வைரத்தின் ஏக்கம்.
அறும்பு மீசை முளைக்கத் துவங்கிய சமயம். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலம். நானுண்டு என் படிப்புண்டு என எண்ணிக் கொண்டு என்னுடைய தந்தைக்கு தொழிலில் ஒத்தாசையாக இருந்து தந்தை சொல்லுகின்ற வெளியில் செல்லுகின்ற வேலைகளைச் செய்து கொண்டு வந்தேன். தந்தை சொல்லும் வேலைகளுக்காக அடிக்கடி வெளியில் சென்று வந்த காரணத்தால் மாலை நேரத்தில் படிக்க முடியாத சூழ்நிலை.
எனவே நான் அதிகாலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி விட்டு சரியாக நான்கரை மணிக்கு மின் விளக்கு போட்டால் அனைவரது தூக்கம் கெடும் என்பதாலும் வீட்டில் ஒரே அறை என்பதாலும் சிமிழ் விளக்கிளை ஏற்றி குறைந்த அளவு வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு பொழுது விடிவதற்குள் புத்தகங்களையும் நோட்டுகளையும் மஞ்சப்பையில் போட்டு விடுவேன். அதற்குப் பின்னர் பள்ளியில் தான் நோட்டு புத்தகங்களை வெளியில் எடுப்பேன். பள்ளியிலிருந்து திரும்பிய பின்னர் மறு நாள் தான் அதிகாலையில் படிப்பு என எனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
அவ்வாறான நாட்களில் ஒரு நாள் அதிகாலை வேளையில் மணியோசை என் செவிகளில் விழுந்தது. எனக்கு ஏற்கனவே தெரியும். ஒரு குடும்பத்தினர் அடுத்த வீட்டிற்கு புதிதாக குடி வரப் போகின்றார்கள் என்று. எப்படியெனில் முதல் நாளே குடி வருகின்ற குடும்பத்தின் பெரியவர்கள் வந்து அனைத்து இல்லத்தார்களையும் அழைத்து இருந்தார்கள். அதே காம்பவுண்டில் வசிக்கின்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் அந்த வீட்டிற்குச் செல்வதற்காக குளித்து முடித்து தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் தயாராகி விட்டேன்.
அனைவருமாகச் சேர்ந்து புதிதாகப் பால் காய்ச்சிக் குடியேறிய அந்த வீட்டிற்குச் சென்று பூஜையில் கலந்து கொண்டோம். அனைவரும் பய பக்தியுடன் வழிபாடு மேற்கொண்டனர். எனக்கு இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தான் சாப்பிட வேண்டுமே தவிர சாமி கும்பிட்டால் சாமி சோறு போடாது எனப் பேசி வந்த காலம். பால் காய்ச்சி குடிபுகுந்த வீட்டினர் தோழர் தோழியர் அனைவருக்கும் அரை டம்ளர் காய்ச்சிய பால் கொடுத்தார்கள். அனைவரும் பருகும் சமயம் நானும் பருகினேன்.
அதன் பின்னர் தேங்காய் பழம் கொண்ட தட்டினை ஏந்திக் கொண்டு அழகிய இளம் பெண் அன்று பூத்த தாமரை போன்ற புன்சிரிப்புடன் அனைவர் முன்னாலும் வந்து நிற்க அனைவரும் நெற்றியில் விபூதி குங்குமம் பூசிக் கொண்டு நறுக்கிய தேங்காய் மற்றும் வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பெண் என்னிடத்தில் வரும் சமயம் நான் விபூதி குங்குமம் எடுத்துக் கொள்ளவில்லை. அச்சமயம் அந்தப் பெண் என்னிடத்தில் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என வற்புறுத்த என்னுடைய வலது கையினை நீட்டி தேங்காய் பழம் மாத்த்pரம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ள அவள் கரங்களால் எடுத்துக் கொடுக்க நான் பெற்றுக் கொண்டேன். அதனை உன்னிப்பாக அந்தப் பெண் கவனித்தாள்.
வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பிய பின்னர் தந்தை சொன்ன வெளியில் செல்லுகின்ற வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர் அனைவரும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவர்களுடன் பேசத் தயாரானேன். நான் வருவதற்கு முன்னரே அனைவரும் படித்து முடித்து விட்டு எழுத வேண்டிய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்திருந்தார்கள். நான் பேச ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் காலையில் நான் பார்த்த அந்த அழகிய இளம் கன்னிப் பெண் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் அந்தப் பெண்ணிடத்தில் மௌனமாக நின்று கொண்டிருந்தால் அனைவரிடத்திலும் சகஜமாகப் பழக முடியாமல் போய் விடும். எனவே வாயைத் திறந்து ஏதாவது பேசலாமே என்று எனது தோழியர் அனைவரும் சொன்னார்கள். அதன் பின்னர் அந்தக் கன்னிப் பெண் தனது பெயர் மற்றும் படிப்பு விவரம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல் அனைத்தையும் சொல்லிவிட்டு அனைவருடைய பெயர்களையும் தெரிந்து கொண்டாள்.
நான் என் பெயரினைச் சொல்வதற்கு முன்னர் அவள் என்னிடத்தில் காலையில் பூஜையின் சமயம் ஏன் பிரசாதம் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கேட்டாள். அதற்கு எனது தோழர் மற்றும் தோழியர் அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவைள வழிபட்டால் சோறு தானாக வந்து விடாது. கடுமையாக உழைத்தால் தான் சோறு கிடைக்கும் என்னும் கொள்கை கொண்டவர் எனச் சொன்னார்கள்.
அதனைக் கேட்ட அந்தக் கன்னிப் பெண் நேரடியாக என்னிடத்தில் கடவுள் பக்தி இல்லை எனச் சொல்லி விட்டு விபூதி குங்குமம் எடுத்துக் கொள்ளாமல் நான் தேங்காய் பழம் எடுத்துக் கொடுத்த சமயம் மாத்திரம் சாப்பிட்டீர்களே அதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்டாள். அதற்கு நானாகவே தட்டிலிருந்து எடுத்துக் கொண்டால் அது பிரசாதம் அதனை சம்மந்தப் பட்டவர்கள் கொடுத்தால் அது விருந்தோம்பல் என பதில் சொன்னேன்.
ஆனால் அருகில் இருந்த மற்ற தோழிகள் தேங்காய் பழம் ஆகியவற்றை அந்த அழகிய இளம் கன்னிப் பெண்ணின் கைகள் பட்டு சாப்பிட வேண்டும் என்று தானே நினைத்தீர்கள்? அது நடந்து விட்டதல்லவா? எனக் கேட்டார்கள். நான் அவர்களிடத்தில் அவ்வாறெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என உதட்டளவில் சொல்லி விட்டு பின்னர் யோசித்துப் பார்த்தேன். இரண்டு மூன்று நாட்களில் அது உண்மை என்பதனை உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் தனிமை கிடைக்கும் சமயத்தில் எனது பெயர் மற்றும் படிக்கின்ற வகுப்பு விவரங்களையும் அடிக்கடி வெளியில் சென்று வருவதன் நோக்கம் பற்றியும் தெரிவித்தேன்.
காலங்கள் கடந்தன. என் கண்கன் அவளைத் தேட ஆரம்பித்தன. அவளும் என்னைத் தேட ஆரம்பித்தாள். நம் இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகிக் கொண்டிருந்ததனை கவனித்த தோழியர் கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் நம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாகக் கனிந்தது. நானும் அந்தப் பெண்ணும் மிக மிக நெருக்கமாகப் பழகி விட்டோம். கடவுள் நம்பிக்கையே இல்லாத எனக்கு அவள் மூலம் கடவுள் மீது பக்தி ஏற்பட்டது. எனது தாயார் அந்தப் பெண்ணை மருமகளாக அடைய விருப்பப்பட்டு அதற்கான பூஜையினை நாம் இருவரும் சேர்ந்து செய்வதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தார்கள். நம் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
அவளது முதலாவது பிறந்த நாளுக்கு நான் புத்தாடை வாங்கிக் கொடுக்க என் விருப்பத்தை தெரிவித்த சமயம் தமது தாயார் புத்தாடை வாங்கிக் கொடுத்து இருப்பதால் வேறு ஏதேனும் வாங்கித் தாருங்கள் எனச் சொல்ல ஒரு தங்கத்தாலான ஆபரணம் ஒன்றினை பரிசளித்தேன். அவள் எனக்கு வைரக் கல் பதித்த தங்கத்தாலான மோதிரத்தினை என் விரல்களில் அணிவித்து கண்டு மகிழ ஆசைப்பட்டாள். ஆனால் முடியவில்லை.
நான் அவளை திருமணம் செய்து கொள்ள நினைப்பது பற்றி நமது பெற்றோர்களிடத்தில் தெரிவிப்பதற்கு முன்னரே அவளது தாயார் நம் இருவரிடத்தில் அவர்களது எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். எனது வீட்டிலும் அதே நிலை. இவ்வாறான சூழ்நிலையில் நான் தனியாக ஏதேனும் வாணிபம் செய்து அல்லது வேலைக்குச் சென்று சுயமாக சம்பாதித்தால் தான் அவளை என் மனைவியாக அடைய முடியும் என்னும் முடிவு எடுப்பதில் அவள் உறுதுணையாக இருந்தாள்.
வேலை கிடைப்பதற்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த எனக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தி வேலை கிடைப்பதற்கு என்னோடு சேர்ந்து அவளும் பிரார்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்தாள். எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட ஆரம்பித்தாள். எனது முயற்சியும் அவளது வேண்டுதலும் வீண் போகவில்லை. எனக்கு நல்லதொரு வேலை கிடைத்தது.
அவளை முதன் முதலாகப் பார்த்ததிலிருந்து வேலைக்குச் செல்லும் நாள் வரையில் நாம் இருவரும் மிக மிகச் சந்தோஷமாக இருந்தோம். நான் வேலையில் சேர்ந்த பின்னர் மீண்டுமொரு முறை நம் இருவரது பெற்றோர்களிடத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டமைக்கு மறுத்து விட்டார்கள். அவள் பதிவுத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் நான் சற்று பொறுத்திருந்த தருணத்தில் அவளை இன்னொருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டனர். நான் நடைப் பிணமாக அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்.
தங்க மோதிரத்தில் ஜொலிக்க வேண்டிய வைரம் வெள்ளி மோதிரத்திற்கு அடிமையாக விட்டது. காரணம் நம் இருவரது குடும்பத்தினருக்கிடைய உள்ள அந்தஸ்து. இருந்தாலும் என்னால் அவளை மறக்க முடியவில்லை. அதே நிலை தான் அவளுக்கும். மலர்களைத் தேடி வண்டுகள் வரலாம். ஆனால் வண்டினைத் தேடி மலர்கள் செல்ல முடியாது என்பது போல நான் அவளது இல்லம் சென்று அவளைக் கண்டு பேசி வருகின்றேன். அவளால் எனது இல்லத்திற்கு வர முடியாத படிக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு.
தங்க மோதிரத்தில் ஜொலிக்க வேண்டிய வைரம் வெள்ளி மோதிரத்தில் பதிக்கப்பட்டு விட்ட காரணத்தால் தங்கம் வைரம் இல்லாமல் தவித்தது. இருந்தாலும் அவளது அறிவுரைகள் மற்றும் எனது தாயாரின் வற்புறுத்தல் ஆகியவற்றின் காரணமாக நானும் திருமணம் செய்து கொண்டேன்.
தங்க மோதிரத்தில் வைரம் பதிந்திருந்தால் ஜொலித்துக் கொண்டு நீண்ட நாள் இருக்கும். ஆனால் தங்க மோதிரத்தில் பதிக்க வேண்டிய வைரம் வெள்ளி மோதிரத்தில் பதிக்கப் பட்டு விட்டமையால் வைரத்தின் பிரகாசம் எடுபடவில்லை. நாளடைவில் வெள்ளி கருத்து விட்ட காரணத்தால் வெள்ளியிலிருந்து வைரம் மட்டும் பிரிந்து தனிமையாகி விட்டது. தங்கம் வைரம் இல்லாமல் தற்போது வரையில் தவித்துக் கொண்டிருக்கின்றது.
சூரியனைக் கண்டால் தாமரை மலர்வது போல நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சமயம் மாத்திரம் சற்று நேரம் சுகமான சோகங்களைப் பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக இருப்போம். சற்று நேரத்தில் பிரிவதற்கு மனமில்லாமல் கண்களில் நீர் மல்க விடை பெறுவோம்.
காலங்கள் கடந்தன இருவருக்கும் குழந்தைகள் பிறந்து பேரன் பேத்திகளுக்கு திருமண வயது நெருங்கி விட்ட போதிலும் நான் அவள் மீது வைத்துள்ள அன்பும் அவள் என் மீது வைத்துள்ள அன்பும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதிலிருந்து வரன் தேடுதல் வரையில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவுகளும் எடுத்ததில்லை.
முதுமைக் காலத்தில் மனக் கஷ்டம் பணக்கஷ்டம் உடற் கஷ்டம் என்ற மூன்றும் வரும் சமயம் நாம் நமக்குப் பிறந்துள்ள குழந்தைகளின் தயவில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை. எனக்கு வருமானத்திற்கு வழியிருப்பதன் காரணமாக அந்தப் பிரச்சினை எழவில்லை. ஆனால் அவளுக்கு வயிற்றுப் பசியினைப் போக்க வாரிசுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை. நாம் இருவரும் உயிரோடு இருப்பதே தமக்குப் பாரம் என நினைக்கும் நம் இருவரது வாரிசுகள் நமக்குப் பிறந்த நாள் என்றால் அதனை யார் நினைவில் கொள்ள நினைப்பார்கள்.
எனது பிறந்த நாளன்றும் அவளது பிறந்த நாளன்றும் நாம் இருவரும் திருமண வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் போய் தனித்தனியே இருந்தாலும் கூட நாம் எங்கு இருக்கின்றோமோ அந்தந்த இடங்களில் இருந்தவாறு கோயில்களுக்குச் சென்று எனக்கு மனைவியாக வாய்க்காத அவள் நன்றாக தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என நானும் அவளுக்கு கணவனாக வாய்க்காத நான் நன்றாக தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என அவளும் பிரார்த்தனை மேற்கொள்வது வாடிக்கையாகி விட்டது.
கடைசியாக அவளுடன் தொலைபேசியில் உரையாடிய சமயம் நம் இருவரது பேரன் பேத்திகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் சமயம் பேசிக் கொள்ளலாம் என அவள் சொன்ன காரணத்தால் அந்த நாளினை எதிர் நோக்கி காத்திருந்தேன். ஆனால் அவளது பேத்தியின் திருமண நாளன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடியாத படி கட்டுப்பாடுகள் வந்தமையால் அவளது ஆசை நிராசையாகி விட்டது.
எனக்கு வேலை கிடைப்பதற்கு நானும் அவளும் ஒன்றாகச் சேர்ந்து வழிபட்ட அந்த தெய்வத்தை அவளது பிறந்த நாளன்று தரிசனம் செய்து அவள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பலப்பல வருடங்களாக வழிபட்டு வருகின்றேன். அதே போல எனது பிறந்த நாளன்று அவள் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று எனக்காகப் பிரார்த்தனை மேற் கொள்கின்றாள்.
நம் இருவரது வாரிசுகள் நம் பிறந்த நாளை நினைவில் கொள்ளா விட்டாலும் கூட நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து கடவைள வழிபடுகின்றோம். அவ்வாறான வழிபாடு கூட சென்ற மூன்றாண்டுகளாக நிறைவேறவில்லை என்னும் சமயம் இருவருக்கும் சற்று மனச் சங்கடம். அந்த மனச் சங்கடம் எனது இல்லத்தில் நிகழவிருக்கும் திருமண வைபவ விழாவில் அவளை நேரில் சென்று அழைக்கும் சமயத்திலோ அல்லது அவள் திருமண விழாவில் பங்கேற்கும் சமயத்திலோ நிச்சயம் நிறைவேறும். அது நம் இருவருக்கும் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் என எண்ணி ஏங்கி எதிர் பார்த்துக் காத்திருக்கின்றோம். நிச்சயம் நம் எண்ணம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை இருக்கின்றது.
எனது வீட்டில் நடக்கப் போகின்ற அடுத்த திருமணத்திற்கு அவளை அழைக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் விருப்பம். அதற்குப் பின்னர் நாம் இந்த பூவுலகை விட்டுச் செல்ல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றோம். நாம் இருவரும் காதலிக்கும் சமயம் என்னுடன் தங்க மோதிரத்தில் வைரமாக ஜொலிக்க நினைத்த அவளது எதிர்காலம் வெள்ளி மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரமாக அமைந்து அந்த வெள்ளி கருகிய நேரத்தில் வைரம் மாத்திரம் தன்னந்தனியாக இருப்பதனை எண்ணும் போது நாம் இருவரும் எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் நமக்கு அமைந்த நிஜ வாழ்க்கையினையும் எண்ணி நாம் இருவரும் கண் கலங்குகின்றோம். நாம் இருவரும் சந்தோஷமாக இருந்த நாட்கள் மிகக் குறைவானதாக இருந்தாலும் கூட அந்த சந்தோஷமான நாட்களை எண்ணி உள்மனதில் சந்தோஷமடைகின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வாறில்லை.