ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-1)
என்னை விட ஐந்து வயது அதிகமுடைய என்னுடைய அண்ணனுக்கு அந்தஸ்து வீடு வாசல் விளை நிலங்கள் என அனைத்திலும் சமமாகவும் ஜாதகப்படி 12 பொருத்தங்களில் 9 பொருத்தங்கள் பொருந்தியும் உள்ள ஒரு வரனைத் தேர்வு செய்து பெண் பார்ப்பதற்கு பெண் வீட்டார் வீட்டிற்கு எனது பெற்றோர் சென்று வந்தனர். என்னுடைய பெற்றோருக்கு பெண் அழகாகவும் அடக்கமாகவும் இருந்தமையால் மிகவும் பிடித்து விட்டது.
பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையை அழைத்துச் சென்று பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக் கொள்வதன் பொருட்டு பெண் பார்க்கச் சென்று வந்தோம். எனது அண்ணனுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. எனது அண்ணனுக்கு வரப்போகும் பெண்ணை அதாவது எனக்கு வரப்போகின்ற அண்ணியை எனக்குக் கூட ரொம்ப பிடித்து விட்டது.
அண்ணனுக்கு பெண் பிடித்த விவரம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரியப் படுத்தி விட்டனர். மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது என்ற தகவலும் வரப்பெற்று விட்டது. வரப்போகும் மணப்பெண்ணுடன் என்னுடைய அண்ணன் கைபேசியில் மிக மிக நீண்ட நேரம் பேசிக் கொண்டே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்து விட்டான். அதே சமயம் அந்தப் பெண்ணும் என்னுடைய அண்ணன் தான் தனது வருங்கால கணவர் என முடிவெடுத்து விட்டாள். அண்ணன் திருமணத்தை சீக்கிரம் நடத்தி வையுங்கள் என அவசரப்படுத்த ஆரம்பித்து விட்டான்.
மணப்பெண் வீட்டாரிடமிருந்து திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் பற்றியோ அல்லது திருமண தேதி பற்றியோ எந்த விதமான தகவலும் வரப்பெறவில்லை. எனது பெற்றோருக்கு மகனுக்குத் திருமணம் செய்து வைத்து மணப்பெண்ணை வீட்டிற்கு விரைவில் அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம். எனவே என் பெற்றோர் மணமகள் வீட்டிற்குச் சென்று விவரம் கேட்டு வருவது என முடிவு செய்தனர்.
ஒரு நல்ல நாள் பார்த்து வரப்போகின்ற மருமகளின் வீட்டிற்கு என் தாயும் தந்தையும் சென்றனர். என்னையும் கூட வருமாறு அழைத்தமைக்கு நான் மறுப்புச் சொல்லியும் கூட கட்டாயப்படுத்தி என்னையும் அழைத்துச் சென்றார்கள். நானும் வேறு வழியின்றி கூடச் சென்று விட்டேன்.
அச்சமயத்தில் மணமகள் வீட்டார் தம்முடைய பெரிய மகனுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பதாகவும் மகனுக்கு வரன் அமைந்த பின்னர் தான் மகளின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி குறிப்பது எனவும் சொன்னார்கள். மணப்பெண்ணின் அண்ணன் வெளி நாட்டிலிருந்து பெண் பார்க்க விடுப்பில் வந்திருந்தார்.
அவரது பெற்றோர் மகனுக்கு நான்கைந்து வரன்கள் பார்த்து வைத்திருப்பதாகவும் அந்த நான்கைந்து வரன்களில் மகனுக்கு எந்த வரனைப் பிடித்திருக்கின்றதோ அந்த வரனை நிச்சயதார்த்தம் செய்து முடித்த பின்னர் இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு நாள் குறிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இதனைக் கேட்ட எனது தந்தைக்கும் தாய்க்கும் மிக்க மிக்க சந்தோஷம். காரணம் அண்ணனுக்கு விரைவில் திருமணம் முடிந்து விடப் போகின்றது. அதற்குப் பின்னர் எனது பெற்றோரின் விருப்பப்படி என்னை மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ சொந்தம் விட்டுப் போகாமல் திருமணம் பேசி முடித்து வைப்பதாக இருந்தனர்.
அண்ணனுக்குப் பெண் பார்த்து வந்த இடத்தில் அவர்கள் சொன்னவாறு நான்கைந்து வரன்களையும் தமது மகனுக்கு காண்பித்து இருக்கின்றார்கள். ஆனால் மணமகனுக்குப் பிடித்த ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை. மணமகனைப் பிடித்த இன்னொரு பெண்ணுக்கு வெளி நாடு செல்வதில் ஆர்வமில்லை. மற்ற பெண்களுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பது போன்ற கருத்து வேறுபாடுகள் அமைந்து விட்டன. எனவே என் பெற்றோர் எதிர்பார்த்த குறுகிய காலத்தில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் எனக்கு வரப்போகின்ற அண்ணியின் அண்ணன் நான் எனது பெற்றோருடன் அவர்களது இல்லம் சென்றிருந்த போது பார்த்த சமயம் என்னை மிகவும் பிடித்து இருப்பதாகவும் அந்த வீட்டார் என்னை அவருடன் மணமுடித்து வைக்கும் படியும் கோரியுள்ளனர்.
எனது பெற்றோர் அவர்களிடத்தில் என்னை என்னுடைய மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் முதலாவதாக மகன் கல்யாணத்தை முடித்து விட்டு மகள் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் எனது அண்ணனுக்குப் பெண் பார்த்த இடத்தில் அவர்களது மகனுக்கு என்னைத் தான் பிடித்துள்ளது எனவும் பெண் கொடுத்துப் பெண் எடுப்பது என்றால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் சொல்லி விட்டார்கள். எனது பெற்றோருக்கு இக்கட்டான நிலை.
என்னைப் பொருத்த வரையில் சொந்தத்திலோ அல்லது அந்நியத்திலோ உள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கடைசி காலம் வரையில் உற்றார் உறவினர் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உள்ளுரில் வாழ்வதில் தான் ஆசை. எனது பெற்றோர் என்னருகில் தான் இருக்க வேண்டும் என்பது பேராசை.
வெளிநாடு சென்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது உற்றார் உறவினர் நண்பர்கள் இல்லங்களில் நடைபெறுகின்ற விசேஷங்களுக்கோ அல்லது நெருங்கிய சொந்தங்களின் மறைவிற்கோ தாய் நாட்டிற்கு அவசர அவசரமாக வந்து அவசர அவசரமாக திரும்பிச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய கருத்தினை எனது பெற்றோரிடத்தில் ஆணித் தரமாகச் சொல்லி விட்டேன்.
இந்நிலையில் என்னுடைய பெற்றோர் என்னுடைய அத்தை மற்றும் மாமன் வீட்டாரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றனர். அச்சமயத்தில் என்னுடைய அத்தை வீட்டிலும் தாய்மாமன் வீட்டிலும் பருவமடைந்த பெண்கள் இருக்கும் நிலையில் வேறு இடத்தில் பெண் பார்த்துச் சம்மந்தம் செய்யச் சென்றதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் தவிர என்னை தாய்மாமன் மகனுக்கோ அல்லது அத்தை மகனுக்கோ என்னுடைய விருப்பத்தினைக் கேட்டு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். என் பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்ற எனது பெற்றோர் ஏமாற்றத்துடன் இல்லம் திரும்பினர்.
இல்லம் திரும்பிய எனது பெற்றோர் எனது அண்ணனிடத்தில் நடந்த அனைத்தையும் சொன்னார்கள். அந்த சமயத்தில் என்னுடைய அண்ணன் என்னிடத்தில் தாம் பார்த்துள்ள பெண்ணின் அண்ணனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். கடைசியில் அண்ணன் திருமணத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்னும் முடிவினை நான் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.
நான் எனது அண்ணனிடத்தில் வெளி நாடு செல்வதில் விருப்பமில்லை என்பதனையும் உள்ளுரிலேயே யாரையேனும் திருமணம் செய்து கொண்டு உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் என எல்லோரையும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசிக் கொண்டே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தேன். எனது அண்ணனுக்கு முதலாவதாகப் பார்த்துள்ள பெண்ணை விட்டுக் கொடுப்பதில் மனமில்லாமல் இருப்பதனை அவரது பேச்சின் மூலம் அறிந்து கொண்ட பின்னர் என் பெற்றோரிடத்தில் தெரிவித்தேன்.
எனது பெற்றோர் இது சம்மந்தமாக நேரில் மணமகள் வீட்டிற்குச் சென்று பேசுவதற்கு எனது தாய்மாமன் குடும்பத்தாரையும் அத்தை குடும்பத்தாரையும் அழைத்துச் செல்வதன் பொருட்டு அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்ற சமயம் எங்கள் இருவர் வீட்டிலும் முறைப் பையன் மற்றும் முறைப்பெண் இருக்கும் சமயத்தில் அந்நியத்தில் தான் சம்மந்தம் செய்வோம் என முடிவு செய்தமைக்கு மறுப்புத் தெரிவித்து இருவரும் சமாதானம் பேசுவதற்கு வர மறுத்து விட்டார்கள்.
அத்துடன் நில்லாமல் திருமணத்திற்கு முன்னரே பெண் கொடுத்துப் பெண் எடுப்பதில் அவர்கள் இவ்வளவு பிடிவாதத்துடன் இருந்தால் திருமணத்திற்குப் பின்னால் என்னென்ன செய்வார்களோ என பயமுறுத்தினர். அதே சமயம் எதிர் காலத்தில் சம்மந்தி வீட்டில் ஏதேனும் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அதற்கு தாய்மாமன் மற்றும் அத்தை வீட்டார் சாட்சிகள் போல நடந்து கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தவறினை தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலை வந்து விடும் எனச் சொல்லி சமரசம் பேச வர மறுத்து விட்டனர்.
அண்ணன் விருப்பப்படி திருமணம் (தீர்வு 1)
இந்த விவரத்தை என் அண்ணனிடத்தில் தெரிவித்த சமயம் மணந்தால் அந்தப் பெண்ணைத் தான் மணப்பேன் எனவும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் பிடிவாதமாக இருந்த காரணத்தால் பெற்றோர் அவனது விருப்பத்திற்கு இணங்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் எனது பெற்றோர் மணமகள் வீட்டாருக்குச் சென்று மணமகன் ஜாதகத்தைக் கேட்டனர். அச்சமயத்தில் என் பெற்றோரிடத்தில் முறைப் பையன்களைத் திருமணம் செய்து வைக்க நினைத்தால் ஜாதகப் பொறுத்தம் பார்த்துத் தான் திருமண ஏற்பாடுகள் செய்வீர்களா எனக் கேட்டு விட்டு மனப் பொருத்தம் பார்த்தால் மட்டும் போதும் எனவும் சொல்லி ஜாதகத்தைக் கொடுக்க மறுத்து விட்டனர்.
என்னுடைய அண்ணனின் பிடிவாதத்தினால் எனது பெற்றோர் அண்ணனுக்கு பிடித்துள்ள அந்தப் பெண்ணையே வரனாகத் தேர்ந்தெடுப்பது எனவும் எனக்கு அந்தப் பெண்ணின் அண்ணனை பேசி முடிப்பதெனவும் தீர்மானித்தனர். எனக்கு திருமணத்திற்குப் பின் வெளி நாடு செல்வதில் விருப்பமில்லாத போதிலும் சம்மந்தி வீட்டாரின் நிர்ப்பந்தத்தினால் நான் எனது விருப்பத்திற்கு எதிராக எனது வருங்கால அண்ணியின் அண்ணனை அதாவது எனது அண்ணனின் வருங்கால மைத்துனனை திருமணம் செய்து கொள்ள நேரிட்டது.
சொந்தத்தில் முறைப் பெண் மற்றும் முறைப் பையன் இருந்த போதிலும் சொந்தத்தில் சம்மந்தம் செய்யாமல் அந்நியத்தில் சம்மந்தம் செய்த காரணத்தால் என்னுடைய தாயாரின் உறவினர்கள் மற்றும் என்னுடைய தந்தையின் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
எனக்கும் என்னுடைய அண்ணனுக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சமயம் என்னுடைய உறவினர்களில் முக்கால் வாசிப்பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். ஆனால் அவர்கள் வீட்டில் அனைத்து உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் என திருமண மண்டபம் காட்சியளித்தது. எங்கள் சார்பில் குறைவான உறவினர்களும் அக்கம் பக்கத்தார்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டமையால் பாதி திருமண மண்டபம் காலியாக இருந்தது. எனக்கோ அல்லது என்னுடைய அண்ணனுக்கோ தாய்மாமன் வீட்டார் சீர்வரிசை அத்தை வீட்டார் சீர்வரிசை பாட்டனார் சீர்வரிசை பெரியப்பா சீர்வரிசை என எதுவும் இல்லாத காரணத்தால் நண்பர்கள் கொடுத்த அன்பளிப்புகள் மட்டுமே காட்சியளித்தது.
திருமணம் முடிந்த பின்னர் திருமணம் நடைபெற்றது சம்மந்தமாக விசாரிக்க யாரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தரவில்லை. ஆனால் அவர்கள் வீட்டில் தினந்தோறும் யார் யாரோ வந்து சென்று கொண்டிருந்தார்கள். எனக்கு யாரென்று தெரிய வருவதற்குள் எனது கணவரது விடுமுறை முடிந்து நான் வெளி நாடு புறப்பட வேண்டியதாயிற்று.
இடையில் ஒரு நாள் என்னுடைய பெற்றோரும் என் கணவரது பெற்றோரும் மாத்திரம் கலந்து கொண்டு எனக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தனர். காரணம் பதிவுத் திருமணம் ஆன சான்றிதழை வைத்துத் தான் எனக்கு விசா எடுத்து நான் வெளி நாடு செல்ல முடியும். என்னுடைய உறவினர்கள் யாரிடத்திலும் சென்று வெளி நாடு சென்று வருகின்றேன் என விடைபெற்றுக் கொள்ள முடியாதபடி எங்கள் உறவினர்கள் எங்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
புதுமணத் தம்பதிகளான என்னையும் என் கணவரையும் வெளி நாட்டுக்கு வழியனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு என்னுடைய அண்ணனும் அண்ணியும் அண்ணியின் குடும்பத்தாரும் என்னுடைய பெற்றோரும் மட்டுமே வந்திருந்தனர். பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற நடைமுறைகளின் காரணமாக என்னுடைய பெற்றோர் என்னுடன் வர முடியவில்லை. ஆனால் என்னுடைய மாமனார் மாமியாருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா இருந்தும் கூட புதிதாக வந்துள்ள மருமகனுக்கு அதாவது என்னுடைய அண்ணனுக்கு திருமணம் முடிந்த பின்னர் வைக்க வேண்டிய விருந்துகளுக்காக என்னுடன் வெளிநாடு வரவில்லை.
திருமணத்திற்குப் பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் எனக்கு என் கணவர் துணை. என் கணவருக்கு நான் துணை என்ற குறுகிய வட்டத்திற்குள் எங்களின் உறவு அமைந்து விட்டது. வெளி நாட்டில் அவரது நண்பர்கள் ஒன்று சேரும் Get together விருந்துகளில் மாத்திரம் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது.
தாய் நாடும் இல்லை. தாயின் மடியும் இல்லை. தாயன்பும் இல்லை. தாய்க்குப் பதிலாக தாயைப் போல அரவணைக்கும் தாயுள்ளம் கொண்ட உறவுகளும் இல்லை. ஆனால் நான் எப்போது தாயாகப் போகின்றேன் என்னும் கேள்வி மட்டும் அனைவரிடமிருந்தும் எனக்கு வந்தது.
அண்ணன் தங்கை இருவருக்கிடையே திருமணத்திற்கு முன்பு இருந்த பாசப் பிணைப்பின் காரணமாக வாழ்க்கையின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் திருமணம் என்று ஒன்று வரும்போது இருவருக்கும் இடையே இருக்கும் நிஜ சுயநலமிக்க பாசத்தையும் எண்ணிப்பார்க்கும் போது எந்த வகையான பாசம் சரி எந்த வகையான பாசம் தவறு என எண்ணிப் பார்த்து சரியான முடிவினை எடுக்கத் தயங்கக் கூடாது என்பது நன்கு தெளிவாகின்றது.