பரிட்சயமான குரல்
முதன் முதலாக நான் அவளை பார்த்த அந்த நிமிடத்தில் அவளை திருமணம் செய்து கொள்ளப் போகின்றவன் மிகவும் கொடுத்து வைத்தவனாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.
தங்கம் போன்று மின்னும் நிறம். வட்ட வடிவ அழகு முகம். உதட்டில் ஒரு புன்னகை. சிரிக்கும் சமயத்தில் குழி விழும் கன்னங்கள். கயல் போன்ற விழிகள். சங்கு போன்ற கழுத்து. எந்த மாதிரியான உடைகள் அணிந்தாலும் நேர்த்தியாக தோற்றமளிக்கும் உருவம். தங்க நகைகளோ அல்லது வெள்ளி நகைகளோ எதுவும் அணிந்து கொள்ளாமலேயே மிக மிக ஆடம்பரமாகத் தெரிகின்ற அழகுத் தோற்றம். அவள் சாலையில் நடந்து சென்றால் அனைவரது கவனத்தையும் சுண்டி இழுக்கும் வசீகரம். அவளை முதன் முதலாகப் பார்த்தவுடனேயே அவளை மானசீகமாக மனைவி போல எண்ணிக் கொண்டு என் மனதினை அவளிடத்தில் பறி கொடுத்து விட்டேன்.
அழகாக நடந்து வருகின்ற அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அந்த சமயத்தில் என்னிடத்தில் வந்து இந்த விலாசம் எந்த இடத்தில் இருக்கின்றது எனக் கேட்டாள். எனக்கு மிக்க பேரானந்தம். அவளது இனிமையான குரல் கேட்டு நான் அசந்து விட்டேன். அதன் பின்னர் அவள் கேட்ட அந்த விலாசம் என் வீட்டிற்கு நேர் எதிரே உள்ளது எனச் சொன்ன சமயத்தில் என்னிடத்தில் நன்றி எனச் சொல்லி விட்டு தமது தோழ்பட்டை பையுடன் வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அவளைப் பார்த்த நான் அந்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்து இருக்கலாம் என எண்ணி அவள் அந்த வீட்டை விட்டுச் செல்லும் வரையில் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என கண்காணிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அந்த வீட்டிலிருந்து பெரியவர்கள் எனது இல்லத்திற்கு வந்தார்கள். என் தாயாரிடத்தில் வெளியூரில் படித்து வந்த அவர்களது மகள் படிப்பினை முடித்து விட்டு இல்லம் திரும்பி விட்டதாகக் கூறிவிட்டு மகள் வந்து விட்ட காரணத்தால் இனி மேல் முன்பு போல அடிக்கடி எனது இல்லத்திற்கு வந்து அரட்டை அடிக்க முடியாது எனச் சொன்னார்கள்.
நான் நீங்கள் வரும் சமயம் உங்கள் மகளையும் அழைத்து வர வேண்டியது தானே எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களின் மகள் யாரிடத்திலும் எளிதில் பழக மாட்டாள். ஆனால் அவள் ஒருவரிடத்தில் பழக ஆரம்பித்து விட்டால் மிக மிக நெருக்கமாகப் பழகி விடுவாள். அவள் மட்டுமே எப்போதும் பேசிக் கொண்டிருப்பாள். எதிரில் அமர்ந்துள்ளவரை பேசுவதற்கு அனுமதிக்காமல் அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பாள். எனவே எங்களது உறவினர்கள் அனைவரும் அவளை வாயாடி என்று தான் சொல்வார்கள் எனச் சொன்னார்கள்.
அதன் பின்னர் நான் அவர்களிடத்தில் உங்கள் மகள் என்று சொல்கின்றீர்கள். ஆனால் விலாசம் தெரியாமல் என்னிடத்தில் விசாரித்து நான் உங்கள் வீட்டினை அடையாளம் காட்டிய பின்னர் தான் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்படியெனில் அவர்கள் இதுவரையில் இந்த வீட்டுக்கு வந்ததில்லையா எனக் கேட்டதற்கு கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு நடைபெற்ற சமயத்தில் குடி வந்த காரணத்தால் மகள் வரவில்லை என்றும் இந்த வீட்டிற்குக் குடி வந்த பின்னர் முதன் முதலாக இப்போது தான் வந்துள்ளாள் எனவும் தெரிவித்தார்கள்.
எனக்கு உள்ளுர மகிழ்ச்சி. காரணம் நான் அடிக்கடி அந்தப் பெண்ணை தொடர்ந்து காண முடியும் என்பது தான். அவளைக் காண வேண்டும் என என் மனம் துடித்தது. நான் அடிக்கடி மொட்டை மாடிக்குச் சென்று என் வீட்டிற்கு எதிரே உள்ள அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பேன் அவளைக் காண வேண்டும் என்பதற்காக. ஆனால் அவளைக் காணவே முடியவில்லை. சில நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு நானே நேரில் சென்று வர வேண்டும் என எண்ணும் அளவிற்கு என் இதயம் அவளை நாட ஆரம்பித்தது. ஆனால் இது வரையில் அந்த வீட்டின் வாசல் படியினை மிதிக்காத நான் இப்போது சென்றால் இருவரது வீட்டிலும் என்ன நினைப்பார்கள் என எண்ணி பயந்து கொண்டு செல்லவில்லை.
பத்து பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர் அவளது பெற்றோர் மீண்டும் முன்பு போல எனது இல்லத்திற்கு வருகை தர ஆரம்பித்தார்கள். சில நாட்கள் கழித்து எனது இல்லத்துக்கு வந்துள்ள பெற்றோரைத் தேடி அந்தப் பெண் வர ஆரம்பித்தாள். ஆரம்ப காலத்தில் அவள் மிகவும் அமைதியாக அடக்க ஒடுக்கமாக வந்து சென்றாள். என் வீட்டிலுள்ளவர்கள் பழகும் விதத்தினை நன்கு அறிந்து கொண்ட பின்னர் அந்தப் பெண் எனது பெற்றோரிடத்தில் பேச ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் அவளிடத்தில் பேச ஆரம்பித்தேன். நாம் இருவரும் பேச ஆரம்பித்த பின்னர் தான் அவர்களது பெற்றோர் சொன்ன விவரம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
அதாவது அவள் யாரிடத்திலும் எளிதில் பழக மாட்டாள். பழக ஆரம்பித்து விட்டால் மிக மிக நெருக்கமாகப் பழகி யாரையும் பேச விடாமல் அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பாள் எனச் சொன்னது முற்றிலும் உண்மை என்பதனை தெரிந்து கொண்டேன். நாம் இருவரும் நெருங்கிப் பழகி ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை என்னும் அளவிற்கு காதலர்களாக மாறி விட்டோம்.
இந்த விவரம் நம் இருவர் வீட்டிற்கும் தெரிந்து விட்டது. இந்த காரணத்தால் இருவர் வீட்டாரும் ஒருவருக்கொருவர் தவறாகப் பேசி அது சண்டையில் முடிந்து விட்டது. ஒரு பழமொழி உண்டு. முள் மேல் சேலை விழுந்தாலும் சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத் தான் ஆபத்து. எனவே சேலையை மிக மிக ஜாக்கிரதையாக காப்பாற்ற வேண்டும் என்பதன் காரணத்தால் நம் இருவரையும் பிரிக்கும் நோக்கில் அவளது குடும்பம் வேறு இடத்தில் வீடு பார்த்து குடி பெயர்ந்து விட்டார்கள்.
அச்சமயத்தில் நானும் அவளும் தொலைபேசியில் அடிக்கடி உரையாடி வந்தோம். அவளது வீட்டார் அதனையும் தடுக்க வேண்டும் என்பதற்காக தொலைபேசி இணைப்பினையும் துண்டித்து விட்டார்கள். அந்த சமயத்தில் நாங்கள் இருவரும் ஒரு சில நிமிடங்கள் சந்தித்தால் கூட நம் இருவரையும் நமது பெற்றோர் பிரித்து விட்டார்கள். எப்படியாவது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக் கொண்டே இருப்போம்.
இந்த நிலையில் நம் இருவரது காதல் விவரம் பிறருக்குத் தெரிவதற்கு முன்னால் தம் மகளை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி மேற்கொண்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒத்துக் கொள்ளாத நிலையில் நானும் என் பெற்றோரும் பெண் பார்க்க வந்து நிச்சயதார்த்தம் செய்ய இருக்கின்றார்கள் என அப்பட்டமான பொய் சொல்லி அதனை நம்ப வைத்து விட்டார்கள். அதன் படி அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு நானும் என் குடும்பத்தாரும் செல்வதற்குப் பதிலாக வேறு யாரோ ஒரு குடும்பத்தார் சென்று பெண் பார்த்து இருக்கின்றார்கள்.
நான் தான் மாப்பிள்ளையாக பெண் பார்க்க வந்திருப்பேன் என மிக்க ஆவலுடன் தம்மை அலங்கரித்துக் கொண்டு வந்தவள் மாப்பிள்ளையாக நானும் மாப்பிள்ளை வீட்டாராக என் குடும்பத்தாரும் வரவில்லை என்பதனைக் கண்ட அடுத்த நொடியில் வீட்டில் மயங்கி விழுந்து விட்டாள். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் மயங்கி விழுந்ததைப் பார்த்தவுடன் கர்ப்பம் தரித்துள்ள உங்கள் மகளை எங்கள் தலையில் கட்டப் பார்க்கின்றீர்களா எனக் கேட்டு சண்டை போட்டு விட்டுத் திரும்பி விட்டனர்.
அதன் பின்னர் அவளது பெற்றோர் அவளை எழுப்பிய சமயம் அவள் சுய நினைவுக்கு வரவில்லை. உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று காண்பித்ததில் பெண் அதிர்ச்சியின் காரணமாக கோமா நிலைக்குச் சென்று விட்டதாகவும் உடனடியாக குணப்படுத்த முடியாது எனவும் சொல்லி விட்டார்கள். அதன் பின்னர் அந்தக் குடும்பத்தார் மருத்துவர்களிடத்தில் நடந்த விவரங்களை எடுத்துக் கூறிய சமயம் பழைய நினைவுகள் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகலாம் எனவும் பழைய நினைவுகள் திரும்புவதற்கு பழையனவற்றை நினைவு படுத்திக் கொண்டு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிலையில் அந்தக் குடும்பத்தார் எனது இல்லத்திற்கு நேரில் வந்து நடந்த விவரங்கள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டு எங்கள் மகளை உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என மன்றாடிய சமயம் எனது பெற்றோர் உடனடியாக இணக்கம் தெரிவிக்கவில்லை. நான் நீண்ட நேரம் என் பெற்றோரிடத்தில் போராடி மன்றாடிக் கேட்டுக் கொண்டு நான் அவளைத் தான் மணமுடிப்பேன் என ஆணித்தரமாக சொன்னவுடன் கோமா நிலையில் உள்ளவளை எப்படி மணமுடிக்க முடியும் எனக் கேட்டார்கள். நான் அவளை எப்படியாவது காப்பாற்றி மணந்து கொள்கின்றேன். அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவியுங்கள் என மன்றாடினேன்.
எனக்கு பெற்றோரின் அனுமதி கிடைத்தவுடன் மருத்துவமனையில் பேச்சு இல்லாமல் மயக்க நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவளை நேரில் சென்று பார்த்தேன். மருத்துவர்கள் என்னிடத்தில் நீங்கள் அவளிடத்தில் பழையனவற்றை நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தால் சுய நினைவு வந்து விடும் என தெரிவித்தார்கள். அப்போது எனக்கு ஒரு பழைய கதை நினைவுக்கு வந்தது.
போர்க் காலங்களில் யானைப் படை அணி வகுத்துச் செல்லும் சமயத்தில் முதலாவது யானையாகச் செல்லுகின்ற ஒரு பட்டத்து யானை தடுமாறிக் கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்த சமயம் அதனைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. பட்டத்து யானை மயக்க நிலையில் இருக்கின்ற விவரம் அரசருக்கு தெரியப்படுத்தப் பட்டது. மயங்கிக் கிடக்கின்ற யானையைக் காணும் பொருட்டு அங்கு வந்த அரசர் இந்த யானையை எழுப்ப வேண்டுமெனில் ஒரே ஒரு வழி தான் உண்டு எனச் சொன்னார்.
அனைவரும் அரசர் சொல்வதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த சமயம் அங்குள்ள படைத்தளபதியிடம் போர் முரசு ஒலிக்கட்டும் எனச் சொன்னார். உடனே போர் முரசு ஒலிக்கத் தொடங்கியது. அந்த யானையைச் சுற்றியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் போர் போர் என சத்தமாகக் முழக்கமிட்டார்கள். அந்த போர் முரசின் ஒலியையும் போர் போர் என்னும் போர் முழக்கத்தையும் கேட்ட யானை மீண்டும் வீறு கொண்டு எழுந்தது. உடனே அருகில் இருந்த அரசர் போர் முரசு ஒலிப்பதனை நிறுத்தச் சொல்லிவிட்டு போர் போர் என முழக்கமிடுவதனையும் நிறுத்தச் சொன்னார்.
அதன் பின்னர் அருகில் இருந்த காவலாளியிடத்தில் அரசர் அரசவைக்கு வருகின்ற சமயம் சொல்கின்ற ராஜாதி ராஜ ராஜ குல திலக ராஜ மார்த்தாண்ட……..பராக் பராக் என சொல்லுமாறு கட்டளையிட்டார். இதனை உற்றுக் கேட்ட அந்த பட்டத்து யானை அரசரைத் தேடி அருகில் வந்து தன் முதுகில் அமருமாறு முன்னங்கால்களை மடக்கி அமர்ந்தது. அரசரும் தமது பட்டத்து யானையின் மீது அமர்ந்து அரசவைக்குச் சென்றார். இதனைத் தான் மருத்துவர்கள் தற்போது கோமா வந்த நோயாளிகளிடத்தில் செய்யச் சொல்கின்றார்கள்.
நானும் அவளும் மிக நெருக்கமாகப் பழகி ஏதேனும் சுவாரஸ்யமாகப் பேசியிருந்தால் அதனை திரும்பத் திரும்ப பேசி அவளை மயக்க நிலையிலிருந்து மீள வைக்க முடியும். ஆனால் நானும் அவளும் பேச ஆரம்பிக்கும் போதே நம் இருவரது குடும்பத்தாரும் நம்மைப் பிரிக்க முயற்சி மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எனவே என்ன பேசுவது என்று தெரியவில்லை.
இந்நிலையில் நான் அவளிடத்தில் அடிக்கடி சொல்லி வந்த நம் இருவரையும் நமது பெற்றோர் பிரித்து விட்டார்கள். எப்படியாவது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதனை திரும்பத் திரும்ப ஒரு மணி நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளது கால் விரல்கள் அசைந்தன. கை விரல்கள் அசைந்தன. கண்கள் திறந்தன. என்னை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு சுய நினைவு வந்து விட்டது. அதற்கு ஒரே காரணம் அவளுக்குப் பரிட்சயமான எனது குரல். ஆனால் அவளால் பேச முடியவில்லை.
மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கூட அவளுக்கு பேச்சு வரவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என் தேவதை எனக்குக் கிடைத்தால் போதும் என்னும் எண்ணத்தில் நான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். நான் அவளை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவள் என்னிடத்தில் முன்பு போல நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நினைவு திரும்பி தற்போது பூரணமாக உடல் நலம் பெற்று விட்டாள். இல்லற வாழ்க்கை கூட துவக்கி விட்டோம். ஆனால் பேச்சு தான் வரவில்லை.
நான் அவளை முதன் முதலாகக் கண்டவுடன் அவளது அழகில் மயங்கி அவளுடன் நிறையப் பேசிப் பழக வேண்டும். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் எண்ணிய எண்ணம் ஈடேறி விட்டது. அவளை நான் உளமாற நேசிக்கும் சமயம் அவளுடன் எப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த வாழ்க்கைக்கும் திருமணத்திற்குப் பின்னர் அவள் கோமாவிற்குச் சென்று உடல் நலம் பெற்று வந்த காரணத்தால் பேச முடியாமல் மௌனமாக இருந்து வரும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கின்றது.
நிச்சயமாக எதிர்காலத்தில் என்னவள் என்னுடன் வாய் விட்டுப் பேசி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாள் என்னும் எதிர்பார்ப்பு என்னிடத்தில் இருக்கின்றது. இப்போதும் கூட கனவுக் கன்னியாக என் மனதில் இடம் பெற்றிருந்த அவள் எனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்து விட்டாள் என்பதனை நினைக்கும் போது இரட்டிப்பு சந்தோஷம். அவளுக்கும் தான். ஆனால் மௌனமாக.