மறக்க முடியாத நினைவுகள்
இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாண்டுகள் படித்து முடித்த பின்னர் நான் மேற்கொண்டு முது நிலை பட்டம் படிக்க விண்ணப்பித்தேன். முது நிலை பட்டம் படிக்க விண்ணப்பித்த அதே நேரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பட்டத்தினை வைத்து வேலைக்கும் விண்ணப்பித்தேன்.
வேலைக்கு விண்ணப்பித்த ஓரிரு மாதங்களில் வேலைக்குத் தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சி பெற்றேன். என்னுடைய அதிர்ஷ்டம் முதுநிலை பட்டப்படிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே எனக்கு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணை வரப்பெற்றது.
எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கிடைத்திருக்கும் வேலை நல்ல வேலை எனவும் மேற்கொண்டு படித்தால் கூட இதே போன்றதொரு வேலை தான் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்கள். எனது குடும்பத்தாருக்கு அது சரியெனப்பட்டது. இருந்தாலும் நான் மேற்கொண்டு முதுநிலைப் படிப்பு தொடர்ந்தால் அவர்கள் கூடவே மேலும் இரண்டாண்டுகள் ஒன்றாக இருக்க முடியும் என எண்ணினேன். அதற்குக் காரணம் நான் வீட்டிலே கடைசிப் பெண் மற்றும் எனது பெற்றோரின் வயது முதிர்வு.
என் கூடப் பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனக்கு மாத்திரம் தான் திருமணமாகவில்லை. எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் என் பெற்றோருக்குக் கடமைகள் முடிந்து விடும் என்பது அவர்களின் எண்ணம். எனவே மேற்கொண்டு படிக்க வைக்காமல் கிடைத்திருக்கும் வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாக இருந்தது. எனவே பணியில் சேர முடிவு மேற் கொள்ளப்பட்டது.
எனக்கு வேலை கிடைத்திருக்கும் அலுவலகத்தில் எனக்கோ என் குடும்பத்தாருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிந்தவர்கள் யாரேனும் வேலை செய்கின்றார்களா என இரண்டு மூன்று நாட்கள் விசாரித்த பின்னர் என் உடன் பிறந்த மூத்த தங்கையின் உறவினரது மகன் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக அறிந்து கொண்டோம். இருவருக்கும் ஒரே வயது. நான் பட்டப்படிப்பினை முடிப்பதற்குள் அவர் மேற்கொண்டு படிக்காமலேயே அந்த அலுவலகத்தில் வேலையில் சேர்ந்து கொண்டார்.
நான் பணியில் சேருவதற்குப் புறப்பட்ட சமயத்தில் என் தந்தை என்னுடன் பணியாற்றும் ஊருக்கு துணையாக வந்தார். நானும் என் தந்தையும் காலையில் அலுவலகம் சென்று பணியில் சேருவதற்கான கடிதத்தினைக் கொடுத்து விட்டு உறவினரின் மகன் என கேள்விப்பட்டு வந்தவரைக் காண அலுவலக வளாகத்தில் தேட ஆரம்பித்தோம். அவர் பணியாற்றும் பிரிவினைச் சென்றடைந்தோம்.
என் தந்தைக்கு அவர் அதிகம் பழக்கம் இல்லாத காரணத்தாலும் வயது முதிர்வின் காரணமாக கண் பார்வை குறைந்து விட்ட காரணத்தாலும் உடனே அவரால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் நாங்கள் தேடி வந்தவர் எங்களை அடையாளம் கண்டுபிடித்து என்னிடத்தில் என் தங்கையின் பெயரினைச் சொல்லி அவரது தங்கை தானே எனக் கேட்டார். நானும் ஆமெனச் சொல்லி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் வழக்கம் போல் குடும்ப சம்மந்தமான குசலம் விசாரிப்பு தொடர்ந்து எனக்குப் பணி நியமன ஆணைகள் கிடைத்த விவரங்கள் அனைத்தையும் சொல்லி முடித்தோம்.
என்னுடைய தந்தை அவரிடத்தில் எனக்கு தங்குவதற்கு அறைகள் ஏதேனும் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் இன்னும் ஒரு மணி நேரத்தில் தங்குவதற்கான அறை ஏற்பாடாகி விடும் எனவும் மாலையில் நான் மட்டும் கிடைக்கின்ற அறையில் தங்கிக் கொள்ள வேண்டும் எனவும் என் தந்தை உள்ளுரில் உறவினர்கள் யாரும் இல்லாதிருந்தால் அவரது அறையில் ஊருக்குத் திரும்பும் வரையில் தங்கிக் கொள்ளலாம் எனவும் சொன்னார்.
அதன் பின்னர் அவருடன் நானும் என் தந்தையும் அலுவலக வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு சென்று சேர்ந்த சமயத்தில் அவருடைய தோழிகள் நிறையப் பேர் அங்கு அவருக்காகக் காத்திருந்தனர். அப்போது அவர் தமது தோழிகளிடத்தில் என்னை அறிமுகப்படுத்தி உறவுக்காரப் பெண் எனச்சொல்லி யாருடைய அறையிலாவது என்னை தங்க வைக்க இடம் இருக்கின்றதா எனக் கேட்டார்.
அப்போது அவரது சிநேகிதிகளில் பலர் எனக்குத் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களின் அறையில் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் ஏனெனக் கேட்டேன். திருமணம் ஆகி இருந்தால் விடுமுறை நாட்களில் கணவரைக் காணச் செல்லும் சமயம் தனியறையில் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பீச் பார்க் சினிமா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டியிருக்கும் எனச் சொன்னார்கள். அவர் எனக்குத் திருமணமாகவில்லை எனத் தெரிவித்தார்.
அதில் ஒரே ஒரு பெண் மாத்திரம் அவரிடத்தில் உறவுக்காரப் பெண் என்றால் உடன் தங்க வைத்துக் கொள்ள வேண்டியது தானே எனக் கேட்க மற்றொரு பெண் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காரணத்தால் அதற்குச் சாத்தியமில்லை எனச் சொன்னாள். அன்றைய தினம் மாலையில் அவர்களுடன் வந்து ஏதேனும் ஒரு அறையில் தங்கிக் கொள்ளுமாறு சொன்னார்கள். அவர் சொன்னவாரே ஒரு மணி நேரத்தில் எனக்கு அவர் சொன்னபடி அறை ஏற்பாடாகி விட்டது.
மாலையில் நானும் என் தந்தையும் அவருடன் சேர்ந்து அவருடைய தோழிகள் தங்கியிருக்கும் மகளிர் விடுதிக்குச் சென்றோம். மகளிர் விடுதியில் உள்ள அறைகளில் அவரையோ அல்லது எனது தந்தையையோ அனுமதிக்காமல் என்னிடமிருந்து தங்கிக் கொள்ள அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்டு ரசீது கொடுத்தார்கள். அதன் பின்னர் அவருடைய தோழிகள் தினமும் அவர் கேண்டீன் வரும் சமயம் தான் அலுவலகத்தில் அவரை சந்திக்க முடியுமெனவும் மற்ற நேரங்களில் சந்திக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
எனக்குத் தங்குவதற்கு அறை கிடைத்தவுடன் என்னுடைய தந்தை அவருடன் சென்று அவருடைய அறையில் தங்கிக் கொண்டார். மறு நாள் காலையில் என் தந்தையினை அழைத்துக் கொண்டு அவர் அலுவலகம் வந்தடைந்தார். அதன் பின்னர் சிறிது நேரம் பேசி முடித்த பின்னர் அவர் திரும்பவும் சொந்த ஊருக்குத் திரும்ப புறப்பட்ட சமயம் நானும் அவரும் ஒன்றாகச் சேர்ந்து இரயில் நிலையம் சென்று வழியனுப்பி வைத்தோம்.
அச்சமயத்தில் வழியில் சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு பொருட்கள் வாங்குவதற்கு அவர் கடைக்குச் சென்றிருந்த போது சற்று முன்னர் வேலை கிடைத்திருந்தால் அவரையே எனக்குத் திருமணம் செய்து வைத்திருப்பேன் என என் தந்தை சொன்னது கேட்டு எனக்கு உள்ளுர சந்தோஷம். ஆனால் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதறிந்து நம் இருவருக்கும் சற்று மன வருத்தம். அதன் பின்னர் வெள்ளிக்கிழமை வரையில் அவருடன் அலுவலகத்தில் அனைவருடன் சந்தித்த போது உரையாடினேன்.
மாதத்தின் இரண்டாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையில் எப்படிப் பொழுது போக்குவீர்கள் என நான் அவரிடத்தில் கேட்ட சமயம் அவரது அண்ணன் வீட்டிற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கும் சென்று வருவேன் எனத் தெரிவித்தார். நான் என்னையும் கூட அழைத்துச் செல்லுங்கள் எனச் சொன்னதற்கு சரியென ஒப்புக் கொண்டார்.
சனிக்கிழமையன்று அவரது அண்ணன் வீட்டிற்குச் சென்று அண்ணன் அண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு உறவினர்கள் என்பதால் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு மாலையில் நான் எனது விடுதிக்குத் திரும்ப அவர் அவரது அறைக்குத் திரும்பி விட்டார். மறு நாள் காலையிலும் அவரிடத்தில் என்னைக் கட்டாயம் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அவர் சொன்னது போல மறு நாள் காலையில் நான் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து வரவேற்பு அறையில் அமர்ந்து என்னுடனும் மற்ற தோழிகளுடனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் வந்த சமயத்தில் நமது அலுவலகத்தில் பணியாற்றுவோர் மட்டுமின்றி விடுதியில் தங்கியுள்ள அனைத்துப் பெண்களும் அவருடன் பேசிக் கொண்டிருந்ததனைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மதிய உணவினை அனைவருமாகச் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டோம்.
அவரது தோழிகள் அவரிடத்தில் பிற்பகலில் பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கப் போகின்றீர்களா எனக் கேட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு அவர் நான் தவிர்த்தாலும் நீங்கள் போட்டு உடைக்கத் தான் போகின்றீர்கள் எனவே என்னையும் அழைத்துச் செல்லப் போவதாக சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.
அவரது தோழியர் சொன்னபடி அவர் மதியம் எங்கு தான் செல்லப் போகின்றார் என்பதறிய என் மனம் துடித்தது. எனவே நான் மேற்கொண்டு தாமதிக்காமல் அவரிடத்தில் புறப்படலாமா எனக் கேட்டேன். அவர் அனைவரிடத்திலும் விடைபெற்ற பின்னர் அவர்கள் அனைவரும் காலையில் புத்துணர்ச்சியுடன் புத்தாடையுடன் சந்திப்போம் என்றனர்.
அவர் என்னை அவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ள பெண் வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்வார் என நினைத்துக் கொண்டு சென்ற சமயம் அவர் சொந்த ஊரில் எந்தப் பெண்ணுடன் நான்கைந்து ஆண்டுகள் உல்லாசமாக எதிர் காலக் கனவுகளுடன் சுற்றித் திரிந்தாரோ அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துள்ள நிலையில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்தப் பெண்ணின் குழந்தை அவரிடத்தில் மிகவும் உரிமையுடன் ஒட்டிக் கொண்டதைப் பார்த்த நான் வியந்து போனேன். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சொந்த ஊரில் உள்ள கோயில் குளங்களுக்கும் மற்ற பொழுது போக்கு இடங்களுக்கும் சென்று வருவதைப் பார்க்கும் சமயம் நானே பொறாமைப் பட்டிருக்கின்றேன். அந்த அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கம் இருக்கும்.
அவருடைய காதலி என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்று நடந்த விவரங்கள் அனைத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்த சமயம் நானே அழுது விட்டேன். உயிருக்கு உயிராகக் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்காத அவரது பெற்றோர் என்னை கட்டாயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரிந்தது.
மறு நாள் காலையில் அலுவலகத்திற்கு ஒரே நிறம் மற்றும் ஒரே டிசைன் கொண்ட சேலை மற்றும் ரவிக்கையுடன் அவரது தோழியர் அனைவரும் வருகை தந்தனர். அவரும் ரவிக்கை நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். அதன் பின்னர் நான் கேட்ட சமயம் ஒரே கலர் ஒரே டிசைனில் சேலை மற்றும் மேட்சிங் ரவிக்கை தேர்வு செய்து வாங்கிக் கொடுப்பது அவர் வழக்கம். அதற்குப் பணம் கொடுத்து முடித்த பின்னர் ஒரே நாளில் உடுத்திக் கொள்வது எங்கள் வழக்கம் எனத் தெரிவித்தனர். நானும் அதில் சேர்ந்து கொண்டேன்.
அவரது திருமணத்திற்காகவும் திருமணத்திற்கு முன்னர் வருகின்ற பண்டிகைக்காகவும் அவரது நண்பர்கள் இரயிலில் முன் பதிவு செய்யச் சென்ற போது எனக்கும் சேர்த்து டிக்கட் எடுக்குமாறு கேட்டுக் கொள்ள அவரது நண்பர்கள் எனக்கும் அவருக்கும் மாத்திரம் தனி பெட்டியில் டிக்கட் போட்டிருந்தனர். அதுவும் படுக்கை வசதியுடன்.
இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் நான் அவருடன் மிக மிக நெருக்கமாகப் பழகி விட்டேன். அவரது வருங்கால மனைவியை அவருடைய தோழிகள் காணச் சென்ற சமயம் என்னையும் அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணுக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை என என் மனம் ஏங்கியது. காரணம் நான் அவர் பணியாற்றும் அலுவலகத்தில் பணி கிடைத்தது மிகவும் தாமதம்.
நான் அவருடன் ரயிலில் ஒரே பெட்டியில் சென்ற சமயம் அவரது தோளில் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டே சென்றதனை அவரது நண்பர்கள் பல முறை பார்த்து விட்டுச் சென்றனர். நான் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் நான் அவரது மடியில் உறங்கி விட்டேன். அதனை அவரது நண்பர்கள் பார்த்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
மறு நாள் காலையில் அவரது நண்பர்கள் என்னிடத்தில் தலையணை சுகமாக இருந்ததா எனக் கேட்ட சமயம் நான் வெட்கப்பட்டு தலையினை குனிந்து கொண்டேன். அவருடைய தோள் மீது தலை சாய்த்து நீண்ட நேரம் பேசி விட்டு அவரது மடி மீது தலை வைத்து உறங்கிய அந்த சிறிய நேரத்தில் நான் அவரைத் திருமணம் செய்து கொள்வது போலக் கனவு கண்டதனை என்னால் எப்படிச் சொல்ல முடியும்?
எனது இல்லத்திற்கு வந்து அவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டுச் சென்ற பின்னர் என் தந்தை என்னிடத்தில் மிகக் குறுகிய காலத்தில் அவருடன் மிக நெருக்கமாகப் பழகி விட்டேன் என்பதனைக் கண்டு பிடித்து விட்டார். எப்படி எனக் கேட்ட சமயத்தில் மேகம் மறைத்த சூரியன் போல என் முகம் அவர் வந்திருந்த சமயம் காணப் பட்டதனைத் தெரிவித்தார். நான் மட்டுமா என்னுடன் சேர்ந்து இன்னும் சிலர் இருக்கின்றார்கள் என்பதனை என் தந்தை அறிய வாய்ப்பில்லை.
பெண் தோழியர் அனைவரின் சார்பாக நான் மட்டுமே அவரது திருமணத்தில் கலந்து கொண்டேன். கலகலப்பான திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போதிலும் எனக்கு இதுவரையில் பங்கேற்ற திருமண நிகழ்ச்சிகளின் போது இருந்த உற்சாகம் மட்டும் சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை. திருமண நாளன்று நான் உதட்டில் புன்னகையுடன் உள்ளத்தில் சோகத்துடன் திருமண மண்டபத்தில் வலம் வந்ததனை யாரும் அறிய வாய்ப்பில்லை. திருமண நாளன்று காலை உணவினை அவருடன் அமர்ந்து சாப்பிட்டேன். அதன் பின்னர் அன்று முழுவதும் நான் உணவே சாப்பிடவில்லை. அந்த அளவிற்கு என்னுள் சோகம் கவ்விக்கொண்டது.
நான் வேலையில் சேருவதற்குச் சென்ற பொழுதும் வேலையில் சேர்ந்த பின்னரும் அவருடன் பழகிய மிகச் சிறிய காலத்தில் நான் அவர் மீது செலுத்திய அன்பினையும் அதே போன்ற அன்பு அவரிடமிருந்து எனக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் அவருக்குத் திருமணம் என்பதற்காக அவருடன் ரயிலில் ஒரே பெட்டியில் அவர் மடியில் உறங்கிச் சென்ற சமயம் கண்ட கனவின் போது இருந்த சந்தோஷத்தையும் எண்ணிப் பார்த்த போது என் தந்தை சொன்னது போல மேகங்கள் மறைத்த காலைச் சூரியன் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இருக்குமோ அதனை விட மோசமாக சூரியன் அஸ்தமனமான பின்னர் இருள் கவ்விக் கொண்டது போன்ற நிஜ வாழ்க்கையினையும் நினைத்து நான் தினமும் ஏங்குகின்றேன். அவருடன் நெருக்கமாகப் பழகிய அந்த நாட்கள் என் இதயத்தில் மறக்க முடியாத நினைவுகளாகத் தொடர்கின்றன.
எனக்குத் திருமணம் ஆகி இருவருடைய வருமானத்துடன் மிகவும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த போதும் கூட அவருடன் பழகிய அந்த சில நாட்களில் நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ அந்த அளவிற்கு சந்தோஷமாக இல்லை. அவரை நினைத்தாலே நான் அவரை இழந்து விட்டேன் என வருத்தப்பட ஆரம்பித்து விடுகின்றேன்.
மூன்று மாதங்கள் பழகிய எனக்கே இப்படியென்றால் நான்கைந்து ஆண்டுகள் அவருடன் பழகிய அந்தப் பெண்ணின் நிலைமையினை எண்ணிப் பார்த்த சமயத்தில் அடுத்த ஜென்மத்திலாவது பெண்கள் மனதார விரும்பியவர்களை கணவராக இறைவன் மணமுடித்து வைக்க வேண்டும் என இறைவனிடத்தில் வேண்டுகின்றேன்.