பேரின்பம் பேரானந்தம்.
சிறிய வயதில் பள்ளியில் படிக்கும் சமயத்திலும் சரி. பருவ வயதில் கல்லூரியில் படிக்கும் வயதிலும் சரி. ஒரே பாதை வழியாகத் தான் நான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வருவது வழக்கமாக இருந்தது. அந்த சமயங்களில் நான் செல்லும் பாதையில் உள்ள ஒரு வசதியுள்ள பெரிய பங்களாவை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வியந்த படி சென்று வருவேன்.
அந்த பங்களாவின் மெயின் கேட் கதவு எப்போதும் பூட்டியே கிடக்கும். ஒருவர் மட்டும் கதவினைத் திறந்து விடுவதற்கும் கதவினை மூடுவதற்கும் அடிக்கடி வெளியில் வந்து செல்வார். வேறு யாருடைய நடமாட்டமும் வெளியில் தெரியாது. சில சமயங்களில் யாராவது வந்தால் வீட்டு மெயின் கேட் கதவினைத் திறந்து அவரே வீட்டிற்குள் அழைத்துச் செல்வார்.
நான் அந்தப் பெரிய பங்களாவினைப் பார்க்கும் சமயத்தில் என் தந்தையின் வயதுடையவரைப் பார்த்து மிகவும் வருத்தப் படுவேன். காரணம் என் தந்தை வயதுடைய அவர் என் தந்தை படித்த அளவிற்குப் படித்திருந்தால் என் தந்தை பணியாற்றி வருவது போல மிகப் பெரிய அலுவலகத்தில் அதிகாரியாக இருந்திருப்பார் என்னும் எண்ணம். ஆனால் அது தவறு என பிற்காலத்தில் எனக்குத் தெரிய வந்தது.
நான் அவரிடத்தில் ஒரு நாள் பேசினேன். அப்போது தான் தெரிந்தது அந்த வீட்டில் வசித்து வரும் நபர்களில் அவர் தான் குறைந்த வயதுடைய நபர் என்பது. வீட்டு வேலைக்கு வந்து செல்லும் பணியாட்கள் தவிர உறவினர்கள் சில நேரங்களில் தென்படுவார்கள்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த பங்களா களை கட்டி விடும். வெளியூர்களில் படிக்கும் வாரிசுகள் அனைவரும் வீட்டிற்கு வந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கிய பின்னர் ஹாஸ்டல்களுக்குத் திரும்புவார்கள்.
அந்த வீட்டில் அண்ணன் தம்பிகள் மூன்று பேர். அக்காள் தங்கைகள் மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே அருகாமையில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றார்கள். அண்ணன் தம்பிகள் மூன்று பேர் மட்டும் தத்தமது மனைவி மார்களுடன் கூட்டுக் குடும்பமாக மொத்தம் ஆறு பெரியவர்கள் அந்த வீட்டில் வசித்து வருகின்றார்கள்.
அவர்களின் வாரிசுகள் ஆண்கள் 6 பேர் பெண்கள் 3 பேர் அனைவருமாகச் சேர்த்து மொத்தம் 9. ஆக வாரிசுகள் மற்றும் பெரியவர்கள் ஒன்று சேர்த்தால் மொத்தம் 15 நபர்கள்.
அந்த பெரிய வீட்டில் அண்ணன் தம்பிகள் மற்றும் திருமணமாகி விட்ட அக்காள் தங்கைகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் அந்த வீடு களையாக இருக்கும். காரணம் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை. பெரியவர்கள் மட்டும் இருந்தால் களையில்லாமல் இருக்கும் அதற்கான காரணம் அவர்களின் வயது முதிர்வு.
நான் கல்லூரிப் படிப்பு முடித்து பட்டம் பெற்றவுடன் எனது பெற்றோர் எனக்குத் திருமணம் செய்ய தரகர்கள் மூலமாக ஜாதகங்களை கொடுத்தனர். அவ்வாறு பெற்றுக் கொண்ட தரகர்கள் பெண் அழகாகவும் படித்தும் அடக்கமாகவும் இருப்பதாலும் ஜாதகத்தில் தோஷங்கள் எதுவும் இல்லாததாலும் விரைவில் வரன் அமைந்து விடும் என சந்தோஷமாகத் தெரிவித்தனர்.
நான் கல்லூரிப் படிப்பினை முடித்த சில மாதங்களில் அந்த வீட்டில் வசித்து வருகின்ற நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கல்லூரிப் படிப்பினை முடித்தவர்கள் பணியில் சேர்ந்து கொண்டு அந்த வீட்டிலேயே வசிக்க ஆரம்பித்தார்கள். அந்த வீட்டு வாரிசுகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினார்கள்.
வசதி வாய்ப்புகள் எவ்வளவு இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்த்து ஜோதிடர்கள் வழிகாட்டுதல்களின் படி தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் தமது வீட்டிற்கு வரப்போகின்ற வரன்களின் குடும்ப அந்தஸ்து மற்றும் சொத்து மற்றும் மணமகள் வீட்டிலிருந்து சீர்வரிசைகள் மற்றும் வரதட்சிணை எதுவும் எதிர்பார்ப்பதில்லை என்றும் குறியாக இருந்தார்கள்.
அதே போல அந்த வீட்டுப் பெண்கள் வாழ்க்கைப் பட்டுப் போகும் இடங்களின் வசதி வாய்ப்பு மற்றும் அந்தஸ்து பற்றியும் அவர்கள் கவலைப் படவில்லை. வரப்போகின்ற மாப்பிள்ளை வீட்டார் வசதி குறைவானவர்களாக இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் எப்படியும் அந்தஸ்தினை கட்டாயம் உயர்த்தி முன்னுக்குக் கொண்டு வந்து விடலாம் என்னும் தீர்க்கமான நம்பிக்கையில் இருந்தனர்.
தரகர்களிடத்தில் எனது ஜாதகத்தைக் கொடுத்த ஓரிரு மாதங்களில் ஒரு தரகர் எனது இல்லத்திற்கு வந்து நான் அண்ணாந்து பார்த்த வீட்டிலுள்ள ஒரு வரனின் ஜாதகத்துடன் எனது ஜாதகம் நன்கு பொருந்தியிருப்பதாகவும் நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க வரப் போவதாகவும் தகவல் சொன்னார்.
எனது தந்தை அது பெரிய இடமாயிற்றே அவர்களின் அந்தஸ்துக்கும் நமது அந்தஸ்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. இந்நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சீர் வரிசைகள் செய்ய முடியுமா என யோசித்த சமயம் தரகர் ஜாதகப் பொருத்தம் மற்றும் மனப் பொருத்தம் இருந்தால் மாத்திரம் போதும் மற்ற எவற்றையும் மணமகன் வீட்டார் எதிர் பார்க்கவில்லை என்று தெரிவித்த சமயம் எனது பெற்றோருக்கு சற்று தயக்கமாகவே இருந்தது.
இருந்தாலும் பெண் பார்ப்பதற்கு நாள் குறித்து பெண் பார்த்துச் சென்ற ஓரிரு நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இரண்டு மாத காலத்தில் திருமணமும் நடைபெற்று விட்டது.
அண்ணன் தம்பிகள் மூன்று பேர் சேர்ந்து ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பத்திற்கு நான் முதலாவது மூத்த மருமகளாக செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
நான் அந்த வீட்டிற்கு மருமகளாகச் சென்ற பின்னர் என்னுடைய குடும்பத்தார் என்னைக் காண வருகின்ற போது அவர்களைக் கவனிக்க முடியாத அளவிற்கு அனைத்து வரவு செலவு கணக்குகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டிய நிலைமை.
எனது கணவர் என்னைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார். அதே போல குடும்பத்தில் முதலாவது மூத்த மருமகள் என்பதால் குடும்பத்தார் என்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் என்னும் நிலைமை ஏற்பட்டு விட்டது. சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சிறு வயதில் நான் அண்ணாந்து பார்த்து பிரமித்த அந்த பெரிய பங்களாவுக்கு நான் குட்டி எஜமானி. எனக்கு உள்ளுர மிக்க சந்தோஷம்.
முதலாவது மருமகளான நான் அந்த வீட்டில் வலது கால் எடுத்து வைத்த நேரமோ என்னமோ அந்த வீட்டிலுள்ள திருமண வயதுடைய எல்லோருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் இந்த வீட்டில் என்னையும் சேர்த்து ஆறு மருமகள்கள் மற்றும் வந்து செல்லப் போகின்ற மகள்கள் குடும்பம்.
இந்நிலையில் அனைவருக்கும் திருமணம் செய்து முடித்தால் மகன்களுக்கு ஆறு தனி அறைகளுகும் பெரியவர்களுக்கு மூன்று தனி அறைகளும் அதற்கேற்றார் போல் சமையலறையும் உணவு பரிமாறும் இடமும் என மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு வீட்டினை விரிவு படுத்தும் அளவிற்கு போதிய பரப்பளவு இல்லாததால் புதிதாக ஒரு பங்களா கட்டிக்கொண்டு குடி போவது என முடிவு எடுத்தார்கள்.
அச்சமயத்தில் என்னிடத்தில் கருத்துக் கேட்ட போது ஒரே பங்களாவை பெரியதாக வாங்குவதைக் காட்டிலும் அருகருகே மூன்று பங்களாக்களை தனித்தனியே வாங்கி விட்டால் வாரா வாரம் ஒருவர் வீட்டில் மற்ற குடும்பத்தார் வருகை தந்து விருந்து போல சாப்பிட்டு மகிழலாம் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் வரப்போகின்ற சம்மந்தி வீட்டார் விருந்தினர்களாக வரும் சமயத்தில் கூச்சிமின்றி ஒன்றிரண்டு நாட்கள் அதிகம் தங்கிச் செல்ல முடியும் எனவும் மருமகன்கள் வரும் சமயத்தில் அனைவரும் ஒரு வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு மகள் மருமகனுக்கு தனி அறையினை ஒதுக்கி அவர்களையும் நன்கு உபசரிக்கலாம் எனவும் தெரிவித்தேன். எனது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் பட்டது.
அதன் பின்னர் ஜோதிடரை கலந்தாலோசித்து வீட்டு புரோக்கர்களிடத்தில் விவரம் தெரிவித்தனர். மூன்று பங்களாக்களை அருகருகே கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கு முடிவு செய்தனர்.
ஒரு வீடு கட்டுவதற்கு மிக மிக முக்கியமான தேவை தண்ணீர். அதற்காக பங்களா கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கு நீருற்று மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பார்த்து சொல்லக் கூடிய வல்லுனர்களை அழைத்தனர்.
குடும்பத்தாருக்குப் பிடித்திருந்த ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் உள்ள பத்துப் பதினைந்து காலி மனைகளை காண்பிப்பதற்கு சென்ற சமயம் நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிபுணர் ஐந்து பங்களாக்களுக்கான இடங்களையும் தேர்வு செய்து கொடுத்தார்.
ஒரு இடத்தில் நாவல் மரம் இருந்தது. இன்னொரு இடத்தில் அத்தி மரம் இருந்தது. இன்னொரு இடத்தில் நாணல் என்று சொல்லப்படுகின்ற அருகம்புல் முளைத்து இருந்தது. இன்னொரு இடத்தில் கரையான் புற்று இருந்தது. நாவல் மரம் மற்றும் அத்தி மரம் வளர்ந்துள்ள இடத்திற்கு மிக மிக அருகில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கும் எனவும் கரையான் புற்று உள்ள இடத்தில் நிலத்தடி நீர் குடிநீர் போல சுவையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அவை அனைத்திற்கும் அவர் சொன்ன ஒரே காரணம் ஈரம் இருக்கும் இடத்தில் இலைகள் உதிராது என்பது தான். நான் எனது ஆர்வமிகுதியின் காரணமாக நிலத்துக்கு அடியில் நீர் இருப்பதனைக் கண்டு பிடிக்க வேறு ஏதேனும் வழிகள் உண்டா எனக் கேட்டதற்கு பசுமாடுகளை அந்த காலியிடங்களில் மேய விட்டால் கடைசியில் அவை ஓய்வு எடுக்கும் இடத்திலோ அல்லது பசுவிடத்தில் பால் குடிப்பதற்காக அவிழ்த்து விடப்படும் கன்றுக்குட்டி எங்கு சுற்றி வந்து சிறுநீர் கழிக்கின்றதோ அந்த இடத்திலும் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆறறிவு படைத்த மனிதனால் உணர முடியாத நிலத்தடி நீர் மட்டத்தினை ஐந்தறிவு படைத்த கன்றுக்குட்டியினால் உணர முடிகின்றது என்பதனைக் கேள்விப்பட்ட எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
நிலத்தடி நீர்மட்டம் பார்க்கும் நிபுணர் சுட்டிக்காட்டிய இடங்களில் போர்வெல் போடுவதற்குப் பதிலாக கிணறு தோண்டுவது என முடிவு செய்தார்கள். காரணம் கிணறு இருக்கும் இடத்திற்கு அருகில் துளசி மாடம் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்தது. மூன்று இடங்களில் ஜல மூலை என கருதப்படும் ஈசான்ய மூலையில் கிணறுகள் தோண்டியதில் இரண்டு இடங்களில் நன்றாக தண்ணீர் இருந்தது.
மூன்றாவது இடமான கரையான் புற்று இருந்த இடத்தில் கிணறு தோண்டி தண்ணீர் வரவில்லை. எனவே மீண்டும் அந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை செய்தார்கள். அப்போது கிணறு தோண்டியுள்ள இடத்தின் அடிப்பகுதியில் விபூதி அல்லது சந்தன பொடி இவற்றுள் ஏதேனும் ஒன்றினை தண்ணீரில் கரைத்து சுற்றுச்சுவர் மற்றும் அடிப்பகுதியில் தெளித்து விடுமாறும் விபூதி அல்லது சந்தன பொடி எந்தப் பக்கத்தில் காயாமல் ஈரமாக இருக்கின்றதோ அந்த பக்கவாட்டில் கடப்பாரை கொண்டு துளையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். அவர் அவ்வாறு சொன்னபடி செய்த பின்னர் கிணற்றில் நீர் வந்த போதிலும் அதிக ஆழத்தில் இருந்தது. ஆனால் மிகவும் சுவையாக இருந்தது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஏதேனும் வழிகள் உண்டா என விசாரிக்க நான் என் கணவருடன் அதே நீரூற்று நிபுணரையும் ஜோதிட சாஸ்திர விற்பன்னரையும் பார்த்த சமயம் கீழ்க்காணும் மரங்களின் இலைகளை ஒன்றாக வைத்து பூஜை செய்த பின்னர் அந்த கிணற்றில் நீரில் மிதக்கும் படி போடுமாறு அறிவுறுத்தினர்.
1. மா இலை
2. வேப்ப இலை
3. பலா இலை
4. மூங்கில் இலை
5. எலுமிச்சை அல்லது நெல்லி இலை.
அதற்குப் பின்னர் நான் என் கணவருடன் ஒன்றாக அமர்ந்து ஹோமம் செய்து மேலே சொல்லப்பட்ட ஐந்து இலைகளையும் ஒன்றாகச் சேர்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்த கிணற்றில் போட்ட இரண்டு மூன்று நாட்களில் 80 அடி ஆழத்தில் இருந்த நீர் மட்டம் 20 அடி ஆழத்திற்கு வந்தது.. அதுவும் தவிர கிணற்று நீர் மிக மிகச் சுவையாக குடி நீர் போல இருந்தது. நானும் என் கணவரும் ஒன்றாக அமர்ந்து ஹோமம் செய்து முடித்து நீர் பெருகிய காரணத்தால் அந்த இடத்தில் உருவாகும் வீடு நான் வாழ்க்கைப் பட்டு சென்ற குடும்பத்தாருக்கு என ஒதுக்கப்பட்டது.
மற்ற வீடுகள் என் கணவரது சித்தப்பாக்களின் வாரிசுகளுக்கு திருமணம் ஆனவுடன் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. அண்ணன் தம்பிகள் ஆறு பேருக்கும் அக்காள் தங்கைகள் மூன்று பேருக்கும் திருமணம் நடைபெறும் வரையில் பழைய பெரிய பங்களாவிலேயே அனைவரும் வசித்து வந்தோம்.
எனக்கு ஒரு அதிர்ஷ்டம். எல்லா திருமண நிகழ்வுகளுக்கும் எனக்கு பட்டுப் புடவைகள் கிடைத்தன. பள்ளி சீருடை மட்டுமே அணிந்து வந்த எனக்கு பட்டுப் புடவைகள் நிறைய கிடைத்தது என்பதனை எண்ணும் போது எல்லையில்லா ஆனந்தம்.
அனைவருக்கும் திருமணமான பின்னர் மூன்று பெரிய வீடுகளில் குடிபெயர்ந்தோம். வாராவாரம் ஒருவர் வீட்டில் அனைத்து குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்ந்தோம்.
மூன்று பெரிய வீடுகளிலும் அனைவரும் குடி பெயர்ந்த பின்னர் வீட்டில் முதலாவது மருமகளாகச் சென்ற என்னிடத்தில் நான் சிறிய வயதில் அண்ணாந்து பார்த்த அந்த பெரிய பங்களாவின் சாவி ஒப்படைக்கப்பட்டது. மூன்று வீடுகளுக்கும் வருகை தருகின்ற உற்றார் உறவினர் சொந்தங்களை அந்த பங்களாவில் தங்கவைத்து அவர்களை உபசரித்து வழியனுப்பும் பெரிய பொறுப்பு என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. இது எனக்கு சுகமான சுமையாக இருந்தது.
பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வந்த சமயங்களில் அந்த பெரிய பங்களாவினை அண்ணாந்து பார்த்து வியந்த சமயத்தில் நான் நன்றாகப் படிக்க வேண்டும். பட்டம் பெற வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். இதே போன்றதொரு பெரிய பங்களாவினை சொந்தமாக வாங்க வேண்டும் என எதிர்பார்த்ததற்கும் ஜாதகம் மட்டுமே பொருந்தியதன் காரணமாக நான் அதே வீட்டிற்கு மருமகளாக சென்ற நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை எண்ணும் போது எனக்கு ஒரே பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றது.
அதனை விடப் பெரிய ஆச்சர்யம் எனக்குக் குழந்தை பிறந்த சமயத்தில் குழந்தையுடன் கொஞ்சி விளையாட அனைத்து சொந்தங்கள் காட்டிய ஆர்வமும் குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் அனைவரும் காட்டும் உற்சாகமும்.
நான் மிக மிக சந்தோஷமாக இருக்கின்றேன் எனது குழந்தைக்கு நானே எதிர் பார்க்காத வகையில் நிறைய அரவணைப்பு கிடைக்கின்றது.
இது எனக்கு பேரின்பம் பேரானந்தம்.