நெஞ்சம் மறப்பதில்லை
பட்டாம் பூச்சிகள் போல பலப்பல வண்ணங்களில் ஆடைகள் உடுத்திக் கொண்டு மிடுக்காக வலம் வருகின்ற கன்னிப் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுகின்ற ஒரு அருவலகத்தில் அவர்களிடத்தில் கடலை போடவும் கலாய்க்கவும் கம்பெனி கொடுக்கவும் ஒரு சில வாலிபர்கள் இருக்கத் தான் செய்கின்றார்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் வரம்புக்குள் தான் இருக்கும். வரம்பை தாண்ட மாட்டார்கள். தாண்டவும் முடியாது. வரம்பைத் தாண்டினால் நட்பு முறிந்து விடும்.
அனைவரும் ஒரே சமயத்தில் காலையில் அலுவலகத்திற்கு வருவார்கள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவார்கள். தத்தமது இருக்கைகளுக்குச் சென்றமர்ந்து அன்றைய தினத்தில் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து அதற்கான கோப்புகளை பெட்டிகளிலிருந்து வெளியிலெடுத்து வைத்து விட்டு கேன்டீன் சென்று ஒன்று கூடி விடுவார்கள். கேன்டினில் என்ன சாப்பிடுவார்கள் என்ன குடிப்பார்கள் யார் பணம் செலுத்துவார்கள் என்பது எல்லாம் வேடிக்கையாக இருக்கும்.
கேன்டீனில் சென்றமர்ந்தவுடன் முந்தைய நாள் அலுவலக பணிகளை முடித்து விட்டு புறப்பட்டு வீட்டுக்குப் போய் சேர்ந்தது முதல் மறு நாள் காலை அலுவலகத்திற்குப் புறப்படும் வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி பேசிக் கொள்வார்கள். அது தவிர ஒவ்வொருவரும் அணிந்து வந்துள்ள ஆடை அணிகலன்கள் பற்றிக் கேட்டறிவார்கள். அப்படியே டீ மற்றும் காபி ஆகியவை அருந்தி விட்டு அலுவலகத்திற்கு வந்து வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
எல்லோரும் எல்லாருடனும் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரே ஒரு மங்கை அதாவது திருமணமான ஒரே ஒரு மங்கை மாத்திரம் யாரிடத்திலும் ஈடுபாடு இல்லாமல் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் ஏனோ தானோ என்று இருப்பாள். அந்தக் கூட்டத்தில் நானும் இருப்பேன்.
என்னைச் சுற்றியுள்ள பெண்கள் எல்லோரிடத்திலும் சகஜமாகப் பேசிப் பழகும் நான் அவளிடத்தில் மாத்திரம் நெருக்கமாக இல்லாமல் விலகி இருப்பதற்கான காரணம் என்னவென கேட்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னால் உடனே பதிலளிக்க முடியவில்லை. நான் அந்தப் பெண்ணிடத்தில் பேசாமல் விலகி இருக்கும் விஷயம் எனக்கே அனைவரும் சொல்லித் தான் தெரிய வந்தது.
அதன் பின்னர் அந்தப் பெண்ணிடத்தில் எனது பார்வையினைச் செலுத்தி நெருக்கமாக பேச ஆரம்பித்தேன். ஒரு வார காலத்தில் அந்தப் பெண் என்னை நேரில் சந்தித்து அவளைப் பற்றியும் அவளது தனிப்பட்ட திருமண வாழ்க்கை பற்றியும் என்னிடத்தில் தனிமையில் கலந்துரையாட வேண்டுமென தெரிவித்தாள். அதற்கு நான் அவர்கள் வீட்டிற்கு வரட்டுமா எனக் கேட்டமைக்கு வேண்டாம் எனத் தெரிவித்து பொது மக்கள் நிறையப் பேர் குறிப்பிட்ட நேரம் மட்டும் கூடுகின்ற மற்ற நேரத்தில் வருகை தராத ஒரு பொது இடத்தில் தனிமையில் பேச வேண்டுமெனத் தெரிவித்து அந்த இடத்தினையும் அவளே தேர்வு செய்து என்னிடத்தில் தெரிவித்தாள்.
நானும் அந்தப் பெண் சொன்ன இடத்திற்குச் சென்றடைந்த சமயத்தில் அவள் மாத்திரம் இருந்தாள். அது ஒரு தேவாலயம். காலையிலும் மாலையிலும் ஆராதனை நேரங்களில் மட்டும் தான் மக்கள் நிறையப் பேர் வருகை தருவார்கள். மற்ற நேரங்களில் தேவாலயம் திறந்திருக்கும். ஒரு சிலர் மட்டுமே பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். நானும் சென்று அருகில் அமர்ந்தேன். அவளாகவே பேச ஆரம்பித்தாள்.
எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. எனக்கு திருமணம் நடந்த விவரம் அலுவலக நண்பர்கள் யாருக்கும் தெரியாது. காரணம் அலுவலக நண்பர்கள் யாரையும் அழைக்கக் கூடாது என என்னுடைய பெற்றோர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து ஒரு திருமண பத்திரிக்கை கூட என்னிடத்தில் கொடுக்கவில்லை. நான் என்னுடைய திருமணத்திற்கு தோழியர்களை அழைக்கவில்லை என்பதற்காக அனைவரும் என் மீது கோபமாக இருந்தார்கள். நீங்கள் பணியில் சேர்ந்த பின்னர் சில நாட்களில் நான் மீண்டும் அனைவருடனும் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.
அலுவலகத்தில் பணியாற்றும் தோழியர்களில் சிலர் உங்களைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் தான் பழகி வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அதற்கு நிறையப் பேர் போட்டியாக இருப்பதன் காரணமாக உங்களுக்கு இதுவரை எந்த சிரமங்களும் வரவில்லை எனச் சொல்லி விட்டு அலுவலக நண்பருடனான தொடர்பு பற்றி பேச ஆரம்பித்தாள்.
அவரும் நானும் ஒரே நாளில் ஒரே பிரிவில் வேலையில் சேர்ந்து கொண்டோம். நான் வேலையில் சேர்ந்த முதல் நாளே என் மனதினை அவரிடத்தில் பறி கொடுத்து விட்டேன். அதே போலத் தான் அவரும்.
என்னுடைய எண்ணங்களைப் பற்றியும் எதிர்காலம் பற்றியும் அவரிடத்தில் விவாதித்தேன். அவர் என்னைக் கரம் பிடிக்க ஒப்புக் கொண்டு என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கும் அதே நிலை. நானும் அவரும் விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் சந்தித்துப் பேசுவது பொழுது போக்குவது என்பது வாடிக்கையாகி விட்டது.
நம் இருவருக்கும் இடையே உள்ளன்பு தான் அதிகரித்ததே தவிர அவரது சுண்டு விரல் கூட என் மீது பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் என்னைக் காதலிக்கின்றார் என்பதனையோ அல்லது நான் அவரைக் காதலிக்கின்றேன் என்பதனையோ யாராலும் எளிதில் அறிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு நாம் இருவரும் இடைவெளியினைக் கடைப்பிடித்தோம்.
தற்போது நீங்கள் அமருமிடத்திற்கு அடுத்த இருக்கையில் சிலர் அமரத் துடிப்பது போல இல்லாமல் நான் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எதிர் வரிiயில் தான் அமருவேன்.
நான் விழித்திருக்கும் சமயத்தில் அவருடைய நினைவுகளுடனும் தூக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவருடைய கனவுகளுடனும் தான் இருப்பேன். நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் நான் தூக்கத்தில் என்னையும் அறியாமல் கனவில் பேசியதனை கேட்டு என் பெற்றோர் அறிந்து கொண்டு அந்த விவரத்தினை நம் நெருங்கிய உறவினர்களுடன் மிக மிக ரகசியமாக கலந்தாலோசித்தனர். எனது காதல் விஷயம் நம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்த போது இரண்டு வீட்டாரும் நமது காதல் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.
நமது காதல் விஷயம் வெளியுலகிற்கு தெரிவதற்கு முன்னர் என்னை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட ஆரம்பித்தனர். தூரத்து உறவினரது மகனை எனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.
எனக்கும் என் காதலருக்கும் ஒரே நாளில் ஒரே ஊரில் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் எனக்கு மாப்பிள்ளை வேறு. அவருக்கு மணப்பெண் வேறு. திருமண மண்டபங்கள் வேறு. இருவரது திருமணங்களையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வைத்து விட்டால் மாப்பிள்ளையோ அல்லது மணப் பெண்ணோ ஒருவரை ஒருவர் சந்திக்க விடாமல் தடுத்து திருமணம் செய்து வைக்கலாம் எனத் தீர்மானித்தனர்.
இருவரது பெற்றோரும் தூரத்து உறவினர்களாக இருந்தும் கூட ஒருவரை ஒருவர் மரியாதை நிமித்தமாகக் கூட அழைக்காமல் மிக மிக ரகசியமாக திருமண ஏற்பாடுகள் செய்து திருமணம் நடைபெற்று விட்டது. அதன் காரணமாக நாம் இருவரும் காதலில் தோல்வி ஏற்பட்டு பிரிய நேரிட்டது.
திருமணம் நடந்த நாளன்று முதலிரவில் என்னைத் தொட்டுத் தாலி கட்டய கணவர் என்னிடத்தில் பேசியது எனக்கு மிகவும் அறுவருப்பாக இருந்தது. நான் ஏற்கனவே அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஒருவருடன் நெருக்கமாகப் பழகி கருவுற்றிருப்பதாகவும் அந்த விவரம் வெளியில் தெரிவதற்கு முன்னர் அதிகப் படியான நகை மற்றும் சீர்வரிசை ஆகியவை செய்து என்னை அவர் தலையில் கட்டி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசுகையில் பெற்றோர் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டுத் தான் திருமணம் செய்து இருப்பதாகவும் யாரோ ஒருவர் மூலம் கருவுற்ற குழந்தைக்கு எனது பெயர் இனிசியலாக இருக்க சம்மதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
அதற்கு நான் அலுவலகத்தில் ஒருவருடன் பழகியது உண்மை தான். ஆனால் கற்பினைப் பறிகொடுக்கும் அளவிற்கு நெருக்கமாகப் பழகவில்லை எனச் சொன்னேன். அதற்கு அவர் முதலிரவு என்று ஒன்று நடந்தால் தானே யாரோ ஒருவரது குழந்தைக்கு நான் தந்தையாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனச் சொல்லி விட்டு என் மீது சந்தேகம் கொண்டு என்னை ஒதுக்கி விட்டார். எனது மாதாந்திர சம்பளத்தை கூட அவர் வாங்க மறுத்து விட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நான் பிறந்த வீட்டிலும் இல்லாமல் கணவர் வீட்டிலும் இல்லாமல் ஹாஸ்டலில் வசித்து வருகின்றேன். எனவே தான் வீட்டிற்கு வரவேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.
இது வரையில் அவரது விரல்கள் கூட என் மீது படவில்லை. ஆனால் நான் உடலளவில் எந்த விதமான மாற்றங்கள் அடையாததனைக் கண்டு நான் கருவினைக் கலைத்து விட்டேன் என மீண்டும் என் மீது அபாண்ட பழி சுமத்துகின்றார். அதனைக் கேட்ட நான் ஒரு நாள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைத்த போது அவ்வாறு செய்தால் அவரது சந்தேகம் உறுதியாகி விடும் என்பதால் வாழ்ந்து காட்ட வேண்டும் என முடிவெடுத்தேன். நான் வாழ்வதா அல்லது சாவதா என்பது அறியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களது நட்பு அனைவருக்கும் கிடைத்தது. அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எனக்கு இந்த நிலைமை எனில் என் முன்னாள் காதலருக்கு வந்த அவரது மனைவி என்னை மனதில் நினைத்துக் கொண்டு அவளிடத்தில் இல்லற சுகம் அனுப்பவிப்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனச் சொல்லி விட்டு அவரை விட்டு திருமணமான முதல் நாளிலேயே பிரிந்து சென்று விவாக ரத்து கோரி விண்ணப்பித்து இருக்கின்றாள். அவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை.
நாம் இருவரும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி மற்றும் கன்னி கழியாதவள் என்னும் நிலைக்கு வந்துள்ளோம். உயிருக்கு உயிராக காதலித்த என்னை மணமுடித்து வைக்காமல் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்த காரணத்தால் என் காதலர் பெற்றோரை அறவே ஒதுக்கி விட்டார். அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை. அவரும் வீட்டை விட்டு வெளியேறி தங்கும் விடுதியில் தங்கியிருக்கின்றார்.
எனவே நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என என்னுடைய காதலரையும் கலந்தாலோசித்து விட்டு எனக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அவரது பெயரினையும் பணியாற்றும் பிரிவு பற்றிய விவரங்களையும் என்னிடத்தில் தெரிவித்தாள். உடனடியாக நான் என்ன அறிவுரை சொல்வதென்பது தெரியாமல் நாளை முதல் அவரும் நம்முடன் தேனீர் அருந்த வருகை தருவார் என்பதனை மட்டும் தெரிவித்தேன்.
அதற்கு அடுத்த நாள் காலையில் அலுவலகம் சென்றடைந்தவுடன் நேரடியாக அவர் பணியாற்றும் பிரிவுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பழைய மாதிரி தேநீர் அருந்துவதற்கு குழுவினருடன் கலந்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டு கேன்டீனில் எனக்கு வலது புறம் அமரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். கேன்டீனில் அனைவரும் ஒன்று சேர்ந்த சமயம் என்னிடத்தில் முறையிட்ட அந்தப் பெணணை அழைத்து என்னருகில் இடது புறம் அமர வைத்துக் கொண்டேன்.
அதன் பின்னர் தோழியர்கள் யாரிடத்திரும் சொல்லிக் கொள்ளாமல் அழைப்பு விடுக்காமல் திருமணம் செய்து கொண்டது அந்தப் பெண்ணின் சூழ்நிலை தான் காரணம் என்பதனையும் இருவருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்ட துயர சம்பவத்தினையும் அனைவரிடத்திலும் சுருக்கமாக எடுத்துரைத்தேன்.
அப்போது குழுமியிருந்த தோழியர்கள் அனைவரும் இருவரும் காதலித்து வந்தார்களா என ஆச்சர்யத்துடன் கேட்டனர். அதோடு மட்டும் நிற்காமல் இந்தப் புள்ளையும் பால் குடிக்குமா என அனைவரும் நினைத்து விட்ட காரணத்தால் தான் அந்தப் பெண் மீது கோபம் என்பதனையும் இனி அவர்களுக்குத் தேவையான அறிவுறைகளை அனைவரும் கலந்தாலோசித்து வழங்குவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தோழிகளில் ஒருத்தி வக்கீலுக்குப் படித்தவள் என்பதன் காரணமாக சட்டபூர்வ ஆலோசனைகளை அறிந்து மேற்கொண்டு செயலாற்ற ஆரம்பித்தோம். அதன்படி பாதிக்கப்பட்ட அந்தத் தோழியின் நடத்தை பற்றி கணவர் சந்தேகப்பட்டு ஹாஸ்டலில் தங்கி வருவதால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்வது எனவும் அதே போல தோழரின் மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கில் தொடர்ந்து எந்த விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்து கடைசியில் விவாக ரத்து பெறுவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஒருவர் மாத்திரம் கைகளை தட்டி ஓசை எழுப்புவதைக் காட்டிலும் பலரும் சேர்ந்து கைகளைத் தட்டினால் ஓசை அதிகமாக இருக்கும் என்பது போல பலருடைய ஆலோசனைகளின் படி நடவடிக்கை மேற்கொண்டு இருவரும் அவர்களுக்கு நடந்தேறிய கட்டாயத் திருமண பந்தத்திலிருந்து விடுபட்டு பின்னர் நல்ல நாள் பார்த்து தோழர்கள் மற்றும் தோழியர் அனைவரும் சேர்ந்து பதிவுத் திருமணம் செய்து வைப்பது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டு அதன்படி விரைவில் செய்கைகள் நடக்கலாயின.
இருவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட கட்டாயத் திருமணத்திலிருந்து விவாகரத்து கிடைத்தவுடன் இருவரும் தங்கி வசிப்பதற்கு வீடு பார்க்கும் படலம் மற்றும் பதிவுத் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்தோம். இரண்டு கூண்டுகளில் வலுக்கட்டாயமாக அடைக்கப் பட்டிருந்த கிளிகள் இரண்டும் கூண்டிலிருந்து விடுபட்டு தமக்குப் பிரியமான ஜோடியுடன் இணைவது காணும் சமயம் மீண்டும் ஒரு வசந்தம் போல இருந்தது.
இது வரையில் திருமண பரிசாக ஏதேனும் பொருட்களை மாத்திரமே வாங்கிக் கொடுத்த நாம் அனைவரும் முதல் முறையாக திருமணத்திற்கான தாலி மற்றும் தாலிச் சரடு ஆகியவற்றை வாங்கி மிகப் பெருமையுடன் திருமணம் நடத்தி வைத்தோம்.
அன்று முதல் அந்தத் தோழி என்னை அண்ணா எனவும் அவளது கணவர் அதாவது எனது தோழர் என்னை டேய் மச்சான் எனவும் அழைக்க ஆரம்பித்தனர். ஆமாம் எல்லோருடனும் நான் வாடா போடா வாடி போடி என உரையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் உறவு முறையில் என்னை அழைப்பது எனக்குள் சந்தோஷத்தைக் கொடுத்தது.
முன்பின் தெரியாத ஒரு தோழி என்னிடத்தில் நெருக்கமாகப் பழகவில்லை என்பதனை மற்ற தோழியர்கள் சுட்டிக் காட்டிய சமயத்திலும் அதற்குப் பின்னர் அந்தத் தோழியை நேரில் சந்தித்து அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவங்களை கேட்டறிந்த நான் மேற்கொண்டு என்ன செய்யப் போகின்றேன் என பெருமூச்சு விட்ட போது இருந்த எதிர்பார்ப்புகளுக்கும் அந்தத் தோழியுடன் பேசிய மறு நாள் அவளையும் அவருடைய காதலரையும் கேன்டீனுக்கு வரவழைத்து என்னருகில் அமர வைத்து இருவரது வாழ்க்கையிலும் ஏற்பட்ட சோகமான சம்பவங்களை அனைத்து தோழியர்களுக்கும் தெரிவித்த போது அனைவரது கலந்தாலோசனைகளின்படி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து அவற்றை முறையாகச் செய்து காதலில் தோல்வியுற்று பிரிந்த இருவரையும் ஒன்று சேர்த்து வைத்த நிஜ சம்பவங்களையும் எண்ணிப் பார்க்கும் சமயத்தில் என்னால் பிறரது சோகங்களைப் போக்கி நிம்மதியான வாழ்க்கையினை அமைத்துக் கொடுக்க முடிகின்றது என்பதனை நினைக்கும் போது தனிமையில் ஆலோசித்தால் எந்த ஒரு நல்ல முடிவுக்கும் வர முடியாது எனவும் பலர் ஒன்று கூடி கலந்தாலோசனை செய்யும் சமயத்தில் சரியான ஆனால் தீர்க்கமான முடிவு எடுக்க முடிகின்றது என்பதனை எண்ணிப் பார்க்கும் போது என் மனதிற்குள் ஏற்படுகின்ற உண்மையான சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகின்றேன்.