நீங்கள் மிகவும் தாமதம்.
உள் நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விமான டிக்கட்டுகளை முன் பதிவு செய்தல் மற்றும் உள்ளுர் மற்றும் உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கான அறைகளுக்கு முன்பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் ஒரு தனியார் நிறுவத்தில் நான் பணியாற்றி வருகின்றேன்.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற அழகாக இளமையாக திறமையாக இருப்பதோடு மட்டுமின்றி உள்ளுர் மொழி மற்றும் ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு தமிழ் ஆங்கிலம் உருது ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரியும். சரளமாகப் பேச வரும். இவை தவிர மற்ற மொழிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் எனக்குள் இருந்தது.
இந்தப் பணிக்கு மிகவும் பொறுமை அவசியம். அது மட்டுமல்லாமல் எந்த இடத்திற்கு எந்த நேரத்தில் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் எங்கிருந்து புறப்படும் அந்த விமானத்தில் இருக்கைகள் காலியாக இருக்கின்றதா என்பதனை அந்தந்த நேரத்தில் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
வெளி நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ளத் தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவைக்கான சட்டங்கள் மற்றும் அந்த விமானங்கள் பயணிக்கும் வழித் தடங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அதே போல வெளிநாட்டு செலாவணிக்குத் தேவையான கரன்சிகளின் இந்திய ரூபாய் மதிப்பு அந்தந்த நேரத்தில் உள்ள மாற்றம் மற்றும் மதிப்பு விவரம் பற்றி நினைவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தினசரி டிக்கட்டுகள் புக்கிங் மூலம் வரவு மற்றும் அந்த தொகையினை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் செலவு விவரங்கள் நிச்சயம் ஆறு இலக்கங்கள் முதல் ஏழு இலக்கங்கள் வரையில் இருக்கும். என்னுடைய மாத சம்பளம் ஆறு இலக்கத்தில் இருக்கும்.
நான் அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்தவுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே என் பணிகளை மேற்கொள்ளும் அதே வேளையில் நேரில் வந்திருப்பவர்களை வரவேற்று அவர்களிடத்திலும் உரையாடி என் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான் தொலைபேசியில் ஒருவருடன் உரையாடல் மேற்கொள்ளும் சமயத்தில் எனக்கு உதவி செய்ய என் அருகிலேயே எனக்கொரு உதவியாளர் இருப்பார்.
நான் ஒருவருடன் பேசும் சமயத்தில் எனக்கு நன்றாக கேட்ட போதிலும் என் உதவியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு முறை கேட்பேன். உதாரணமாக மதுரை, மதுரா, கோவில்பட்டி, வாடிப்பட்டி, கல்லுப்பட்டி என ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பல ஊர்கள் இருக்கின்றன. மீனம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என பல இடங்கள் உள்ளன. ஹைதராபாத், அகமதாபாத், ஒளரங்காபாத் என ஏறக்குறை ஒரே மாதிரியாக முடிகின்ற ஊர்கள் பல இருக்கின்றன. அவற்றில் குளறுபடி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரிக்கும் அதே நேரத்தில் என்னருகில் அமர்ந்துள்ள என் உதவியாளர் கம்ப்யூட்டர் மூலம் வலைத் தளத்தில் விவரங்களைத் தேடி முடித்து விடுவார்.
நான் தொலைபேசியிலோ அல்லது நேரடியாகவோ ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே எனது உதவியாளர் பணிகளை நிறைவு செய்து விடுவார். எனவே எனக்கு எனது பணிகளைச் செய்வது மிகமிகச் சுலபமாக இருக்கும். இந்தப் பணியினை யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால் ஆறு மொழிகள் தெரிந்த காரணத்தால் என்னிடத்தில் தமக்குத் தெரிந்த மொழிகளில் உரையாடுவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. எனவே நான் பணியாற்றும் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகம். என்னை அனைவரும் பெயர் சொல்லியே அழைப்பார்கள். அந்த அளவிற்கு என் பெயர் அனைவருக்கும் அறிமுகம்.
இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அனைவருக்கும் நன்றாகக் கேட்கும். ஒரு கையினால் சொடக்கு தான் போட முடியும். அது நீண்ட தூரம் கேட்காது. நான் பணியாற்றி வரும் நிறுவனம் மற்றொரு கிளை நிறுவனத்தை வேறு நகரத்தில் ஆரம்பிக்கும் பொருட்டு எனக்கு உதவியாக இருந்தவரை மாற்றம் செய்து அந்த அலுவலகத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்து விட்டார்கள். ஐந்து இலக்கங்களில் இருந்த அவரது மாதச் சம்பளம் ஆறு இலக்கங்களுக்கு உயர்த்தப் பட்டு விட்டது.
அச்சமயத்தில் எனக்கு உதவியாக மற்றுமொரு முது நிலைப் பட்டதாரி நியமனம் செய்யப்பட்டார். அவர் நன்றாக கம்ப்யூட்டர் இயக்க கற்றிருந்தார். அவருக்கு இந்திய மொழிகளில் மூன்று தெரியும். அவர் பணியில் சேர்ந்தவுடன் முதல் நாளன்று எனக்கு எப்படி உதவி செய்வது என்பதனை கற்றுக் கொடுத்து அதனை நன்கு திறமையாகச் செய்து எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.
முதலாவது மாதச் சம்பளம் பெற்றவுடன் அவரது நடை உடை மற்றும் பாவனை முற்றிலும் மாறி விட்டது. அரைக்கை சட்டையுடன் வந்த அவர் முழுக்கை சட்டை அணிந்து அதனை பேண்ட்டுக்கு உள்ளே விட்டு காலுறை அணிந்த காலனியுடன் அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இருவரது இருக்கைகளுக்கு இருந்த இடைவெளி குறைந்து எனக்கு மிக அருகில் நெருக்கமாக அமர ஆரம்பித்தார்.
அலுவலகம் தொடர்பானவற்றை மட்டும் என்னிடத்தில் பேசாமல் என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார். மாலை வேளைகளில் அவர் என்னை என்னுடைய இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றேன் எனச் சொன்ன சமயம் என்னிடத்தில் இரு சக்கர வாகனம் இருக்கின்றது எனச் சொல்லி விட்டேன். சில நாட்களில் நான் என்ன உணவு கொண்டு வந்திருக்கின்றேன் எனக் கேட்டு அவர் கொண்டு வந்துள்ள உணவினை என்னுடன் பகிர்ந்து உண்ண விரும்பினார். உணவினை ஒதுக்குவது சரியல்ல என்பதன் காரணமாக நானும் அவருடன் ஒன்றாகச் சாப்பிட ஆரம்பித்தேன்.
அவருடன் நான் ஒன்றாகச் சாப்பிடுவதன் காரணமாக அவர் மிக்க மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதனால் தானோ என்னமோ தினந்தோறும் வகை வகையான உணவுகளை அவர் அவரது வீட்டிலிருந்து கொண்டு வர ஆரம்பித்தார். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் என்னுடன் சேர்ந்து பணியாற்றினார்.
சில நாட்களில் அவர் என்னிடத்தில் என் குடும்பம் பற்றியும் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் கேட்டறிய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நான் கேரளாவில் பிறந்ததாவும் பெற்றோர் கேரளாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்தேன். அப்போது இந்த ஊரில் எங்கு தங்கி வருகின்றீர்கள் எனக் கேட்டiமைக்கு எனது மிக மிக நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கி வருகின்றேன் எனச் சொன்னேன்.
இவ்வாறு அவர் என்னிடத்தில் பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் அவர் என்னிடத்தில் நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவரது மனதை என்னிடத்தில் பறி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்து என்னைத் திருமணம் செய்து கொள்ள தமது விருப்பத்தினைத் தெரிவித்தார்.
அச்சமயம் நான் அவரிடத்தில் ஆங்கிலத்தில் You too late அதாவது நீங்கள் மிகவும் கால தாமதம் எனச் சொன்னேன். அவர் என்னிடத்தில் நான் சரியான நேரத்திற்குத் தான் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். கால தாமதமாக வரவில்லையே எனச் சொன்னார். அதற்கு நான் அவரிடத்தில் எனது வீட்டில் அடுத்து வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 6.00 மணிக்கு பிறந்த நாள் விழா நடைபெற இருக்கின்றது எனவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தேன். ஆனால் அவர் எனது இல்லத்திற்கு வருவதில் தான் நாட்டத்துடன் இருந்தாரே தவிர யாருக்கு பிறந்த நாள் என்பதனை அறிந்து கொள்வதில் நாட்டம் செலுத்தவில்லை.
அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் அவர் எனது இல்லத்திற்கு பிறந்த நாள் பரிசுடன் வருகை தந்தார். நான் அவரை வரவேற்று அவரிடத்தில் என் கணவரை அறிமுகப் படுத்தி வைத்தேன். பிறந்த நாள் என் கணவருக்கு என்பது அப்போது தான் அவர் அறிந்து கொண்டார்.
அதன் பின்னர் என் கணவர் விமானியாகப் பணியாற்றி வருவதாகவும் பலப்பல நாடுகளுக்கு விமானியாக விமானம் ஒட்டிச் செல்லும் சமயம் நான் மட்டும் வீட்டில் இருந்தால் தனிமையாக கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதன் காரணமாக அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தேன்.
நான் சொன்னதை அவர் நம்பவில்லை என்பது போல அவரது பார்வை இருந்தது. எனவே நான் எனது மைனர் செயினில் போட்டுள்ள கேரள தாலியினை காண்பித்து இந்த தாலிக்கு சொந்தக் காரர் இவர் தான் என என் கணவரைக் காண்பித்தேன்.
அதனை மிக்க சோகத்துடன் அறிந்து கொண்ட அவர் சமாளிக்க முடியாமல் என்னிடத்தில் இருவரும் எந்த நேரத்திலும் பேசிக் கொண்டே இருக்கும் பணியினை மேற்கொள்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது எனச் சொன்னார்.
யானைத் தந்தம் போல நிறம் கொண்ட பெண்களுக்கு தங்க நகைகள் அணிந்தால் அந்த தங்கம் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால் தங்கம் போன்ற வெளிர்மஞ்சள் நிறத்தில் உள்ள பெண்கள் தங்க நகைகள் அணிந்து கொண்டால் அந்த தங்கம் அணிந்திருப்பதே தெரியாது. இப்படித் தான் அவர் என்னிடத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளார் எனபதனை அவர் அறிந்து கொள்ள அவருக்கு ஒரு பிறந்த நாள் விழா தேவைப்பட்டது.
அவர் எனது இல்லத்திற்கு வருவதற்கு முன்னர் அவர் எதிர்பார்த்து வந்ததற்கும் அவர் எனது இல்லத்திற்கு வந்த பின்னர் எனது நிஜ நிலைமையினை அறிந்து கொண்டு திரும்பும் சமயம் அவரது ஏமாற்றத்தை எண்ணிப் பார்த்த எனக்கு உள்மனதில் சற்று உறுத்தலாக இருந்தது.