கிரஹப் பிரவேசம்
அலுவலகப் பொது மேலாளர் பணியிடம் காலியாக இருக்கின்றதென அனைத்துப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுத்து நேர் முகக் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான விளம்பரத்தில் கல்வித் தகுதி மாத்திரம் குறிக்கப் பட்டிருந்தது. முன் அனுபவம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இதன் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு வேலை தேடுவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெறவில்லை. காரணம் நேர் முகத் தேர்வின் போது முன் அனுபவம் இத்தனை வருடங்கள் இருந்தால் தான் பணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டால் நேர்முகத் தேர்வுக்கு வந்து செல்லும் செலவு மற்றும் நேரம் வீணாகும் என்பது பலரது எண்ணமாக இருந்தது.
இரண்டே இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே வரப்பெற்ற நிலையில் என் மகள் இரண்டு நபர்களிடத்திலும் நேர்காணல் முடித்து விட்டு நேர்காணல் முடிந்ததும் ஒரு நபரை மாத்திரம் என்னிடத்தில் அனுப்பி வைத்தாள். இயக்குநர் என்னும் முறையில் அவளது பணி முடிந்து விட்டது. நிர்வாக இயக்குநர் என்னும் நிலையில் நான் மேற்கொண்டு விண்ணப்பதாரரை நேர்காணல் செய்ய வேண்டும்.
எதிர்பார்க்கும் தகுதிகள் இருக்கின்றனவா எனவும் நிர்வாகத்தை கையாள்வதற்கான திறமை உள்ளதா எனவும் ஆராய வேண்டும். அவ்வாறு செய்து கொண்டிருக்கும் சமயத்தில் என்னிடத்தில் எந்த ஆலோசனையும் நேரடியாகவோ அல்லது தொலை பேசியிலோ மேற்காள்ளாமல் அந்த நபருக்கு பணி நியமன ஆணையினை தயார் செய்து என்னுடைய ஒப்புதலுக்காக என் மகள் அனுப்பி வைத்தாள்.
இது வரையில் அவளது செயல்களுக்கு மறுப்பு சொன்னதே இல்லை. காரணம் அவள் தாயில்லாப் பெண். என் மகள் பிறந்த ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் என் மனைவி இயற்கை எய்தி விட்டதன் காரணமாக அவளுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டேன். அவளைப் பார்த்துக் கொள்ள நான் மறுமணம் செய்து கொண்டால் அவள் மாற்றாந்தாய் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்பதற்காக நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமலேயே காலத்தைக் கடத்தி விட்டேன்.
எனது செல்ல மகள் தேர்வு செய்த அலுவலக பொது மேலாளருக்கு பணி நியமன ஆணையில் கையெழுத்திட்டு அனுப்பினேன். அதனை நேர்முகக் காணலுக்கு வந்தவரிடத்தில் கொடுத்து விட்டு அடுத்த நொடி என் மகள் என் அறைக்குள் மிக மிக சந்தோஷமாக பிரவேசித்தாள். இதுவரையில் அவளது முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் கண்டதில்லை. அவள் சந்தோஷமாக இருப்பதைக் கண்ட எனக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடியது.
எதிரிலுள்ள இருக்கையில் அமர்ந்தவுடன் என் மகள் என்னிடத்தில் அவள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் என்ன சொன்னாலும் கேட்டு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாள். உடனே நான் திருமணம் செய்து கொள்ள முதலில் சம்மதம் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவள் சற்று கூடத் தயங்காமல் நான் இன்றைக்கே திருமணம் செய்து கொள்ள தயார் எனச் சொன்ன சமயம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்படியானால் வரன் பார்க்க ஆரம்பிக்கலாமா எனக் கேட்டதற்கு நானே வரன் பார்த்து நிச்சயித்து விட்டேன் எனச் சொன்னாள். நான் காதல் திருமணமா எனக் கேட்டேன். அதற்கு என் மகள் காதல் திருமணம் அல்ல. இன்று தான் மாப்பிள்ளைக்கு வேலை கிடைத்திருக்கின்றது. அதுவும் பொது மேலாளர் பதவி. கை நிறையச் சம்பளம் அது போதும் எனக்கு எனச் சொன்னாள். நான் என்னையுமறியாமல் எந்த நிறுவனத்தில் பொது மேலாளராக பணியில் சேர்ந்துள்ளார் எனக் கேட்டதற்கு நமது நிறுவனத்தில் தான் என மிக மிக சந்தோஷமாத் தெரிவித்தாள்.
நான் அவளிடத்தில் அவரை முன்னமே தெரியுமா எனக் கேட்டேன். இருவரும் ஒன்றாகவே படித்ததாகவும் படித்து முடித்த பின்னர் அவர் வேலை தேடிக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு வேலை கிடைத்த பின்னர் அவரிடத்தில் தமது காதலை தெரிவிக்க இருந்ததாகவும் தெரிவித்தாள். நான் என் மகளிடத்தில் இருவருக்குமிடையே இது வரையில் காதல் ஏற்படவில்லையா எனக் கேட்தற்கு நான் அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்தேன் எனச் சொன்னது அவர் வீட்டுக்குத் தான் எனச் சொன்னாள். என் வீட்டில் கிடைக்காத தாயன்பு அந்த வீட்டில் கிடைத்துள்ள காரணத்தால் என் மகள் தாயன்புக்காக ஏங்குகின்றாள் என்பதனை நான் நன்கு அறிந்து கொண்டேன்.
ஒரு மாத காலம் நான் இருவரையும் கவனித்தேன். இருவரும் தனிமையில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவர் பணியினை ஒழுங்காகச் செய்து வருகின்றார். என் மகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. என் மகளிடத்தில் நெருக்கமாகவும் பழகவில்லை.
பொது மேலாளர் தனது அறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் என் மகள் என்னிடத்தில் வந்து இன்று மதியம் அம்மா வீட்டில் சாப்பிட்டு வந்ததாக தெரிவித்தாள். நான் பொது மேலாளரை காண்பித்து இவர் இங்கிருக்கும் போது நீ மட்டும் எப்படி எனக் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் அது பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது மகன் நமது நிறுவனத்தில் தான் பணியாற்றுகின்றார் என்பது அவர்களுக்கே தெரியாது எனச் சொன்னாள்.
அப்போது நான் அவர்கள் வீட்டுக்குச் செல்வதானால் முன் கூட்டியே சொல்லியிருந்தால் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்து இருப்பார்களே எனச் சொன்னதற்கு உணவு முக்கியமல்ல. ஊட்டும் முறை தான் முக்கியம் எனவே யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் ஆட்டோவில் சென்று வந்ததாகத் தெரிவித்தாள். சொல்லும் வேலையினை மேற்கொள்ள பணியாட்கள் மற்றும் நான்கைந்து சொகுசு கார்கள் இருந்த போதிலும் ஆட்டோவில் சென்று வந்தேன் என கேள்விப்பட்ட சமயம் எனக்கு அந்தக் குடும்பத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் நான் எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு நாள் மதியம் நானும் நமது நிறுவனத்தின் பொது மேலாளரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் என் மகளை அலுவல் தொடர்பான விஷயங்களை கலந்தாலோசனை செய்யும் பொருட்டு தொலை பேசியில் அழைத்தேன். அவள் அலுவலகத்தில் இல்லையெனத் தெரியவந்தது. உடனே நான் பொது மேலாளரிடத்தில் வெளியில் செல்வதாகவும் பிற்பகலில் பேச்சினைத் தொடரலாம் எனவும் சொல்லி விட்டு வெளியே வந்து பார்த்த சமயம் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் அப்படியே இருந்தன. எனக்கு என் மகளை உடனே காண வேண்டும் என்னும் ஆவலில் வீட்டிற்குத் தொலைபேசி செய்து பார்த்ததில் வீட்டிற்கும் வரவில்லை எனத் தெரியவந்தது.
நான் சற்று கூட யோசிக்காமல் அலுவலக பொது மேலாளர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்தேன். அவரது வீட்டு விலாசத்தினை முன் கூட்டியே தனி பேப்பரில் குறித்து சட்டைப் பையில் வைத்திருந்தேன். அங்கு நான் சென்ற சமயத்தில் என் மகள் தரையில் அமர்ந்தபடி உணவு உண்டு கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் என்னை வாங்க உட்காருங்க எனச் சொல்லி விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். அப்போது உணவு ஊட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி வந்தவர் யாரெனவும் வந்த நோக்கத்தினையும் அறிந்து வருகின்றேன் எனச் சொல்லி எழ முற்பட்ட சமயத்தில் எனக்கு முதலில் சாப்பாடு ஊட்டிய பின்னர் வந்தவரை கவனிக்கலாம் எனச் சொன்னாள். அதற்குள் அந்த வீட்டில் இருந்த மற்றவர்கள் என்னை வரவேற்று உபசரித்து இருக்கையில் அமர வைத்தனர்.
பழங்காலத்து வீடு. ஒரே ஒரு ஹால். இரண்டே இரண்டு அறைகள். அதில் ஒன்று சமையலறை. நான் அமர்ந்தவுடன் முன் பின் ஒன்றும் அறியாதவர் போல இந்தப் பெண் யார் எனக் கேட்டேன். அதற்கு அந்தப் பெண்மணி என் மகனுடன் கூடப் படித்தவள் எனவும் அடிக்கடி வந்து செல்வாள் எனச் சொன்னார்கள்.
அதன் பின்னர் மகன் எங்கே எனக் கேட்டதற்கு ஏதோ ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக உத்தியோகம் கிடைத்து வேலையில் சேர்ந்து சில நாட்கள் தான் ஆகின்றன எனச் சொன்னார்கள். எந்த நிறுவனம் எனவும் நிறுவனம் யாருடையது எனவும் நிறுவனம் எங்குள்ளது எனவும் கேட்டதற்கு ஒன்றுமே தெரியாது என பதில் வந்தது.
அதற்குப் பின்னர் என்னை நானே அவர்களிடத்தில் அறிமுகம் செய்து கொண்டு என் மகளைக் காண்பித்து இவள் எனது மகள் எனவும் அவர்களின் மகன் என் மகளின் விருப்பப்படி என்னுடைய நிறுவனத்தில் தான் பொது மேலாளராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்து விட்டு வீட்டினைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் வீடு வாடகை வீடு எனவும் குழந்தைகள் அனைவரும் நன்கு படித்து முடித்து வேலைக்குச் சென்ற பின்னர் சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் நான் அவர்களிடத்தில் தொடர்ந்து பேசினேன்.
எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்பார்கள்.
அனைத்துப் பறவைகளும் தமக்கென்று ஒரு கூடு கட்டிக் கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றன.
நமது வீட்டினை அசுத்தப்படுத்துகின்றது என்று நாம் சுத்தப் படுத்தும் நூலாம் படையில் வாழும் சிலந்தி கூட சொந்தமாக ஒரு வலையினை பின்னிக் கொண்டு அதில் வசிக்கின்றது.
புளுக்களும் புச்சிகளும் வண்டினங்களும் பறவைகளும் மிருகங்களும் தமக்கென்று சொந்தமாக ஒரு இருப்பிடத்தைத் தயார் செய்து கொள்ளும் போது நமக்கென ஒரு சொந்த இடம் கிடைக்காதா என நீண்ட நாட்கள் எங்கித் தவித்து வருபவர்கள் பலர். சிலருக்கு மூதாதையர் சொத்துக்கள் இருக்கும். அவர்களுக்கு சொந்த வீட்டின் அருமை தெரியாது. வாடகையின் சுமையும் தெரியாது.
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கும் குடும்பங்களில் மாத வாடகை மற்றும் கரண்ட் பில் மற்றும் தண்ணீருக்கான கட்டணம் ஆகியவற்றை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டு மீதப் பணத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் மிகவும் கஷ்டப் பட வேண்டிய நிலைமை. இவ்வாறான குடும்பத்தினர்கள் வாடகை கொடுப்பதற்கு பதிலாக நாமே சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டு குடியேறினால் வாடகையாவது மிச்சமாகுமே என எண்ணித் தவிப்பர்கள்.
நல்ல உழைப்பு அதற்கேற்ற படி வருமானம் இரண்டும் இருந்து சிச்கனமாக செலவு செய்து சேமிக்க தொடங்கினால் சொந்த வீடு என்னும் கனவு நனவு ஆகி விடும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவார்கள்.
அது சமயம் கோயில்களுக்கு வெளியில் ஒரு பெரிய கல் மீது அதனை விட சிறிய கல் வைத்து அதன் மீது அதனை விட சிறிய கல் வைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு மூன்று கற்கள் ஐந்து கற்கள் ஏழு கற்கள் அல்லது ஒன்பது கற்கள் வரையில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் வர வேண்டும் என்று வழிபட்டு வருவார்கள்.
ஒரு சிலர் நவக்கிரஹங்களை ஒன்பது முறை சுற்றி வந்து வழி படுவார்கள். ஒரு சிலர் கோயில்களில் வேண்டுதல் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடத்தில் வீடு போன்ற தோற்றம் கொண்ட பொருட்களை தெய்வத்திற்கு காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு வருவார்கள்.
ஒரு சிலர் வெள்ளிக் கிழமைகளில் சுக்ர ஹோரையில் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு பல வாரங்கள் சென்று தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவார்கள். ஒரு சிலர் சிறுவாபுரி என்னும் இடத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வருவார்கள்.
ஒரு சிலரது வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும். அதனைப் பார்த்த மற்றவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் எப்போது கிரஹப் பிரவேசம் செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பார்கள். அப்போது நாம் வீடு வாங்குவதை யாரிடத்திலும் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்து இருந்தோமே இவர் எப்படித் தெரிந்து கொண்டார் என ஆச்சர்யப் படுவார்கள்.
இவ்வாறு அவர்களிடத்தில் நான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் வீட்டிலுள்ள தரையில் அமர்ந்தவாறு ஒரு சிட்டுக் குருவி தனது குஞ்சிற்கு உணவு ஊட்டுவதனைக் கண்டேன். என் மகளும் அந்த வீட்டில் அப்படித் தான் தரையிலமர்ந்து அந்தப் பெண்மணியின் கரங்களால் உணவு ஊட்டப் பட்டு உண்டு கொண்டிருந்தாள். அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த சமயம் அந்த குருவிகள் அந்த வீட்டிலேயே கட்டியுள்ள தமது கூட்டிற்குச் சென்று வருவதையும் கவனித்தேன். அதனைக் கண்ட எனக்கு மிக்க சந்தோஷம்.
உடனே நான் அவர்களிடத்தில் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. உங்கள் வீட்டில் சிட்டுக்குருவி உணவு உட்கொண்டு வீட்டிலேயே கூடு கட்டிக் கொண்டு வாழ்கின்றது. எக்காரணத்தைக் கொண்டும் குருவிக் கூட்டினைக் கலைத்து விடாதீர்கள் என்று ஆலோசனை சொன்னேன்.
நீங்கள் இது வரையில் எத்தனையோ கோயில்களுக்குச் சென்று எல்லா வகையான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் பிரார்த்தனையின் நோக்கம் என்ன என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் செய்த பிரார்த்தனையின் பலனாக உங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் தற்போது வந்துள்ளது எனவே இந்த நேரத்தை நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள் எனச் சொன்னேன்.
அதற்கு பதிலளித்த அவர்கள் வீட்டில் கூடு கட்டி வாழ்ந்து வரும் அந்த சிட்டுக் குருவிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை அதாவது கோதுமைக் குருணை அரிசிக் குருணை போன்றவற்றை தவறாமல் தரையில் தூவி விடுவதாகவும் அது அங்கும் இங்கும் பறந்து கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து உண்ணுவது காணும் சமயம் சந்தோஷத்தை தருவதாகவும் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நான் அவர்களிடத்தில் என் மகள் அவர்கள் மகனை விரும்புகின்றாள் எனவும் இது வரையில் காதலிக்க ஆரம்பிக்கவில்லை என்பதனையும் தெரிவித்து விட்டு உங்கள் மகன் என் மகளை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தால் உடனே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்த சமயம் அவர்கள் மகன் அவர்கள் சொல்வதற்கு மறு பேச்சு பேச மாட்டான் எனவும் எனது மகளை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்து விட்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதில் எந்த விதமான ஆட்சேபணையும் இல்லையெனவும் தெரிவித்தார்கள்.
அவர்களிடத்தில் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் என் மகள் அவர்களின் மகன் வேலையில் சேர்ந்த நாளன்று மிகவும் சந்தோஷமாக இருப்பதனைக் கண்டு அன்றைய தினம் வரன் பார்க்க ஆரம்பிக்கலாமா எனக் கேட்டதற்கு நானே வரன் பார்த்து நிச்சயித்து விட்டேன் எனச் சொன்னதாகவும் காதல் திருமணமா எனக் கேட்டதற்கு என் மகள் காதல் திருமணம் அல்ல எனவும் தான் விரும்புகின்ற மாப்பிள்ளைக்கு வேலை கிடைத்திருக்கின்றது அதுவும் பொது மேலாளர் பதவி எனவும் கை நிறையச் சம்பளம் வாங்கப் போகின்றார் எனவும் வாழ்க்கை நடத்த அது போதும் எனச் சொன்னதாகத் தெரிவித்தேன்.
அத்தனையும் சொல்லிவிட்டு நான் அவர்களிடத்தில் உங்கள் மகனை உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் அவ்வாறே செய்த சமயம் உடனடியாக அவர்கள் மகனுக்கு தொலைபேசியில் விவரம் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அச்சமயம் அவர்களது மகன் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வீட்டுக்கு அவசரமாகச் செல்ல இருப்பதாக தெரிவித்து விட்டு இல்லம் வந்தடைந்தார்.
நான் அவரது இல்லத்தில் அமர்ந்திருப்பது கண்ட அவருக்கு ஒரே அச்சர்யம். அவர் வந்த சில நிமிடங்களில் சில சிட்டுக் குருவிகள் அவரிடத்தில் வந்தமர்ந்தன. அவர் உடனடியாக அவரது கைகளில் சிட்டுக் குருவிகளுக்கு உணவினை எடுத்து தமது கைகளை மேலே உயர்த்தியவுடன் அந்தக் கையில் அமர்ந்து கொண்டு குருவிகள் தானியங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தன. வாயில்லா ஜீவன்களே அவரிடத்தில் அத்தனை அன்பு பாராட்டும் சமயத்தில் என் மகள் அன்பு பாராட்டுவதில் தவறில்லை. என் மகள்அவருக்குத் தகுதியானவள் தான் என நான் முடிவு செய்து விட்டேன்.
அவர் வந்த சில நேரத்திற்குள் அவரிடத்தில் சம்மதம் பெற்ற பின்னர் இரண்டு குடும்பத்தாரும் அமர்ந்து பேசி திருமணத்திற்கான தேதி குறித்தோம். நான் எனது மகளுக்கு சீராக வரப்போகும் மருமகனின் பெயரில் ஒரு வீட்டு மனை வாங்கிக் கொடுப்பதாகச் சொன்ன சமயம் அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். வரதட்சணையாகவோ அல்லது சீர் வரிசையாகவோ எதுவும் வாங்க மறுத்து விட்டனர்.
எனவே என் விருப்பப்படி அவர்களைக் கட்டாயப் படுத்தி கட்டி முடித்த வீடு ஒன்றினை அவர்கள் பெற்றோர் பெயருக்கு ரொக்கமாக வாங்கிக் கொடுத்து அவர்களின் பெற்றோர் கிரஹப்பிரவேசம் செய்வதற்கு கேட்டுக் கொண்டேன். அதற்கு திருமணத்திற்குப் பின்னர் அவர்களது மகனையும் எனது மகளையும் தம்பதிகளாக ஹோமத்தில் அமர வைத்து கிரஹப் பிரவேசம் நடத்திக் கொள்ளலாம் என அவர்களின் பெற்றோர் சொன்னார்கள்.
அதற்கு என் மகள் மறுப்புத் தெரிவித்தாள். கிரஹப் பிரவேச ஹோமத்தில் அவரது பெற்றோர் தான் அமர வேண்டுமெனவும் அவர்கள் நல்லாசி பெற்ற பின்னர் தான் திருமண வைபவம் நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தாள். அதற்குக் காரணமாக நானும் அவரும் கிரஹப்பிரவேச ஹோமத்தில் அமர்ந்தால் அவர்கள் வீட்டில் அவளுக்குக் கிடைக்கின்ற தாய்ப்பாசம் மற்றும் அவருக்குக் கிடைக்கின்ற அண்ணன் தம்பிகள் பாசம் மற்றும் அக்கா தங்கைகள் பாசம் அவருக்குக் குறைந்து விடும் எனவும் தெரிவித்தாள். அதுவும் நம் இருவர் குடும்பத்தாருக்கும் சரியெனப் பட்டது. நாமும் சரியென ஒத்துக் கொண்டோம்.
சீறும் சிறப்புமாக நடைபெற்ற திருமண வைபவத்தின் போது பணியாளர்கள் அனைவரது இதயத்தையும் கவர்ந்த பொது மேலாளர் நிர்வாகியாக இருக்கும் என் மகளை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவர் முகத்திலும் எல்லையில்லா ஆனந்தம். அனைவரும் மணமக்களை ஆசீர்வதித்த சமயம் எனது மகள் சரியான வரனைத் தான் தேர்வு செய்துள்ளாள் என்பதறிந்த எனக்கும் சந்தோஷம். தாயன்பு அறியாத என் மகள் தாயன்புக்காக தமது விருப்பப்படி மணமகனைத் தேர்ந்தெடுத்து நம் இரண்டு குடும்பத்தின் ஒப்புதலுடனும் பரிபூரண ஆசீர்வாதத்துடனும் திருமணம் செய்து கொண்டுள்ளாள்.
சில மாதங்களுக்குப் பின்னர் நிர்வாக இயக்குநர் பொறுப்பினை நான் என் மருமகன் கையில் ஒப்படைத்து விட்டேன். அதன் பின்னர் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குச் சென்ற சமயம் டைனிங் டேபிள் இருந்தும் கூட என் மகள் சம்மந்தியின் கரங்களால் தரையிலமர்ந்து உணவு உட் கொண்டது கண்டு பிரமித்து விட்டேன்.
என்னிடத்தில் எந்த விதமான ஆலோசனையும் பெறாமல் ஒருவருக்கு பணி நியமன ஆணை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த சமயம் அவள் அடைந்த சந்தோஷத்திற்கும் திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்ட சமயம் சரியெனச் சொன்னதற்கு காரணமாக என் மகள் அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்தேன் என பல முறை சொல்லி வந்தது வரப்போகும் அவரது எதிர்காலக் கணவரின் வீட்டுக்குத் தான் எனச் சொன்ன சமயத்தில் அவரைக் காதலிக்கின்றாயா எனக் கேட்டதற்கு இல்லையெனச் சொன்ன சமயத்தில் அந்தக் காதல் ஒருதலைக் காதலாக இருந்து அவர்கள் மறுத்து விட்டால் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புக்கும் நேரில் சென்று அவர்களைப் பற்றியும் அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட சமயத்தில் அவர்கள் சொத்துக்கள் மீது ஆசைப்படாமல் அன்பு பந்தம் மற்றும் பாசம் ஆகியவற்றை மட்டுமே விரும்புகின்றார்கள் என்பதறிந்த போது அவர்கள் வீட்டில் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கைகளுக்கு அவர் மீது உள்ள அன்பு குறைந்து விடக் கூடாது என என் மகள் நினைத்த நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் சமயம் என் மகள் என்னை விட புத்திசாலியாக எதிர் காலத் திட்டம் தீட்டுகின்றாள் என்பது மட்டும் எனக்குப் புலனாகின்றது. ஒரு தாய்க்கு எப்போதுமே தன் மகள் மீது பாசம் சற்றும் குறையாது என்பதறிந்து என் மகள் மருமகனின் தாயாரை அதாவது அவளது மாமியாரை அம்மா என்றே எப்போதும் அழைத்து வருகின்றாள் என்பதனை எண்ணும் போது அவர்களுக்கு இடையே எந்தக் காலத்திலும் அன்பு குறையாது என்பதறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.