விளக்குகளின் மகிமை
திறப்பு விழா.
புதிய உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு விழா.
ஆம். நான் பணியாற்றும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் புதியதாக பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கப் போகின்றார். அதன் மூலம் 500 முதல் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வணிக நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகின்றவர் ஒரு பெண்மணி. திறமையான பெண்மணி. வணிக நிறுவனத்தில் ஏறக்குறைய 50 நபர்கள் பணியாற்றி வருகின்றார்கள். அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியினால் நல்ல லாபம் பெற்று முன்னேற்றமடைந்து வருகின்ற சமயத்தில் மேலும் முதலீட்டினை அதிகரிக்க ஒரு உற்பத்தித் தொழிற்சானை ஆரம்பிப்பது என முடிவு செய்து அதற்கான ஆயத்தப் பணிகள் ஓராண்டிற்கு முன்னர் தொடங்கப் பட்டன.
அதற்கான இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தனியே ஒரு இடத்தில் நிர்மாணம் செய்யப்பட்டு முடிந்து விட்டன. இது தொடர்பான விவரங்கள் வணிக நிறுவனத்தில் யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்மணி அவ்வளவு ரகசியமாக தொழிற்சாலை ஆரம்பிப்பதனை வைத்திருந்தார்.
நான் அந்தப் பெண்மணிக்கு அந்தரங்கச் செயலாளராகவும் நேர்முக உதவியாளராகவும் இருந்து வருகின்றேன். எனக்கு அலுவல் நேரம் என எதுவும் கிடையாது. அந்த தொழில் நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்து இடம் பார்த்து தேர்வு செய்வது முதல் கட்டிட கட்டுமானம் முடிந்து இயந்திரங்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிர்மாணிக்கும் வரையில் அந்தப் பெண்மணியுடன் இரவு பகல் எனப் பார்க்காமல் அதிக நேரம் உழைத்தேன். நானும் அந்த ரகசியத்தினை யாரிடத்திலும் வெளியிடவில்லை. என் குடும்பத்தாரிடத்தில் கூட நான் இது பற்றி வாய் திறக்கவில்லை.
உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கான ஆரம்ப தேதி குறிக்கப்பட்டது. அந்தப் பெண்மணியின் கணவர் அரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பதன் காரணமாக அவருக்கு எந்த நாளில் ஓய்வு கிடைக்குமோ அந்த நாளில் திறப்பு விழா பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொள்ள அவரும் அந்த நாளில் பூஜையில் கலந்து கொள்ள முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.
தொழிற்சாலை துவக்க விழா அழைப்பிதழ் அச்சடித்து வந்தவுடன் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பதற்கு அந்தப் பெண்மணியுடன் ஒத்துழைக்க வேண்டுமென என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் சரியென ஒப்புக் கொண்டேன். அதன் படி ஒரு குறிப்பிட்ட சுப முகூர்த்த நாளன்று அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிப்பது என தீர்மானித்து அன்றைய தினம் ஒரு மணி நேரம் முன்னதாகவே நான் அலுவலகம் சென்று விட்டேன்.
நான் அலுவலகம் சென்றவுடன் தயார் நிலையில் இருந்த அந்தப் பெண்மணி என்னிடத்தில் அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பிக்கலாமா எனக் கேட்டார். நானும் சரியென்றேன். முதலில் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமெனக் கேட்டேன். அதற்கு முதலில் காரில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும்படி என்னைப் பணித்தார். நானும் அவ்வாறே செய்தேன்.
அவரும் காரில் அமர்ந்தவுடன் முதல் அழைப்பிதழை எனது வீட்டிற்கு வந்து கொடுப்பதன் பொருட்டு எனது இல்லத்திற்கு வழி காட்டுமாறு கேட்டுக் கொண்டார். நானும் வாகன ஓட்டுனரிடத்தில் வழி காட்டி அழைத்துச் சென்றேன். எனது இல்லம் வந்தவுடன் இறங்கி எனது இல்லத்திற்கு வருகை தந்தார். முன்னமேயே சொல்லியிருந்தால் நான் குளிர் பானம் வாங்கி வைத்தல் போன்ற ஏதாவது முன் ஏற்பாடுகள் செய்திருக்கலாம் என நினைத்தேன்.
என் வீட்டில் புகுந்தவுடன் என் பெற்றோருக்கும் என் மனைவியிடத்திலும் அந்தப் பெண்மணியை அறிமுகம் செய்து வைத்து அமருமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அமர்ந்து கொண்டார். என் பெற்றோருக்கும் என் மனைவிக்கும் ஒரே ஆச்சர்யம்.
அவர்கள் சொன்னவாறு தொழிற்சாலையின் ஆரம்ப விழாவுக்கான முதலாவது அழைப்பிதழை என்னையும் என் மனைவியையும் என் பெற்றோரையும் அருகருகே நிற்க வைத்துக் கொடுத்து என் பெற்றோரிடத்தில் ஆசீர்வாதம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வயதில் முதியவர்கள் என்பதால் அவர்களும் மறுப்புத் தெரிவிக்காது ஆசீர்வதித்தனர்.
அதன் பின்னர் காலையில் அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை எனச் சொல்லி சாப்பிடுவதற்கு வாய்க்கு ருசியான உணவினை வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார். அச்சமயம் என் தந்தை ஒரு ஹோட்டல் பெயரினைச் சொல்லி அங்கிருந்து வாங்கி வருமாறு சொன்னார். அப்போது அந்தப் பெண்மணி என்னிடத்தில் பெரிய ஹோட்டலில் வாங்க வேண்டாம் எனவும் கையேந்தி பவனில் வாங்கிக் கொண்டு ஒரு மணி நேரத்தில் வந்தால் போதும் எனவும் அவசரமில்லை எனவும் சொன்னார்கள்.
என் மனைவி தான் சென்று வாங்கி வருகின்றேன் எனச் சொன்னதற்கு அவர் என்னுடைய விருந்தாளி என்பதன் காரணமாக நான் தான் நேரில் சென்று வாங்கி வரவேண்டுமெனச் சொன்னார்கள். நானும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிற்றுண்டி வாங்குவதற்கு கடைக்குச் சென்று விட்டேன்.
நான் திரும்பி வரும் சமயம் எனது வீட்டில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. என் குடும்பத்தார் அனைவரும் மிக மிகச் சந்தோஷமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் எனக்கு என்னவென்று தெரியவில்லை. நான் சாலையோர கடையிலிருந்து வாங்கிச் சென்ற சிற்றுண்டியினை மிகவும் ருசித்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் என் மனைவியிடத்தில் அவர்களின் வீட்டு விலாசம் குறிப்பிட்ட விசிட்டிங் கார்டினைக் கொடுத்து திறப்பு விழாவிற்கு முதல் நாள் கட்டாயம் வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். என் மனைவியும் மிக சந்தோஷமாக அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள். ஏதோ ஒன்று மறைக்கப் படுகின்றது என்பதனை மட்டும் நான் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் தொடர்ந்து பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு மேல் அவர்களுடன் காரிலேயே சென்று அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முடித்தோம். இடைப்பட்ட நேரங்களில் நான் வசித்து வருவது வாடகை வீடு என்பதனையும் என் வருமானத்தை நம்பி என் பெற்றோர் மற்றும் இரண்டு தங்கைகள் மற்றும் இரண்டு தம்பிகள் இருக்கின்றார்கள் என்பதனையும் அவர்களின் படிப்புச் செலவுக்கு என்னுடைய சம்பளம் தான் கைகொடுக்கின்றது என்பதனையும் அறிந்து கொண்டார்கள்.
தொழிற்சாலை துவக்க நாளுக்கு முதல் நாளே எனது மனைவியுடன் எனது பெற்றோர் மற்றும் என் உடன் பிறந்த தம்பி தங்கைகள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்திற்கு வந்து சேர்ந்தது கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன். கேட்டமைக்கு துவக்க விழாவிற்காக கோலம் போடுவது முதல் தோரணம் கட்டும் வரையில் அனைத்துப் பொறுப்புகளும் என் பெற்றோரிடத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப் பட்டிருந்ததனை அறிந்து கொண்டேன்.
தொழிற்சாலை துவக்க விழாவிற்காக கணபதி ஹோமம் மற்றும் இதர ஹோமங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணபதி ஹோமம் ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக என்னையும் என் மனைவியையும் அழைத்து இருவருக்கும் புத்தாடை வழங்கினார்கள். என் மனைவிக்கு கொடுக்கப்பட்ட அதே போன்றதொரு சேலை ரவிக்கையினை அந்தப் பெண்மணியும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் போன்றதனை அவரது கணவருக்கும் கொடுத்து விட்டு நானும் என் மனைவியும் அவர்களுடன் சேர்ந்து ஹோமத்தில் அமருமாறு கேட்டுக் கொண்டனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
இதை விடப் பெரிய ஆச்சர்யம் என் பெற்றோர் என் தம்பிகள் என் தங்கைகள் அனைவரும் புத்தாடையில் மிளிர்ந்தனர். என் வீட்டிற்கு முதல் அழைப்பிதழ் கொடுக்க வந்த சமயத்தில் என் பெற்றோருக்கும் என் தம்பி தங்கைகளுக்கும் புத்தாடை வாங்கிக் கொள்ளுமாறு பணம் கொடுத்து விட்டு என் மனைவிக்கு ரவிக்கைத் துணியும் கொடுத்துச் சென்றதனால் தான் அச்சமயம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தனர் என்பது எனக்கு அப்போது புரிந்து விட்டது.
யாக சாலைக்கு முன்னர் எந்த கடவுள் படங்களும் இல்லை. அதற்குப் பதிலாக ஐந்து திரிகள் ஏற்றப்பட்ட வெள்ளியிலானான பஞ்சமுக விளக்கும் அந்த விளக்கினைச் சுற்றி நான்கு நான்கு வரிசையில் மொத்தம் 16 விளக்குகளும் கிழக்கு திசை நோக்கி ஏற்றப்பட்டு இருந்தன. இது வரையில் இவ்வாறான கணபதி ஹோமத்தை எங்கும் நானோ எனது குடும்பத்தாரோ அல்லது வருகை தந்தவர்களோ கண்டதில்லை.
நானும் என் மனைவியும் அருகருகே அமர தொழிற்சாலையின் உரிமையாளர் தம்பதிகள் அருகருகே அமர்ந்து கொண்டு பூஜையில் கலந்து கொண்டோம். ஹோமம் செய்ய வந்தவர் முன்னதாக பூஜை செய்வதற்கான விளக்கம் ஒன்றினை அனைவரும் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார். நடைபெறப் போகும் ஹோமத்தின் பெயர் தன ஆகர்ஷண ஹோமம். இது பொதுவாகச் செய்யப்படுகின்ற அனைத்து ஹோமங்களையும் உள்ளடக்கியது எனச் சொன்னார்
நடுவில் ஐந்து திரிகள் வைக்கப்பட்டு ஏற்றப்பட்ட விளக்கு மகாலெட்சுமியைக் குறிக்கும் எனவும் ஐந்து திரிகளும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் எனவும் சொன்னார்.
நடுவில் ஏற்றப்பட்டுள்ள தீபத்தைச் சுற்றி கிழக்குப் பார்த்து ஏற்றப்பட்டுள் நான்கு தீபங்கள் 1.கிருதயுகம் 2.திரேதாயுகம் 3.துவாபரயுகம் 4.கலியுகம் ஆகிய நான்கு யுகங்களையும் குறிக்கும் எனவும் 1.ரிக் வேதம் 2.யசூர் வேதம் 3.சாம வேதம் 4.அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களையும் 1.வடக்கு 2.கிழக்கு 3.மேற்கு 4.தெற்கு என்னும் நான்கு திசைகளையும் குறிக்கும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் நான்கு திசைகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து குவியும் எனச் சொன்னார்.
நான்கு தீபங்களைச் சுற்றி ஏற்றப்பட்டுள்ள பன்னிரெண்டு தீபங்கள் 12 தமிழ் மாதங்களையும் 12 ராசிகளையும் குறிக்கும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் வருடத்தில் அனைத்து காலத்திலும் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நன்றாக நடக்கும் எனச் சொன்னார்.
அதுவும் தவிர நடுவில் ஏற்றப்பட்டுள்ள பஞ்சமுக தீபத்தை சுற்றி ஏற்றப்பட்டுள்ள மொத்தம் பதினாறு தீபங்களும் 1.கல்வி 2.புகழ் 3.வலிமை 4.வெற்றி 5.நன்மக்கள் 6.பொன் 7.நெல் 8.நல்விதி 9.நுகர்ச்சி 10.அறிவு 11.அழகு 12.பெருமை 13.இளமை 14.துணிவு 15.நோயின்மை 16.வாழ்நாள் ஆகிய பதினாறு செல்வங்களையும் குறிக்கும் எனவும் தெரிவித்தார்.
அதே போல நடுவில் எற்றப்பட்டுள்ள தீபத்தை சுற்றி ஏற்றப்பட்டுள்ள மொத்தம் பதினாறு தீபங்களுகம் 1.கலையாத கல்வி 2.கபடமற்ற நட்பு 3.குறையாத வயது 4.குன்றாத வளமை 5.போகாத இளமை 6.பரவசமான பக்தி 7.பிணியற்ற உடல் 8.சலியாத மனம் 9.அன்பான துணை 10.தவறாத சந்தானம் 11.தாழாத கீர்த்தி 12.மாறாத வார்த்தை 13.தடையற்ற கொடை 14.தொலையாத நிதி 15.கோணாத செயல் 16.துன்பமில்லா வாழ்வு என்னும் பதினாறு பேறுகளையும் குறிக்கும் எனவும் தெரிவித்தார். இவை தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் எனவும் சொன்னார்.
இது போன்ற காரணங்களால் தான் கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நான்கு கால் மண்டபங்களில் கொலு வீற்றிருக்க எழுந்தருள்வதாகத் தெரிவித்தார். அதே போல பதினாறு கால்கள் கொண்ட மண்டபங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சமயம் லட்சக் கணக்கானோர் தரிசனம் செய்து பதினாறு செல்வங்களையும் பதினாறு பேறுகளையும் பெற்று வருகின்றார்கள் எனச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருந்ததனை வருகை தந்திருந்த அனைவரும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் பலர் அருகில் வந்து அந்த விளக்குகளை புகைப்படமும் வீடியோவும் எடுத்துச் சென்றனர். இவ்வாறாக ஆழ்ந்த பக்தியுடன் வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடுவதனால் தான் இவ்வளவு உயரத்தை எட்டிப்பிடிக்க முடிகின்றது என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
பூஜைகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் நான் பணியாற்றும் நிறுவனத்தில் உரிமையாளரான அந்தப் பெண்மணி ஒலிபெருக்கியில் பேசினார்.
அந்த சமயம் இன்று வரை அவரது நேர்முக உதவியாளராகவும் அந்தரங்கச் செயலாளராக இருந்தவருமான என்னை புதிதாக துவக்கப் பட்டிருக்கும் தொழிற்சாலைக்கு F.M. (Factory Manager / Finance Manager) ஆக அதாவது தொழிற்சாலை மேலாளர் மற்றும் நிதி மேலாளர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் அளிக்க இருப்பதாகவும் அதனை திறம்பட மேற்கொள்ள அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
துவக்க விழாவிற்கான பூஜைகள் அனைத்தும் முடிந்தவுடன் என்னிடத்தில் என் குடும்பத்தார் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணையில் எனக்கு வாடகையில்லாமல் வீடு கொடுக்கப்பட்டால் சொந்த வீடு வாங்கும் எண்ணம் இருக்காது என்பதற்காக வாடகை வீட்டில் வசித்து பின்னர் சொந்தமாக வீடு வாங்கி சொந்த வீட்டுக்கு குடியேற வேண்டுமெனவும் மாதச் சம்மளத்திற்குப் பதிலாக தொழிற்சாலையில் எவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றதோ அதன் அடக்க விலை மதிப்பில் ஒரு சதவிகிதம் மட்டும் சம்பளத்திற்கு பதில் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்போது தான் மேலும் மேலும் ஊக்கமாக பணியாற்றும் எண்ணம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் எவ்வளவுக்கெவ்வளவு உற்பத்தியை பெருக்குகின்றேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதனை எண்ணும் போது இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் வந்து விட்டது.
நானும் என் குடும்பத்தாரும் இது வரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த காரணத்தால் இரண்டு குத்து விளக்குகளை என்னிடத்தில் கொடுத்து இரண்டு குத்து விளக்குகளையும் ஏற்றி வழிபடும் சமயம் விரைவில் வீடு வாங்கும் யோகம் வரும் எனச் சொல்லி ஆசீர்வதித்தார்கள்.
நானும் என் மனைவியும் என் பெற்றோரும் சேர்ந்து அந்த ஒரு ஜோடி குத்து விளக்குகளை பெற்றுக் கொண்டு அந்த இரண்டு விளக்குகளையும் காலையிலும் மாலையிலும் தினந்தோரும் ஏற்ற ஆரம்பித்தோம். ராசி மிக்க அந்தப் பெண்மணியிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட குத்து விளக்கினை ஏற்ற ஆரம்பித்த சமயத்தில் எனது மாதச் சம்பளம் நான் இலக்கங்களைத் தாண்டியிருந்தது.
இரண்டு குத்து விளக்குகளையும் ஏற்ற ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் வாடகை வீட்டிலிருந்து ஒத்தி வீட்டுக்கு குடி பெயர்ந்து அதன் பின்னர் சொந்த வீட்டிற்கு கிரஹப் பிரவேசம் மேற்கொள்ளும் சமயம் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம்.
படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் கிடைத்த சொற்ப வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் கரண்ட் பில் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவை செலுத்தியது போக மீதமுள்ள தொகையினை வைத்துக் கொண்டு எனது பெற்றோரை பராமரித்து என்னுடைய தம்பி தங்கைகளை படிக்க வைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயம் இன்னும் நல்ல உத்தியோகத்திற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் சற்றுமே எதிர்பாராமல் என்னை புதிதாக உருவாகிய தொழிற்சாலைக்கு மேலாளராகவும் நிதி மேலாளராகவும் நியமித்ததோடு சம்பளத்திற்குப் பதிலாக உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையில் ஒரு சதவிகிதம் எனக்கு வருமானம் எனவும் நிர்ணயம் செய்து இரண்டு வெள்ளி குத்து விளக்குகளைப் பரிசளித்து விரைவில் அவற்றினை ஏற்றி வழிபாடு செய்து சொந்த வீடு வாங்க வேண்டும் என ஆசீர்வதித்த படி நடைபெற்று எனது மாத வருமானம் ஆறு இலக்கங்களைத் தொட்ட நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது தீபங்களை ஏற்றி வழி பட்டதனால் தான் நானும் என் குடும்பத்தாரும் வாழ்க்கையில் உயர் நிலைக்கு வர முடிகின்றது என்பதனை அறிந்து கொண்ட எனக்கு மிக்க மிக்க சந்தோஷம். எனவே தான் தீபாவளியை தீப ஒளித் திருநாள் என நாம் மிக மிக சந்தோஷமாக எதிர்பார்த்துக் காத்திருந்து கொண்டாடுகின்றோம்.