ஆறு முதல் அறுபது வரை
சின்னஞ் சிறு வயதில் அவள் எனக்கு அடுத்த வீட்டுப் பெண். ஆறு வயது முதல் அவள் எனக்கு பள்ளித் தோழி. அவள் பருவமடைந்த பின்னர் கல்லூரித் தோழி.
இவ்வாறு சின்னஞ் சிறு வயது முதல் பழகியவர்கள் நெருங்கிய உள்ளன்புடன் இருப்பார்கள். சில சமயங்களில் விருப்பு சில சமயங்களில் வெறுப்பு. சில சமயங்களில் அன்பு. சில சமயங்களில் கோபம். இவ்வாறு மாறி மாறி உணர்ச்சிகள் ஏற்படுவது இயல்பு.
ஆனால் நான் அவளுடன் சின்னஞ்சிறு வயதிலிருந்து கல்லூரிப் படிப்பு வரையில் மிகவும் நெருக்கமாகத் தான் இருந்திருக்கின்றேன். அவள் மீது இது வரையில் எனக்கு கோபம் வந்ததில்லை. நான் சின்னஞ்சிறு வயது முதல் அவளுடன் எவ்வளவுக்கு எவ்வளவு அன்புடன் இருந்தேனோ அதே போன்றதொரு அன்புடன் அவள் பருவமடைந்த பின்னரும் கூட என் மீது செலுத்துகின்ற அன்பு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கின்றாள்.
இருவரும் இளநிலை பட்டதாரிகள். மேற்கொண்டு என்ன படிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த சமயம் நான் முது நிலைப் பட்டம் பெற எனது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். ஆனால் அவளது பெற்றோர் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டனர். இள நிலை பட்டம் பெறும் வரையில் எனக்கு நிகராக பயணித்தவளுக்கு திருமணம் என்று சொன்ன சமயம் எனக்கு மனக் கஷ்டமாக இருந்தது.
என்னையும் அறியாமல் நான் அவளது பெற்றோரிடத்தில் அவளை மேற்கொண்டு படிக்க வைக்கலாமே எனக் கேட்டேன். அதற்கு அவளது பெற்றோர் எங்களுக்கு வயதாகி விட்டது. மேற்கொண்டு படிக்க வைக்கும் அளவிற்கு எங்களிடம் போதிய வசதி மற்றும் வருமானம் கிடையாது. அதனையும் மீறி கடன் வாங்கி படிக்க வைத்தால் அதற்கேற்றார் போல் அவளுக்கு வரன் பார்க்க வேண்டும்.
அதிக படிப்பு படிக்க வைத்தால் அதற்குத் தகுந்தாற் போல வரன் தேடி அந்த அளவிற்கு வரதட்சணை மற்றும் சீர் வரிசைகள் நிறைய செய்ய வேண்டியிருக்கும் அது எங்களால் முடியாது எனச் சொன்னார்கள். அது மட்டுமல்லாமல் அது வரையில் நாங்கள் இருவரும் உயிரோடு இருப்போமா என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் எனச் சொல்லி கண் கலங்கினார்கள்.
அதற்கு நான் மகளை மேற்கொண்டு படிக்க வைத்தால் அவளுக்கு சம்பளம் கிடைக்கும். அதனை வைத்துக் கொண்டு அவளின் திருமணத்தை சீறும் சிறப்புமாக செய்ய முடியுமே எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு பிறந்துள்ள ஒரே ஒரு செல்லப் பெண்ணை வேலைக்கு அனுப்பி அவள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை.
தற்போது எங்களிடம் உள்ள சேமிப்பினைக் கொண்டு அவளுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என விருப்பப் படுகின்றோம் எனச் சொன்னார்கள். அது மட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பின்னர் அவளது கணவர் விருப்பப் பட்டால் அவளை வேலைக்கு அனுப்பி இருவரது வருமானத்தையும் கொண்டு அவர்கள் சந்தோஷமாக சொகுசான வாழ்க்கை வாழ்ந்தால் அதற்கு நாங்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க மாட்டோம் எனவும் மிகவும் சந்தோஷப் படுவோம் எனவும் தெரிவித்தார்கள்.
நான் சின்னஞ்சிறு வயதிலிருந்து அவளுடன் பழகும் சமயத்தில் நாம் இருவரும் 6 முதல் 60 வரையிலும் அதற்கு மேலும் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என என் உள் மனம் விரும்பியுள்ளது என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது. என்னால் எதனையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.
என்னால் எதுவும் பேச முடியாத நிலையில் திருமணத்திற்கு என்ன அவசரம் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் நியாயம் போலத் தோன்றியது.
ஒரு பெண் 12 வயதிற்கு மேல் பருவமடைந்து விடுகின்றாள். அதற்குப் பின்னர் மாதாமாதம் மாதவிலக்கு ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் மாதவிலக்கு 40 முதல் 45 வயதிற்குள் பெரும்பாலும் நின்று போய்விடும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அந்தப் பெண் தமக்கு உண்டான வாரிசுகளைப் பெற்றெடுக்க முடியும். மாதவிலக்கு நின்று போன பின்னர் குழந்தைகளைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாமல் போய் விடும். ஆனால் ஆண்களுக்கு இவ்வாறான கால கட்டம் எதனையும் ஆண்டவன் சிருஷ்டிக்கவில்லை.
எனவே தான் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான வயதில் திருமணம் நடத்தி முடிக்க அனைத்து சட்டங்களும் அனுமதிக்கின்றன. இதனை மனதில் கொண்டு தான் அரசாங்கங்கள் ஆணின் திருமண வயது 21 எனவும் பெண்ணின் திருமண வயது 18 எனவும் ஆணைக் காட்டிலும் மூன்று ஆண்டுகள் குறைத்து நிர்ணயிக்கின்றன. பெண்களுக்கு திருமண பந்தத்தில் ஒரு ஆண் துணை கிடைத்தால் ஆணின் வருமானத்தில் காலம் கழிக்க முடியும் என்னும் காரணத்தால் வருமானம் வருகின்ற உத்தியோகத்தையோ அல்லது வணிகத்தையோ ஆண்கள் தேட வேண்டியிருக்கின்றது. அதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்பதால் தான் அந்த மூன்று ஆண்டுகள் வித்தியாசம்.
பெண்கள் பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ள முடியும் ஆனால் ஆண்கள் தம் சொந்தக் கால்களில் தாம் நிற்பதோடு மட்டுமல்லாமல் தம்மை நாடி திருமண பந்தத்தில் வாழ்க்கை துணையாக வருகின்ற அந்தப் பெண்ணையும் காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டிய கடமை ஆண் மகனுக்கு வந்து விடுகின்றது. எனவே தான் ஆண்கள் சற்று கால தாமதமாக திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது.
நான் அவளுடன் இத்தனை வருட காலம் பழகிய பின்னர் நான் மட்டும் மேற்கொண்டு படிக்கப் போகின்றேன் எனவும் அவள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையினை ஆரம்பிக்கப் போகின்றாள் என்பதனையும் எண்ணிப் பார்த்த சமயம் அவள் என்னை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்னும் எண்ணத்தால் அவள் மீது எனக்கு புதிதாக ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டது. அதனை காதல் என்று கூட சொல்ல முடியும்.
இத்தனை நாட்கள் பழகி விட்டு இப்போது நான் அவளிடத்தில் காதல் என்று சொன்னால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்னும் எண்ணமும் நான் எனது காதலை வெளிப்படுத்தி அதனைக் கேட்ட அவள் இதற்குத் தான் என்னுடன் இத்தனை காலம் நெருங்கி பழகினீர்களா எனக் கேட்டால் என்ன செய்வது என்னும் பயம் வந்து விட்டது.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல அவள் மனதில் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் இருந்து என் காதலை நான் அவளிடத்தில் வெளிப் படுத்தாமல் இருந்து நாம் பிரிய நேரிட்டால் அவள் என்னை நினைத்து ஏங்கித் தவிப்பாளே என்னும் எண்ணமும் என் மனதில் குடி கொண்டது.
அவள் மனதில் என்ன இருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் அவளிடத்தில் என் தங்கையை தூது அனுப்பினேன். எனக்கு சாதகமான பதிலோ அல்லது பாதகமான பதிலோ கிடைக்கவில்லை. எனவே என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
முதுகலை பட்டப்படிப்பினை உள்ளுரில் தொடர்ந்தால் அவளது நினைப்பு என்னை வாட்டும் என்பதற்காக எனது மேற்படிப்பினை வெளியூரிலோ அல்லது வெளி மாநிலத்திலோ அல்லது வெளி நாட்டிலோ தொடர்வது என முடிவு செய்து அவளிடத்தில் தெரிவித்தேன்.
அந்த முடிவிற்கு அவளிடமிருந்து எந்த விதமான சமிக்ஞைகளும் சஞ்சலங்களும் இல்லாத காரணத்தால் அவள் என்னை விரும்பவும் இல்லை என்னை வெறுக்கவும் இல்லை என்னும் முடிவுக்கு வந்தேன். மேற்கொண்டு படிக்க நான் வெளி நாடு புறப்பட்ட சமயம் அவள் என்னிடத்தில் என்னை எப்போதாவது நினைப்பீர்களா எனக் கேட்டாள். நான் ஒரே வார்த்தையில் நிச்சயமாக எனச் சொன்னேன். அதன் பின்னர் அதே கேள்வியை நான் அவளிடத்தில் கேட்டேன்
அதற்கு அவள் சொன்ன பதில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது. நான் தினந்தோறும் உங்களை நினைத்துக் கொண்டே தான் இருப்பேன். ஒரு நல்ல நண்பனாக ஒரு நல்ல நலம் விரும்பியாக ஒரு நல்ல வழி காட்டியாக நான் உங்களை நினைத்துக் கொண்டே தான் இருப்பேன்.
எனது கடைசி மூச்சு நிற்கும் வரையில் நீங்கள் உணவு உண்ணும் வேளைகளில் எல்லாம் உங்களுக்கு புரையேறும் அல்லது விக்கல் வரும். அவ்வாறு ஒரு சில நாட்கள் உங்களுக்கு விக்கல் வரவில்லையெனில் நான் உடல் நலமின்மை காரணமாக மயக்க நிலையில் நினைக்க முடியவில்லை எனக் கொள்ளலாம். நான் உங்களை நினைக்கும் அந்த நாட்களில் உணவு உண்ணும் சமயத்தில் விக்கல் வந்து நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது நான் உங்களை நினைத்து விட்டேன் என்பதனை அறிந்து கொள்ளலாம் எனச் சொன்னாள்.
எனக்குத் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வெளி நாட்டுக்கு படிக்க புறப்பட்டவுடன் மீண்டும் இங்கு வந்து எனது திருமணத்தில் நீங்கள் கலந்து கொள்ள முடியாமல் போகலாம். இருந்தாலும் உங்கள் திருமணத்திற்கு நான் கட்டாயம் வருவேன். அழைக்க மறந்து விடக் கூடாது எனச் சொல்லி என்னை சந்தோஷத்துடன் வழியனுப்பி வைத்தாள்.
நான் வெளிநாடு சென்று படித்து முடித்த பின்னர் பணியில் சேர்ந்து திருமணத்திற்காக தாய் நாடு திரும்பினேன். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளி மாநிலத்தில் வசித்து வந்த அவளுக்கு பத்திரிக்கையினை அனுப்பி வைத்தேன். எனது திருமண நாளன்று அவளைக் காண மிகவும் ஆவலாக இருந்தேன். எனது வருங்கால மனைவியிடத்திலும் அவளைப் பற்றி முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தேன்.
எனது அழைப்பினை ஏற்ற அவள் தனது குடும்பத்தாருடன் என் திருமணத்திற்கு வந்து என்னிடத்தில் பரிசுப் பொருள் கொடுத்த சமயம் அவளது உடல் பருமன் கூடி எடை இரண்டு மடங்காகப் பெருகி இருந்தது. அது மட்டுமல்லாமல் அவளுக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னுடன் பழகிய சமயத்தில் நான் என் மனதில் பதிந்து வைத்திருந்த உருவத்திற்கும் தற்போது நிஜத்தில் காணும் உருவத்திற்கும் நிறைய வித்தியாசம். அவளை பெயர் சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அவளது உடல் வாகு இருந்தது. கண்களை அகலமாக விரித்துப் பார்த்தேன்.
அவளது உடல்வாகு தான் பூரிப்பு அடைந்துள்தே தவிர அவளது மனம் மற்றும் என் மீதான எண்ணம் அப்படியே இருந்தது. திருமண மண்டபத்தில் புது மாப்பிள்ளையான எனக்கும் எனது மணப் பெணணுக்கும் சேர்த்து எனது நண்பர்கள் அனைவரும் ஒரே ஒரு குளிர்பானம் கொடுத்து இரண்டு ஸ்ட்ராக்கள் கொடுத்து பருகச் சொன்னார்கள். மிகவும் வெட்கத்துடன் பருகினோம்.
திருமண கேக் வெட்டச் சொன்னார்கள். நான் கேக் வெட்டி மணமகளுக்கு ஊட்ட மணமகள் மாப்பிள்ளையான எனக்கு ஊட்டினாள். அந்த சமயத்தில் எனக்கு புரையேறி விட்டது.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் அத்தனை பேருக்கு மத்தியில் எனது புது மனைவியின் முன்னிலையில் நான் இங்கு இருக்கும் போது வேறு யார் உன்னை நினைக்கின்றார்கள் எனச் சொல்லிக் கொண்டே எனது தலையில் தமது கரங்களால் தட்டினாள்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் நாம் இருவரும் சந்தித்த நிலையில் எனக்குப் புரை ஏறிய சமயம் தமது கணவர் அருகில் இருக்கின்றார் நம்மைச் சுற்றி திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு செய்கையும் வீடியோவில் பதிவாகின்றது என்பதனைக் கூட பொருட்படுத்தாமல் அவள் என் மீது செலுத்திய அக்கறை மன நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சற்று சுதாரித்துக் கொண்டு சமாளித்தாள்.
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த காரணத்தால் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் நானும் என் மனைவியும் அவளும் அவளது குடும்பத்தாரும் நீண்ட நேரம் உரையாடினோம். அப்போது அவள் என்னிடத்தில் நமது இளமைப் பருவம் பற்றி தினந்தோறும் ஒரு முறையாவது நினைத்து விடுவேன் எனவும் உணவு உண்ணும் சமயத்தில் விக்கல் எடுப்பதும் பானம் பருகும் சமயத்தில் புரை ஏறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக எனது வாழ்க்கையில் நீடிக்கும் எனவும் சொன்னாள்.
இதே வார்த்தைகளை ஆரம்பத்தில் என்னிடத்தில் சொல்லும் சமயம் அவளது இறுதி மூச்சு நிற்கும் வரையில் நீடிக்கும் என்று சொன்னாள். அவள் சொன்ன அந்த வார்த்தை உண்மையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சில நாட்களாக நான் உணவு உண்ணும் சமயம் விக்கல் வந்து தண்ணீர் குடிப்பது நின்று விட்டது. என் உள் மனதில் ஏதோ ஒன்றினை இழக்கின்றோமோ என்னும் கவலை தொற்றிக் கொண்டது.
இளமைப் பருவத்தில் நான் அவளுடன் நெருக்கமாகப் பழகிய சமயம் அவளுடன் வாழ வேண்டும் என எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் வெவ்வேறு வாழ்க்கைத் துணையினை அடைந்த பின்னர் அறுபது வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்த போதிலும் நம் இருவரது எண்ணங்கள் கடைசி வரையில் மாறாமல் இருக்கின்றது என்பதனை நினைக்கும் போது புல்லரிக்கின்றது.