அனைத்து உறவுகளையும் விட முதல் காதல் வலிமையானது
பதினெட்டு பட்டியில் எது நடந்தாலும் அது கட்டாயம் அவரது செவிகளுக்கு வந்து விடும். பதினெட்டு பட்டியில் நடக்கின்ற சுப நிகழ்ச்சிகளுக்கான பத்திரிக்கைகள் அனைத்தும் அவருக்கு உண்டான மரியாதையுடன் அவரது இல்லம் தேடி வந்து சேர்ந்து விடும்.
பதினெட்டு பட்டியில் வாழும் மக்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களது உயர்வுக்கு அவர் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருப்பார் என்பதனால் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும். அவர் நடந்து செல்லும் சமயம் எதிரே வருகின்ற அனைவரும் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்த பின்னர் தான் மேற்கொண்டு நடக்க ஆரம்பிப்பார்கள்.
இவ்வளவு மரியாதை மிகுந்தவரை ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் அழைப்பார்கள். ஒரு தரப்பினர் நாட்டாமை என்பார்கள். இன்னொரு தரப்பினர் பிரபு என்பார்கள். இன்னொரு தரப்பினர் ஜமீன் என்பார்கள். பொதுவாக அனைவரும் ஜமீன் என்றழைப்பதனை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார்கள். ஜமீன் வீடு என்றால் அனைவருக்கும் பரிட்சயம்.
பதினெட்டு பட்டியில் உள்ள குடும்பங்களில் நிகழும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் அவர் முக்கிய விருந்தினராக அழைக்கப் பட்டிருப்பார். அதே சமயம் பதினெட்டு பட்டியில் நடக்கும் துயரச் சம்பவங்கள் அனைத்தும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நாட்களில் அதனில் கட்டாயம் பங்கேற்பார். துக்க நிகழ்வுகளின் போது அவர்களின் இழப்பிற்கு எவ்வளவு உதவ முடியுமோ அந்த அளவிற்கு உதவிக்கரம் நீட்டுவார். அனைவராலும் பெரிய மனிதர் என போற்றப் படுகின்ற அளவிற்கு அவரது செல்வாக்கு ஓங்கியிருந்தது.
அனைவராலும் ஜமீன் என மரியாதையாகவும் செல்லமாகவும் அழைக்கப் பட்டவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையில் இருந்தார். அவருக்கு என்ன நோய் என கண்டறிந்து சிகிச்சையளிக்க வெளியூர்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டிருந்து மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.
என்ன நோய் என குறிப்பாகக் கண்டறிய முடியவில்லை. இருந்த போதிலும் சில குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் அவரது இதயத்துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது. ஆனால் அவ்வாறான முன்னேற்றம் நிரந்தரமானதாக இல்லை. இது மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் வியப்பாக இருப்பதோடு கலக்கத்தையும் கொடுத்தது.
ஜோதிட விற்பன்னர்கள் நேரில் வந்து அவரது ஜாதகத்தை பார்த்து அவரைக் காப்பாற்ற முடியுமா அல்லது இழக்க நேரிடுமா என அலசி ஆராய்ந்து அதற்குத் தேவையான பரிகாரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை மாத்திரம் ஆராய்ந்து பார்க்கும் சமயத்தில் பயப்படும் படியாக ஏதுமில்லை எனச் சொல்கின்றார்கள்.
அதே சமயம் அவரது மகன் ஜாதகத்தில் அவரது மகனுக்கு கண்டி யோகம் உள்ளதாகவும் அநேகமாக கொள்ளி வைக்க வேண்டிய நிலைமை உருவாகலாம் எனவும் தெரிவிக்கின்றார்கள். அவரது மனைவியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள் மனைவியின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் மாங்கல்ய பலம் குறைவாக இருப்பதாகவும் சொல்கின்றார்கள்.
ஜோதிடர்களிடத்தில் பரிகாரங்கள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டமைக்கு சுப விரயங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். ஆனால் மகனுக்கு கண்டி யோகம் தான் பலமாக இருக்கின்றது எனவும் திருமணம் செய்து வைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கின்றார்கள். மொத்தத்தில் அவரைக் காப்பாற்ற அவரது மனைவியின் ஜாதகமும் ஒத்துவரவில்லை. மகனின் ஜாதகமும் ஒத்து வரவில்லை.
பதினெட்டு பட்டி ஊர் மக்கள் நேரில் வந்து அவர் விரைவில் குணம் பெறவேண்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் கூட்டு வழிபாடுகள் மேற்கொண்டனர். அவரைக் காண ஊர் மக்கள் அனைவரும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். யார் யாரெல்லாம் அவரைக் காண வருகின்றார்கள் என்பதனை படுக்கையில் படுத்திருக்கும் ஜமீன் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. அவரது கண்கள் யாரையோ தேடுகின்றன. ஆனால் அவர் தேடும் நபர் யாரென்று யாராலும் ஊகிக்க முடியவில்லை.
அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு வழிபாடு வீண் போகவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் அவருக்கு உடல் நலம் சற்று தேறி விட்டது. நன்கு பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் அவரால் எழுந்து உட்கார முடியவில்லை. நடக்க முடியவில்லை.
இந்த நிகழ்வுகளுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு முறை தனது நண்பரின் மகன் ஒருவன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக காவல் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்கும் நிலைமை வந்து விட்டது. ஜமீன் பல முறை கடன் வாங்கக் கூடாது என தனது நண்பரிடத்திலும் நண்பர் மகனிடத்திலும் எடுத்துச் சொல்லியும் கேட்காத காரணத்தால் இந்த நிலைமை.
இருந்த போதிலும் நண்பருக்கு அவரது மகன் சிறை செல்வதனைத் தவிர்க்க நண்பரின் மகன் பட்ட கடனை அடைத்து காவல் துறை நடவடிக்கைகளிலிருந்து விடுபட பணம் கொடுத்து உதவியதோடு மட்டுமல்லாமல் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும் இனாமாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
ஜமீனின் நண்பரின் மகன் யாரிடத்தில் கடன் பட்டு கடனை அடைத்தாரோ அந்த நபர் தமது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு உடல் நலமில்லாத அந்த சமயத்தில் நேரில் வந்து குடும்பத்தாரிடத்தில் அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.
தமது மகனின் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்றதற்கு ஜமீன் தான் அவரது நண்பருக்கு பண உதவி செய்து அந்தப் பணம் குறிப்பிட்ட காலத்தில் வந்தமையால் தான் திருமணம் தங்குதடையின்றி நடைபெற்றது எனவும் அதற்குக் காரணமாக இருந்த ஜமீனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலும் ஜமீன் வீட்டிற்கு சென்று ஜமீனை மணமக்களுடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
திருமணம் நடைபெற்ற சமயத்தில் உடல் நலமின்றி படுத்த படுக்கையில் இருந்த காரணத்தாலும் அதன் பின்னர் நடக்க முடியாக காரணத்தாலும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு ஜமீன் மிகவும் வருத்தம் தெரிவித்தார்.
ஜமீனுக்கு உடல் நலமில்லை என்பதனை அறிந்த பதினெட்டு பட்டி ஜனங்களும் வந்து உடல் நலம் விசாரித்து கூட்டு வழிபாடு மேற்கொண்ட போதிலும் ஜமீன் ஒரே ஒரு நபரை மாத்திரம் கண் குளிர காண விரும்பினார். ஆனால் அந்த ஒரே ஒரு நபர் மட்டும் அபாய கட்டத்தை தாண்டிய பின்னரும் கூட நேரில் வந்து பார்க்கவில்லை. அது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
அவருக்கு மிக மிக நெருக்கமான அவரது வயதுடைய அவருடைய வாழ்க்கை ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த போதிலும் வெளியிடாமல் காக்கக் கூடிய அவரது நண்பர்களிடத்தில் அந்த நபரின் உடல் நிலை பற்றிக் கேட்டறிந்தார்.
அப்போது ஜமீன் குறிப்பிட்ட அந்த ஒரு நபர் நன்கு உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஜமீனுக்கு உடல் நலமில்லாத விவரம் தெரிந்திருந்தும் கூட அந்த நபர் ஜமீனைக் காண வரவில்லை எனவும் தெரிய வந்தது. உடல் நலமில்லாத விவரம் தெரிந்தும் கூட ஜமீனைப் பார்க்க வரவில்லை என்று தெரிய வந்த சமயம் ஜமீனுக்கு பெருத்த ஏமாற்றம்.
அந்த ஏமாற்றத்தை ஜமீனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அந்த நபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் ஜமீனை உடல் நிலை சரியில்லாத போது காண வரவில்லை எனவும் ஏதேனும் கோபமா எனவும் கேட்டார்.
அதற்கு எதிர் தரப்பிலருந்த ஜமீன் மீது எதுவும் கோபம் இல்லை எனவும் ஏற்கனவே சொன்னது போல திருமண வயதில் குழந்தைகள் இருக்கும் சமயத்தில் ஏதேனும் திருமணத்தில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்ததை தொலைபேசிச் குரல் நினைவு படுத்தியது. அத்துடன் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருவரது உயிர்களும் உடலை விட்டு நீங்காது என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்பதனையும் நினைவு படுத்தியது.
அதன் பின்னர் தாம் ஏற்கனவே சொன்னது போல திருமணத்தின் போது சந்திக்க வேண்டும் என்பதற்காக தமது மகளின் திருமண பத்திரிக்கையினை ஜமீன் இல்லத்திற்கு வந்து நேரில் கொடுக்க நினைத்ததாகவும் அந்த சமயத்தில் ஜமீன் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்களைத் தவிர நெருங்கிய உறவினர்களைக் கூட அனுமதிக்க மறுத்து விட்டார்கள் என தெரிய வந்ததாகவும் எதிரிலிருந்து குரல் ஒலித்தது.
தொடர்ந்து ஜமீன் உயிரோடு இருக்க வேண்டுமெனில் தாம் நேரில் வந்து சந்திப்பது சரியல்ல என்பதனையும் தாம் நேரில் வந்து சந்தித்திருந்தால் ஜமீன் உயிருக்கு ஆபத்து என்பதால் நேரில் வரவில்லையெனவும் நீண்ட காலம் ஜமீன் உயிர் வாழ தொடர் பிரார்த்தனை தாம் செய்ததாகவும் அந்தப் பிரார்த்தனை இன்னும் தொடர்வதாகவும் அவரை மீண்டும் தேக ஆரோக்கியத்துடன் காண வேண்டும் என்னும் அந்தக் குரல்தாரரின் வேண்டுதலும் தான் ஜமீன் பிழைத்ததற்கு காரணம் எனவும் ஒலித்தது.
அதன் பின்னர் ஜமீன் தொலை பேசியில் ஒலித்த அந்தக் குரலுக்குச் சொந்தமானவரை உரிமையுடன் அழைத்து திருமணமான மகளை ஆசீர்வதித்து பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்காகவாவது வீட்டிற்கு வரலாமா எனக் கேட்க திருமணமான தம் மகள் ஏற்கனவே ஜமீன் அவர்களிடத்திலிருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு பரிசுப் பொருட்களையும் வாங்கிச் சென்று விட்டதாகத் தெரிய வந்தது.
ஜமீன் மீண்டும் அந்தக் குரலுக்குச் சொந்தமானவரிடத்தில் நான் மணமக்களை எப்போது ஆசீர்வதித்தேன் எனக் கேட்டதற்கு ஜமீனிடத்திலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அவரது நண்பர் யாருடைய கடனை அடைத்தாரோ அவரது மகன் தான் தமது மருமகன் எனவும் அந்த மணப்பெண் தான் தனது மகள் எனவும் எதிர்க்குரல் ஒலித்தது.
ஜமீன் ஜாதகப்படி சுப விரயம் செய்தால் உயிர் பிழைக்க முடியும் என ஜோதிடர்கள் சொன்னது தமது மருமகனின் திருமணம் என்னும் சுப காரியத்திற்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவிடப்பட்டதால் ஜோதிடர்கள் சொன்ன சுபவிரயம் நடந்து ஜமீன் உயிர் பிழைக்க முடிந்தது எனவும் ஒலித்தது. அதுவும் தவிர தான் ஜமீனை நேரில் சந்திக்காததாலும் ஜமீன் உடல் நலம்3 பெறவேண்டி தாம் பிரார்த்தனை மேற்கொண்டதும் ஒரு காரணம் என ஒலித்தது.
அந்தக் குரலுக்குச் சொந்தமானவர் அவர் உயிருக்கு உயிராகக் காதலித்து அந்தஸ்து மற்றும் ஜாதகப் பொருத்தம் என்னும் காரணங்களால் பிரிய நேரிட்ட அவரது காதலி.
படுத்த படுக்கையாக மூச்சுப் பேச்சில்லாமல் சில நாட்கள் இருந்து அதன் பின்னர் எழ முடியாமல் நடக்க முடியாமல் இருக்கும் சமயம் மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டு கலக்கமடைந்த சமயத்தில் என்ன நடக்குமோ என எதிர்பார்த்தற்கும் தனக்கு முதன் முதலாக அறிமுகமாகி உயிருக்கு உயிராக பழகிய அந்தக் காதலியின் வழிபாடு மற்றும் தெரிந்தோ தெரியாமலோ தம் நண்பரின் மகன் பட்ட கடனை அடைக்க இனாமாக கொடுத்து ( தர்மம்) உதவி செய்த பணத்தைக் கொண்டு நடந்த சுப விரயம் ஆகிய இரண்டும் தான் தன் உயிரைக் காத்தது என்னும் நிஜ வாழ்க்கையினையும் நினைக்கும் போது முதலாவது காதலின் வலிமை மற்றும் தர்மம் அனைத்து உறவுகளையும் விட மேலானது என்பதனை உணர்த்துகின்றது.