பள்ளித் தோழி
பள்ளிகளில் கடைசி பெஞ்சின் பெயர் மாப்பிள்ளை பெஞ்ச். அந்த பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள் படிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார்கள் என்பது அனைவரது எண்ணமாக இருந்தாலும் அந்த கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு அவர்கள் செய்யும் சின்னச் சின்ன குறும்புகளை எண்ணிப் பார்த்தால் அவை நகைச் சுவையாக இருக்கும்.
ஆசிரியர் ஏதேனும் புரிஞ்சதா எனக் கேட்கும் சமயம் அந்த பெஞ்சிலிருந்து வரக் கூடிய ஒரே பதில் புரியவில்லை என்பது தான். ஆனால் பரிட்சையில் மாத்திரம் வெற்றி பெற்று விடுவார்கள். அதற்கான தனித் திறமை அவர்களிடத்தில் கட்டாயம் உண்டு.
பள்ளிப் படிப்பின் சமயம் நானும் கடைசி பெஞ்ச் மாப்பிள்ளை தான். மாப்பிள்ளை என்று சொன்னால் மணப் பெண் வேண்டுமல்லவா? எனக்குப் பிடித்தமான மணப் பெண் முதல் பெஞ்சில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பாள். பள்ளிப் பாடத்தில் ஆசிரியர் சொல்வது விளங்கவில்லை என்றாலும் கூட எனக்குப் புரியும் படி சொல்வதற்கு அந்தப் பெண் உதவி செய்வாள்.
அதற்குக் காரணம் நான் பரிட்சையில் தோல்வியடைந்து விட்டால் மேற்கொண்டு படிக்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது. பட்டம் பெற முடியாது. பட்டம் கிடைக்கவில்லை எனில் அவளது பெற்றோர் எனக்கு அவளை மணமுடித்து வைக்க மறுத்து விடுவார்கள். அதன் காரணமாக அவள் எனக்கு தனியே பாடம் நடத்திக் கொண்டிருப்பாள்.
ஆசிரியர் நடத்திய பாடம் எனக்கு நன்றாக புரிந்தாலும் கூட அவளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் புரியாதது போல பாசாங்கு செய்து படிப்பேன். பள்ளிப் படிப்பில் அவள் என்னை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்று விட்ட படியால் மருத்துவப் படிப்பில் சேர முடிந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டாள்.
ஆனால் நான் குறைவான மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த காரணத்தால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அவளுடன் மேற்கொண்டு ஒன்றாகப் படிக்க முடியவில்லை.
இளங்கலை பட்டப்படிப்பினை மூன்றாண்டுகள் படித்து முடித்தவுடன் எனக்கு வேலை கிடைத்து பணியில் சேர்ந்து கொண்டேன். ஆனால் அவள் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு படித்து முடித்த பின்னர் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டாள்.
திருமணம் என்னும் பேச்சு வார்த்தை துவங்கிய சமயம் அவளது வீட்டார் மணப் பெண்ணை விட குறைவான படிப்பு படித்துள்ள காரணத்தால் எனக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். அவளும் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் காரணமாக பெற்றோர்களாக பார்த்து நிச்சயம் செய்த வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. அவளுக்கு வந்த வரனும் மருத்துவர் தான். நான் நன்றாகப் படித்திருந்து நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நானும் மருத்துவப் படிப்பு படித்து அவளை திருமணம் செய்திருக்க முடியும்.
விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல என்னுடைய படிப்பிற்கும் என்னுடைய வருமானத்திற்கும் ஏற்ற இடத்தில் வரன்கள் பார்த்தார்கள். கடைசியில் நான் எனது தாய்மாமன் மகளை அதாவது முறைப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன்.
நான் மணமுடித்துள்ள எனது மாமன் மகள் நிறைய படிக்கவில்லை என்றாலும் கூட என் மனம் கோணாமல் நடந்து கொள்வாள். ஆனால் ஒருவருடைய வருமானத்தில் குடும்பம் நடத்துவது சற்று சிரமமாக இருக்கும்.
அவ்வாறான தருணங்களில் நான் நன்றாகப் படித்திருந்தால் என்னை விரும்பிய அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்திருக்கலாமே என்னும் எண்ணங்கள் தோன்றும். என்னை விரும்பிய பெண்ணை நான் மணமுடிக்க முடியவில்லை என்னும் ஏக்கம் எனக்குள் எப்போதும் இருந்து வருவது போல அவளுக்கும் ஏற்படும். என்னை நேரில் பார்க்கும் ஒரு சில நிமிடங்களில் அவள் எவ்வளவு தான் வசதியாக இருந்தாலும் என்னை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்னும் ஏக்கப் பார்வை இருக்கும்.
ஒரே வகுப்பில் பள்ளிக் கல்வி பயிலும் காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எதிர் கால எண்ணங்கள் இருந்த போதிலும் அது நிறைவேறாத நிஜ வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கும் சமயம் இருவருக்கும் ஏக்கம் இருக்கத் தான் செய்யும்.