பள்ளித் தோழன்
பள்ளியில் படிக்கும் சமயம் வகுப்பு ஆசிரியர் கடைசி பெஞ்ச்சில் அமர்ந்துள்ள மாணவர்களைப் பார்த்து மாப்பிள்ளைகளா என்ன புரிஞ்சதா எனக் கேட்பார். நன்றாகப் படிக்கும் முதல் வரிசையில் அமர்ந்து இருக்கும் எங்களிடம் எதுவும் கேட்க மாட்டார். அந்த சமயத்தில் ஆசிரியர் மாப்பிள்ளைகளா என அழைக்கும் சமயம் அவர்களின் உணர்வுகள் மற்றும் முக பாவனைகள் எப்படி இருக்கின்றன என அறிந்து கொள்ள அனைவரும் திரும்பிப் பார்ப்போம்.
கடைசி பெஞ்சில் அமர்ந்துள்ளவர்களில் ஒரு மாணவர் மிகவும் அழகாகவும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். மற்ற மாணவர்கள் பதில் சொல்வதற்கு முன்னர் அந்த மாணவர் சரியாகப் புரியவில்லை எனச் சொல்வார். அச்சமயம் ஆசிரியர் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களிடம் கலந்துரையாடி சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுமாறு தெரிவிப்பார். அந்த மாணவருக்கு எந்தப் பாடத்தில் எந்த இடத்தில் சந்தேகம் என்பதனை நான் விளக்கிக் கூறி புரிய வைப்பேன்.
வகுப்பில் வகுப்பாசிரியரிடம் ஒரு நாள் கூட தனக்குப் புரிந்து விட்டது என்பதனைத் தெரிவிக்க மாட்டார். இஸ்திரி போட்ட சுறுக்கம் இல்லாத சட்டை மற்றும் காலுடையுடன் அவரைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அந்த மாணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே ஆரம்ப காலத்தில் இருந்த அவர் மீதான பார்வை நட்பாக மாறி காலப் போக்கில் மிகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தி விட்டது.
வகுப்பு முடிந்தவுடன் நான் அவரிடத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கி அவருக்கு புரியாதவைகளைப் புரிய வைப்பேன். இருந்தாலும் எந்த ஒரு பாடத்திலும் மதிப்பெண் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாமல் இருக்க மாட்டார். அவர் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நான் தனிப்பட்ட முயற்சி மேற்கொள்வேன். இவ்வாறான பழக்கம் காலப் போக்கில் என்னை அவருக்கு மிக மிக நெருக்கமானவளாக மாற்றி விட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் வெளிக் காட்டிக் கொள்ளாமல் காதலிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது தான் அப்பட்டமான உண்மை.
அவர் தேர்வில் வெற்றி பெற்றால் தான் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து மேற்கொண்டு படிக்க முடியும் என்னும் சுய நலத்துடன் அவர் தேர்வில் வெற்றி பெற நான் மிகவும் முயற்சி மேற்கொள்ள துவங்கினேன். பள்ளி இறுதித் தேர்வின் முடிவுகளைத் தெரிந்து கொண்ட போது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இருவரும் பாஸ்
என்னிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்ட அந்த மாணவரும் பரிட்சையில் வெற்றி பெற்று விட்டார். ஆனால் மதிப்பெண்கள் நான் வாங்கியதைப் போல இல்லை. நான் அதிக மதிப்பெண்கள் பெற்றமையால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் அவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் கலைக் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து பட்டம் பெற்று விரைவில் வேலையிலும் சேர்ந்து கொண்டார்.
நான் மருத்துவப் படிப்பில் ஐந்தரை ஆண்டுகள் முடிப்பதற்குள் அவர் வேலையில் சேர்ந்து கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விட்டது. என்னுடைய பெற்றோரிடம் என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோர் மூலமாக முறையாகப் பெண் கேட்ட சமயம் எனது பெற்றோர் தனது மகளை விட குறைவாக படித்துள்ளவரைத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மறுத்து விட்டார்கள்.
அவரைத் திருமணம் செய்து வைக்குமாறு நான் என் பெற்றோரிடம் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டமையால் நான் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்;டேன். நான் என் எதிர் காலத்தில் என் பெயருக்குப் பின்னால் அவருடைய பெயர் இருக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். ஆனால் பின்னாளில் என் பெயருக்குப் பின்னால் M.B.B.S., D.G,O. என சேர்ந்து கொண்டது.
நான் படித்த படிப்புக்கு இணையான இன்னொரு மருத்துவரை நான் எனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து கொண்டேன். அவர் இதய அறுவை செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
குழந்தை பிறப்பதற்கு உண்டான ஜனனம் என்னும் படைக்கும் தொழிலை நான் மேற்கொண்ட சமயம் என் கணவர் இறப்பிலிருந்து காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு காக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் இருவரிடத்திலும் ஓய்வு என்பது அறவே கிடையாது. கர்ப்பிணிகளுக்கு குழந்தை எப்போது பிறக்கும் எனத் தெரியாமல் யாரோ ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் நான் எனது தொழிலை மேற்கொள்ள அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு புறப்படுவேன்.
அதே போல மாரடைப்பு யாருக்கு எப்போது ஏற்படும் என்பது தெரியாமல் மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை காப்பாற்றுவதற்கு என் கணவர் மருத்துவ மனைக்கு புறப்படுவார்.
இரண்டு பேரிடத்திலும் இரண்டு கார்கள் இருந்தும் கூட இருவரும் இரண்டு ஓட்டுனர்களை நம்பித் தான் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை. இருவருக்கும் விடுமுறை என்பது இல்லாமல் ஓய்வு கிடைக்காமல் பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. ஒரு காரில் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக சென்று வந்தது கூட கிடையாது.
திருமணம் ஆன புதிதில் முதலிரவினைக் கூட குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தேனிலவு கூட செல்ல முடியவில்லை. உறவினர்கள் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களில் நாங்கள் தனித்தனியே தான் கலந்து கொள்ளக் கூடிய நிலைமை ஏற்படும்.
பல திருமணங்களில் நான் எனது பள்ளித் தோழரைப் பார்ப்பேன். எனது பள்ளித் தோழர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண மண்டபத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து உற்றார் உறவினர் மற்றும் சொந்தங்களுடனும் நண்பர்களிடத்திலும் உரையாடிக் கொண்டிருப்பார். என்னைப் பார்த்தால் கூட என்னிடத்தில் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் தன்னுடைய மனைவி முன்னிலையில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார்.
அவ்வாறான சமயங்களில் காசு பணம் அந்தஸ்து படிப்பு வசதி வாய்ப்பு என எல்லாம் இருந்து என்ன பயன்? ஓய்வு என்பது கிடைக்காமல் சந்தோஷமாக சற்று நேரம் பேச முடியவில்லையே என்னும் ஏக்கம் என்னிடத்தில் ஏற்படும். அந்த சமயத்தில் நான் எனது பள்ளித் தோழரை திருமணம் செய்து கொண்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்னும் எண்ணம் ஏற்படும்.
நான் பள்ளியில் படிக்கும் சமயம் என்னுடன் படித்த பள்ளித் தோழரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்னும் ஆசை நிறைவேறாமல் வசதியான ஆடம்பர வாழ்க்கை அமைந்தும் கூட நிஜ வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லையே என்னும் ஏக்கம் இருக்கத் தான் செய்கின்றது.
அவர் வருமானம் குறைவாக இருந்து கஷ்டப்படுகின்றார். நான் வசதி வாய்ப்புகள் காசு பணம் இருந்தும் எப்போதும் நோயாளிகளிடத்தில் நோய் பற்றிக் கேட்டறியும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மற்றவர்களைப் போல பிறருடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடியாத நிஜ வாழ்க்கையினை எண்ணி வருந்த வேண்டியிருக்கின்றது.
இருவருக்கும் ஒரு வகையான ஏக்கம் இருக்கத் தான் செய்கின்றது.