ஜோதிடம் வெற்றி பெற்றது.
எனக்குத் திருமணமாகி ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கடந்து விட்டன. நானும் என் மனைவியும் எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். நான் மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதால் சொந்த ஊரில் சொந்தங்களுடன் வாழ முடியாமல் எப்போதும் வெளியூர்களில் வாழ்ந்து கொண்டு வர வேண்டிய சூழ்நிலை. மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருவதால் அடிக்கடி வெளி நாடு சென்று வருவது வழக்கமாகி விட்டது.
நானும் சரி என் மனைவியும் சரி. நம் இருவரது பெற்றோர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம். என் மனைவி என்னைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாள். நானும் என் மனைவியைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன். எனது நண்பர்கள் என்னை பொண்டாட்டி தாசன் எனச் சொல்வார்கள். அந்த அளவிற்கு நம் இருவருக்குள்ளும் நல்ல ஒற்றுமை இருந்து கொண்டிருக்கின்றது.
என் மனைவியின் அழகில் மயங்கி நான் அவளைக் காதலித்து பெற்றோர் அனுமதியுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி நல்ல நிறம் மற்றும் அழகு. எங்களுக்குப் பிறந்த மகளும் நல்ல நிறம் மற்றும் அழகு. கல்வியில் சிறந்து விளங்கியதோடு விளையாட்டிலும் சிறந்து விளங்கி பலப்பல பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வாங்கி நம் வீட்டு ஷோகேஸ் முழுவதையும் அடுக்கியிருந்தாள். எங்கள் வீட்டில் கடவுள் விக்ரஹங்களை விட பதக்கங்களும் கேடயங்களும் தான் அதிகமாக காணப்படும்.
பூஜை அறையில் மாத்திரம் கடவுள் படங்கள் இருக்கும். பூஜைகள் செய்யும் போது மாத்திரம் மணியோசையுடன் சேர்ந்து பக்திப் பாடல்கள் ஒலிக்கும். மற்ற நேரங்களில் விளையாட்டு சேனல்கள் தொலைக் காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும்.
எனது வீட்டில் என்னுடன் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளோ அக்கா தங்கைகளோ கிடையாது. எனது வீட்டில் நான் ஒரே பையன். அதே போல் என் மனைவி வீட்டில் என் மனைவிக்கு அண்ணன் தம்பிகளோ அக்காள் தங்கைகளோ கிடையாது. அவர்களது வீட்டிலும் அவள் ஒரே பெண். எனது நண்பர்கள் என்னைப் பார்த்த சமயத்தில் மைத்துனி இல்லாத இடத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்காது எனக் கிண்டல் செய்வார்கள்.
மகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடிந்து விட்டது. என் மகள் மேற்கொண்டு முதுகலைப் பட்டம் பெற வேண்டும் எனத் துடிக்கின்றாள். ஆனால் எனது பெற்றோர்களுக்கு வயதாகி விட்டது. அதே போல எனது மாமனார் மற்றும் மாமியாருக்கும் வயதாகி விட்டது. நம் இருவாது பெற்றோர்களின் கடைசி ஆசை தமது ஒரே பேத்தியின் திருமணத்தை கண்குளிர காண வேண்டும் என்பது தான்.
மொத்தத்தில் என் மகள் மட்டும் தான் என்னுடைய பெற்றோருக்கும் என் மனைவியின் பெற்றோருக்கும் ஒரே ஒரு செல்லப் பேத்தி. என்னுடைய தாயார் மற்றும் என்னுடைய மாமியார் அவர்களது மொத்த நகைகளையும் பேத்திக்கு திருமணச் சீராக அளித்து நம் மகளுக்கு வருகின்ற மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழ்வதைக் கண்டு ரசிக்க வேண்டும் என்னும் ஒரே பேராசையுடன் இருந்தனர்.
நமது மகள் நம்மிடத்தில் மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அதே நேரத்தல் நம் இருவரது பெற்றோர் தமது பேத்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மெஜாரட்டி அதிகம் என்பதால் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை. திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம்.
மேற்கொண்டு மகள் படிக்க வேண்டும் என்னும் மகளின் கோரிக்கையினை ஏற்று தொலை தூரக் கல்வி பயில அனுமதித்து அதற்காக விண்ணப்பித்து முது நிலை பட்டப்படிப்பு தொடர்ந்தது. மகளுக்குத் திருமண யோகம் வந்து விட்டதா எனவும் எப்படிப்பட்ட வரன் அமையும் எனவும் வரப்போகும் வரன் சொந்தத்தில் அமையுமா அல்லது அந்நியத்தில் அமையுமா எனவும் அறிந்து கொள்வதற்கு எனது மகளின் ஜாதகத்தை ஜோதிடரிடத்தில் காண்பித்து கலந்தாலோசிப்பது என முடிவு செய்தோம்.
அதன் பிரகாரம் எனது மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் நமது வீட்டிற்கு வரவழைத்து நம் குடும்ப ஜோதிடரை மகளின் ஜாதகத்தைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வருமாறு அழைத்தோம். எனது மகளின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் மகளின் ஜாதகப்படி இரண்டு திருமணங்கள் நடைபெறும் எனத் தெரிவித்தார். அதனைக் கேட்ட எனக்கும் என் மனைவிக்கும் நம் இருவரது பெற்றோர்களுக்கும் தூக்கி வாரிப் போட்டது.
நம் மகளை உடனே தனியறைக்கு அழைத்துச் சென்று நம் மகளிடத்தில் பள்ளியில் படிக்கும் போதோ அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ யாருடனும் நெருக்கமாகப் பழகி காதல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என நேரடியாகக் கேட்டுப் பார்த்தோம். நமது மகள் நம்மிடத்தில் வெளிப்படையாக யாரையாவது காதலித்திருந்தால் ஜாதகம் பார்க்கவே அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் இதுவரையில் யாரையும் காதலிக்காத ஒரே காரணத்தால் தான் பெற்றோர் செய்து வைக்கப் போகும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தாள். நம் இருவரது மனக் குழப்பமும் தீர்ந்தது.
ஜோதிடரிடத்தில் எப்படி இரண்டு திருமணம் எனச் சொல்கின்றீர்கள் எனக் கேட்டமைக்கு மகளின் ஜாதகத்தில் இரண்டு முறை திருமணம் நடைபெறுவதற்கான யோகங்கள் இருக்கின்றன எனச் சொன்னார். காரணத்தைக் கேட்டோம்.
மகளின் ஜாதகப்படி திருமணம் நடந்த சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ மகளுக்கு இரண்டாம் முறையாகத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலைமை கட்டாயம் ஏற்படலாம் எனத் தெரிவித்தனர். அதற்குக் காரணமாக கணவன் மனைவி இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தால் கூட மறு முறை இணைந்து வாழும் சமயம் மீண்டும் ஒரு முறை கோயிலில் திருமணம் செய்து வைக்கும் முறை தற்போது பழக்கத்திற்கு வந்து விட்டது. எனவே பயப்படும் படியாக ஏதுமில்லை எனத் தெரிவித்தார். அதுவும் தவிர சில நேரங்களில் சட்டபூர்வ திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டி வருகின்றது எனத் தெரிவித்தார்.
தோஷங்கள் ஏதேனும் உண்டா எனவும் பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா என கேட்டமைக்கு தோஷங்கள் எதுவும் கிடையாது பரிகாரங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்து விட்டார். திருமணத்தை சற்று கால தாமதமாகச் செய்தால் இதிலிருந்து விடுபட முடியுமா எனக் கேட்டமைக்கு இந்தப் பெண்ணின் ஜாதகப்படி இரண்டு திருமணங்கள் நடந்தே தீரும். வேறு வழியே இல்லை எனச் சொன்னார்.
இத்தனையும் கேட்ட பின்னரும் கூட வயதான பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் விருப்பப்படி வெகு விமரிசையாகத் திருமணம் செய்து வைப்பது என அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். நல்ல நாள் பார்த்து பணியாற்றும் ஊரில் இல்லாமல் பெற்றோர் வசித்து வருகின்ற சொந்த ஊரில் திருமண தரகர்களை வரவழைத்து பெண்ணின் திருமணத்திற்காக ஜாதகங்களைக் கொடுத்தோம்.
திருமண தரகர்கள் கொண்டு வருகின்ற ஜாதகங்களுடன் பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு சென்று இரண்டு ஜாதகங்கள் பொருந்துகின்றதா எனப் பார்க்கும் பணியினை நமது பெற்றோர் கவனித்துக் கொண்டனர். அதே சமயத்தில் எந்தெந்த வரனின் ஜாதகங்கள் பொருந்தியுள்ளதோ அந்த வரன்களைப் பற்றி எங்களிடத்தில் தெரிவித்து வந்தனர். நாங்கள் வரனின் பெற்றோர் பற்றிய விவரம் மற்றும் படித்துள்ள படிப்பு விவரம் மற்றும் பணி புரிகின்ற அலுவலகம் மற்றும் பணியின் தன்மை ஆகியவற்றை மாத்திரம் கவனித்துக் கொண்டோம்.
எங்கள் மகளின் ஜாதகத்துடன் பொருந்தியுள்ள வரன்கள் பெண் பார்க்க வரவிருப்பதாக தெரிவித்த சமயம் நானும் என் மனைவியும் எங்கள் செல்லப் பெண்ணும் சொந்த ஊருக்குச் சென்று தங்கினோம். ஒரு வரன் வந்து பெண் பார்த்து பெண்ணை நன்றாகப் பிடித்துள்ளது என மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர்.
நானும் என் மனைவியும் மீண்டும் ஒரு முறை ஜோதிடரை எங்கள் இல்லத்திற்கு வரவழைத்து இரண்டு ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டோம். குறிப்பாக வரப்போகும் வரனுக்கு இருதார யோகம் ஏதேனும் உள்ளதா என அலசி ஆராய்ந்து பார்க்குமாறு தெரிவித்த சமயத்தில் வரனின் ஜாதகத்தில் ஏகபத்தினி விரதம் மேற்கொண்டு வாழ்ந்த ராமர் ஜாதகம் போல உள்ளது எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டவுடன் எங்கள் குடும்பத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு சீறும் சிறப்புமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த ஆறு மாத காலம் நம் மகளும் மாப்பிள்ளையும் மிக மிகச் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. என்னை எப்படி என் நண்பர்கள் பொண்டாட்டி தாசன் என்றார்களோ அதே போல என் மகள் என்ன சொல்கின்றாளோ அதனை என் மருமகன் கேட்பதாலும் என் மருமகன் என்ன சொல்கின்றாரோ அதனை என் மகள் கேட்பதாலும் என் மகளையும் மருமகனையும் “Yes Darling” என அழைக்கத் தொடங்கினர்.
ஆனால் மருமகனுக்கு அவர் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து வெளிநாட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள மிக உயர்ந்த பதவிக்கு உத்தியோக உயர்வு வழங்கப்பட்டு நிச்சயம் வெளி நாடு சென்றே ஆக வேண்டும் என்னும் இக்கட்டான சூழ்நிலை உருவானது.
திருமணத்திற்குப் பின்னர் மாப்பிள்ளை மாத்திரம் வெளிநாடு சென்றால் மகள் பயணி விசா பெற்றுக் கொண்டு ஆறு மாதங்களுக்கு மேல் தங்க முடியாமல் வெளி நாடு சென்று திரும்ப வேண்டியிருக்கும். மாப்பிள்ளை விரைவில் தாய் நாடு திரும்புவதானால் அவ்வாறு சென்று வர வாய்ப்புண்டு. ஆனால் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தப் பட்ட காரணத்தால் கட்டாயம் தாய் நாடு திரும்ப முடியாது என்னும் நிலையில் இரண்டு பேரும் ஒன்றாக வெளி நாடு சென்று வர முடிவு செய்யப்பட்டது.
அவ்வாறு தம்பதிகள் இருவரும் வெளி நாடு செல்வதற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகியிருந்த போதிலும் சட்டப்படி திருமணம் நடைபெற்றமைக்கான சான்றிதழை சமர்ப்பித்தாக வேண்டும். திருமணம் முடிந்து விட்டது என்பதற்கு அடையாளமாக திருமண பத்திரிக்கையோ அல்லது வீடியோ ஆதாரங்களோ இருந்தால் மட்டும் போதாது.
எனவே மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய சட்டபூர்வமாக பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை. எனவே திருமணமான தம்பதியர் இருவரும் தமது பெற்றோர்களுடன் மீண்டும் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று திருமண பத்திரிக்கையினை காண்பித்து பெற்றோர் முன்னிலையில் இரண்டு சாட்சிகளுடன் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டனர். நமது குடும்ப ஜோதிடர் சொன்னபடி நம் மகள் வெளி நாடு செல்வதற்காக சட்டபூர்வ சான்றிதழ் பெறும் பொருட்டு திருமண பதிவாளர் முன்னிலையில் அரசு அலுவலமகத்தில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
அதே போல மண மகனுக்கு இருதார யோகம் இல்லாதிருந்த காரணத்தால் இரண்டு முறை ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மிக மிக மகிழ்ச்சியாக கணவன் மனைவி அந்தஸ்தில் வெளிநாடு பயணித்தனர். மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து அடிக்கடி வெளிநாடு சென்று வந்தது போல நான் என் மனைவியுடன் வெளி நாடு சென்று மகள் இல்லத்தில் சிறிது காலம் தங்கிய பின்னர் தாய் நாடு திரும்பினோம்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வெளி நாட்டவர் தங்க வேண்டியிருக்குமாயின் திருமண பதிவுச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி கணவன் மனைவிக்கு இடையே பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருமண பதிவாளர் முன்னிலையில் நடைபெற்ற திருமண நாளை சொல்ல வேண்டியிருக்கும்.
அதே சமயம் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி பெற்றோர் பார்த்து நடத்திய அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உற்றார் உறவினர் சுற்றம் நண்பர்கள் புடைசூழ தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட திருமண நாளை கருத்தில் கொண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாடி மகிழ வேண்டியிருக்கும். அதே போல தேவாலங்களில் நடந்த திருமண நாளை கணக்கில் கொண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாடி மகிழ வேண்டும்.
ஒரு தம்பதியினர் திருமண பதிவாளர் முன்னிலையில் செய்து கொள்ளும் திருமணம் சட்ட பூர்வமானதாக அங்கீகரிக்கப் படுகின்றது. இவ்வாறான பதிவுத் திருமணங்கள் நடைபெற்ற பின்னர் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி உற்றார் உறவினர் சொந்தங்கள் முன்னிலையில் நடத்தி வைக்கப்படுகின்ற திருமணங்கள் சட்டப்படி செல்லாது. அதனையும் மீறி மீண்டும் ஒருவர் வேறொரு வாழ்க்கைத் துணையுடன் திருமணம் செய்து கொள்வார்களோயானால் அந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் அது இரண்டாவது திருமணமாகத் தான் கருதப்படும்.
சில நாடுகளில் உள்ள சட்டங்களின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் சமயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என கருதப்படுகின்றது அவ்வாறான இரட்டைத் திருமணங்களில் அரசு அலுவலகத்தில் நடந்த பதிவுத் திருமணம் மட்டும் தான் சட்டப்படி செல்லுபடியாகும்.
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ முதலில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட பின்னர் எந்த வகையாக திருமணங்களையும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி செய்து கொண்டாலும் முதலாவதாகச் செய்து கொண்ட பதிவுத் திருமணம் தான் செல்லுமே தவிர இரண்டாவதாக நடைபெற்ற திருமணம் எந்த வகையிலும் செல்லாது. சொத்துகளுக்கான முதல் வாரிசாக பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் முதன்மைப் படுத்தப் படுவார்கள்.
நானும் என் மனைவியும் நமது பெற்றோர்களுக்கு எப்படி ஒரே வாரிசுகளோ அதே போல நம் இருவரது ஒரே வாரிசான நமது ஒரே மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதன் பொருட்டு ஜோதிடர்களிடத்தில் கலந்தாலோசித்த சமயத்தில் மகளின் ஜாதகப்படி இரண்டு திருமணங்கள் நடைபெறும் என ஜோதிடர்கள் கணித்த சமயத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என எதிர் பார்த்ததற்கும் நாம் எப்படி ஒற்றுமையாக மன ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்துகின்றோமோ அதே போல நல்ல வரன் அமையப் பெற்று வெளிநாடு செல்லும் பொருட்டு மீண்டும் ஒரு முறை பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற காரணங்களுக்காக ஜாதகத்தினை அலசி ஆராய்ந்த ஜோதிடர் சொன்ன கணிப்பின் படி திருமணப் பதிவு அலுவலகத்தில் இரண்டாவது பதிவுத் திருமணம் நடந்த நிஜ வாழ்க்கையினையும் நினைக்கும் சமயத்தில் ஜாதகம் சரியாக கணிக்கப் பட்டதன் காரணமாக ஜோதிட பலன் வெற்றி பெற்றது என்பதனை உறுதியாக நம்பியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.