ஜீவனாம்சம்
அவரும் நானும் காதலித்து பெற்றோர்களின் முழு ஒப்புதலுடன் உற்றார் உறவினர் சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் புடைசூழ தடபுடலாகத் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இருவரின் ஆரம்ப கால திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல அவர் இரவில் மதுபானம் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது மற்றும் தாமதமாக வருவது போன்ற செயல்கள் ஆரம்பித்தன. நான் விசாரித்துப் பார்த்ததில் அவருக்கு சிகரட் குடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளதாகவும் திருமணத்திற்கு முன்னர் என்னைக் காண வரும் சமயத்தில் மாத்திரம் மிக மிக யோக்கியமானவராகக் காட்டிக் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிய வந்தது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ இவ்வாறான பழக்கங்கள் அறவே பிடிக்காது.
என் பெற்றோரிடத்தில் தெரிவித்து அவருக்கு அறிவுறைகள் சொல்லுமாறு கேட்டேன். அதற்கு காதல் திருமணம் செய்து கொண்ட நான் காதலிக்கும் போதே அவ்வாறான கெட்ட பழக்கங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என நன்கு அறிந்திருக்க வேண்டுமெனவும் அந்த மாப்பிள்ளையைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என பிடிவாதம் செய்த காரணத்தால் பெற்றோர் எதுவும் விசாரிக்காமல் விசாரித்து தெரிய வந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை என்பதாலும் வேறு வழியின்றி திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் கை விரித்து விட்டார்கள்.
இரவு நேரங்களில் அவர் மதுபானம் அருந்தி விட்டு வருவதன் காரணமாக அந்த வாடை எனக்குப் பிடிக்காத காரணத்தால் இல்லறத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று. வேறு வழியில்லை. அவர் ஒரு அரசு அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருந்து வருகின்றார். மாதா மாதம் கைநிறையச் சம்பளம். ஓய்வு பெற்று விட்டால் கூட கடைசி காலம் வரையில் பென்ஷன் கிடைக்கும் படியான பதவி. சில வருடங்களில் நாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது.
நான் எனது தாய் வீட்டிற்கு வந்து தங்கி விட்டேன். குடும்ப செலவிற்காக நான் திருமணத்திற்கு முன்னர் பார்த்த தனியார் நிறுவனத்தில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தேன். என் தாய் தந்தையைரை கண்கலங்காமல் பார்த்துக் கொண்டேன். வயது முதிர்வின் காரணமாக பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்திவிட்டார்கள். கூடப் பிறந்த அண்ணன்கள் தம்பிகள் அக்காள் தங்கை என யாரும் இல்லை. தூரத்து உறவினர்கள் தான் இருக்கின்றார்கள். நான் தனி மரமானேன்.
அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. எங்கு பணியாற்றுகின்றார் எப்படி இருக்கின்றார் என்பதே தெரியவில்லை. உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாத போதும் கூட நான் சுமங்கலியாக வாழ்க்கை நடத்தி வந்தேன். எனக்கு வருகின்ற வருமானத்தில் நான் என் வாழ்க்கையை நடத்தினேன். பல வருடங்கள் கழித்து வெளியூரில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்ற எனது தூரத்து உறவினர்கள் அவரைப் பார்த்ததாகவும் அவருக்குத் திருமணமாகி விட்டது எனவும் சொன்னார்கள். அவருக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருப்பதாகவும் சொன்னார்கள். நான் எதனையும் காதில் வாங்கவில்லை. எனக்கு வருகின்ற வருமானத்தில் நான் எஞ்சியுள்ள காலத்தைக் கழித்து விட்டு இறைவனடி சேர்ந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஆனால் எனது உறவினர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவதாக ஒரு அரசு அதிகாரி திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து எனது வாழ்க்கைச் செலவிற்கு ஜீவனாம்சம் பெற வேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். உறவினர்களின் தொல்லை தாங்க முடியாத காரணத்தால் முதல் மனைவி நான் உயிரோடு இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லாது என நீதி வழங்கக் கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.
விவாகரத்து கோரினால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் என்ன எனச் சொல்ல வேண்டும். கணவன் மனைவி இருவரும் கட்டாயம் ஓராண்டு காலம் பிரிந்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கின்றது. ஆனால் எனது வழக்கில் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது கணவர் செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது அது தவறு. எனவே என் கணவரை என்னுடன் வாழ்வதற்கு சேர்த்து வைக்க வேண்டும் என்பது.
இந்த காரணத்தால் நீதி மன்றத்தில் வழக்கு காலதாமதம் வாய்தாக்கள் எதுவும் இல்லாமல் துரிதமாக நடைபெற்று வந்தது.
அவர் கொடுத்த பதில் மனுவில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தாலும் அவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று முதல் மனைவி கருதி ஒதுக்கி வைத்து விட்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் அதற்கு அவர் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்றும் வாதிட்டார். கூடுதலாக அவர் இரண்டாவது திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை எனவும் இயற்கைப் பேரழிவின் காரணமாக உற்றார் உறவினர் சொந்தங்கள் இழந்த ஒரு அபலைப் பெண் அனாதையாகி விடக் கூடாது என்னும் காரணத்தால் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தின் படி (Living Together) அடைக்கலம் கொடுத்து ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்து தற்போது இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புகள் தமக்கு இருப்பதாகவும் முதல் மனைவியுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது எனவும் பதில் மனு தாக்கல் செய்தார்.
இருவரது வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் முதல் மனைவி உயிரோடு இருக்கும் சமயம் சட்டப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அதன் மூலம் குழந்தைகள் பெற்றெடுப்பதும் சரியல்ல எனச் சொல்லி அவரை என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுரை சொல்ல கலந்தாலோசனைக்கு அழைத்தார்கள்.
கலந்தாலோசனையின் போது நீதிபதி அவர்கள் ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதோ அல்லது வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டோம் எனச் சொல்லி முதல் மனைவியின் கோரிக்கையை நிராகரிப்பதோ சட்டப்படி குற்றம் எனவும் அதற்கு தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அதன் காரணமாக அரசாங்க உத்தியோகம் பறிபோகலாம் என்பதன் காரணமாக அவர் முதல் மனைவியான என்னுடன் சேர்ந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது எனத் தெரிவித்து விட்டு ஒரு குறிப்பிட்ட தேதிக்கு வாய்தா போட்டு விட்டனர்.
அதற்குப் பின்னர் முதல் மனைவியான என்னுடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கு முதல் மனைவிக்கு விருப்பம் இல்லையெனில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என ஜீவனாம்சத் தொகை இவ்வளவு என கணக்கிட்டு கட்டளை பிறப்பித்தது.. இடைப்பட்ட காலத்தில் நீதி மன்றத்தில் ஆணை பிறப்பித்ததும் தமக்கு வேலை பறி போய் விடுமோ என்னும் அச்சம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு வந்து இரண்டு மூன்று தின்ங்களில் கணவர் இயற்கை எய்தி விட்டார்.
அவரது இரண்டாம் மனைவி நேரடியாக என்னுடைய இல்லத்திற்கு வந்து திருமண பந்தத்தில் இணையாமலேயே சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த அவரை மனது புண்படுத்தி வேலை போய் விடுமோ என்னும் அச்சத்தை உருவாக்கி அவரை சாகடித்து விட்டாய். முறைப்படி தாலி கட்டாமல் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த போதிலும் அவர் இல்லாத இந்தப் பூவுலகில் விதவையாக வாழ எனக்கு விருப்பம் இல்லை எனச் சொல்லி விட்டு என்னுடைய பிடிவாத குணத்தால் தான் அந்தக் குழந்தைகள் அனாதைகளாகி விடப் போகின்றார்கள் எனச் சொல்லிச் சென்ற இரண்டு நாட்களில் அந்தப் பெண்ணும் வருங்காலத்தில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்னும் அதிர்ச்சியின் காரணமாக உயிர் நீத்தாள்.
அரசாங்க அலுவலகத்தில பணியாற்றுவோர் அவர் மனைவியுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த சமயத்தில் கொடுத்த வாரிசு நியமன விருப்ப மனுவின் அடிப்படையில் எனக்கு முழுப் பென்சனையும் வழங்கினார்கள். பணியில் இருக்கும் போதே இயற்கை எய்திய காரணத்தினால் கருணை அடிப்படையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசுப் பணி வழங்கும் நடைமுறையின்படி எனக்கு அரசாங்க உத்தியோகம் வழங்கப் பட்டமையால் நான் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி அரசுப் பணியில் சேர்ந்து விட்டேன்.
அதே சமயம் அவருக்குப் பிறந்த குழந்தைகள் இருவரும் அனாதைகளாகி விட்ட காரணத்தால் அந்த இரண்டு குழந்தைகளையும் என் பராமரிப்பில் வளர்த்து வருகின்றேன். எனக்கு வருகின்ற என் கணவரது பென்சன் தொகையினையும் என்னுடைய சம்பளத்தையும் கொண்டு நான் குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.
என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவர் என்னுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் வேறு யாரோ ஒருத்தியுடன் இருந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த போதிலும் நான் சுமங்கலி என்னும் பெயரில் கழுத்திலே தாலி நெற்றியிலே பொட்டு காலிலே மெட்டி தலையில் மல்லிகைப்பூ ஆகியவற்றுடன் சுப காரியங்கள் நடைபெறுகின்ற எல்லா இடங்களுக்கும் மிக மிகச் சந்தோஷமாக தனிமையில் சென்று வந்தேன். ஆமாம். அவர் உயிரோடு இருக்கும் போது நான் வாழாவெட்டியாக இருந்த போதிலும் சுமங்கலி என்னும் அந்தஸ்து கிடைத்தது.
என்னுடைய பிடிவாதத்தாலும் உற்றார் உறவினர் சொந்தங்களின் சொல் பேச்சினைக் கேட்டு வழக்குத் தொடுத்த காரணத்தாலும் நான் தற்போது பூவிழந்து பொட்டிழந்து தாலியில்லாமல் மெட்டியில்லாமல் விதவை என எல்லோராரும் கருதப்பட்டு சுப காரியங்கள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைக்கப் படுகின்றேன். எனவே என்னால் எந்த இடத்திற்கும் சந்தோஷமாக முன்பு போல சென்று வர முடியவில்லை. அதுவும் தவிர அவருக்குப் பிறந்துள்ள இரண்டு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பும் எனக்கு வந்து விட்டது.
தாலி கட்டிய கணவரைப் பற்றிக் கவலைப் படாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று வாழாவெட்டியாக இருந்த சமயத்தில் இருந்த மன நிம்மதியினையும் சந்தோஷத்தினையும் உற்றார் உறவினர் சுற்றத்தார் சொல் பேச்சினைக் கேட்டு என் பிடிவாத குணத்தின் காரணமாக தாலி கட்டிய கணவர் மீது வழக்குத் தொடுத்து அவர் மனதினைப் புண்படுத்தி அவரையும் இழந்து அவர் மறைந்த காரணத்தால் அவருடன் இல்லற வாழ்க்கையினை சந்தோஷமாக நடத்தி வந்த அவருக்கு விருப்பமான அவரது இரண்டாவது மனைவியையும் நோகடித்து அவரது இரண்டாவது மனைவி இறப்பின் காரணமாக அவருக்குப் பிறந்துள்ள வாரிசுகளை அனாதைகளாக்கி அவரிடமிருந்து பெற நினைத்த ஜீவனாம்சத்திற்குப் பதிலாக அவருடைய பென்சன் மற்றும் கருணை அடிப்படையிலான வேலை ஆகியவற்றுடன் அனாதைகளாகப் போய் விட்ட அவரது இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் உள்ள தற்போதைய நிஜ வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கும் போது எனக்கே என் மேல் வெறுப்பு உண்டாகின்றது.
என் கருவில் உருவாகாத அவரது வாரிசுகள் வளர்ந்து தமது சொந்தக் காலில் நிற்கும் வரையாவது என்னை உயிருடன் வாழ வைக்க வேண்டும் என இறைவனிடம் கோரிக்கை வைத்து வழிபடுவது என் வழக்கமாகி விட்டது. இறைவா அவருக்குப் பிறந்த குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும் வரையில் எனக்கு நல்வழி காட்டு.