ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-2)
என்னை விட ஐந்து வயது அதிகமுடைய என்னுடைய அண்ணனுக்கு அந்தஸ்து வீடு வாசல் விளை நிலங்கள் என அனைத்திலும் சமமாகவும் ஜாதகப்படி 12 பொருத்தங்களில் 9 பொருத்தங்கள் பொருந்தியும் உள்ள ஒரு வரனைத் தேர்வு செய்து பெண் பார்ப்பதற்கு பெண் வீட்டார் வீட்டிற்கு எனது பெற்றோர் சென்று வந்தனர். என்னுடைய பெற்றோருக்கு பெண் அழகாகவும் அடக்கமாகவும் இருந்தமையால் மிகவும் பிடித்து விட்டது.
பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையை அழைத்துச் சென்று பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக் கொள்வதன் பொருட்டு பெண் பார்க்கச் சென்று வந்தோம். எனது அண்ணனுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. எனது அண்ணனுக்கு வரப்போகும் பெண்ணை அதாவது எனக்கு வரப்போகின்ற அண்ணியை எனக்குக் கூட ரொம்ப பிடித்து விட்டது.
அண்ணனுக்கு பெண் பிடித்த விவரம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரியப் படுத்தி விட்டனர். மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது என்ற தகவலும் வரப்பெற்று விட்டது. வரப்போகும் மணப்பெண்ணுடன் என்னுடைய அண்ணன் கைபேசியில் மிக மிக நீண்ட நேரம் பேசிக் கொண்டே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்து விட்டான். அதே சமயம் அந்தப் பெண்ணும் என்னுடைய அண்ணன் தான் தனது வருங்கால கணவர் என முடிவெடுத்து விட்டாள். அண்ணன் திருமணத்தை சீக்கிரம் நடத்தி வையுங்கள் என அவசரப்படுத்த ஆரம்பித்து விட்டான்.
மணப்பெண் வீட்டாரிடமிருந்து திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் பற்றியோ அல்லது திருமண தேதி பற்றியோ எந்த விதமான தகவலும் வரப்பெறவில்லை. எனது பெற்றோருக்கு மகனுக்குத் திருமணம் செய்து வைத்து மணப்பெண்ணை வீட்டிற்கு விரைவில் அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம். எனவே என் பெற்றோர் மணமகள் வீட்டிற்குச் சென்று விவரம் கேட்டு வருவது என முடிவு செய்தனர்.
ஒரு நல்ல நாள் பார்த்து வரப்போகின்ற மருமகளின் வீட்டிற்கு என் தாயும் தந்தையும் சென்றனர். என்னையும் கூட வருமாறு அழைத்தமைக்கு நான் மறுப்புச் சொல்லியும் கூட கட்டாயப்படுத்தி என்னையும் அழைத்துச் சென்றார்கள். நானும் வேறு வழியின்றி கூடச் சென்று விட்டேன்.
அச்சமயத்தில் மணமகள் வீட்டார் தம்முடைய பெரிய மகனுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பதாகவும் மகனுக்கு வரன் அமைந்த பின்னர் தான் மகளின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி குறிப்பது எனவும் சொன்னார்கள். மணப்பெண்ணின் அண்ணன் வெளி நாட்டிலிருந்து பெண் பார்க்க விடுப்பில் வந்திருந்தார்.
அவரது பெற்றோர் மகனுக்கு நான்கைந்து வரன்கள் பார்த்து வைத்திருப்பதாகவும் அந்த நான்கைந்து வரன்களில் மகனுக்கு எந்த வரனைப் பிடித்திருக்கின்றதோ அந்த வரனை நிச்சயதார்த்தம் செய்து முடித்த பின்னர் இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு நாள் குறிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இதனைக் கேட்ட எனது தந்தைக்கும் தாய்க்கும் மிக்க மிக்க சந்தோஷம். காரணம் அண்ணனுக்கு விரைவில் திருமணம் முடிந்து விடப் போகின்றது. அதற்குப் பின்னர் எனது பெற்றோரின் விருப்பப்படி என்னை மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ சொந்தம் விட்டுப் போகாமல் திருமணம் பேசி முடித்து வைப்பதாக இருந்தனர்.
அண்ணனுக்குப் பெண் பார்த்து வந்த இடத்தில் அவர்கள் சொன்னவாறு நான்கைந்து வரன்களையும் தமது மகனுக்கு காண்பித்து இருக்கின்றார்கள். ஆனால் மணமகனுக்குப் பிடித்த ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை. மணமகனைப் பிடித்த இன்னொரு பெண்ணுக்கு வெளி நாடு செல்வதில் ஆர்வமில்லை. மற்ற பெண்களுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பது போன்ற கருத்து வேறுபாடுகள் அமைந்து விட்டன. எனவே என் பெற்றோர் எதிர்பார்த்த குறுகிய காலத்தில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் எனக்கு வரப்போகின்ற அண்ணியின் அண்ணன் நான் எனது பெற்றோருடன் அவர்களது இல்லம் சென்றிருந்த போது பார்த்த சமயம் என்னை மிகவும் பிடித்து இருப்பதாகவும் அந்த வீட்டார் என்னை அவருடன் மணமுடித்து வைக்கும் படியும் கோரியுள்ளனர்.
எனது பெற்றோர் அவர்களிடத்தில் என்னை என்னுடைய மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் முதலாவதாக மகன் கல்யாணத்தை முடித்து விட்டு மகள் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் எனது அண்ணனுக்குப் பெண் பார்த்த இடத்தில் அவர்களது மகனுக்கு என்னைத் தான் பிடித்துள்ளது எனவும் பெண் கொடுத்துப் பெண் எடுப்பது என்றால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் சொல்லி விட்டார்கள். எனது பெற்றோருக்கு இக்கட்டான நிலை.
என்னைப் பொருத்த வரையில் உள்ளுரில் சொந்தத்திலோ அல்லது அந்நியத்திலோ உள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கடைசி காலம் வரையில் உற்றார் உறவினர் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதில் தான் ஆசை. எனது பெற்றோர் என்னருகில் தான் இருக்க வேண்டும்.
வெளிநாடு சென்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது உற்றார் உறவினர் நண்பர்கள் இல்லங்களில் நடைபெறுகின்ற விசேஷங்களுக்கோ அல்லது நெருங்கிய சொந்தங்களின் மறைவிற்கோ தாய் நாட்டிற்கு அவசர அவசரமாக வந்து அவசர அவசரமாக திரும்பிச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய கருத்தினை எனது பெற்றோரிடத்தில் ஆணித் தரமாகச் சொல்லி விட்டேன்.
இந்நிலையில் என்னுடைய பெற்றோர் என்னுடைய அத்தை மற்றும் மாமன் வீட்டாரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றனர். அச்சமயத்தில் என்னுடைய அத்தை வீட்டிலும் தாய்மாமன் வீட்டிலும் பருவமடைந்த பெண்கள் இருக்கும் நிலையில் வேறு இடத்தில் பெண் பார்த்துச் சம்மந்தம் செய்யச் சென்றதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் தவிர என்னை தாய்மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ என்னுடைய விருப்பத்தினைக் கேட்டு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர். என் பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்ற எனது பெற்றோர் ஏமாற்றத்துடன் இல்லம் திரும்பினர்.
இல்லம் திரும்பிய எனது பெற்றோர் எனது அண்ணனிடத்தில் நடந்த அனைத்தையும் சொன்னார்கள். அந்த சமயத்தில் என்னுடைய அண்ணன் என்னிடத்தில் தாம் பார்த்துள்ள பெண்ணின் அண்ணனை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கடைசியில் அண்ணன் திருமணத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்னும் முடிவினை நான் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.
நான் எனது அண்ணனிடத்தில் வெளி நாடு செல்வதில் விருப்பமில்லை என்பதனையும் உள்ளுரிலேயே யாரையேனும் திருமணம் செய்து கொண்டு உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் என எல்லோரையும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசிக் கொண்டே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தேன். எனது அண்ணனுக்கு முதலாவதாகப் பார்த்துள்ள பெண்ணை விட்டுக் கொடுப்பதில் மனமில்லாமல் இருப்பதனை அவரது பேச்சின் மூலம் அறிந்து கொண்ட பின்னர் என் பெற்றோரிடத்தில் தெரிவித்தேன்.
எனது பெற்றோர் இது சம்மந்தமாக நேரில் மணமகள் வீட்டிற்குச் சென்று பேசுவதற்கு எனது தாய்மாமன் குடும்பத்தாரையும் அத்தை குடும்பத்தாரையும் அழைத்துச் செல்வதன் பொருட்டு அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்ற சமயம் எங்கள் இருவர் வீட்டிலும் முறைப் பையன் மற்றும் முறைப்பெண் இருக்கும் சமயத்தில் அந்நியத்தில் தான் சம்மந்தம் செய்வோம் என முடிவு செய்தமைக்கு மறுப்புத் தெரிவித்து இருவரும் சமாதானம் பேசுவதற்கு வர மறுத்து விட்டார்கள்.
அத்துடன் நில்லாமல் திருமணத்திற்கு முன்னரே பெண் கொடுத்துப் பெண் எடுப்பதில் அவர்கள் இவ்வளவு பிடிவாதத்துடன் இருந்தால் திருமணத்திற்குப் பின்னால் என்னென்ன செய்வார்களோ என பயமுறுத்தினர். அதே சமயம் எதிர் காலத்தில் சம்மந்தி வீட்டில் ஏதேனும் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அதற்கு தாய்மாமன் வீட்டார் மற்றும் அத்தை வீட்டார் சாட்சிகள் போல நடந்து கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தவறினை தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலை வந்து விடும் எனச் சொல்லி சமரசம் பேச வர மறுத்து விட்டனர்.
தங்கை விருப்பப்படி திருமணம் (தீர்வு 2)
இந்த விவரத்தை என் அண்ணனிடத்தில் தெரிவித்த சமயம் மணப் பெண்ணின் வீட்டில் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது தனக்குப் பிடிக்கவில்லை எனவும் மணந்தால் அந்தப் பெண்ணைத் தான் மணப்பேன் என்னும் முடிவிலிருந்து என் தங்கையின் எதிர்கால நல்வாழ்வு கருதி அந்தப் பெண்ணை நிராகரிப்பது என முடிவு செய்து விட்டதாகவும் தெரிவித்தார். எனக்கு எல்லையில்லாத ஆனந்தம்.
பெற்றோர் மணமகள் வீட்டிற்குச் சென்று பெண் கொடுத்துப் பெண் எடுப்பதில் தமக்கு விருப்பமில்லை எனவும் எனக்கும் என் அண்ணனுக்கும் சொந்தத்திலேயே திருமணம் முடித்து வைக்கப் போவதாகவும் தெரிவித்தனர். அச்சமயத்தில் என் அண்ணனுக்குப் பார்த்த பெண் அவளது பெற்றோரிடத்தில் பெண் பார்த்து விட்டுச் சென்றதிலிருந்து கைபேசியில் அடிக்கடி பேசும் போதெல்லாம் அவர் தான் தன் வருங்கால கணவர் என முடிவு செய்து நிறைய கற்பனை செய்து வந்த படியால் எப்படியாவது அவளை எனது அண்ணனுடன் மணமுடித்து வைக்குமாறு மன்றாடிக் கேட்டு இருக்கின்றாள்.
ஆனால் அவளது அண்ணன் நான் அவருக்கு மனைவியானால் மட்டுமே அவளது தங்கையை எனது அண்ணனுக்கு திருமணம் செய்ய ஒத்துக் கொள்வார் எனவும் மறுத்தால் தங்கையின் திருமண செலவினை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனவும் பேசியுள்ளார். அப்போது தான் என்னுடைய அண்ணனுக்குப் பார்த்துள்ள பெண்ணின் அண்ணனின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. ஆனால் அவளது பெற்றோர் எதுவும் பேசவில்லை. பேசவும் முடியவில்லை.
என்னுடைய அண்ணனின் பிடிவாதத்தினால் எனது பெற்றோர் அண்ணனுக்கு பிடித்துள்ள அந்தப் பெண்ணையே வரனாகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது எவ்வளவு தவறு என்பது அப்போது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.
சொந்தத்தில் முறைப் பெண் மற்றும் முறைப் பையன் இருந்த போதிலும் சொந்தத்தில் சம்மந்தம் செய்யாமல் அந்நியத்தில் சம்மந்தம் செய்ய நினைத்தது தவறு என்னும் முடிவுக்கு வந்த எனது பெற்றோர் மீண்டுமொரு முறை என்னுடைய தாய்மாமன் மற்றும் அத்தை வீட்டிற்குச் சென்று திருமணப் பேச்சு பேச ஆரம்பித்தனர். என்னுடைய அத்தை மற்றும் என்னுடைய தாய்மாமன் இருவரும் கட்டாயம் என்னுடைய பெற்றோருக்கு சம்மந்திகளாக வந்தே தீர வேண்டும் என்னும் முடிவில் இருந்த காரணத்தால் இரண்டு உறவினர்களிடத்திலும் சம்மந்தம் செய்வதென முடிவெடுத்தனர்.
தாய் மாமன் வீட்டிலும் அத்தை வீட்டிலும் முறைப் பையன்கள் மற்றும் முறைப் பெண்கள் இருந்தனர். தாய் மாமன் வீட்டார் மற்றும் அத்தை வீட்டார் இருவரும் எனது பெற்றோருக்கு சம்மந்திகளாக ஆக முடிவு செய்தனர்.
எனவே எனக்கு என்னுடைய தாய்மாமன் மகனை வரனாகவும் என்னுடைய அண்ணனுக்கு என்னுடைய அத்தையின் மகளை வரனாகவும் குறைந்த அளவு ஜாதகப் பொருத்தம் மற்றும் மனப் பொருத்தம் ஆகியவற்றுடன் எங்களின் விருப்பம் ஆகியவற்றின் படி தேர்வு செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. மிகக் குறுகிய காலத்தில் பெண்பார்த்தல் நிச்சயதார்த்தம் ஆகியவை முடிந்து அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எனக்கும் என்னுடைய அண்ணனுக்கும் ஒரே நாளில் ஒரே திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சமயம் என்னுடைய அனைத்து உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் என திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபம் நிறைவாகக் காட்சியளித்தது. சொந்தத்திலேயே திருமணம் நடைபெறுவதன் காரணமாக ஊரே திருவிழாக் கோலம் பூண்டது.
திருமணம் எங்களது குலதெய்வக் கோயிலில் நடைபெற்ற காரணத்தால் அந்தக் கோயிலுக்கு அறங்காவலர்களாக எனது பெற்றோரும் எனது தாய்மாமன் வீட்டாரும் என்னுடைய அத்தை வீட்டாரும் இருப்பதன் காரணமாக எங்கள் திருமணத்தினை ஊரே ஒரு திருவிழாவாக கொண்டாடத் தயாரானது. திருமணத்திற்கு முன்னர் பந்தக்கால் நடுகின்ற நாள் முதல் திருமணம் முடிந்த மறு நாள் வரையில் கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் பாட்டு கச்சேரி என குதூகலமாக இருந்தது.
திருமண நேரத்தில் திருமண தம்பதிகளை ஆசீர்வதிக்க குடும்பம் குடும்பமாக ஊர்மக்கள் அனைவரும் வந்த சமயத்தில் என்னுடைய அண்ணனுக்குப் பார்த்த பெண் கூட தனியே வந்திருந்தாள். அழைப்பிதழ் கொடுக்காத காரணத்தால் பெற்றோர் வரவில்லை.
கண்ணில் நீர்மல்க நிறைந்த சோகத்துடன் என்னருகில் வந்து வாழ்த்திவிட்டு அடுத்த ஜென்மத்திலாவது எனது அண்ணன் அவளுக்கு கணவனாகக் கிடைக்க வேண்டும் என எங்கள் குல தெய்வத்திடம் வழிபட்டு வந்ததாகத் தெரிவித்தாள்.
அது கேட்ட எனக்கு இவ்வளவு நல்ல பெண் எனக்கு அண்ணியாக கிடைக்கவில்லை அதற்குக் காரணம் அவளது அண்ணன் என்பதனை எண்ணிப்பார்த்த அதே சமயம் நல்ல வேளை நான் தப்பித்துக் கொண்டேன் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பெண் அண்ணன் அண்ணி இருவரின் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். என் அண்ணனுக்கு இவ்வளவு அன்பு செலுத்துகின்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டோமே என்னும் ஏக்கம் சூழ்ந்து கொண்டதன் காரணமாக கண்களில் நீர் ததும்பியது.
அதனைக் கண்ட என் பெற்றோர் கண்களில் கண்ணீர். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து முத்தமிட்டு காதில் ஏதோ சொன்னார்கள். அதற்குப் பின்னர் என் பெற்றோர் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டாள்.
திருமணம் முடிந்த பின்னர் திருமணத்திற்கு வெளியூர்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் வரமுடியாதவர்கள் வந்து சென்று கொண்டே இருந்தனர்.
அண்ணன் தங்கை இருவருக்கிடையே திருமணத்திற்கு முன்பு இருந்த பாசப் பிணைப்பின் காரணமாக வாழ்க்கையின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் திருமணம் என்று ஒன்று வரும்போது இருவருக்கும் இடையே இருக்கும் நிஜ சுயநலமிக்க பாசத்தையும் எண்ணிப்பார்க்கும் போது எந்த வகையான பாசம் சரி எந்த வகையான பாசம் தவறு என எண்ணிப் பார்த்து சரியான முடிவினை எடுக்கத் தயங்கக் கூடாது என்பது நன்கு தெளிவாகின்றது.