுடைய தாயார் சொன்னது கேட்டு என் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால் அவர் அதனைப் பற்றிக் கவலைப் படவில்லை. நிச்சயம் அவர் என்னை மணந்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலை நிமித்தமாகச் சென்று வசித்து வந்த என் தந்தை தாய்நாடு வந்திருந்த சமயத்தில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவ மனையில் காண்பித்த சமயத்தில் அவரைக் காப்பாற்றுவது மிகவும் கஷ்டம் எனவும் உயிர் பிழைத்தாலும் முன்பு போல சுறுசுறுப்பாக இயங்க முடியாது. நடக்க முடியாது. வெளி நாடு செல்ல முடியாது எனவும் சொன்னார்கள்.
உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரும் மருத்துவ மனையில் கூடியிருந்த சமயத்தில் என்னை அழைத்து அவருடைய கடைசி ஆசையை நிறை வேற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய கடைசி ஆசை என் தாயாரை கண்கலங்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்வார் என எதிர்பார்த்தேன்.
ஆனால் என்னுடைய அத்தையின் மகனான முறைப் பையனுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லிக் கொண்டே அவரது கைகளோடு என்னுடைய கைகளைச் சேர்த்து வைத்து என்னிடத்தில் சத்தியம் பெற்ற சமயத்தில் அவரது உயிர் பிரிந்தது. என்னுடைய தாயாருக்கு எனது தந்தையை இழந்த சோகம் ஒரு புறம். நான் உயிருக்கு உயிராக காதலித்தவரை திருமணம் செய்து வைக்க முடியாமல் போய் விட்டதே என்னும் சோகம் மறு புறம்
என் அனைத்து உறவினர்கள் முன்னிலையில் உயிர் பிரிவதற்கு ஓன்றிரண்டு நிமிடங்களுக்கு முன்னர் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதா அல்லது உயிருக்கு உயிராக காதலித்தவரை கரம் பிடிப்பதா என முடிவெடுக்கையில் உயிருக்கு உயிராக காதலித்தவரை மணந்து கொள்வதனைக் காட்டிலும் உயிர் கொடுத்தவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவது தான் சரியெனப்பட்டது. எனது நிலைமையினை அவரிடத்தில் தெரிவித்த சமயம் அவர் என்னிடத்தில் அவர் இல்லாமல் நான் வாழ்க்கையினை சந்தோஷமாக வாழ முடியுமா எனக் கேட்ட சமயம் நான் அழுது விட்டேன். என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக் கூடாது என அவரும் எண்ணினார். எனவே நான் என் அத்தை மகனை திருமணம் செய்து கொள்வதனை அவர் தடுக்க மனம் வரவில்லை.
நம் இருவருக்கிடையே மலர்ந்து வந்த காதல் என் தாயைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத காரணத்தால் நான் என்னுடைய அத்தை மகனை மணந்து கொள்வதில் உறவினர்களால் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. என் காதல் தோழியர்களில் சிலருக்கு மட்டும் தெரிந்த போதிலும் அவர்கள் அதனைப் பெரிது படுத்தவில்லை. அவர் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவரது குங்குமச் சிமிழ் என்னிடத்தில் பத்திரமாக இருக்கின்றது.
என்னைத் திருமணம் செய்து கொண்ட என்னுடைய அத்தை மகன் எனக்கு தங்கத்திலே குங்குமச் சிமிழ் திருமண மேடையில் பரிசளித்தார். குங்குமச் சிமிழே தங்கம் என்றால் அவர்களின் அந்தஸ்து எப்படியிருக்கும் என்பதனை சொல்ல வேண்டியதில்லை.
யாரிடத்திலும் பேசாமல் இருந்த நான் அவருடன் மாத்திரம் பேச ஆரம்பித்து உயிருக்கு உயிராகப் பழகி காதலித்து வந்த சமயத்தில் என் கோரிக்கையினை ஏற்று மதுரை மீனாட்சி அம்மன் குங்குமத்தையும் வெள்ளியிலானான குங்குமச் சிமிழையும் பரிசளித்து அவர் கரங்களால் என் தாயார் முன்னிலையில் குங்குமம் என் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் அவரை அனைவரது ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் திடீரென என்னுடைய தந்தை நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் அவரது கடைசி மூச்சு நிற்கும் சமயம் செய்து கொடுத்த சத்தியத்தின் படி அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது தங்கத்தாலான குங்குமச் சிமிழ் கிடைத்த போதிலும் வெள்ளியாலான குங்குமச் சிமிழிலிருந்து அவர் கரங்களால் எனது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணிய நேரத்தில் இருந்த சந்தோஷத்தையும் என்னால் மறக்க முடியவில்லை.
அவர் பரிசளித்த வெள்ளியிலானான குங்குமச் சிமிழிலிருந்து குங்குமம் எடுத்து என் நெற்றியில் வைக்கும் சமயம் அவரே என் நெற்றியில் குங்குமம் வைப்பதாக எண்ணிக் கொள்வேன். தங்கத்தாலான குங்குமச் சிமிழ் கிடைத்தும் வெள்ளியினாலான குங்குமச் சிமிழை மறக்க முடியவில்லை. அவர் இல்லாமல் நான் வாழ்க்கையினை சந்தோஷமாக வாழ முடியுமா எனக் கேட்ட வார்த்தைகள் என் மனதில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.