மூன்று உறவுகள்.
ஜாதி வேறு. மதம் வேறு. நாடு வேறு. மொழி வேறு. இனம் வேறு. கலாச்சாரம் வேறு என அத்தனையும் வேறு என அனைவரும் மாறு பட்ட போதிலும் நம் இருவரது இதயங்கள் இரண்டு மட்டும் ஒன்று என ஆகி விட்டன. அவர் இல்லாமல் நானில்லை நான் இல்லாமல் அவர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு நான் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவரும் அப்படித்தான்.
அந்த அளவிற்கு என் இதயத்தைக் கவர்வதற்கு அவரிடத்தில் என்ன இருக்கின்றது என்று பார்த்தால் அவரிடத்தில் என்னுடைய இதயம் இருக்கின்றது. என்னிடத்தில் அவருடைய அன்பு இருக்கின்றது. என்னிடத்தில் அவருடைய பாசம் இருக்கின்றது. என்னுடைய நினைவில் அவருடைய காதல் மொழிகள் இருக்கின்றன. இதே நிலை தான் அவருக்கும்.
அலுவலகத்தில் நான் ஏதாவது அவரைப் பற்றிக் கிண்டலாகப் பேசினால் யாருக்கும் தெரியாமல் எனக்கு வலிக்கின்ற அளவிற்கு அவர் என்னைக் கிள்ளினாலும் எதிர் காலத்தில் அவர் அதே இடத்தில் அதாவது அவர் கிள்ளிய அந்த மடியில் தலை வைத்து உறங்கும் சமயம் அடையப் போகும் இன்பத்தை நினைத்து நான் மிகவும் சந்தோஷப் படுவேன். நான் அவரிடத்தில் மெதுவாகக் கிள்ளலாமே எனச் சொன்னால் மெதுவாகக் கிள்ளினால் சேலைக்கும் பாவாடைக்கும் தான் வலிக்கும் எனவும் தினந்தோறும் சேலையும் பாவாடையும் மாறிக் கொண்டே இருப்பதால் முதல் நாள் என்ன நடந்தது என்பது மறுநாள் தெரியாமல் போய் விடும் எனவும் சிரித்துக் கொண்டே சொல்வார். நான் என்ன செய்தாலும் அது சரி தான் எனச் சொல்லி அவர் என் பக்கம் நிற்பார். என் தோழியர்களிடத்தில் நான் செய்தது தான் சரியென வாதாடுவார்.
எனது இல்லத்தில் நான் தான் முதலாவது பெண். எனக்குப் பின்னர் இரண்டு பெண்கள் இருக்கின்றார்கள். எனது திருமணம் பற்றி எப்போது கேட்டாலும் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் எனச் சொல்லி வந்த காரணத்தால் எனக்குப் பின்னர் பிறந்த எனது தங்கைகளுக்கு வயதாகிக் கொண்டே போகின்றது என்னும் காரணத்தால் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து என் இரண்டு தங்கைகளுக்கும் வெளி நாடுகளில் வேலை பார்க்கும் வரன்களைத் தேர்வு செய்து விட்டார்கள்.
என் பெற்றோர்களிடத்தில் மூத்த பெண்ணான என்னை விட்டு விட்டு அடுத்துப் பிறந்த பெண்களுக்கு ஏன் திருமணம் செய்கின்றீர்கள் என உற்றார் உறவினர்கள் கேட்க ஆரம்பித்து விட்ட காரணத்தால் எனது பெற்றோர் என்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தனர்.
நான் அது தான் தகுந்த நேரம் எனக் கருதி அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றி வருகின்றவருடன் என்னை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் என் பெற்றோர் தங்கைகள் இருவரையும் வெளி நாட்டில் பணியாற்றும் வரன்களுக்குத் தேர்வு செய்துள்ள காரணத்தால் எனக்கும் வெளி நாட்டில் பணியாற்றும் வரனைத் தான் தேர்ந்தெடுப்போம் எனச் சொன்னார்கள். அச்சமயம் நான் வெளி நாட்டு வரன் எனக்கு வேண்டாம் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றுகின்றவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொன்ன எனது வாதம் எடுபடவில்லை.
என் பெற்றோர் சொன்னபடி அடுத்த விடுமுறை நாளன்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் என்னைப் பெண் பார்க்க வருவதாகத் தெரிவித்து விட்டு பெண் பார்க்க வந்தனர். எனவே நான் என் தாயாரின் சொல்படி பெண் பார்க்க வந்தவர்கள் முன்னிலையில் போய் நின்றேன்.
வந்த வரனுக்கு என்னைப் பிடித்து விட்ட காரணத்தால் திருமண தேதியினை இரண்டு தங்கைகளுக்கு நிர்ணயம் செய்த நாளுக்கு முதல் நாள் நிர்ணயித்தார்கள். நான் எனது விருப்பத்தைத் தெரிவிக்காத போதும் கூட மௌனம் சம்மத்திற்கு அறிகுறி எனச் சொல்லி திருமணத்திற்கு முடிவெடுத்து விட்டார்கள். இடைப்பட்ட காலம் ஒரு வாரம் தான்.
நான் என்னைப் பெண் பார்த்துச் சென்ற அடுத்த நாள் முதல் அலுவலகத்திற்கு விடுமுறை கடிதம் அனுப்பி விட்டு அலுவலகம் செல்வதனை நிறுத்தி விட்டேன். திருமண அழைப்பிதழ்களை என்னிடத்தில் கொடுத்து எனது அலுவலக நண்பர்களுக்கு கொடுத்து அழைக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் மறுத்து விட்டேன். எனது விருப்பத்திற்கு மாறாக எனக்குத் திருமணம் நடந்தேறியது.
திருமண சடங்குகளில் குடத்தில் தங்க மோதிரத்தைப் போட்டு விட்டு அதனை எடுக்குமாறு சொன்ன சமயம் நான் குடத்தில் கையை விட்டு விட்டு அவரது கை என் கையில் படாதவாறு உள்ளங்கையினை மடக்கிக் கொண்டேன். அவரே குடத்திலிருந்து மோதிரத்தை எடுத்தார். குழுமி இருந்த அனைவரும் குடத்திலுள்ள மோதிரத்தை எடுப்பதில் மணமகள் தோற்று விட்டாள். மணமகன் ஜெயித்து விட்டார் என ஆர்ப்பரித்தனர். ஆனால் அவர்களுக்குத் தெரியாது நான் மணமகனைத் தேர்வு செய்வதில் கூட தோற்று விட்டேன் என்பது. எனது திருமணத்திற்கு அடுத்த நாள் எனக்கடுத்துப் பிறந்த எனது இரண்டு தங்கைகளின் திருமணம் என்பதன் காரணமாக முதலிரவு ஏற்பாடு செய்யவில்லை.
ஒரு வார காலத்திற்குப் பின்னர் நம் மூவருக்கும் வெளிநாடு செல்வதன் பொருட்டு பாஸ்போர்ட் காரணங்களுக்காக பதிவுத் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்தவுடன் மூன்று தம்பதிகளும் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்தனர். நான் எனக்குத் தாலி கட்டியவருடன் வெளி நாட்டில் உள்ள சுற்றுலாத் தலத்திற்கு தேனிலவு செல்ல மணமகனின் பெற்றோர் முடிவெடுத்தனர். தேனிலவு முடிந்து திரும்பிய பின்னர் முதலிரவு என முடிவெடுத்தார்கள். அதன் படி நான் தேனிலவிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேனிலவில் நான் அவருடன் நெருங்கிப் பழக என் மனம் இடம் தரவில்லை.
ஒரு வார கால தேனிலவுப் பயணத்தினை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பும் சமயம் விமானத்திலிருந்து இறங்கி சொந்தக் காரில் ஏறியமர்ந்து இல்லம் வந்த சமயம் நான் மட்டும் காரிலிருந்து இறங்கினேன். ஆனால் என்னைத் திருமணம் செய்து கொண்டவர் இறங்கவில்லை. நான் கொண்டு சென்றிருந்த பொருட்களை காரிலுன்ள டிக்கிலிருந்து இறக்கிய சமயம் அவரது வீட்டிலுள்ள பணியாட்கள் சாமான்களை கொண்டு சென்று உள்ளே வைத்தனர். அவர் நன்றாக உறங்கி விட்டார் என நான் அவரது பெற்றோரிடத்தில் தெரிவித்தேன். ஆனால் அவர் உறங்கவில்லை. விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேருவதற்குள் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்துள்ளது. காரணம் திடீர் மாரடைப்பு எனச் சொன்னார்கள்.
திருமணம் நடைபெற்ற இல்லம் சோக மயமாகி விட்டது. எனக்குத் தாலி கட்டியவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் அவர் கட்டிய தாலியினை என் கழுத்திலிருந்து அகற்றும் சடங்குகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டனர். அச்சமயம் அங்கு வந்திருந்த அவரது உறவினர்கள் என்னை சுட்டிக்காட்டி திருமணமாகி முதலிரவு கூட நடக்காத நிலையில் காவு வாங்கி விட்டாள் என வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நான் என்ன செய்வது என்பதறியாமல் திகைத்துக் கொண்டிருந்தேன்.
நான் அவர் என் கழுத்தில் கட்டிய தாலியினை அகற்ற அனுமதிக்கவில்லை. அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். திருமணம் முடிந்த பின்னர் கணவர் இறந்து விட்டால் இறந்தவர் கட்டிய தாலி கழுத்தில் இருக்கக் கூடாது என்று வாதிட்டனர். நான் மணமகன் வீட்டார் போட்ட நகைகள் அத்தனையும் கழற்றி அவர்களிடத்தில் திரும்பக் கொடுத்து விட்டேன்.
அதன் பின்னர் எனது பெற்றோரிடத்திலும் அவர்களிடத்திலும் என் கழுத்தில் மீண்டும் புதிதாக தாலி ஏறும் சமயம் அந்தத் தாலியினை எனக்கு எந்தக் கோயிலில் திருமணம் நடைபெறுகின்றதோ அந்த கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி விடுவேன் எனச் சொல்லி அதில் ஆணித்தரமாக நின்று விட்டேன். எனக்கு மீண்டுமொரு திருமணம் நடைபெறவில்லையெனில் இதே தாலியுடன் சுமங்கலியாகவே இயற்கை எய்தும் வரையில் வாழ்வேன் எனவும் விதவைக் கோலம் ஏற்க மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டேன்.
நான் முன் கூட்டி தகவல் எதுவும் தெரிவிக்காமல் நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்த காரணத்தால் என் அலுவலக தோழியர்கள் அனைவரும் என் இல்லம் தேடி சென்ற சமயம் எனக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை கேள்விப்பட்டு நானிருக்கும் இடத்திற்கு வந்தடைந்து சோகத்தில் மூழ்கினர். என் காதலர் எனக்கு நடந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டு கண்ணீர் சிந்தி அழ ஆரம்பித்து விட்டார். என்னைத் திருமணம் செய்து கொண்டவரின் உறவினர்கள் அனைவரும் என்னைப் பார்த்து ராசியில்லாதவள். தாலிக் கயிறு கழுத்தில் ஏறியவுடன் முதலிரவுக்கு முன்னரே கணவரை காவு வாங்கி விட்டாள் எனப் பேசியதனைப் பார்த்து இருதயக் கோளாறு உள்ள ஒரு நோயாளியை என் கழுத்தில் தாலி கட்ட வைத்து ஏமாற்றி இருக்கின்றார்கள் என என் காதலர் ஆவேசத்துடன் பொங்கினார்.
எனது பெற்றோர் என்னிடத்தில் திருமணம் பற்றி பேச்செடுத்த சமயம் அலுவலகத்தில் கூடப் பணியாற்றுபவரை திருமணம் செய்து சொள்ள சம்மதம் கேட்டதற்கு மறுப்புத் தெரிவித்து விட்ட காரணத்தால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்த முடியவில்லை. அப்போது தான் என் பெற்றோர் தாம் செய்தது தவறு என உணர்ந்தனர்
அதன் பின்னர் மாலையில் அனைவரும் எனது இல்லம் திரும்பிய பின்னர் அவரே என்னிடத்திலும் என் பெற்றோரிடத்திலும் பேசினார். எனக்குத் திருமணமாகி இருந்தாலும் கூட பரவாயில்லை. அதனை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடலாம். ஆனால் இவ்வாறான சூழ்நிலையில் தனிமையில் வீட்டில் அடைந்து இருந்தால் வேறு ஏதேனும் விபரீத தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. தற்கொலைக்கு கூட முயற்சிக்கலாம். எனவே என்னை அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒன்றிரண்டு மாதங்களில் நல்ல நாள் பார்த்து அவரது பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும் கூட என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அவரது கோரிக்கையிலும் அறிவுறையிலும் நியாயம் இருப்பதனை உணர்ந்த எனது பெற்றோர் என்னை மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வர அனுமதியளித்தனர். ஆமாம் நான் அலுவலகம் செல்வதற்கும் அனுமதி. அவரைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அனுமதி என்னும் நிலைமைக்கு என் பெற்றோர் வந்து விட்டார்கள். அவரது கோரிக்கையினை ஏற்று நான் அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன்.
இருந்த போதிலும் என் இரண்டு தங்கைகளின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடக் கூடாது என்பதற்காக பதிவுத் திருமணம் நடைபெற்று அதன் பின்னர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் விண்ணப்பித்து என் தங்கைகள் இருவரும் தங்களின் கணவன்மாருடன் வெளிநாடு செல்கின்றோம் என்னும் சந்தோஷமின்றி என்னைப் பற்றிய கவலைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.
அவ்வாறு அலுவலகம் செல்ல ஆரம்பித்த பின்னர் ஒரு நாள் மாலையில் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவர் என்னை மணமுடிக்க இருப்பதாக தெரிவித்த சமயம் என் கழுத்தில் உள்ள தாலியினைக் கண்ணுற்ற அவரது பெற்றோர் திருமணமான பெண்ணை எப்படி மணக்க முடியும் எனக் கேட்டார்கள். அப்போது அவர் எனக்கு நடந்த துயர சம்பவங்கள் அனைத்தையும் அவரது பெற்றோரிடத்தில் சொன்ன சமயம் அவர்கள் தங்கள் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இழக்க நேரிடும் எனச் சொல்லி மறுப்புத் தெரிவித்தார்கள்.
ஆனால் அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டு ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும். அதற்குப் பின்னர் நாம் இருவரும் சேர்ந்து சாகத் தயார் எனச் சொல்லிவிட்டு என்னை கட்டாயம் மணமுடிப்பேன் எனச் சொன்னார். வேறு வழியின்றி அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
முதல் திருமணம் நடைபெற்ற பின்னர் 3 மாதங்கள் கழித்து எனக்கு மறுமணம் செய்ய நாள் குறித்தனர். எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதற்கு முதல் நாள் மாலையில் என்னை மருமகளாக ஏற்றுக் கொண்ட முதல் கணவரின் பெற்றோர் எனது இல்லத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பூரண சம்மதம் எனத் தெரிவித்து விட்டு தமது மகன் கட்டிய தாலி என் கழுத்தில் இருக்கும் வரையில் அவர்களின் மருமகள் தான் நான் என்பதனை யாரும் மறுக்க முடியாது எனச் சொன்ன சமயம் எனக்கு இது என்ன புதுச் சிக்கல் எனத் தோன்றியது.
அதன் பின்னர் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நேரம் என்ன என்பதனை தெரிந்து கொண்டு அந்த சுப முகூர்த்த வேளைக்கு முன்னர் தம்முடன் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவர்கள் சொன்ன ஆணித்தரமான வார்த்தைகள் என் பெற்றோருக்கு கலக்கத்தைக் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி சம்மதித்தார்கள். அதன் படி அதிகாலை 6.00 மணிக்கு நான் அவர்களுடன் அந்தக் கோயிலிலுள் சந்தித்தேன்.
அவர்களின் மகன் கட்டிய தாலியினை அவர்களே கழற்றி கோயில் உண்டியலில் போட்டு விட்டு என்னை அருகில் உள்ள விடுதியிக்கு அழைத்துச் சென்று தனியறைக்கு அழைத்துச் சென்றனர். தனியறையில் என்னை மீண்டுமொரு முறை குளிக்கும்படி கேட்டுக் கொண்டு குளித்து முடித்தவுடன் நான் கழற்றிக் கொடுத்த அத்தனை நகைகளையும் எனக்கு அணிவித்தனர். அதுவும் தவிர அவர்களின் வீட்டுப் பத்திரத்தினையும் என்னிடத்தில் ஒப்படைத்தனர். அவர்களின் மகன் இறந்தாலும் பரவாயில்லை இனிமேல் அவர்களுக்கு மகளாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
நான் அவர்களிடத்தில் நகைகள் மற்றும் சொத்துக்கள் எதுவும் வேண்டாம் எனச் சொன்னதற்கு திருமணமாகி முதலிரவுக்கு முன்னர் தங்கள் மகன் அகால மரணமடைந்த போதிலும் கூட தாலியினை கழுத்திலிருந்து கழட்டாமல் மறு திருமணம் நடைபெறும் சமயம் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவேன் என்றும் திருமணம் நடைபெறாவிடில் கன்னி கழியாத போதிலும் கடைசி மூச்சு நிற்கும் வரையில் கழுத்தில் அவர்களது மகன் கட்டிய தாலியுடன் சுமங்கலியாகத் தான் வாழ்வேன் எனவும் விதவைக் கோலம் ஏற்க மாட்டேன் எனச் சொன்னதன் காரணமாக எனனை அவர்களின் மகளாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாத நிலையில் அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டேன். அதன் பின்னர் மீண்டும் கோயில் சன்னதிக்கு வந்தடைந்தோம்.
மூன்று குடும்பத்தார் மற்றும் மூன்று குடும்பத்தாரின் உற்றார் உறவினர் சுற்றத்தினர் முன்னிலையில் என்னை உயிருக்கு உயிராக காதலித்தவருடன் எனக்கு திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பின்னர் என் கணவர் வீட்டில் ஒரு வாரம் என்னைப் பெற்றவர்கள் வீட்டில் ஒரு வாரம் என்னை தத்தெடுத்தவர்கள் வீட்டில் ஒரு வாரம் என மாறி மாறி தங்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.
நான் எதிர்பார்த்தபடி அவர் எனக்கு வலியெடுக்கும் அளவிற்குக் கிள்ளிய அந்த மடியில் அவர் தலை வைத்துப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் நான் மிக மிக சந்தோஷமடைகின்றேன். நமக்கும் குழந்தை குட்டிகள் என ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டார்கள். எங்களின் வாழ்க்கை மிக மிக சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கின்றது.
அலுவலகத்தில் கூடப் பணியாற்றுபவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு முதலிரவு நடப்பதற்கு முன்னரே அவர் அகால மரணம் அடைந்த நிலையில் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என எதிர்பார்த்ததற்கும் முதலில் தாலி கட்டியவர் இறந்த தருவாயில் அனைவரும் என்னை ராசியில்லாதவள் என சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் என் காதலர் என்னை மறுமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லும் சமயம் அவரது பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என எதிர் பார்த்ததற்கும் என்னை உயிருக்கு உயிராக காதலித்தவர் தமது பெற்றோரிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்ன சமயம் அவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு திருமணம் நடக்குமா நடக்காதா என எதிர்பார்த்ததற்கும் மறுமணத்திற்கு முதல் நாள் முதலாவதாக தாலி கட்டியவரின் பெற்றோர் அவர்களின் மகன் கட்டிய தாலி என் கழுத்தில் இருக்கும் வரையில் நான் அவர்களின் மருமகள் தான் எனச் சொல்லும் சமயம் எதிர் காலத்தில் என்ன நடக்குமோ என எதிர் பார்த்ததற்கும் நேர் மாறாக எனக்கு திருமணம் நடந்து முதலில் தாலி கட்டியவரின் பெற்றோர் என்னை மகளாக தத்தெடுத்துக் கொள்வதாகச் சொல்லி அவர்கள் நிறைய நகைகள் அணிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டினை எனக்கு கொடுத்தது மற்றும் என் காதலரின் பெற்றோர் என்னை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்து முன்னின்று நடத்தியது மற்றும் நம் இருவரது வாழ்க்கை மிக மிக சந்தோஷமானதாக அமைந்து ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்திக்கொரு ஆணும் என இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்து பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக வாழுகின்ற நிஜ வாழ்க்கையினையும் நினைத்துப் பார்க்கும் போது எனக்கு முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் மற்றும் பூர்வஜென்ம பந்தம் ஆகியவை துணை நிற்கின்றன என்பதனை எண்ணும் போது மிகவும் சந்தோஷமடைகின்றேன்.
எனது முதல் உறவு எனது பெற்றோர். எனது இரண்டாவது உறவு என்னைத் தொட்டுத் தாலி கட்டி வாழ்ந்து வருகின்ற என் காதலரின் பெற்றோர். மூன்றாவது உறவு என் கழுத்தில் முதலில் தாலி கட்டியவரின் பெற்றோர் அதாவது என்னை மகளாக தத்தெடுத்துக் கொண்டவர்கள். இன்னமும் அவர் அடிக்கடி என் உடலில் எங்கோ ஓர் இடத்தில் கிள்ளி சந்தோஷக் கடலில் ஆழ்த்திக் கொண்டு தான் இருக்கின்றார் என்பதனை வெளியில் சொல்ல என் மனம் மறுக்கின்றது.