வெற்றிலை மாலையும் வடை மாலையும்
பசுவினைத் தேடி கன்று ஓடிப் பார்த்திருக்கின்றோம். ஆனால் கன்றினைத் தேடி பசு ஓடுவது என்பது எதிர்பார்த்திராத ஒன்று. பசுவினை ஒரு இடத்தில் கட்டிப் போட்டு விட்டு பசுவினிடத்தில் பால் கறக்குமுன்னர் கன்றினை அவிழ்த்து விடுவார்கள். கட்டிப் போட்ட இடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கன்று பசுவின் மடியிருந்து சுரக்கும் பாலினை அருந்துவதற்காக தாய்ப்பசு எங்கிருந்தாலும் அந்த தாய்ப் பசுவினைத் தேடி வேக வேகமாக துள்ளிக் குதித்து பாய்ந்து ஓடும். இது இயற்கை.
ஆனால் முன்பின் தெரியாத ஒரு கன்னிப் பெண்ணைப் பார்க்க அந்தப் பெண்ணின் தாயாரை விட சற்று அதிகம் வயது கொண்ட வேறு ஒரு மங்கை ஆசைப்படுவது என்பது ஆச்சர்யம்.
ஆமாம். ஒரு கன்னிப்பெண் தமக்குத் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக வாரா வாரம் சனிக்கிழமையன்று அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெற்றிலை மாலையுடன் வருவாள். அவளைப் பார்க்க இன்னுமொரு தாய் வேக வேகமாக அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த கோவிலுக்கு சென்றடைவாள். இருவருக்கும் எந்தவிதமான உறவு முறையும் கிடையாது. சொந்தமும் இல்லை.
அந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்க்கும் போதே பிடித்து விட்டது. காரணம். அழகான பெண். அடக்கமான பெண். அந்தப் பெண் பய பக்தியுடன் சாமி கும்பிடும் முறை மற்றும் குனிந்த தலை நிமிராமல் பிரகாரத்தினை வலம் வரும் விதம். முதல் முறை பார்த்ததிலிருந்து வாரா வாரம் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகவே கோயிலுக்குச் சென்று வருவது அந்த மங்கைக்கு வாடிக்கையாகி விட்டது.
அந்த மங்கைக்கு இல்லாத நோய்கள் இல்லை. வீட்டில் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள். இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் யாரையும் கூட அழைக்காமல் தன்னந்தனியே கோயிலுக்கு நடந்து சென்று வருவது சில நாட்களாக வாடிக்கையாகி விட்டது. அதற்கெல்லாம் ஒரே காரணம் அழகான ஒரு பெண். அடக்கமான ஒரு பெண்.
அந்தப் பெண் வரும்போது ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துபடி செய்து அர்ச்சகர் சடாரி வைக்கும் சமயம் பணிவுடன் தலை குனிந்தவாறு நின்று கொண்டு பின்னர் பிரசாதம் கொடுக்கும் சமயம் பயபக்தியுடன் பெற்றுக் கொள்ளும் அழகைக் காண கண் கோடி வேண்டும்.
அவளை கோவிலில் காண்பது அன்று ஒன்பதாவது முறை. அந்தப் பெண் அர்ச்சகரிடத்தில் வெற்றிலை மாலையுடன் பூஜைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கூடையினைக் கொடுத்தாள். அர்ச்சகர் யார் பெயருக்கு அர்ச்சனை எனவும் ராசி நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகியவற்றைக் கேட்டதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் சாமி பெயருக்கு எனச் சொன்னாள்.
அந்தச் சமயத்தில் அருகில் இருந்த முன்பின் தெரியாத அந்த மங்கை அந்தப் பெண்ணிடத்தில் சாமி பெயருக்கு என்று அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக யாருக்காக அர்ச்சனை என்று சொல்ல வேண்டும் எனச் சொன்னதற்கு சாமி பெயருக்கு அர்ச்சனை என்றால் சாமிக்குப் புரிந்து விடும் எனச் சொன்னாள். அவ்வாறு அந்த மங்கை அறிவுறுத்திமைக்கான காரணம் அந்தப் பெண்ணின் பெயரினைத் தெரிந்து கொள்ளும் ஆவல் தான்.
வழிபாடு முடிந்த பின்னர் அர்ச்சனைத் தட்டினை பெற்றுக் கொண்டு அந்தப் பெண் சற்று தூரத்தில் சென்று அமர்ந்தாள். அந்தப் பெண் அமர்ந்தவுடன் அவரைத் தொடர்ந்து வந்த மங்கை அருகில் சென்று அமர்ந்து கொண்டு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்தப் பெண் தமது பெயர் மற்றும் விலாசம் மற்றும் தாய் தந்தையர் விவரம் மற்றும் தொழில் ஆகியவற்றைக் கூறி முடித்தாள். அதன் பின்னர் அந்த மங்கை அந்தப் பெண்ணிடத்தில் வாராவாரம் சனிக்கிழமையன்று தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தமைக்கான காரணம் கேட்டதற்கு தமக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வெற்றிலை மாலை சாத்துபடி செய்து ஒன்பது வார முடிவில் அர்ச்சனை செய்ய வேண்டுமென ஜோதிடர் சொன்னது தான் காரணம் எனத் தெரிவித்தாள்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டு விட்டு அந்த மங்கை அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடுத்த நாள் காலையில் வரப் போவதாகவும் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறும் சொல்லி விட்டு தமது வீட்டு விலாசம் அடங்கிய விசிட்டிங் கார்டினை சொடுத்தார்.
அப்போது அந்தப் பெண் அந்த விசிட்டிங் கார்டினைப் பெற்றுக் கொண்டு மிக்க சந்தோஷம். நான் என் பெற்றோரிடத்தில் தெரிவிக்கின்றேன். கட்டாயம் வீட்டிற்கு வாருங்கள். உங்கள் வருகைக்காக நானும் எங்கள் வீட்டாரும் காத்திருப்போம் என புன்னகையுடன் தெரிவித்து விட்டு இருவரும் கோவிலிலிருந்து புறப்பட்டனர்.
மறு நாள் காலையில் மனதில் நிறைந்த ஆசைகளுடன் அந்த மங்கை சொகுசு காரில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற சமயம் பலத்த வரவேற்பு காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை வரவேற்று உபசரித்து அமருமாறு கேட்டுக் கொண்டனர். அமர்ந்தவுடன் அந்தப் பெண்ணின் வீட்டார் எதிரே நின்று கொண்டார்கள்.
அந்த மங்கை முதலில் அனைவரும் அமர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறி அனைவரும் அமர்ந்து முடித்த பின்னர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நான் இந்த ஊரில் ஜவுளிக் கடை மற்றும் நகைக்கடை வைத்துள்ளேன். சொந்தமாக ஒரு மில் உள்ளது. இது போக வீடு வாசல் கார் பங்களா விவசாய விளை நிலங்கள் என நிறைய சொத்துக்கள் உள்ளன. எனக்கு ஒரே மகன் இருக்கின்றான். அவனுக்கு திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றது. எதற்கு என்றே தெரியவில்லை.
நான் பார்ப்பதற்கு அழகாக ஆரோக்கியமானவள் போலத் தோற்றம் அளித்தாலும் எனக்கு நிறைய நோய்கள் இருக்கின்றன. இரத்தக் கொதிப்பு சர்க்கரை நோய் இதய அடைப்பு சிறு நீரகத்திலும் நுரையீரலிலும் கோளாறு என பலப்பல நோய்கள். எனது உயிர் என் உடலை விட்டு எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடலாம். அதற்கு முன்னர் எனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என உங்கள் மகளுடன் சேர்ந்து அவளுக்குத் தெரியாமல் நான் ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டேன்.
உங்கள் மகளை முதன் முதலாக ஆஞ்சநேயர் கோயிலில் பார்த்த சமயம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எனது வலிகள் மற்றும் நோய்கள் எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 9 வாரங்கள் அவள் வரும் சமயம் நானும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்துள்ளேன். 9-வது வாரம் அர்ச்சனை செய்யும் சமயம் ஜோதிடர் சொல்படி கோயிலுக்கு வந்து செல்வதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஜாதகத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா எனவும் பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கின்றதா எனவும் கேட்டதற்கு பெண்ணின் ஜாதகத்தில் எவ்விதமான தோஷங்களும் இல்லை என்றும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஒன்பது வாரங்கள் சாத்துபடி செய்து முடித்த பின்னர் நல்ல வரன் அமையும் என ஜோதிடர் சொன்னதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் சமயம் இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தனர். மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுத்த காபியினையும் அருந்தினார்கள்.
நீண்ட நேரம் பேசிய பின்னர் காரில் வந்த அந்த மங்கை பெண்ணின் குடும்பத்தாரிடத்தில் தம்முடன் ஜோதிடர் வீட்டிற்கு பெண்ணின் ஜாதகத்துடன் வருமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பெண்ணின் ஜாதகத்துடன் ஜோதிடர் வீட்டிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு புறப்பட்டனர்.
ஜோதிடர் வீட்டில் வரவேற்பு பலமாக இருந்தது. ஜோதிடர் வீட்டில் பெண்ணின் ஜாதகத்தை ஜோதிடரிடத்தில் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அந்த மங்கை இரண்டு ஜாதகங்களைக் கொடுத்தார்கள். அவர்களாகவே தொடர்ந்து பேசினார்கள்.
எனக்கு ஒரே மகன். இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றது. மகனிடத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்னால் வெளி நாடு செல்ல வேண்டும். இன்னும் உயரத்திற்கு வர வேண்டும். இன்னும் முன்னேற வேண்டும் எனச் சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கின்றான். திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் எனக்கு உடல் நிலை பாதிக்கப் படுகின்றது எனச் சொன்னார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஜோதிடர் பலன் சொல்ல ஆரம்பித்தார்.
ராமனுக்காக ராமரது கணையாழியுடன் சீதையை அசோக வனத்தில் சந்தித்த அனுமன் தாம் ராமதூதன் எனச்சொல்லி வணங்கினார். சீதைக்கு அளவில்லாத ஆனந்தம். எனவே உடனே சீதை அனுமனை ஆசீர்வதிக்க விரும்பினாள். ஆசீர்வாதம் செய்வதற்கு அட்சதை அல்லது மலர்கள் தேவை. ஆனால் சீதை இருந்த அசோகவனத்தில் இலைகள் தான் இருந்தன. அந்த இலைகளில் சிலவற்றை கிள்ளியெடுத்து சீதை அனுமனை ஆசீர்வதித்த சமயம் இனி எல்லாம் வெற்றியே எனச் சொன்னார்.
சீதை அனுமனிடத்தில் ராமருடன் இலங்காபுரிக்கு வந்து இலங்கேஸ்வரனை வெற்றி கொண்டு தம்மை மீட்பதற்காக தாம் இந்த இலை கொண்டு ஆசீர்வதித்த காரணத்தால் இந்த இலைக்கு இனிமேல் வெற்றி இலை எனப் பெயர் சூட்டுகின்றேன் எனச் சொன்னார். எனவே வெற்றி தரும் இலையான வெற்றிலையை கொண்டு மாலையினை உருவாக்கி அந்த வெற்றிலை மாலையினை ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் எனவும் திருமணம் போன்ற சடங்குகளில் வெற்றிலை தாம்பூலம் மாற்றித் தான் நிச்சயதார்த்தம் செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். அந்த காரணத்தால் தான் ஆஞ்சநேயருக்கு 9 வாரங்கள் வெற்றிலை மாலை அணிவிக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். பெண்ணின் ஜாதகத்தில் எந்த விதமான தோஷங்களும் இல்லை எனச் சொன்னார்.
அதன் பின்னர் அந்த மங்கையின் ஜாதகத்தினையும் அவரது மகனது ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோதிடர் பலன் மற்றும் பரிகாரம் சொல்ல ஆரம்பித்தார்.
பையன் ஜாதகத்தில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை இருக்கின்றது. அதற்குக் காரணம் ராகு பகவான். பையனின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருக்கின்றது. இந்த தோஷத்திற்கு ராகு பகவானை திருப்திப்படுத்த ராகுவுக்குப் பிடித்தமான நவதானியங்களில் ஒன்றான உளுந்தினால் வடை செய்து ஆஞ்சநேருக்கு வடை மாலை சாத்துபடி செய்தால் திருமணம் விரைவில் தடையின்றி நடைபெறும். ராகு தோஷத்திற்கு ராகுவை நேரடியாக வழிபடலாமே எனக் கேட்கலாம். அதற்கும் காரணம் உண்டு.
வாயு புத்திரனான அனுமன் சூரியனை பழம் எனக்கருதி அதனை புசிக்கும் ஆவலில் சூரியனை நோக்கி பயணித்த சமயம் ராகு பகவான் கிரஹணம் பிடிப்பதற்காக சூரியனை நோக்கி நெருங்கி வருகின்றார். ஆனால் அனுமன் வேகத்தை ராகுவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
எனவே ராகு பகவான் அனுமனிடத்தில் ராகு பகவானுக்குப் பிடித்தமான உளுந்தினைக் கொண்டு வடை மாலை செய்து அனுமனுக்கு அணிவித்தால் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்குவதாக உறுதி அளித்தார்.
நாக தோஷமோ அல்லது சர்ப்ப தோஷமோ அல்லது காலசர்ப்ப தோஷமோ இருந்தால் காளஹஸ்தி அல்லது திருநாகேஸ்வரம் போன்ற கோயில்களுக்குச் சென்று வரலாம். ஆனால் இந்த ஜாதகக் காரர் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துபடி செய்து வழிபட்டாலே போதும். திருமணத் தடைகள் நீங்கிவிடும்.
இதற்குப் பின்னர் அந்த மங்கையின் நோயினைக் குணப்படுத்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்து அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்குக் காரணமாக இராமாயணத்தில் ராமனுடன் சேர்ந்து அனுமன் போர்ப்படைத் தளபதியாக சென்ற சமயம் அனுமன் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததனை சீதாப்பிராட்டி கண்டு அனுமனின் வெப்பம் தணியவும் காயங்கள் ஆறுவதற்கும் வெண்ணையினை சீதாப்பிராட்டி தடவி விடச் சொன்னார்கள். எனவே உடலில் உள்காயங்கள் அல்லது வெளிக்காயங்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின் அனுமனுக்கு வெண்ணெய் காப்பு செய்வித்தால் பூரணமாக நலம் பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
அத்தனையும் கேட்டு முடித்த அந்த மங்கை ஜோதிடர் சொன்ன பரிகாரங்களை ஒரு வார காலத்திற்குள் செய்து முடித்து விடப் போவதாகவும் அதற்குப் பின்னர் வரப் போகின்ற சுப முகூர்த்த நாளன்று திருமணம் செய்வதற்கு ஜாதகப் பொறுத்தம் பார்க்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு ஜோதிடர் மணப்பெண்ணின் வீட்டாருக்கு சம்மதம் இருந்தால் பொருத்தம் பார்த்துச் சொல்வதாகச் சொன்னவுடன் பெண்ணின் வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். உடனே ஜோதிடர் இரண்டு ஜாதகங்களையும் ஆராய்ச்சி செய்து ஜாதகப் பொருத்தம் நன்றாக இருப்பதாகவும் இந்தப் பெண் சென்று விளக்கேற்றும் இடத்தில் செல்வம் பெருகும் எனவும் சொன்னார்.
பெண் பார்க்கும் படலம் மற்றும் மாப்பிள்ளை அறிமுக படலம் அனைத்தும் ஒரு பக்கம் நடைபெற்று வந்த அதே வேளையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்தல் மற்றும் வெண்ணைக் காப்பு செய்து முடித்து விட்டார்கள். அதன் பின்னர் ஒரு வார காலத்தில் திருமண வைபவம் மிக மிக விமரிசையாக ஊரே போற்றும் படி நடைபெற்றது. இது தான் அனுமனுக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவிப்பதனால் ஏற்படும் பலன்கள். அனுமனுக்கு வெண்ணை காப்பு செய்தால் அனைத்து நோய்களும் விரைவில் குணமாகிவிடும் என்பது தனிச்சிறப்பு.
ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இதயக் கோளாறு நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறு என அத்தனை நோய்களையும் வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் யாரையும் துணைக்கு அழைத்து வராமல் தன்னந்தனியே அந்தப் பெண்ணை பார்க்கும் சமயம் அந்தப் பெண் தமக்கு மருமகளாக வரவேண்டும் என எதிர் பார்த்ததற்கும் ஜோதிடரிடத்தில் ஜாதகத்தைக் காட்டிய பின்னர் ஜோதிடர் சொன்னபடி வழிபாடுகள் முடிந்த பின்னர் அதே பெண் தமக்கு மருமகளாக வந்து தம்மிடத்தில் ஒரு மகள் போல அன்பு செலுத்தி வரும் நிஜ வாழ்க்கையினையும் நினைக்கும் போது புல்லரிக்கின்றது. உடல் நிலையில் ஏற்பட்டுள்ள தேக ஆரோக்கியத்தைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கின்றது.