கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம்
அன்று வெள்ளிக் கிழமை. கோயிலில் நிறையக் கூட்டம். அர்ச்சகர்கள் பக்தர்களிடத்தில் அர்ச்சனைத் தட்டுக்களையும் அர்ச்சனைக் கூடைகளையும் பெற்றுக் கொண்டு யார் பெயருக்கு அர்ச்சனை அவர்களின் நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் சென்று அர்ச்சனை செய்து அர்ச்சனை தட்டுக்களையும் அர்ச்சனைக் கூடைகளையும் திரும்பக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு தம்பதியினர் அர்ச்சகரிடத்தில் அவர்கள் கொடுத்த அர்ச்சனைத் கூடை மாறியிருப்பதாகவும் அவர்கள் கொடுத்த அர்ச்சனைக் கூடையில் மலை வாழைப்பழம் வைத்திருந்ததாகவும் அர்ச்சனைக்குப் பின்னர் தம்மிடம் திரும்ப வழங்கப்பட்ட அர்ச்சனைக் கூடையில் ரஸ்தாளி வாழைப்பழம் இருப்பதாகவும் சொல்லி வந்தனர்.
அச்சமயம் அர்ச்சகர் கோயிலில் கருவறையில் அர்ச்சனைக்குக் கொடுக்கப்படுகின்ற அர்ச்சனைத் தட்டுகள் அல்லது அர்ச்சனைக் கூடைகள் இடம் மாறி விடுமேயானால் வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடக்கும் எனச் சொன்னார். அர்ச்சகர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அர்ச்சனைக் கூடையுடன் மூலஸ்தானைத்தை விட்டுச் விலகிச் சென்ற தம்பதியர் திரும்ப வந்து அதே போலச் சொன்னார்கள்.
அர்ச்சகர் உடனே தமக்கு வந்த இடையூறு அகன்று விட்டதாகச் சொல்லி இரண்டு குடும்பத்தாரிடத்திலும் அர்ச்சனைக் கூடைகளை பெற்றுக் கொண்டு அவரவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிம்மதிப் பெருமூச்சு விட்ட அர்ச்சகர் இரு குடும்பத்தாரிடத்திலும் சற்று நேரம் பேசலாமா என அனுமதி கேட்க இருவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.
இரண்டு குடும்பத்தாரும் அவரிடத்தில் நீங்கள் எங்களுடன் பேசும் சமயம் கர்ப்பக்கிரஹத்தில் அர்ச்சனை யார் செய்வார்கள் எனக் கேட்டதற்கு அர்ச்சனைக் கூடை மாறிய பஞ்சாயத்தினை அரை மணி நேரத்தில் முடித்துக் கொண்டு திரும்ப வருமாறும் அது வரையில் மற்றவர்கள் பணிகளை கவனிப்பதாகவும் சொல்லி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். அர்ச்சகர் இருவரிடத்திலும் யார் பெயரில் அர்ச்சனை செய்தீர்கள் எனவும் என்ன காரணத்திற்காக எனவும் சொல்லுமாறு கேட்டார்.
அதற்கு முதல் தம்பதியினர் தமது மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாவும் இரண்டாவது தம்பதியினர் தமது மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அச்சமயம் அர்ச்சகர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் பெயர் ராசி மற்றும் நட்சத்திரம் தெரிவிக்குமாறு சொன்னார்.
அப்போது தான் தெரிய வந்தது. மணமகன் மற்றும் மணமகள் இருவரது ஜாதகங்களும் இரண்டு கூடைகளிலும் வைக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது என்பது. இரண்டு வீட்டாரும் தமது வாரிசுகளின் ஜாதகங்களை அர்ச்சகரிடம் கொடுக்க அர்ச்சகர் அந்த இரண்டு ஜாதகங்களையும் பொருத்தம் பார்த்து விட்டு இரண்டு ஜாதகங்களுக்கும் 9 பொருத்தங்கள் சரியாக பொருந்தி இருக்கின்றது எனவும் வயது வித்தியாசம் மணமகளை விட மண மகனுக்கு 3 அதிகம் இருப்பதாகவும் இருவருக்கும் மணமுடித்து வைக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் அர்ச்சகர் அவர்களிடத்தில் அர்ச்சனைக் கூடை மாறியதையும் அதனுள் இரண்டு ஜாதகங்களும் இருந்து அர்ச்சனைக் கூடைகள் மாறியதையும் பார்க்கும் போது உங்கள் வாரிசுகள் இருவரையும் சேர்த்து வைத்து சாமி முடிச்சு போட்டு விட்டார் என்பதனைத் தெரிவித்து விட்டு இரண்டு வீட்டாரும் ஜாதகப் பரிமாற்றும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் மணமகன் குடும்பத்தார் கொண்டு வந்த ஜாதகத்தினை மணமகள் வீட்டாரிடத்தில் கொடுத்து விட்டு மணமகள் வீட்டார் கொண்டு வந்த ஜாதகத்தினை மணமகன் வீட்டார் பெற்றுக் கொண்டனர். அதற்குப் பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து மணமகன் வீட்டார் மணமகள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று மணமகள் என்ன படித்திருக்கின்றாள். என்ன பணி செய்கின்றாள். எங்கு வேலை செய்கின்றாள் என விசாரித்தனர்.
மணமகள் வீட்டார் தமது மகள் மருத்துவம் படித்து விட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் டாக்டராகப் பணியாற்றி வருவதாகவும் திருமண விவரங்கள் மணமகளுக்கு தெரியப் படுத்திய பின்னர் ஜாதகத்தை கோயிலில் வைத்து பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர்.
மணமகன் வீட்டார் தமது மகன் பொறியியல் படிப்பு படித்து விட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வருவதாகவும் திருமண விவரங்கள் மணமகனுக்கு தெரியப்படுத்திய பின்னர் ஜாதகத்தை கோயிலில் வைத்து பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இரண்டு குடும்பத்தாருக்கும் தமது வாரிசுகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. மணமகன் வீட்டார் மிக்க சந்தோஷத்துடன் அவர்களது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மணமகன் வீட்டார் தமது மகனிடத்தில் திருமணத்திற்கு ஒரு பெண்ணின் ஜாதகம் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் காசு பணம் அந்தஸ்து அனைத்திலும் சமமானவர்களாக சம்மந்தி வீட்டார் இருப்பதாகவும் தெரிவித்தனர். மணப்பெண்ணை இன்னும் பார்க்கவில்லை எனவும் மணப்பெண்ணை பார்த்து மணப்பெண்ணைப் பிடித்திருந்தால் இந்தியாவுக்கு பெண் பார்க்க வர வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தனர். மகன் சரியென ஒப்புக் கொண்டான்.
அதே போல மணமகள் வீட்டார் தமது மகளிடத்தில் திருமணத்திற்கு ஒரு மணமகனின் ஜாதகம் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டுச் சென்று விட்டதாகவும் மணப் பெண்ணை எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரச் சொல்லுங்கள். பெண் பிடித்திருந்தால் உடனே நிச்சயதார்த்தம் செய்து திருமணத்தை முடித்து விடலாம் எனவும் தெரிவித்தார்கள். அதற்கு அவர்களின் மகள் திருமணம் தொடர்பாக தாம் இந்தியாவிற்கு விரைவில் வருவதாக தெரிவித்தாள். அதே போல இரண்டு மூன்று நாட்களில் பெண் இந்தியா வந்தடைந்தாள்.
ஒரு வார காலத்தில் மணமகள் வீட்டிற்கு மணமகன் வீட்டார் முறையாகச் சென்று பெண் பார்த்து வந்தனர். பெண்ணை மணமகன் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. மணமகன் வீட்டார் விரைவில் மாப்பிள்ளையுடன் சேர்ந்து வந்து பெண் பார்க்கப் போவதாகவும் இருவரும் சரியெனச் சொல்லி விட்டால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் முடித்து விடலாம் எனவும் தெரிவித்தனர்.
இல்லம் திரும்பிய மணமகன் வீட்டாருக்கு ஒரே ஆச்சர்யம். மணப் பெண்ணைப் பார்த்து விட்டுத் திரும்பிய சமயம் தமது மகன் வெளி நாட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வீட்டிற்கு வந்திருப்பது அறிந்து மிக்க சந்தோஷம். மகனிடத்தில் தாம் பார்த்து வந்த பெண் பற்றித் தெரிவித்து அந்தப் பெண்ணை உற்றார் உறவினர் சொந்தங்களுடன் சேர்ந்து போய்ப் பார்த்து மாப்பிள்ளையைக் காட்டிய பின்னர் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்கப் போகின்றோம் எனச் சொன்னார்கள்.
அச்சமயம் வெளி நாட்டிலிருந்து வந்த மகன் ஒரு பெண்ணின் போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணை தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் வேறு எந்தப் பெண்ணும் வேண்டாம் என்றும் தெரிவிக்க பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று அனைவரும் சேர்ந்து ஒன்றாகப் போய் மணமகளைப் பார்க்கலாம் எனவும் மணமகளைப் பிடிக்கவில்லையெனில் போட்டோவில் உள்ள பெண்ணை யார் என விசாரித்து திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக் கிழமை வந்தது. அனைவரும் பெண் பார்ப்பதற்கு பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர். மாப்பிள்ளையும் கூடச் சென்றார். மாப்பிள்ளை வீட்டில் நுழையும் சமயம் அரை மனதுடன் இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து மணப்பெண்ணை அழைத்து வாருங்கள் எனச் சொல்ல மணப்பெண் சர்வ அலங்காரத்துடன் வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாள்.
மணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே ஆச்சர்யம். ஆம் இருவரும் இந்தியாவுக்கு வரும் சமயம் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டே பயணம் செய்துள்ளனர். செல்பி போட்டோ கூட எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த போட்டோவைத் தான் மணமகன் தனது பெற்றோரிடத்தில் காண்பித்து அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லி இருக்கின்றார்.
மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் அனைவரும் குழுமி இருந்த கூட்டத்தில் மணமகனின் தாயார் இந்தப் பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்து வைக்கட்டுமா அல்லது நீ போட்டோவைக் காண்பித்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டாயே அந்தப் பெண்ணைப் பார்க்கலாமா எனக் கேட்டார்.
அச்சமயத்தில் மணமகள் பக்கம் உள்ள உற்றார் உறவினர் சுற்றத்தினர் மணமகன் வேறு ஒரு பெண் மீது ஆசை வைத்திருக்கும் போது எப்படி எங்கள் வீட்டுப் பெண்ணை பெண் பார்க்க வந்தீர்கள் என காட்டமாக கேட்டனர். அதற்கு மணமகனின் தாயார் பொறுங்கள் முதலில் என் மகன் என்ன சொல்கின்றானோ அதனைக் கேட்டு உங்களுக்குப் பதில் சொல்கின்றேன் எனச் சொன்னார்.
அதனைக் கேட்ட மணமகன் இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் சம்மதிக்கின்றேன் எனத் தெரிவித்தார். இருந்தாலும் மணமகள் வீட்டார் விடவில்லை. அந்த போட்டோவை முதலில் எங்களிட்த்தில் காட்டுங்கள் என வற்புறுத்தினார்கள். அனைவரது வேண்டுகோளுக்கிணங்க அந்த போட்டோவை காட்டினர். ஆமாம் இருவரும் ஒரே விமானத்தில் வரும் சமயம் எடுத்துக் கொண்ட போட்டோ தான் அது.
மணமகள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து விட்டாள். மணமகன் இந்தியாவிற்கு வந்து டெல்லியிலும் மும்பையிலும் உள்ள கிளை அலுவலகங்களுக்குச் சென்ற பின்னர் வீட்டிற்கு வந்துள்ளான். எனவே பெண் பார்த்து முடியும் வரையில் மணமகன் வீட்டிற்கு வருவதில் தாமதம். அன்றைய தினமே நிச்சய தாம்பூலம் செய்து கொண்டு அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அந்த முகூர்த்தத்திற்கு கோயிலில் அர்ச்சனைக் கூடை மாறியதன் காரணமாக அறிமுகமான அர்ச்சகர் ஹோமங்களும் யாகங்களுகம் செய்து திருமண சடங்கினை செய்து வைத்தார். இறைவன் போட்ட முடிச்சு அர்ச்னைத்தட்டின் மூலம் அறிமுகம் ஆகி திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததும் அனைவரும் மீண்டுமொரு முறை அந்த கோயிலுக்குத் திரும்பச் சென்று இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
சம்மந்திகள் இருவரிடத்திலும் அர்ச்சனைத் தட்டு மாறியதால் ஏற்பட்ட குழப்பத்திற்கும் மணமக்கள் இருவரும் விமானத்தில் பயணிக்கும் போது நெருக்கமாக பேசி வந்த சமயம் இருவரும் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்ப்புக்கும் இறைவன் போட்ட முடிச்சு மற்றும் இறைவனின் ஆசீர்வாதத்தின் காரணமாக இரண்டு இதயங்களும் ஒன்று சேர்ந்துள்ள நிஜமான வாழ்க்கைக்கும் இடையே நடந்த நிகழ்வுகளை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் அதே சமயம் நெருடலாகவும் இருக்கின்றது.