எதிர்பாராத நிச்சயதார்த்தம் மற்றும் திடீர் திருமணம்.
படித்து முடித்து பணியாற்ற ஆரம்பித்தவுடன் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு உண்டான ஜாதகப் பரிவர்த்தனை பெண் பார்க்கும் படலம் ஆகியவை முடிந்து விட்டது. மாப்பிள்ளை வந்து பெண்ணைப் பார்க்க வேண்டும். மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு மாப்பிள்ளையையும் பிடித்திருந்தால் இன்னும் மூன்று மாத காலத்தில் திருமணம் நடைபெற்று விடும் என நான் மிக மிக சந்தோஷமாக இருந்தேன்.
என்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்றவர்கள் மாப்பிள்ளையுடன் வந்து என்னைப் பார்த்து பிடித்திருக்கின்றது என்று சொல்லி விடுவார்கள் என நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வரவில்லை. வரவே இல்லை. வரப் போவதாகவும் தெரியவில்லை. அதற்குக் காரணம் எனக்கோ என் குடும்பத்தாருக்கோ தெரியவில்லை. எனது குடும்பத்தார் திருமண தரகரை வரவழைத்து என்னவென்று விசாரித்த சமயம் திருமண தரகர் அடுத்த வரன் நிச்சயம் முடிவாகி விடும் என்று மட்டும் சொன்னாரே தவிர மணமகன் வீட்டாருக்கு என்னைப் பிடித்திருந்த போதிலும் மாப்பிள்ளையுடன் என்னைப் பார்க்க வராததற்கு காரணம் என்னவெனச் சொல்லவில்லை.
எனது பெற்றோர் திருமண தரகரிடத்தில் எவ்வளவோ துருவித் துருவி கேட்டுப் பார்த்தும் கூட திருமண தரகர் அடுத்த சம்மந்தம் பற்றி பேசலாம் இந்த சம்மந்தம் பற்றிக் கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார். என்னுடைய பெற்றோர் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் நன்றாக இருக்கின்றது. இருவருக்கும் நல்ல வருமானம் இருக்கின்றது. இரண்டு வீட்டாருக்கும் நல்ல அந்தஸ்து இருக்கின்றது. அப்படி இருக்கையில் பேசி முடித்து விடலாமே எனச் சொல்லிக் கூட பார்த்து விட்டனர். ஆனால் திருமண தரகர் அந்த சம்மந்தம் பற்றி மட்டும் என்னிடத்தில் பேச வேண்டாம் எனத் தெரிவித்தார்.
அதன் பின்னர் மீண்டும் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. என்னைப் பெண் பார்க்க வருவார்கள். நானும் சீவி முடித்து சிங்காரித்து பட்டுப்புடவை கட்டிக்கொண்டு கழுத்தில் நெக்லஸ் கையில் வளையல் காதில் ஜிமிக்கி கம்மல் போட்டுக் கொண்டு கையில் காபி டம்ளர்களுடன் அவர்கள் முன்னர் போய் சோளக் கொல்லை பொம்மை போல போய் நிற்பேன்.
பெண் பார்க்க வந்தவர்கள் என்னிடத்தில் என் பெயர் படிப்பு மற்றும் பணியாற்றும் விவரம் மற்றும் தாய் தந்தையர் தொழில் உடன் பிறந்தோர் எண்ணிக்கை மற்றும் தாய் மாமன் சித்தப்பா சித்தி மற்றும் உறவினர்கள் தாத்தா பெரியப்பா போன்றோர் விவரம் அனைத்தையும் கேட்பார்கள். நான் ஒரே பதிலை திரும்பத் திரும்ப சொல்லி அலுத்து விட்டேன்.
ஆரம்பத்தில் என்னைப் பெண் பார்க்க வந்த சமயத்தில் பெண் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு காரம் காபி அல்லது டீ அல்லது குளிர்பானம் என கொடுத்தோம். கழுதை தேய்ந்து கட்டெரும்பாயிற்று எனச் சொல்வது போல அந்த உபசரணைகள் குறைந்து பெண் பார்க்க வருபவர்களுக்கு காபி மாத்திரம் கொடுத்து அனுப்பினால் போதும் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம்.
பெண்ணை பிடித்திருக்கின்றது எனச் சொல்லி மீண்டுமொரு முறை என்னைப் பார்க்க வந்தார்களேயானால் அச்சமயம் இனிப்பு காரம் மற்றும் காபி எனவும் மாப்பிள்ளையுடன் வந்தால் குளிர்பானம் எனவும் மாறி விட்டோம். அப்படியிருந்தும் எனக்குச் சரியான வரன் அமையவில்லை.
ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருக்கலாம். அதன் காரணமாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கலாம் எனக் கருதி மீண்டுமொரு முறை ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடர்களிடத்தில் சென்று காண்பிக்க எனது பெற்றோர் ஆரம்பித்தனர். எனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் எனக்கு திருமண யோகம் வந்து விட்டதாகவும் தோஷங்கள் எதுவுமில்லை எனவும் பரிகாரங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை எனவும் சொன்னார்கள். ஆனால் திருமணம் நடக்குமா என்பது கேள்விக் குறியாக இருந்தது.
ஒரே ஒரு ஜோதிடர் என்னை பெண் பார்க்க வரும் சமயத்தில் எனது வீட்டினைத் தவிர வேறு எங்காவது ஒரு இடத்தில் அழைத்துச் சென்று பெண்ணைக் காண்பிக்குமாறு தெரிவித்தார். அதற்குக் காரணம் கேட்டோம்.
அக்கம்பக்கத்தினர் யாராவது உங்களுக்கு வேண்டாதவர்கள் இருக்கலாம். பெண் பார்க்க வருபவர்களிடத்தில் பெண்ணைப் பற்றியோ அல்லது குடும்பம் பற்றியோ விசாரணை செய்யும் சமயம் தவறான செய்திகள் ஏதேனும் சொன்னால் கூட திருமணம் தள்ளிப் போக வாய்ப்புண்டு. நாம் அனைவரிடத்திலும் சகஜமாகப் பழகுகின்றோம். யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை என எண்ணாமல் அந்த ஜோதிடர் சொல்வதனை ஒரு முறை பின்பற்றிப் பார்க்க முடிவு செய்தோம்.
ஜோதிடரது அறிவுறைகளுக்குப் பின்னர் எனது உறவினர்கள் வீடுகளில் என்னைப் பெண் பார்க்க வரன்களை வரச் சொன்னோம். என்னைப் பெண் பார்க்க வரப்போகும் மாப்பிள்ளைக்கு என்னைப் பிடித்திருந்தால் போதும் எனக்குப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கூட சீர்வரிசைகள் மற்றும் நகைகள் போடக்கூட எனது பெற்றோர் தயாராகி விட்டனர். அப்படியும் கூட எனக்குத் திருமணம் கூடி வரவில்லை.
என்னைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் மருத்துவர்களின் பெற்றோர். பொறியாளர்களின் பெற்றோர். பேராசிரியர்களின் பெற்றோர். கணினித் துறைகளில் பணியாற்றுவோரின் பெற்றோர். அரசு அலுவலகங்களிலர் பணியாற்றுவோரின் பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் இருந்தனர். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் அவர்களைப் பிடித்திருந்தும் யாரும் என்னை மணமுடிக்க முன்வரவில்லை.
எனக்குத் திருமணம் நடக்குமா நடக்காதா காலம் முழுவதும் கன்னி கழியாமல் இருக்க வேண்டியிருக்குமா என்னும் எண்ணம் எனக்குள் வர ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில் எனது பெற்றோர் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொள் என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. தொலை பேசியில் பேசியவர்கள் என்னைப் பெண் பார்க்க இரண்டு மூன்று நாட்களில் வரப்போவதாகவும் நான்கைந்து நாட்களில் திருமணத்தை முடித்துக் கொண்டு மணமகளை அழைத்துக் கொண்டு செல்லவிருப்பதாகவும் தகவல் வந்தது. எங்களிடத்தில் ஜாதகமோ பெண்ணின் புகைப்படமோ எதுவும் கேட்கவில்லை. ஆனால் ஒரு வார காலத்திற்குள் திருமணம் செய்து வைக்க முடியுமா என மட்டும் கேட்டனர்.
எனக்கு திருமணம் நடந்தால் போதும் என்னும் நிலையில் எனது பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதற்குக் காரணம் எனக்குப் பின்னர் திருமண வயதில் மூன்று பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் வரன் பார்க்க வேண்டும் என்பது தான்.
அடுத்து வந்த சுபமுகூர்த்த நாளன்று என்னைப் பெண்பார்க்க மணமகன் வீட்டார் மாப்பிள்ளையுடன் ஒன்றாகவே சேர்ந்து வந்தனர். சாஸ்திர சம்பிரதாயங்களின் படி என்னிடத்தில் யாரும் பெயர் கேட்கவில்லை. பெற்றோர் பற்றி விசாரிக்கவில்லை. என்ன படிப்பு என்ன உத்தியோகம் என்பது எதனையும் கேட்கவில்லை.
மணமகன் என்னைப் பெயர் சொல்லி அழைத்து என்னை அவருக்குப் பிடித்து இருந்த காரணத்தால் தான் நேரடியாக திருமண தேதியுடன் வந்துள்ளதாக தெரிவித்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். அதனை விடப் பெரிய ஆச்சர்யம் எனது பெற்றோருக்கு. எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடித்து விட்டது. நானும் எனது சம்மதத்தை தெரிவித்தேன்.
திருமணத்திற்கு முதல் நாளன்று எனக்குத் திருமணம் நடக்கப் போகின்றது என்பதறியாமல் எனது வீட்டிற்கு தரகர் வந்து என்னை முதலில் பார்த்துச் சென்ற வரனுக்கு பேச வந்திருப்பதாக தெரிவித்த சமயம் இத்தனை நாட்கள் கால தாமதம் செய்தமைக்கு என்ன காரணம் என எனது பெற்றோர் வினவ நான் பணியாற்றும் இடத்தில் வந்து என்னைப் பார்த்த சமயத்தில் நான் என் எதிரில் நிற்பவரை பதில் பேச இடம் கொடுக்காமல் எனது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல கட்டாயப் படுத்திய காரணத்தால் நான் வாயாடி. திமிர் பிடித்தவள். அடங்காப்பிடாரி, சண்டைக்காரி என எண்ணி திருமணத்திற்குப் பின்னர் மாமனார் மாமியாரிடத்திலும் இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வதென்று பயந்து வரனின் பெற்றோர் வேண்டாமென்று சொன்னதாகவும் அதற்குப் பின்னர் அந்த மாப்பிள்ளை மணமகளின் தொழில் அது மாதிரியானது அப்படிப் பேசினால் தான் சம்பாதிக்க முடியும் எனச் சொல்லி என்னை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதால் தற்போது வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அந்த சமயத்தில் தற்போது நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் எனக் கேட்ட சமயம் அது பற்றியெல்லாம் கேட்கவில்லை எனச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.
அவர்கள் சொன்னவாறு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறு நாள் எனக்குத் திருமணம் என அனைத்தும் அவசர அவசரமாக நிறைவேறியது. திருமணம் நடைபெற்றதில் எனக்குச் சந்தோஷம். திருமணம் முடித்து வைத்ததில் என் பெற்றோருக்குச் சந்தோஷம்
நான் என் கணவரிடத்தில் முதலிரவில் கேட்ட முதல் கேள்வி என்னை முன்பின் பார்க்காமல் எப்படி தேர்வு செய்தீர்கள் என்பது தான். அதற்கு அவர் சொன்ன பதில் வக்கீலுக்குப் படித்து விட்டு நீதிமன்றத்தில் திறமையாக வாதாடி ஜெயிப்பதாக கேள்விப்பட்டு நேரில் நீதி மன்றத்திற்கே வந்து என்னைப் பார்த்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் என்ன செய்கின்றார் எனக் கேட்டதற்கு குடும்பமே வக்கில் குடும்பம் எனத் தெரிந்து கொண்டேன். பாம்பின் கால் பாம்பறியும் என்று சொன்னது என்னைப் பொருத்த வரையிலும் என் திருமணத்திற்கு அந்தப் பழமொழி மிக மிக கச்சிதமாக பொருந்தி இருப்பதனையும் எண்ணி சந்தோஷப்பட்டேன். திருமணம் முடிந்து மிகச் சந்தோஷமாக இருக்கின்றேன்.
முதன் முதலாக என்னைப் பெண் பார்த்துச் சென்ற சமயத்தில் அந்த வரன் எனக்கு அமைந்து விடும் என எண்ணிப் பார்த்து அது முடியாமல் அதற்குப் பின்னர் வரன்கள் எல்லாம் தள்ளிப்போய் எனது பெற்றோர் என்னிடத்தில் யாரையாவது காதலிக்க ஆரம்பித்தால் கூட திருமணம் செய்து வைத்து விடுகின்றோம் எனச் சொல்ல ஆரம்பித்த சமயத்தில் எனக்குத் திருமணம் நடக்குமா நடக்காதா காலம் முழுவதும் கன்னியாகவே இருக்க வேண்டுமா என எதிர்பார்த்ததற்கும் என்னை மணமுடித்தவர் ஒரு வக்கீல் அவரது குடும்பம் ஒரு வக்கீல் குடும்பம் என்பதனை அறிந்து திருமணத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தில் நான் தனியே சென்று வந்ததனையும் தற்போது நான்கு சக்கர சொகுசு காரில் நான் என் கணவர் என் மாமனார் மாமியார் மற்றும் என் நாத்தனார் ஆகியோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று பணிபுரிந்து ஒன்றாக வீடு திரும்பி ஒற்றுமையாக குடும்ப வாழ்க்கை நடத்துகின்ற நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது என்னை இவ்வாறு சந்தோஷமாக வைத்துக் கொள்ளத் தான் இறைவன் என் திருமணத்தினை தள்ளி வைத்துள்ளான் என எண்ணும் போது மிகச் சந்தோஷமாக இருக்கின்றது.
எனது அக்கம்பக்கத்தார் உற்றார் உறவினர் சொந்தங்கள் அனைவரும் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பேசி வருவதனைக் கேட்கும் சமயத்தில் திருமணத்திற்கு முன்னர் என் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டது என்பதனை யாரிடத்திலும் சொல்ல முடியவில்லை. சிலவற்றை பேச முடியாமல் சந்தோஷமாக நினைத்துப் பார்க்கும் சமயம் என்னை நானே மறந்து விடுகின்றேன்.
நான் அந்தக் குடும்பத்தில் காலடி எடுத்து வைத்த சமயம் என் மாமனார் மற்றும் மாமியார் இருவருக்கும் நீதிபதியாக பணி நியமன ஆணை வரப்பெற்றது. எல்லாம் என் அதிர்ஷ்டம் என எனது புகுந்த வீட்டில் சொல்லுகின்றனர். கடவுளுக்கு நன்றி.