மருதாணி
என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நான் ஒரே பெண். அதன் காரணமாக என்னை மிக மிக செல்லமாக வளர்த்து விட்டார்கள். நான் என்ன தான் அடம் பிடித்தாலும் என்ன தவறு செய்தாலும் படிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலும் வீண் பிடிவாதம் பிடித்தாலும் என்னை என்னுடைய பெற்றோர் மிக மிக கனிவாக இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அறிவுறைகள் தான் வழங்குவார்கள்.
இவ்வாறு நான் செய்யும் சமயம் என்னுடைய அண்டை வீட்டார் மற்றும் எனது உறவினர்கள் என் பெற்றோரிடத்தில் அடியாத மாடு படியாது. ஒரே பெண் என்பதால் செல்லம் கொடுத்துக் கொடுத்து கெடுக்கப் போகின்றீர்கள் எனச் சொல்வார்கள். அவ்வாறு பிறர் என் பெற்றோரிடத்தில் அறிவுறைகள் வழங்கும் சமயம் அவர்கள் முன்னிலையில் மிகவும் கோபம் வந்து அடிப்பது போல கைகளை உயர்த்துவார்களே தவிர என்னை கிள்ளக் கூட மாட்டார்கள்.
வீட்டிலே இப்படியென்றால் நான் படித்து வந்த பள்ளியில் தவறு செய்த மாணவ மாணவியருக்கு பிரம்படி கொடுக்கும் ஆசிரியர்கள் என்னை மட்டும் அடிக்க மாட்டார்கள். நான் எனது உள்ளங்கையினை நிமிர்த்தி காட்டினாலும் கூட அடிக்காமல் அவர்களே என் முன்னர் மண்டியிட்டு என்னிடத்தில் நான் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரைகள் வழங்கி என்னைக் கட்டியணைத்து அன்பு மழை பொழிவார்கள். இந்த அளவிற்கு அனைவரும் நடந்து கொள்ள என்னிடத்தில் என்ன இருக்கின்றது என்பதன் காரணம் சிறுமியாக இருக்கும் சமயம் எனக்குத் தெரியவில்லை. அதற்கான காரணத்தை காலப் போக்கில் நான் தெரிந்து கொண்டேன்.
வெற்றிலை போட்டால் வாய் சிவக்கும் என்பார்கள். ஆனால் என்னை அன்புடன் கட்டியணைத்து முத்தமிட்டாலே எனது கன்னம் சிவந்து விடும் அந்த அளவிற்கு என்னுடைய மேனியின் நிறம் அமைந்து விட்டது. இவ்வாறான மேனியில் கிள்ளினாலோ அல்லது அடித்தாலோ எப்படியிருக்கும் என்பதனை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
பள்ளியில் படிக்கும் நாள் வரையில் என் பெயரினைச் சொல்லி என் பெற்றோரை அடையாளம் காட்டுவார்கள். நான் என் பெற்றோருடன் நடந்து செல்லும் சமயம் என்னிடத்தில் இவர்களா எனது பெற்றோர் எனக் கேட்கும் அளவிற்கு என் மேனியின் நிறம் மற்றும் என்னுடைய அழகு அனைவரையும் கவர்ந்து சுண்டி இழுக்கும்.
பள்ளிப் படிப்பினை முடித்த பின்னர் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கொண்டேன். வழக்கம் போல இரண்டாமாண்டு படிக்கும் மாணவ மாணவியர் என்னிடத்தில் கலாட்டா செய்வதும் கிண்டல் செய்வதும் ராக்கிங் செய்வதும் என இருப்பார்கள். அவ்வாறான சமயங்களில் நான் வருத்தப்படும் அளவிற்கு மாணவ மாணவியர் நடந்து கொண்டால் என்னருகில் வந்து என் பக்கம் நின்று என்னை இப்படியெல்லாம் கிண்டல் கேலி செய்து ராக்கிங் செய்யக்கூடாது என ஒரு மாணவர் என் சார்பில் போராடுவார். அவரும் முதலாம் ஆண்டு மாணவர் தான். நான் எடுத்துள்ள பிரிவைத்தான் தேர்வு செய்து எனது வகுப்பறையிலேயே அமர்ந்திருப்பார்.
கல்லூhயில் படிக்கும் நாட்களில் என்னை கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவார்கள். மேடையில் நிறைய நபர்களுக்கு முன்னிலையில் தைரியமாக பேசக் கூடிய திறமை என்னிடத்தில் கிடையாது என நான் சொன்னால் கூட எனக்கு ஒரு மஹாராணி வேடம் அளித்து மன்னருக்கு அருகில் எதுவும் பேசாத கதாபாத்திரம் கொடுத்து பொம்மை போல என்னை அமர வைத்து விடுவார்கள். நான் மேடையில் அமர்ந்திருக்கும் சமயம் அனைவரது கண்களும் என்னை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும். அதன் காரணமாக நான் வீட்டிற்கு வந்தவுடன் திருஷ்டி எடுப்பார்கள்.
பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் சமயம் ராக்கிங் கேலி கிண்டல் போன்றவற்றிலிருந்து என்னை பாது காப்பு அரணாக இருந்து பார்த்துக் கொண்டவர் மீது என் கவனம் திரும்பியது. நான் அவரை விரும்ப ஆரம்பித்து விட்டேன். அவரிடத்தில் நெருக்கமாகப் பேசிப்பழகி அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளும் வகையில் ஒரே மதம் ஒரே ஜாதி ஒரே இனம் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றனவா எனக் கேட்டறிந்த சமயம் அவரை நான் திருமணம் செய்து கொள்வதில் எந்த விதமான பிரச்சினைகளும் வராது எனத் தெரிந்தது. நான் அவரிடத்தில் எனது விருப்பத்தினைத் தெரிவித்து அவரும் சம்மதித்து இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்து அது காதலாக மலர்ந்தது.
முதலாவது வருடம் இருந்த பயம் இரண்டாவது வருடம் இல்லை. அதற்குக் காரணம் அவர் எனக்கு பாதுகாப்பு அரணாக இருந்து என்னை பார்த்துக் கொண்டார். மாலை வேளைகளில் எனக்கு வருகின்ற சந்தேகங்களை அவரிடத்திலும் அவருக்கு வருகின்ற சந்தேகங்களை என்னிடத்திலும் கேட்டறிந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஒரு பக்கம் படிப்பு. மறுபக்கம் காதல் என இரண்டும் ஒன்று போல உருண்டோடின.
நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சமயம் கேம்பஸ் இண்டர்வியூவில் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலையில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் வந்தது. அவர் வேலையில் சேர்ந்து கொண்டார். ஆனால் என்னுடைய பெற்றோர் என்னுடைய அழகு மற்றும் என்னுடைய நிறம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு வேலையில் சேர்ந்தால் யாரையாவது காதலித்து சிக்கலில் மாட்டிக் கொள்வேன் என நினைத்தனர்.
எனவே என் பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்ப மனமில்லாமல் இருந்த சமயம் என்னுடன் படித்து முடித்த பின்னர் வேலையில் சேர்ந்து கொண்ட என்னுடைய காதலர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அந்த நேரத்தில் நான் என் பெற்றோரிடத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்து பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போதிலிருந்து காதலித்து வருவதாகவும் அவரைத் திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
எனது பெற்றோர் எதுவும் கோபப் படாமல் அவரிடத்தில் பேச ஆரம்பித்தனர். கடைசியில் பார்க்கப் போனால் அவர் என்னுடைய தாய்க்கு தூரத்து உறவினர். என்னுடைய தந்தைக்கும் தூரத்து உறவினர். தூரத்து சொந்தங்கள் நீண்ட நாள் கழித்து அறிமுகம் ஆன காரணத்தால் அவரை அமர வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தனர். நான் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன்.
அந்த சமயத்தில் அவர் என் பெற்றோரிடத்தில் என்னை வேலைக்கு எங்கும் அனுப்பி வைக்க வேண்டாமெனவும் தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விரைவில் வெளி நாடு செல்ல இருப்பதாகவும் வெளிநாட்டில் பணியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் எனக்கு விசா பெற்று திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். என்னிடத்தில் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்தது. சொந்தத்தில் மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி என நினைத்த பெற்றோருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நான் அவருக்கு மனைவியாக ஆவதற்கு முன்னர் அவர் என் பெற்றோருக்கு மாப்பிப்ளை ஆகி விடடார்.
அதன் பின்னர் அவர் என்னுடைய இல்லத்திற்கு தமது பெற்றோருடன் வருகை தந்து என்னை முறைப்படி பெண் கேட்டார். இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்த பின்னர் மிக மிக சந்தோஷமாக வெளி நாடு புறப்பட்டுச் சென்று வேலையில் சேர்ந்து கொண்டார். வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தாய் நாட்டுக்கு வருகை தந்தார்.
வரும் சமயத்திலேயே திருமணக் கனவுகளுடன் வந்தவர் மிக மிக சுறு சுறுப்பாகச் செயல்பட்டார். முறையாக என் பெற்றோரிடத்தில் அவரது பெற்றோர்கள் நேரில் வந்து பெண் கேட்டனர். அதற்கான ஏற்பாடுகளை அவர் முன்னின்று செய்தார். அதன் பின்னர் பெண் பார்க்கும் படலம் மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக் கொள்ளும் படலம் பெண்ணுக்கு பூச்சூட்டுதல் நிச்சயதார்த்தம் என அனைத்து சடங்குகளும் 10 நாட்களில் நிறைவேறின. திருமணம் மாத்திரம் நடைபெற வேண்டியிருந்தது.
திருமண நாள் நிச்சயிக்கப் பட்டது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு மருதாணி போட்டுக் கொள்ளச் சொன்னார்கள். அதற்கு நான் திருமணத்திற்கு முதல் நாள் போட்டுக் கொள்கின்றேன் எனச் சொன்ன சமயம் திருமணத்திற்கு முதல் நாள் மருதாணி இட்டுக் கொண்டால் மருதாணி காயும் வரையில் கைகளை பாது காப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு மருதாணியின் குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாத காரணத்தால் சளி பிடிக்கும் வாய்ப்பு உண்டு. மருதாணி வைத்துக் கொண்டு கைகள் நன்கு சிவந்தால் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே அன்பு அதிகமாக இருக்கும். ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள் எனச் சொன்னார்கள்.
அனைவரும் ஒன்று சேர்ந்து மருதாணி இட்டு கைகள் சிவந்தால் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும் என்று சொன்னதனை கருத்தில் கொண்டு மருதாணி போட்டுக் கொள்ள சம்மதித்தேன். அதற்காக எனது உள்ளங்கை மற்றும் இரண்டு கைகளின் முன்புறம் பின்புறம் மற்றும் தோள்கள் மற்றும் இரண்டு கால்களிலும் மருதாணி வல்லுனரை வரவழைத்து மருதாணி போட்டனர். மருதாணி போட்டுக் கொண்ட மூன்றாவது நாள் எனக்குத் திருமணம் மிகச் சிறப்பாக ஆடம்பரமாக உற்றார் உறவினர் சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் புடைசூழ தடபுடலாக நடைபெற்றது. எனக்கு எனது விருப்பப்படி வாழ்க்கைத் துணை கிடைத்தமையால் மிக்க மகிழ்ச்சி.
வெளிநாட்டுக்கு திருமணமான மனைவியை அழைத்துச் செல்வதெனில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டமைக்கான பதிவுத் திருமணச் சான்றிதழ் கட்டாயம் தேவை. ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்டு வெகு விமரிசையாக திருமணம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல முடியாது. எனவே பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு நானும் அவரும் புது மணத் தம்பதிகள் கோலத்துடன் திருமண பத்திரிக்கை ஆதார் அடையாள அட்டை மற்றும் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் பதிவுத் திருமண அலுவலகத்திற்குச் சென்றடைந்தோம்.
பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை உரிய கட்டணத் தொகை செலுத்தி திருமண பதிவாளரிடத்தில் கொடுத்த சமயம் சரி பார்த்து அனைத்தும் சரியாக இருந்த நிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கு உள்ள நடைமுமைறகளின் படி திருமண பதிவுச் சான்று வழங்க கை விரல் ரேகை வைக்கச் சொன்னார்கள். ஆனால் நான் மருதாணி போட்டுக் கொண்ட காரணத்தால் கை விரல்களில் உள்ள ரேகைக் கோடுகள் சரியாகத் தெரியவில்லை. விரல் நகங்களில் நெயில் பாலிஷ் என்னும் சாயம் பூசிக் கொண்டால் அதனை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் என ஒன்று உண்டு. ஆனால் அவ்வாறான ஒரு வேதியியல் பொருள் இல்லாத காரணத்தால் நான் போட்டுக் கொண்ட மருதாணியை நீக்க முடியவில்லை. இந்த விவரம் எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் மருதாணியினை உள்ளங்கைகளில் வைத்திருக்க மாட்டேன். அல்லது கட்டை விரலிலாவது மருதாணி பூசிக் கொள்ளாமல் இருந்திருப்பேன்.
என்னைத் திருமணம் செய்து கொண்டவர் திருமணத்திற்காக தாய் நாடு வந்து விட்ட காரணத்தால் வெளி நாட்டில் இருந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய பயணியர் விசா கூட விண்ணப்பித்து பெற முடியவில்லை. இதற்கிடையில் அவரது விடுப்பு முடிந்து விட்ட காரணத்தால் அவர் மாத்திரம் தனியாக என்னை அழைத்துச் செல்ல முடியாமல் வெளி நாடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சட்ட சிக்கல்களின் காரணமாக அவர் வெளிநாடு திரும்பி அதன் பின்னர் மருதாணி நிறம் முற்றிலும் மறைந்ததனை உறுதி செய்த பின்னர் மீண்டும் ஒரு முறை தாய் நாடு வந்து பதிவுத் திருமணம் செய்து சொண்டு அழைத்துச் செல்வதாக அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தனர். கண்களில் நீர்மல்க அவரைப் பிரிவதற்கு மனமில்லாமல் அவரை வழியனுப்பி வைத்தேன்.
திருமணத்திற்கு முன்னர் மணமக்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத சுப முகூர்த்த நாட்களைத் தேர்வு செய்வதற்காக இருவரது ஜாதகங்களை ஜோதிடரிடத்தில் காண்பித்த சமயம் 24 என்னும் இரட்டைப்படை வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டாம். 25 என்னும் ஒற்றைப்படை வயது வந்த பின்னர் திருமணம் செய்து வைக்கலாம் எனச் சொன்னதனை மனதில் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டோம். அதன் காரணமாகவோ என்னமோ அவர் வெளி நாடு சென்ற பத்துப் பதினைந்து நாட்களில் அனைத்து நாடுகளிலும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் வழியாக பயணியர் வருகை தடை செய்யப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டமையால் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் தொழிச்சாலைகள் விற்பனைக் கூடங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. சில மாத காலங்களுக்குப் பின்னர் மீண்டும் அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் என்னை மணந்து கொண்டவர் மீண்டும் தாய் நாடு திரும்பி என்னை பதிவுத் திருமணம் செய்து கொண்டு வெளி நாட்டுக்கு அழைத்துச் சென்றார்.
நல்ல வேளையாக திருமணமானவுடன் முதலிரவு நடைபெறாத காரணத்தால் நான் கர்ப்பம் தரிக்கவில்லை. கர்ப்பம் தரித்திருந்தால் 7 மாதங்களுக்கு மேலுள்ள கருவினைச் சுமக்கும் கர்ப்பிணி என நான் கருதப்பட்டு சர்வதேச விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் மீண்டும் கால தாமதம் ஆகியிருக்கும். இறைவனுக்கு நன்றி.
நான் அவரோடு கல்லூரியில் படிக்கும் காலத்திலும் அவரை மணமுடிக்க நினைத்த காலத்திலும் எனது பெற்றோருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்து அவரை எனக்குத் திருமணம் செய்து வைய்யுங்கள் என கேட்டுக் கொண்ட காலத்திலும் எனது பெற்றோர் அவரை விசாரித்த சமயம் அவர் என பெற்றோர் இருவருக்கும் தூரத்து சொந்தம் என்பதறிந்து காதல் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த காலத்திலும் என்னை எங்கும் வேலைக்கு அனுப்ப வேண்டாம் எனச் சொல்லி வெளிநாட்டில் பணியில் சேர்ந்த ஆறு மாத காலத்தில் முறையாக திருமணம் செய்து கொண்டு வெளி நாடு அழைத்துச் செல்லப் போவதாகத் தெரிவித்த காலத்திலும் இருந்த எதிர்பார்ப்பிற்கும் நாம் இருவரும் நினைத்த படி நம் இருவருக்குமிடையே திருமணம் நடைபெற்று மருதாணி இட்டுக் கொண்டதன் காரணமாக பதிவுத் திருமணம் நடைபெற முடியாமல் தள்ளிப் போய் என்னைப் பிரிந்து அவர் மாத்திரம் தன்னந்தனியாக விமானப் பயணம் மேற்கொண்டு வெளி நாடு சென்ற பின்னர் மீண்டும் திரும்ப தாய் நாடு வந்து செல்ல கால தாமதம் ஏற்பட்ட நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது ஜாதகம் பார்த்த ஜோதிடர் சொன்ன படி ஒற்றைப் படை வயதில் திருமணம் முடித்திருந்தால் இவ்வாறான தடங்கல்கள் வந்திருக்காது என எண்ணுவதனையும் நினைத்துப் பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நான் வந்துள்ள வெளி நாடு குளிர்ப்பிரதேசம் போன்ற வானிலை இருப்பதன் காரணமாக நிரந்தரமாக தேனிலவு அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் மிக மிகச் சந்தோஷமாக.