காதல் நினைவுகள்.
நானும் அவளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு முறை அல்ல. இரு முறை அல்ல பல முறை கோயில்களுக்குச் சென்று நான்கைந்து ஆண்டுகள் வழிபாடு செய்து வந்தோம்.
நான் அவளுடன் ஒன்றாகச் சேர்ந்து பல முறை கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தது வசதியாகவோ அல்லது சொகுசாகவோ அல்லது ஆடம்பரமாகவோ வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. எனது இதய சிம்மாசனத்தில் குடிகொண்டுள்ள அவளை என்னுடைய மனைவியாக அடைய வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே.
நமது காதலுக்கு நம் இருவர் இல்லங்களிலும் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. காரணம் இரண்டு குடும்பத்தாருக்கு இடையே இருந்த வசதி வாய்ப்பு மற்றும் அந்தஸ்து. எனது பெற்றோரின் சம்மதம் இல்லாமல் அவளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் எனக்கென ஒரு வேலை அதன் மூலம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் என்பதற்காக நான் பணியில் சேருவதென நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தோம்.
நான் சுயமாகச் சம்பாதித்து சொந்தக் காலிலே நினறால் தான் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் இக்கட்டான நிலை. எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும் அவளும் சேர்ந்து போகாத கோயில்கள் இல்லை. வழிபடாத தெய்வங்கள் இல்லை.
நம் இருவரது ஆசைகளும் கனவுகளும் ஆண்டவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலை வெளியூரில் கிடைத்த காரணத்தால் அவளை பிரிய மனம் இல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கக் கூடிய வாய்புகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதனை அறிந்து கொள்ள எனது ஜாதகத்தை நாம் இருவரும் எடுத்துக் கொண்டு ஜோதிடரிடத்தில் சென்று காண்பித்தோம்.
எனது ஜாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் என்னுடைய ஜாதகம் ராமர் வம்சாவழி ஜாதகம் போல அமைந்துள்ள காரணத்தால் கட்டாயம் பதினான்கு ஆண்டுகள் உள்ளுரில் தங்கி இருக்க வாய்பில்லை எனச் சொன்னார். ஒரு ஜோதிடரிடத்தில் மட்டும் ஜாதகத்தைக் காண்பித்து நம்பி விடாமல் பல ஜோதிடர்களிடத்தில் ஜாதகத்தைக் காண்பிக்கும் பொருட்டு பலப்பல ஜோதிடர்களை அணுகிய போது அனைவரும் ஒன்று போலவே பலன் சொன்னார்கள்.
வேலை கிடைத்தமைக்கு கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தொடர்ந்து நானும் அவளும் சேர்ந்து ஒரு வார காலம் கோயில் குளங்களுக்குச் சென்று வந்தோம். உறவினர்களிடத்திலும் எனக்கு வேலை கிடைத்த விவரத்தினை தெரிவித்து வந்தோம். எனக்கு வேலை கிடைத்த விவரம் அறிந்த எனது நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதற்கு முன் கூட்டியே அச்சார வாழ்த்து தெரிவித்தார்கள்.
அரசாங்க வேலை கிடைத்து விட்டது என்பதன் காரணமாக நாம் இருவரும் திருமண செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் கட்டாயம் இணைவோம் என்னும் நம்பிக்கை வந்து விட்டது. இருந்த போதிலும் உற்றார் உறவினர் நண்பர்கள் சொந்தங்களுடன் சந்தோஷமாக இருக்க சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திருந்தால் நல்லது என எண்ணினோம்.
வெளியூரில் வேலை கிடைத்த காரணத்தால் வேலையில் சேரும் பொருட்டு இருவரும் பிரிய நேரிட்டது. வேலையில் சேருவதற்கு புறப்பட்டுச் செல்லும் நாள் வரையில் நாம் இருவரும் மிகமிகச் சந்தோஷமாக இருந்தோம்.
இராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்று சொல்வது போல நான் வெளியூர் சென்றவுடன் அவளால் அங்கு தனியே இருக்க முடியவில்லை. அவர்கள் வீட்டிலும் அவளை வீட்டில் வைத்திராமல் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். எனவே நான் நினைத்த நேரத்தில் ஊருக்கு வந்து அவள் ஊரில் இல்லாத காரணத்தால் அவளைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல என்னால் பணியில் சேர்ந்த ஊரில் உள்ள கோயிலுக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை. பழக்க தோஷம். நான் பணியில் சேர்ந்தவுடன் முதல் முறையாக அங்குள்ள ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அங்குள்ள அம்மன் தமது வலக் கரத்தில் தாமரை மலருடன் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். தாமரை மலரானது தடாகத்தில் உள்ள நீர் மட்டத்தைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கும். எனவே அந்த அம்மனை வழிபடுவோர் கட்டாயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் எனச் சொல்லக் கேட்டு பூரிப்படைந்தேன்.
தொடர்ந்து சில காலம் அந்தக் கோவிருக்குச் சென்று வந்தேன் தனியாக. ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்லும் சமயமும் அவளது நினைவு என்னை வாட்டும். அப்போதெல்லாம் எனது எண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டு எதிர்காலத்தில் அம்மனைத் தரிசிக்க அடிக்கடி அந்தக் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என இருக்கும்.
முதல் மாதச் சம்பளம் கிடைக்கப் பெற்றவுடன் நான் எனது சொந்த ஊருக்கு சென்று பெற்றோரிடத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதற்கு எனது தாயார் விருப்பப் பட்டு ஒப்புதல் தெரிவித்தும் கூட தந்தை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அவள் ஊரில் இல்லாததால் அவளைக் காண முடியாத ஏக்கத்துடன் பணியாற்றும் ஊருக்குத் திரும்பினேன்.
அதன் பின்னர் மீண்டும் ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்று அவளது தாயாரிடத்தில் எனக்கு அவளை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர்களும் மறுப்புத் தெரிவித்த காரணத்தால் மிக சோகத்துடன் பணியாற்றும் ஊருக்குத் திரும்பினேன். அப்போது அவள் ஊரில் இருந்தும் கூட அவளுடன் பேச முடியவில்லை.
நான் பணியாற்றி வந்த அலுவலகத்தில் மொத்தம் 15 பேர் மட்டும் பணியில் இருப்பார்கள். நான் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டு பணியாற்றி வந்தேன். சில நாட்களில் எனக்கு இன்னுமொரு இடத்தில் அரசாங்க வேலை கிடைத்தது. அந்த அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணியாற்றி வருகின்ற காரணத்தால் அந்த வேலையில் சேருவதென தீர்மானித்து அதற்கான விருப்பத்தினைத் தெரிவித்து வேலையில் சேருவதற்கு தயாரானேன்.
அந்த ஊரிலிருந்து புதிய பணியிடம் அமைந்துள்ள ஊருக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கடைசியாக ஒரு முறை அந்த அம்மனை தரிசிக்க கோயிலுக்குச் சென்றேன். அந்த நேரத்தில் அம்மன் கையில் தாமரை மலருக்கு பதிலாக தங்கக் கிரீடத்தை மடியில் வைத்துக் கொண்டு வலது கரத்தால் பற்றிக் கொண்டு அருள் பாலிப்பது போன்ற அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சியாக இருந்த அந்த அம்மனை நீண்ட நேரம் தரிசித்து விட்டு புதிய ஊரில் புதிய பணியிடத்தில் சேரும் பொருட்டு பயணமானேன்.
பழைய அலுவலகத்தில் நான் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி வந்தேன். ஆனால் புதிய அலுவலகத்தில் எனக்கு அனைவரும் வணக்கம் செலுத்தும் படியான பொறுப்புடன் கூடிய பதவி கிடைக்கப் பெற்றது.
இந்நிலையில் அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வருவதன் பொருட்டு அந்த ஊரில் வீடு பார்க்க ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் நான் அவளை அதே ஊரில் காண நேரிட்டது. பாவாடை தாவணி அணிந்த கன்னிப் பெண்ணாக அல்ல. சேலை ரவிக்கை அணிந்த மணமுடித்த மங்கையாக. என்னைக் கண்டவுடன் அவளுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கும் அதே நிலை. இருவராலும் எதுவும் பேச முடியாத நிலையில் நீர் ததும்பிய கண்ணீருடன் நான் என் அறைக்குத் திரும்பினேன். அவள் நிலையும் அது தான். ஆமாம் இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள்.
அவள் அங்கு தான் வாழ்க்கைப் பட்டு வந்திருக்கின்றாள் என்பது முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் அந்த ஊருக்கு பணியில் சேர வந்திருக்க மாட்டேன். பல நாட்கள் கவலைப் பட்டேன்.
அவ்வாறான நேரங்களில் ஒரு நாள் இரவு நான் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த ஊரில் உள்ள அம்மனை வலக்கரத்தில் தாமரை மலருடன் வணங்கி வந்து விட்டு அந்த ஊரை விட்டு வரும் சமயம் மாத்திரம் அம்மனது வலது மடியில் தங்கத்தாலான கிரீடத்தை வைத்துக் கொண்டு வலக் கரத்தால் பற்றிக் கொண்டு காட்சி கொடுத்தது நினைவுக்கு வந்தது.
ஆமாம் நான் அந்த ஊரை விட்டு வரும் சமயம் எனக்கு தங்கக் கிரீடத்தை பற்றிக் கொண்டு காட்சி கொடுத்து இனிமேல் எனக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த ராஜவம்ச மரியாதையும் தான் கிடைக்கும் என்பதனை சூசகமாக சொல்லாமல் சொல்லி அருள் பாலித்து அந்த அம்மன் உணர்த்தியிருக்கின்றாள் என்னும் புரியாத புதிரை வெளிப்படுத்தியதனை நான் அப்போது அறிந்து கொள்ளவில்லை என்பதனை நினைத்து வேதனைப் பட்டேன்.
நானும் அவளும் காதலர்களாக இருக்கும் சமயம் அம்மன் தனது திருக்கரத்தில் தாமரை மலருடன் அருள் பாலித்த காட்சியினையும் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தேறி விட்ட சமயம் அவளைப் பிரிந்த நான் இனிமேல் மதிப்பும் மரியாதையும் தான் பெறமுடியும் ஆசைப்பட்டவளை இல்லறத்தில் அடைய முடியாது என்பதனை கிரீடத்தை வலக்கரத்தில் பற்றிக்கொண்டு அம்மன் அருள் பாலித்த காட்சியினையும் நினைக்கும் போது நான் எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை உணர்ந்து கொள்ள முடிகின்றது.