நிலையில்லா வருமானம்.
வீடு நிலம் காலி மனை வயல் வெளி வாங்க விற்க ஒத்திக்கு வாடகைக்கு என்னும் விளம்பரப் பலகையில் கீழே கார்கள் வாங்க விற்க வாடகைக்கு இங்கு அணுகவும் என எழுதப் பட்டிருந்தது.
நானும் என் தந்தையும் அந்த வீட்டிற்குள் நுழைந்தோம். அப்போது அந்த வீட்டில் எங்களுக்கு நல்ல மரியாதையுடன் கூடிய வரவேற்பு. என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது அதிகம் கொண்ட ஒருவர் எங்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தார்.
நாங்கள் அமர்ந்தவுடன் உள்ளிருந்து ஒரு பெண்மணி எங்களுக்கு முதலில் இரண்டு டம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதன் பின்னர் எங்களிடத்தில் என்ன சாப்பிடுகின்றீர்கள் காபியா அல்லது டீயா அல்லது டிபனுடன் சேர்த்தா என்று கேட்டார்கள்.
உடனே என்னுடைய தந்தை அவர்களிடத்தில் நாங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்களைக் கண்டவுடன் இப்படி உபசரிக்கின்றீர்களே எப்படியெனக் கேட்டார். அதற்கு அவர் இவன் என்னுடைய மகன். இந்த வீட்டிற்கு வருகின்ற யாராக இருந்தாலும் வீடு அல்லது கடை அல்லது நிலம் வாடகைக்கு அல்லது சொந்தமாக வாங்க வேண்டும் என்று தான் வருவார்கள். அதே போல கார் வாங்க விற்க வருவார்கள். அல்லது வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டு வருவார்கள்.
இந்த காரணத்தால் எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் எங்களது வாடிக்கையாளர்களாக மாறி விடுவார்கள். அதனால் எங்களுக்கு அவர்களிடமிருந்து வருகின்ற கமிஷன் தொகையினைக் கொண்டு நாங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றோம். வந்தவர்களை வரவேற்று உபசரிக்காமல் நீங்கள் யார்? ஏன் இங்கு வந்து இருக்கின்றீர்கள்? என்று கேட்டால் எங்களது வருமானம் போய் விடும். எனவே தான் இப்படியான உபசரிப்பு என்று சொன்னார்கள்.
அதன் பின்னர் என்னுடைய தந்தை அந்த வீட்டில் அமர்ந்திருப்பவரிடத்தில் நாங்கள் இருவரும் தங்கிக் கொள்ள ஏதேனும் வீடு வாடகைக்கு கிடைக்குமா எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊருக்கு எப்போது வந்தீர்கள் எனக் கேட்டவுடன் இப்போது தான் வந்தோம் என்று என் தந்தை கூறினார்.
வீட்டு புரோக்கர் யாராவது இருக்கின்றார்களா எனக் கேட்ட சமயம் இந்த முகவரியினைச் சொல்லி அனுப்பினார்கள் என என் தந்தை சொன்னார். வீட்டிலமர்ந்திருக்கும் பெரியவரிடத்தில் என் தந்தை பேசிக் கொண்டிருக்கும் சமயமத்தில் அந்தப் பெண்மணி குறுக்கிட்டுப் பேசினார். எங்களிடத்தில் நீங்கள் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக இங்கு வந்து இருப்பதால் காலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் எனவே நான் உங்களுக்காக டிபன் செய்கின்றேன் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று சொன்னார்கள்.
அப்போது நான் முதலில் வீடு பார்த்து விடலாமே என சொன்னேன். அச்சமயம் அவர் என் தந்தையிடம் நீங்கள் முதலில் எங்கள் வீட்டில் குளித்து விட்டு வாருங்கள். குளித்து முடித்த பின்னர் டிபன் சாப்பிட்டு விட்டு வீடு பார்க்கச் செல்லலாம் என தெரிவித்தனர். நீங்கள் குளித்து முடிப்பதற்குள் நானும் உங்கள் மகளும் சேர்ந்து பேசிக் கொண்டே காலை சிற்றுண்டியினை சமைத்து விடுகின்றோம் என்று சொன்னார்கள்.
அவர்கள் கேட்டுக் கொண்டவாறு காலையில் உணவினை இருவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் வீடு பார்க்க புறப்படும் சமயம் என் தந்தையிடம் எந்த வீடு பிடித்து இருக்கின்றதோ அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து விடலாம். அதே சமயம் வீடு குடி போவதற்கு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து போக வேண்டும். அது வரையில் நீங்களும் உங்கள் மகளும் மேலே உள்ள தனி அறையில் தங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட என்னுடைய தந்தை மிக்க மகிழ்ச்சியடைந்து சரியென ஒப்புக் கொண்டார்.
அதன் பின்னர் என் தந்தை அவர்களின் மகனுடன் வீடு பார்ப்பதற்காக சென்று விட்டார். அப்போது அவர் பல வீடுகளைக் காண்பித்து சில வீடுகள் பிடித்து இருந்தன. அதே சமயத்தில் எனக்கு அரசு மருத்துவ மனையில் மருந்தாளுனர் பணி கிடைத்து இருப்பதால் அரசு மருத்துவ மனைக்கு அருகாமையில் ஏதேனும் வீடு கிடைத்தால் நலமாக இருக்குமே என்று சொல்லியுள்ளார். அதற்கு அவர்களது மகன் எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.
இருவரும் வீடு திரும்பிய சமயம் நான் குளித்து முடித்து விட்டேன். மதிய உணவு ரெடியாக இருந்தது. அந்தப் பெண்மணி என் தந்தையிடத்தில் வீடு ஏதேனும் பிடித்து இருக்கின்றதா எனக் கேட்ட சமயம் இரண்டு மூன்று வீடுகள் பிடித்து இருக்கின்றன. இருந்தாலும் அரசு மருத்துவ மனைக்கு அருகில் இருந்தால் மிகவும் நலமாக இருக்கும் எனவும் அரசு மருத்துவ மனையில் எனக்கு மருந்தாளுனராக வேலை கிடைத்து அதில் நான் சேரப் போவதாகவும் என் தந்தை அவர்களிடத்தில் தெரிவித்தார்.
அப்போது அந்தப் பெண்மணி மகனே ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள நம்முடைய வீட்டினைக் காண்பித்தாயா எனக் கேட்டார். அதற்கு அவர் அந்த வீட்டிற்கான சாவியினைக் கொண்டு செல்லாத காரணத்தால் காண்பிக்கவில்லை என்று சொன்னார்.
உடனே அந்தப் பெண்மணி உள்ளே சென்று ஒரு சாவிக் கொத்தினை எடுத்து வந்து அவரது கணவர் மூலமாக என்னிடம் கொடுத்தார். என் மகன் தனது திருமணத்திற்குப் பின்னர் வாழ்வதற்காக ஆசை ஆசையாக கட்டிய வீடு. கட்டாயம் உங்களுக்குப் பிடித்து இருக்கும். மதிய உணவு சாப்பிட்டு முடித்தவுடன் நானும் கூட வருகின்றேன். வீட்டினை காண்பித்து விட்டு வீடு பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம் எனச் சொன்னார்.
உடனே உங்கள் மகனுக்கு திருமணம் நடைபெறவில்லையா எனக் கேட்ட சமயம் பெண்களைப் பெற்றுள்ள அனைவரும் நிலையான வருமானம் வரக்கூடிய அரசு வேலையில் உள்ள வரன்களைத் தேடினால் என் மகன் போல நிலையில்லாத வருமானத்தைக் கொண்ட தனியாக தொழில் செய்பவர்களுக்கு எப்படி வரன் கிடைக்கும் என்று எங்களிடம் திருப்பிக் கேட்டார்கள்.
உடனே என்னுடைய தந்தை இந்தத் தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் எனக் கேட்ட சமயம் தந்தையும் மகனும் சேர்ந்து வாடகைக்கு வீடு என்றால் ஒரு மாத வாடகை இருவரிடத்திலும் பெற்றுக் கொள்வோம் எனவும் வீடு நிலம் விற்கவோ வாங்கவோ அல்லது ஒத்திக்கோ என்றால் இரண்டு சதவிகித தொகையினை இருவரிடத்திலும் பெற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்கள். நன்றாகப் பேசுகின்றீர்கள் ஆனால் எவ்வளவு மாதாந்திர வருமானம் வரும் என்பதனை மட்டும் சொல்ல மறுக்கின்றீர்களே எனக் கேட்டார்.
அதற்கு அவர் ஒரு சில மாதங்களில் அதாவது ஆடி புரட்டாசி மார்கழி ஆகிய தமிழ் மாதங்களில் குறைந்த வருமானமான ரூபாய் இருபதாயிரத்துக்குள் மட்டுமே இருக்கும் என்றும் மற்ற மாதங்களில் குறைந்த பட்சம் ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரையில் கிடைக்கும் என்றும் தெரிவித்த சமயம் என்னுடைய தந்தை அவர்களது வருடாந்திர வருமானத்தை கணக்குப் போட்டு விட்டு ஒரு மாவட்ட ஆட்சியர் சம்பளத்தை விட அதிகம் சம்பாதிக்கின்றீர்கள். ஆனால் பெண் கிடைக்கவில்லை என்று சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தனர்.
அதற்குப் பின்னர் நானும் என் தந்தையும் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் உள்ள வீட்டினைச் சென்று பார்த்தோம். வீடு மிகவும் அழகாக நேர்த்தியாக வாஸ்து முறைப்படி கட்டப் பட்டு இருந்தது. அந்த வீட்டைப் பார்த்த எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் மிகப் பெரிய மூன்று மாடிகள் கொண்ட வீடு.
இதற்கு வாடகை மற்றும் அட்வான்ஸ் என்ன என்று தெரிவிப்பீர்களா எனக் கேட்ட சமயம் இது என் மகன் திருமணத்திற்குப் பின்னர் அவன் மனைவியுடன் வாழ்வதற்கு கட்டிய வீடு. எனவே இந்த வீட்டிற்கு வாடகை மற்றும் அட்வான்ஸ் எதுவும் கொடுக்காமல் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள். என் மகனுக்கு திருமணம் நடைபெற்றவுடன் நாங்களே வேறு வீடு பார்த்து உங்களை குடி வைத்து விட்டு நாங்கள் இங்கு வந்து விடுகின்றோம். இல்லையேல் நீங்கள் காலையில் டிபன் சாப்பிட்ட அந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்த போது அதற்காவது வாடகை வாங்கிக் கொள்வீர்களா எனக் கேட்டேன்.
ஒரு வீடு வாங்குவது பெரிதல்ல. அதனை தினந்தோறும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விளக்கேற்ற வேண்டும் இல்லையேல் அது பேய் வீடாக மாறி விடும். எனவே நீங்கள் இருவரும் எங்களுக்குச் சொந்தமான வீட்டில் தங்கிக் கொள்ள வாடகை எதுவும் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார்கள்.
எங்களுக்கும் வேறு வழியில்லை. அரசு மருத்துவ மனைக்கு அருகில் அந்த ஒரு வீடு மட்டும் கிடைத்த காரணத்தால் நாங்களும் சரியென ஒப்புக் கொண்டோம். நல்ல நாள் பார்த்து அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி குடியேறி விட்டோம்.
எனக்கு என்னுடைய தந்தையைத் தவிர வேறு உறவினர்கள் ஒருவர் கூட இல்லை. என்னுடன் படித்தவர்கள் நண்பர்கள் தவிர உறவென்று உரிமை கொண்டாட யாரும் இல்லாத காரணத்தால் வீடு அல்லது மருத்துவமனை என இரண்டுக்கும் இடையே தான் என்னுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மருத்துவ மனையில் ஓய்வு நேரத்தில் செவிலியர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். வீட்டிற்கு வந்தால் என் தந்தையுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள் காலையில் பணிக்குச் செல்வேன். இன்னொரு நாள் பிற்பகல் பணிக்குச் செல்வேன். இன்னொரு நாள் இரவு பணிக்குச் செல்வேன். இவ்வாறு மாறி மாறி பணிக்குச் செல்வதும் வீட்டிற்கு வந்தால் ஓய்வு எடுப்பதும் என எனது நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அச்சமயத்தில் ஒரு நாள் நானும் என் தந்தையும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு காகம் தாளப் பறந்து வந்து என் தந்தையின் தலையில் அடித்துச் சென்றது. சற்று தூரம் சென்றவுடன் அதே காகம் மறுபடியும் என்னுடைய தந்தையின் தலையிலேயே அடித்துச் சென்றது. இரண்டு முறையும் ஒரே காகம் என் தந்தையை அடித்துச் சென்றதால் மீண்டும் வந்தால் விரட்டி விட வேண்டும் என்னும் எண்ணத்தில் சாலையில் குனிந்து ஒரு கம்பினை எடுத்த சமயம் மூன்றாவது முறையும் அடித்துச் சென்று வி;ட்டது.
இதனைக் கண்ணுற்ற அந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் என்னிடத்தில் அவருடைய ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டிப் பார்க்குமாறு அறிவுறை சொன்னார்கள். நானும் சரியென ஒப்புக் கொண்டேன். இரவு படுக்கையில் உறங்கியிருக்கும் சமயம் என்னுடைய தந்தை திடீரென ஒரு கனவு கண்டு கண் விழித்தார். நான் என்னவென்று கேட்டதற்கு இறந்து போன என்னுடைய உறவினர்கள் அனைவரும் என்னை வருக வருக என்று அழைக்கின்றார்கள். நேற்று காகமும் என் தலையில் மூன்று முறை அடித்து விட்டுச் சென்றது எனக் கூறி என்னை நினைத்து அழத் துவங்கி விட்டார். நான் என்னால் முடிந்த அளவு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர் திருப்தியடையவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் எங்களது வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொல்லி அவர்கள் தந்தை தாய் மகன் ஆகிய மூவரும் எங்களுடைய இல்லத்திற்கு வந்து என் தந்தையை நலம் விசாரித்தார்கள். அப்போது என் தந்தை அவர்களிடத்தில் எனக்கு ஒரே ஒரு மகள். அவளுக்கு என்னைத் தவிர வேறு உறவினர்கள் யாரும் கிடையாது. இந்த நிலையில் இந்த ஊருக்கு வந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றாள்.
எனக்கு கடந்த ஒரிரு நாட்களாக நடைபெற்று வரும் அபசகுனங்களை நினைத்தால் எங்கே நான் என் மகளை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடுவேனோ என்று கவலையாக இருக்கின்றது என்று கதறி அழுதார். அந்த சமயத்தில் எங்கள் வீட்டு உரிமையாளரது தாயார் என் தந்தையிடத்தில் உங்கள் மகள் அனாதை ஆகி விடுவாள் என்ற பயம் உங்களுக்கு வேண்டாம்.
எனக்கு உங்கள் மகளை மிகவும் பிடித்த காரணத்தால் தான் முதல் நாளன்றே சமையலறைக்குள் அழைத்துச் சென்று இருவரும் சமைத்தோம். அந்த காரணத்தால் தான் நானும் என் கணவரும் இந்த வீட்டிலே தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இங்கு தங்க வைத்துள்ளோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் உங்கள் மகளை என்னுடைய மகனுக்கு உங்கள் முன்னிலையிலேயே உடனடியாகத் திருமணம் செய்து வைக்கின்றோம். நீங்கள் எதுவும் கவலைப் படாதீர்கள் என்று சொன்னார்கள். அப்போது என்னுடைய தந்தை என் கரங்களை பிடித்து அவர்களிடத்தில் ஒப்படைத்து இனிமேல் இவளுக்கு நல்லது கெட்டது எல்லாம் நீங்கள் தான் என்று சொல்ல இப்படி நீங்கள் சொல்லக் கூடாது இவளுக்கு இனிமேல் நாங்கள் அனைவரும் தான் என்று சேர்த்து சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்கள். .
வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று சுபமுகூர்த்த நாளாக இருப்பதன் காரணமாக அன்றைய தினமே உங்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் சம்மதம் தானே எனக் கேட்க என் தந்தையால் ஆனந்தத்தில் எதுவும் பேச முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து என்னிடத்தில் இந்த திருமணத்தில் என்னுடைய சம்மதம் தான் மிக முக்கியம் எனச் சொல்லி என்னிடம் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து கேட்டார்கள். நான் உடனே அவரது மகன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பப் பட்டால் நான் சம்மதிக்கின்றேன் என்று சொன்னேன். அச்சமயத்தில் அவரும் சரியெனச் சொன்ன காரணத்தால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
என் தந்தை உயிருடன் இருக்கும் போதே எனக்கு திருமணம் செய்து பார்த்து விட வேண்டும் என்பதற்காக அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்றே திருமணம் நடைபெற்றது. அச்சமயம் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நான் பணியாற்றும் மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தினைக் கண்ணால் கண்ட என் தந்தைக்கு மிக்க ஆனந்தம்.
என்னை மருமகளாக ஏற்றுக் கொண்ட என் மாமனார் மாமியார் இருவரும் என்னுடன் தங்க வேண்டும் என்பதறகாக நாம் தங்கியுள்ள வீட்டிற்கே வந்து விட்டார்கள். அது போல என் கணவரும் மருத்துவ மனைக்கு அருகில் இருக்கும் வீட்டிற்கே அனைவரும் இருப்பது நல்லது எனச் சொன்னார். அதற்குப் பின்னர் எனது மாமனார் குடும்பம் தங்கியிருந்த பூர்வீக வீட்டினை வாகனம் மற்றும் வீடு தேடி வருபவர்களை அமர வைத்து பேசுவதற்கான அலுவலக பணிகளுக்காக உபயோகப் படுத்திக் கொண்டனர். என் கணவரும் மாமனாரும் காலையில் சென்று அலுவலக வேலைகளை மேற்கொண்டனர்.
அந்த சமயத்தில் தனக்கு நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பணி புரியும்படி கேட்டுக் கொண்டார். அவரிடத்தில் இருக்கும் சொத்துக்களையும் அவரது உழைப்பினையும் ஒப்பிடும் சமயம் என்னுடைய வருமானம் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இருக்காது என்றாலும் அரைக் காசு என்றாலும் அரசாங்கக் காசு என்று சொல்லி என்னை வேலை செய்வதில் உற்சாகமூட்டுவார்.
நாட்கள் கடந்தன. நான் கர்ப்பமாகி விட்டேன். வயிற்றில் ஏழு மாத குழந்தை. வளைகாப்பு நடத்த வேண்டும் என்று எல்லோரும் ஆசைப் பட்ட சமயம் என்னுடைய தந்தை திடீரென மாரடைப்பு வந்து காலமானார். என்னுடைய தந்தை இயற்கை எய்திய காரணத்தால் எனக்கு வளைகாப்பு நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. நான் கருவைச் சுமந்து கொண்டிருக்கும் வேளையில் தந்தை இறந்த சோகம். இருந்தாலும் ஒரு மருந்தாளுனர் என்பதால் சோகமாக இருந்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கும் என்பதற்காக அனைத்தையும் மறந்து பிரசவ விடுப்பில் இருந்தேன்.
நான் கருவைச் சுமந்திருக்கும் சமயம் என் தந்தை காலமான காரணத்தால் என் தந்தை என் வயிற்றில் வந்து ஆண் குழந்தையாக பிறப்பார் என எல்லோரும் சொல்லிக் கொண்டு பிறக்கப் போகும் குழந்தைக்கு என் தந்தை பெயரினை வைப்பது என நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
மனிதன் முடிவெடுக்கின்றான். இறைவன் தீர்மானிக்கின்றான் என ஒரு பழமொழி உண்டு. அது போல எங்கள் எண்ணம் ஈடேறவில்லை. எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தையை அம்மு என்றழைத்து மிகவும் சந்தோஷப் படடோம். குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றால் ஓராண்டு திவசம் முடிந்த பின்னர் தான் முடியும். அந்த காரணத்தால் அது வரையில் என் குழந்தையை அம்மு என்று அழைத்து வந்தோம்.
நானும் என் கணவரும் அம்முவும் என் மாமனாரும் மாமியாரும் ஒரே வீட்டில் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். குழந்தை அம்முவுக்கு பெயர் வைத்தாலும் அந்தப் பெயரைச் சொல்ல வரவில்லை. அம்மு என்றே பழகி விட்டது. நானும் என் கணவரும் நம் குழந்தை அம்முவும் கூட்டுக் குடும்பத்தில் மிக மிக சந்தோஷமாக இருந்தோம். குழந்தைக்கு மூன்று வயது ஆகி விட்டது. நான் பணிக்குச் சென்று விட்டால் என் செல்லக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் என் மாமனார் என் மாமியார் மற்றும் என் கணவர் ஆகிய மூவருக்கும் கடும் போட்டி இருக்கும்.
நான் வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர் குழந்தையுடன் இருப்பார். தொழில் காரணமாக வெளியே எங்கும் செல்ல வேண்டியிருந்தால் நான் வீட்டில் இல்லாவிடில் குழந்தையையும் அழைத்துச் சென்று விடுவார். இவ்வளவு நெருக்கமான பாசம் நம் குடும்பத்தினருக்கிடையே இருந்து கொண்டிருக்கின்றது.
முன் பின் தெரியாத ஒரு ஊரில் மருந்தாளுனர் பணி நியமனம் கிடைத்து அந்த ஊருக்குச் செல்வதற்கு முன்னர் எனது வருமானத்தை வைத்துக் கொண்டு தான் இனி மேல் வாழ்க்கை நடத்த வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் முன்பின் தெரியாத ஊரில் எந்த வீட்டிற்கு குடியேறினோமோ அதே வீடு எனக்கு புகுந்த வீடாக அமைந்து சந்தோஷமான வாழ்க்கை அமைந்து நான் என் மாமனார் என் மாமியார் என் கணவர் என் குழந்தை என அனைவருடனும் சேர்ந்து வாழுகின்ற நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது நாம் என்ன தான் முடிவு செய்தாலும் அதனைத் தீர்மானிப்பவன் நம்மைப் படைத்த ஆண்டவன் தான் என்பதனை நம்பாமல் இருக்க முடியவில்லை. இறைவா உனக்கு நன்றி.
தந்தையை இழந்த எனக்கு தந்தை போல பாசமிக்க மாமனாரையும் தாய் போல பாசம் காட்டும் மாமியாரையும் உள்ளங்கையில் தாங்கிப் பிடிக்கும் கணவரையும் நம் எல்லோருக்கும் உலகம் எங்கள் அம்முவின் சிரிப்பு தான் என்பதனையும் எண்ணிப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.