விமான பயணத்தின் போது வேலை வாய்ப்பு
சென்னையிலிருந்து வேலை வாய்ப்புத் தேடி அமெரிக்கா செல்லும் விமானத்தில் பயணிக்க விமானத்தில் ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை விமானத்தின் ஜன்னல் ஓரத்தில் இருந்தது. நடுவிலுள்ள இருக்கை தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு அழகான இளம் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொரு இருக்கை ஒரு வெளி நாட்டவருக்கு ஒதுக்கப் பட்டிருந்தது.
முன்பின் தெரியாத அந்த இளம் பெண்ணுக்கு அருகில் அமர்வதற்கு நான் தயங்கினேன். அவள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் நான் அந்தப் பெண்ணிடத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜன்னலோர இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். அவளும் அவ்வாறே அமர்ந்து கொண்டாள். நான் நடுவில் உள்ள இருக்கையில் அமருவேன் என அவள் எதிர்பார்த்தாள். ஆனால் நான் அந்த இருக்கையில் அமர்வதற்குப் பதிலாக அந்த வெளிநாட்டவரை அமர வைத்து நான் அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
அந்தப் பெண் என்னிடத்தில் நடுவில் உள்ள இருக்கையில் அமர்ந்தால் இருவரும் தாய் மொழியில் உரையாடிக் கொண்டே செல்லலாமே எனக் கேட்டாள். அதற்கு நான் இங்கிருந்து வெளிநாடு புறப்படுகின்ற வரையில் தாய்மொழியில் தான் பேசி வந்திருக்கின்றேன் எனச் சொன்னேன். அவள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. விமானம் டெல்லியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கி பின்னர் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டது.
அச்சமயத்தில் என்னருகே அமர்ந்திருந்த அந்த வெளி நாட்டவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கான நோக்கம் பற்றிக் கேட்டார். அதற்கு நான் அமெரிக்காவுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்வதாகத் தெரிவித்தேன். அந்த வெளிநாட்டவர் என்னிடத்தில் இந்தியாவில் படித்து இந்தியாவில் பட்டம் பெற்று வெளி நாட்டிற்குச் சென்று பணியாற்றுவது சரியா எனக் கேட்டார். அதற்கு நான் என்னுடைய படிப்பு விவரம் பற்றியோ நான் எதிர் பார்க்கும் உத்தியோகம் மற்றும் வருமானம் பற்றியோ எதுவும் தெரிவிக்காமல் அவரிடத்தில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.
ஏழ்மை நிலையில் இருந்த நாடு தற்போது வளருகின்ற நாடாக மாறி வல்லரசு நாடாக உயரப் போகின்றது என்றால் அதற்குக் காரணம் இந்திய கலாச்சாரம். ஒருவனுக்கு ஒருத்தி என திருமண பந்தத்தில் இணையும் தம்பதியினர் தமக்குப் பிறந்துள்ள குழந்தைகள கஷ்டப்பட்டு மேன் மேலும் படிக்க வைத்து தனது வாரிசுகள் சொந்தக் காலில் நிற்கும் வரையில் துணை நிற்கின்றார்கள். இந்த காரணத்தால் இந்தியாவில் மேன்மேலும் கல்வி கற்று அறிவுத்திறன் பெற்ற பின்னர் வல்லரசு நாடுகளில் பணியாற்றும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொள்கின்றார்கள்.
இந்தியர்கள் படித்த படிப்பிற்கு இந்தியாவிலேயே தொழில் துவங்குவதன் மூலம் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்த போதிலும் வல்லரசு நாடுகளில் பணியாற்றுவதன். மூலம் அங்கு கிடைக்கும் சம்பளத்தினை இந்தியாவில் உள்ள தமமை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு அனுப்பி அவர்களை பராமரிப்பதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகளவில் இந்தியாவிற்குக் கிடைக்கின்றது.
இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற ஒருவரது கல்வியறிவு வல்லரசு நாடுகளில் பயன்படுத்தப்படுவதன் மூலமாக அந்த நாடும் வளர்ச்சியடைகின்றது. இந்தியாவும் அந்நியச் செலாவணி கிடைப்பதன் மூலம் வல்லரசாக வழிவகை செய்கின்றது.
இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற ஒருவர் இந்தியாவிலேயே பணியாற்றுவாரேயானால் பணி வழங்கியவரிடமிருந்து பணியாளருக்குத் தான் சம்பளமாக பணம் கைமாறும். அதன் மூலம் பிறருக்கு வேலை வழங்கக் கூடிய செல்வந்தர் மேன் மேலும் முன்னேற்றம் அடைய முடியுமே தவிர தனி நபர் வருமானம் உயர்ந்து இந்தியா வல்லரசாக முடியாது. அதே சமயம் வெளி நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் லாபத் தொகை வெளி நாடுகளுக்கு சென்று விடும். இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப் பட்டு சம்பளம் மட்டுமே கிடைக்கும்.
இவற்றையெல்லாம் கேட்ட அந்த வெளி நாட்டவர் என்னிடத்தில் அமெரிக்கா சென்று எங்கு யார் தயவில் தங்கப் போகின்றீர்கள் எனக் கேட்டார். அதற்கு நான் அமெரிக்காவில் வசித்து வருகின்ற எனது உறவினர் பற்றித் தெரிவித்து அவரது வீட்டில் தங்கி வேலை தேடப் போகின்றேன் எனவும் தற்போதைக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலாப் பயணி விசாவில் செல்வதாகவும் தெரிவித்தேன்.
அவர் சுற்றுலாப் பயணி விசா ஆறு மாதங்களுக்குத் தான் செல்லுபடியாகும். அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டார். நான் சற்று கூட தயங்காமல் நிச்சயம் எனக்கு ஆறுமாத காலத்தில் என்னுடைய திறமைக்கேற்ற உத்தியோகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது எனத் தெரிவித்தேன்.
அந்த நேரத்தில் அந்த வெளி நாட்டவர் என்னிடத்தில் இந்தியாவில் உள்ள பெற்றோர் விவரம் மற்றும் விலாசம் ஆகியவற்றையும் அமெரிக்காவில் தங்கி வேலை தேடப் போகும் உறவினர் விலாசத்தையும் தொலை பேசி எண்களையும் எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். நான் ஏன் எதற்கு என்று கேட்காமல் இரண்டினையும் எழுதிக் கொடுத்தேன். அதற்குப் பின்னர் அந்த வெளி நாட்டவர் என்னிடத்தில் ஆறு மாத காலத்தில் அமெரிக்க விலாசத்திற்கு வந்து என்னை சந்தித்து சில நேரம் பேசி பொழுது போக்க எண்ணுவதாகவும் ஆறுமாத காலத்திற்குள் வேலை கிடைக்காமல் இந்தியா திரும்பி விட்டால் இந்தியாவுக்கு வந்து சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இருபது மணி நேர பயணத்திற்குப் பின்னர் நான் அமெரிக்கா சென்றடைந்த சமயம் என்னை வரவேற்க என் உறவினர் வரவில்லை. எனக்கு சற்று ஏமாற்றம். அப்போது தான் என்னுடன் பயணித்த தமிழ் நாட்டுப் பெண் என்னிடத்தில் பேசினாள். உங்களுடைய உறவினர் வரவில்லையெனில் என்னுடன் வாருங்கள். நான் உங்களை உங்கள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு நான் என் இல்லம் திரும்புகின்றேன் எனச் சொன்னாள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு தூரம் உதவி செய்யக்கூடிய மனம் கொண்ட பெண்ணை நாம் உதாசீனம் செய்து விட்டோமே என்னும் உறுத்தல் எனக்குள் ஏற்பட்டது.
நான் எனது உறவினர் இல்லத்திற்கு முன்னர் எனது உடைமைகளுடன் இறங்கி அவர்களை வீட்டிற்குள் வந்து சிற்றுண்டி முடித்த பின்னர் செல்லலாமே எனக் கேட்டேன். அதற்கு ஒரு புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
அதன் பின்னர் விமானப் பயண களைப்பு நீங்க தூங்கி எழுந்த நேரத்தில் பணிக்குச் சென்றிருந்த எனது உறவினர் வீடு திரும்பியதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்தோம். எந்த எந்த நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிப்பது என்பது பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். அதன் பின்னர் அனைத்து நிறுவனங்களுக்கும் வேலை தேடி விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.
நான் ஒரு பக்கம் வேலை தேடி விண்ணப்பித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரு வார காலத்திற்குள் எனக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. அதனைக் கண்ட எனது உறவினரும் நானும் இந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவே இல்லை என பேசிக் கொண்டிருந்தோம். அச்சமயம் நாம் விண்ணப்பித்துள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தின் கிளை நிறுவனமாகக் கூட இருக்கலாம் எனவே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தீர்மானித்தேன்.
நிறுவனம் அமைந்துள்ள இடம் எனக்குப் புதிது என்பதன் காரணமாக எனது உறவினர் தமது அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு விட்டு என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். நானும் வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்னென்ன கேள்விகள் கேட்பார்களோ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியுமா என்னும் ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் நான்கு சக்கர வாகனத்தில் சென்று இறங்கினேன்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் காரிலிருந்து இறங்கியவுடன் அந்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அவரவர் கைகளில் வாருங்கள் வாருங்கள் என என் பெயர் பொறித்த அட்டையுடன் நிறுவன வாசலில் வரிசையாக நின்று கொண்டு வரவேற்றார்கள். எனக்கோ எனது உறவினருக்கோ எதுவும் புரியவில்லை.
மிக்க சந்தோஷத்துடன் காரிலிருந்து இறங்கி நான் அலுவலகத்திற்குள் சென்று பார்வையாளர்கள் இருக்கையில் அமர முயன்ற சமயம் என்னுடன் விமானத்தில் பயணித்த அந்த வெளி நாட்டவர் என்னருகே வந்து என்னை கைகுலுக்கி வரவேற்று வாருங்கள் என அழைத்துச் சென்றார். நானும் அவருடன் சென்று இருவரும் ஒரு அறைக்குள் சென்ற சமயம் அவர் என்னை இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள் எனக் காட்டிய இருக்கைக்கு முன்னர் CEO என எழுதப் பட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடன் வந்த என்னுடைய உறவினருக்கு என்னை விட அதிகளவு ஆச்சர்யம்.
நான் அவர் சுட்டிக்காட்டிய இருக்கையில் அமர்ந்தவுடன் என்னுடன் விமானத்தில் பயணித்த அந்த அழகான தமிழ் நாட்டுப் பெண் என் அறைக்கு வந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் என்னுடைய ஆச்சர்யம் மேலும் அதிகமாகி விட்டது.
என்னுடன் பயணித்த வெளி நாட்டுக்காரர் தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் என்றும் என்னுடன் விமானத்தில் பயணித்த அந்தப் பெண் தான் இதுவரையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்திருப்பதாகவும் அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். நான் என்னையும் அறியாமல் அவர்கள் பணியில் இருக்கும் போது நான் எப்படி பணியில் சேர முடியும் அவர்களுக்கு வேலை போய் விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் எனக் கேட்டேன்.
அதற்கு அந்தப் பெண்ணுக்கு வரன் பார்த்து நிச்சயதார்த்தம் வரையில் வந்த சமயத்தில் அவரும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு பார்த்துள்ள வரன் இந்தியாவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருப்பதன் காரணமாக இங்கு பணியாற்றக் கூடாது எனச் சொன்ன காரணத்தால் அந்த வரன் வேண்டாம் என்று மீண்டும் அமெரிக்கா திரும்புகையில் என்னைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்கள். இந்த ஒரு வார காலத்திற்குள் இந்தியாவிலுள்ள எனது பெற்றோர்களுடன் அவளது பெற்றோர் தொடர்பு கொண்டு பேசி பெண்ணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் காண்பித்து திருமணத்திற்கான ஒப்புதல் பெற்று விட்டதாகவும் தெரிவித்தார்.
எனக்கே தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய முடிவு எடுத்தீர்கள் எனக் கேட்ட சமயம் அழகான பெண்ணை கண்டவுடன் அருகில் அமர்ந்து அரட்டை அடித்து அடையத் துடிக்கும் ஆண்களுக்கு மத்தியில் விலகி அமர்ந்து கொண்டது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டதாகச் சொன்னார். அதே போல சுற்றுலாப் பயணி விசா முடிவடையும் ஆறு மாத காலத்திற்குள் கட்டாயம் தமது திறமைக்கேற்ற வேலை கிடைக்கும் என ஆணித்தரமாகச் சொன்னதைக் கொண்டு நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெறக் கூடிய திறமையும் தம்மைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைக் கண்கலங்காமல் கடைசி வரையில் காப்பாற்றும் நல்ல குணங்களும் கட்டாயம் இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தோம் எனச் சொன்னார். எனக்கும் என் உறவினருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனந்தக் கடலில் மூழ்கினோம்.
வேலை தேடி அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்த போது எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளுக்கும் நேர்முகத் தேர்வுக்கு வருகின்ற சமயம் என்னவெல்லாம் கேட்பார்கள் எப்படி பதில் சொல்வோம் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்னும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வேலையும் கிடைத்து அழகான மனைவியும் அந்த அலுவலகத்தில் கிடைத்து விட்டாள் என்பதனை உணர்ந்து கொண்ட சமயம் இருந்த நிஜ எண்ணங்களையும் நினைத்துப் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது.
மிகக் குறுகிய காலத்தில் எனக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கின்ற வேலை கிடைத்து அழகான மனைவியும் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியினை அளிக்கின்றது. இது தான் இறைவன் கருணை.
பெற்றோர் சம்மதம் கிடைத்த பின்னர் திருமண நாளன்று தான் நானும் அவளும் அருகருகே திருமண மேடையில் ஒன்றாக அமர்ந்தோம் என்னும் காரணத்தால் தமிழ் நாட்டுப் பெண்களுக்கே உரித்தான நாணம் என்ன என்பதனை நான் பணியாற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவரும் குடும்பத்துடன் அறிந்து கொண்டனர். திருமண சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி விளக்குவதற்கு ஒரு நபரை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி எனத் தெரிவித்து விட்டு இந்த காரணங்களால் தான் இந்தியர்கள் முன்னேறுகின்றார்கள் என்னும் விவரத்தினை அறிந்து கொண்டனர்.