வேலை தேடும் படலம்
நான் குழந்தைப் பருவத்தில் இருக்கும் சமயம் பள்ளியில் ஆங்கிலத்தில் ஒரு பாடல் கற்றுக் கொடுப்பார்கள். அது என்னவெனில்
Work while you work
Play while you play
That’s the way
To be happy and gay.
இந்தப் பாடல் பல முறை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் முதல் வாக்கியம் சொன்னாலே மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த அனைத்து வார்த்தைகளையும் ஒப்பித்து விடுவேன். ஆனால் அதன் அர்த்தம் அந்த மழலைப் பருவத்தில் எனக்குத் தெரியாது.
அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே மழலையர் பள்ளிக் கல்வியினை படித்து முடித்து விட்டேன். பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிப் படிப்பு கூட முடிந்து விட்டது. இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் முது கலைப் பட்டம் கூட பெற்று விட்டேன்.
என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் அனைவருக்கும் ஏறக்குறைய வேலை கிடைத்து விட்டது. என் நண்பர்கள் சிலர் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து ஆகியவை பயின்றார்கள். சிலர் கணினிப் பயிற்சி மேற்கொண்டார்கள். சிலர் இளங்கலைப் படிப்பு முடித்தவுடன் வேலைக்கு விண்ணப்பித்து வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து சொண்டார்கள்.
நான் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பினை முடித்த பின்னர் வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் எனது நண்பர்களில் பலர் வேலையில் சேர்ந்து கொண்டு விட்ட காரணத்தால் என் நண்பர்களின் திருமண வைபவங்களில் பல நேரங்களில் நான் மட்டும் தனியே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. காரணம் எனது நண்பர்களில் அநேகம் பேர் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகள் என குடும்ப சகிதமாக வருகை தர ஆரம்பித்தார்கள். அச்சமயங்களில் நண்பர்களும் நண்பர்களின் மனைவி மார்களும் அடுத்தது என்னுடைய திருமண விருந்து தான் என பல இடங்களில் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
என் வீட்டில் என்னுடைய தாயார் நான் சீக்கிரத்தில் வேலையில் சேர்ந்து கொண்டால் எனக்கு வருகின்ற மனைவி என் தாயாரின் வேலைகளில் ஊடமாட உதவி செய்வதன் மூலம் தமது வேலைகள் குறையும் எனவும் முதுமைக் காலத்தில் தேவையான ஓய்வு எடுக்க முடியும் எனவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
என்னுடைய தந்தை நான் சீக்கிரத்தில் வேலையில் சேர்ந்து கொண்டால் குடும்ப பாரத்தியில் பாதி குறைந்து விடும். அதன் காரணமாக முதுமைக் காலத்தில் உடல் நலமில்லாத சமயங்களில் வீட்டிலேயே ஓய்வு எடுக்க முடியும் எனவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
என்னுடைய தம்பி தங்கைகள் நான் சீக்கிரத்தில் வேலையில் சேர்ந்து கொண்டால் அவர்களின் கல்லூரி மற்றும் பள்ளிப் படிப்பிற்கான ஏழுது பொருட்கள் மற்றும் கல்விக் கட்டணம் ஆகியவற்றை சிரமமின்றி செலுத்த முடியும் எனவும் தந்தையின் வருமானத்தில் மாத்திரம் குடும்பம் நடத்துவதன் காரணமாக மிக மிக சிக்கனமாக இருக்க வேண்டி இருக்கின்றது என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
என்னுடைய நண்பர்கள் நான் வேலையில் சேராத காரணத்தினாலும் அவரவர்களுக்கு திருமணம் ஆகி குடும்பம் ஆகி விட்ட காரணத்தாலும் குடும்பத்தினருடன பொழுது போக்கு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றக் கூட செல்ல முடியாத அளவிற்கு என்னுடைய நண்பர்களின் வருகை குறைந்து விட்டது.
யாராவது ஒரு நண்பருக்கு திருமணம் என்றால் திருமணத்திற்கு முதல் நாளன்று அன்று அனைத்து நண்பர்களும் ஒன்று சேர்ந்து கூடி கும்மாளமடித்து கொண்டாடிய Bachelor Party கூட குறைந்து விட்டது. என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் என்னுடைய நண்பர்கள் பொழுது போக்கான விஷயங்கள் எதனையும் என்னிடத்தில் பேசாமல் எனக்கு வேலை கிடைத்து விட்டதா எப்போது திருமணம் எனக் கேட்க அரம்பித்து விட்டார்கள்.
ஆண் நண்பர்களின் நிலை இப்படியென்றால் பெண் நண்பர்கள் அதாவது சிநேகிதிகள் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வரை பெற்று முடித்து முதல் குழந்தை நர்சரி பள்ளியில் படிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். எனது பெண் நண்பர்களை நான் பெயர் சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அவர்களின் பரிமாணம் வளர்ந்து விட்டது. என்னுடன் படித்த பெண்கள் என்னுடைய தாயாரை விட என்னுடைய பாட்டியை விட அதிக பருமனுடன் எனக்கு காட்சியளிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் அவர்களை மரியாதையாக அழைக்க வேண்டிய நிலைமை. காரணம் அவர்களின் கணவர் கூட இருப்பார். ஆனால் அவர்கள் என்னை பழைய படி வழக்கம் போல என்னடா என்ன செய்றே என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு என்னுடைய சுய கௌரவம் என சொல்லப்படுகின்ற தன்மானம் இறங்கி விட்டது.
நான் வேலை தேடிச் செல்லுகின்ற இடங்களில் என்னுடைய படிப்பினை கருத்தில் கொள்ளாமல் என்னுடைய வயது மற்றும் முன் அனுபவம் ஏதேனும் உள்ளதா எனக் கேட்கின்றார்கள். என்னுடைய படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டுமெனில் நான் ஊரை விட்டு ஊர் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் கூட அந்த இடத்தில் பெறப் போகின்ற சம்பளத்தினைக் கொண்டு என்னுடைய அன்றாட செலவுகளுக்கான தொகை போக மீதித் தொகையினை பெற்றோருக்கு அனுப்ப முடியுமா என்றால் அது மிக மிக சொற்பமான தொகையாக இருக்கின்றது.
நான் படித்த படிப்பிற்கு வெளி நாட்டில் நல்ல சம்பளம் கிடைக்கும் என விண்ணப்பித்து வெளி நாடு செல்ல முடிவு மேற்கொண்டால் வருடத்திற்கு ஒரு முறை பத்து நாட்களோ அல்லது பதினைந்து நாட்களோ விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து பெற்றோரையும் உற்றார் உறவினரையும் நண்பர்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை. அவ்வாறு வெளி நாடு சென்றால் கூட அங்கு கிடைக்கப் போகும் சம்பளத்தில் அந்த நாட்டு நாணய மதிப்பிற்கேற்றபடி அங்கு என்னுடைய செலவுகளை மேற்கொண்ட பின்னர் எனது பெற்றோருக்கு அனுப்பும் தொகையினைக் கொண்டு அவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள துரத்தினைக் கணக்கில் கொண்டால் அடிக்கடி பார்க்க முடியாதபடி நமக்கிடையே உள்ள பந்த பாசம் குறைந்து விடும் எனப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
இதுவும் தவிர சில நாடுகளில் தாய் நாட்டைப் போலல்லாமல் ஒரு வீட்டிற்கு குடியமர்ந்த பின்னர் திருமணம் செய்து கொண்டால் அதே வீட்டில் மனைவியை தங்க வைத்துக் கொள்ள அதே வீட்டிற்கு தனிமையில் இருக்கும் போது எவ்வளவு வாடகை கொடுத்தோமோ அதில் இரட்டிப்புத் தொகையினை வாடகையாக செலுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்தால் கூட அதே போன்ற நிலை. எனவே எனது நண்பர்களின் உறவினர்கள் வெளி நாடுகளுக்குச் சென்ற பின்னர் வாடகைப் பிரச்சினையினைச் சமாளிக்க சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு பலப்பல வருடங்கள் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
வெளி நாடுகளில் வசிக்கும் நம் நாட்டினர் பலர் அந்த நாடுகளில் கடன் பெற்று விட்ட காரணத்தால் தாய் நாடு வர வேண்டுமென நினைத்தால் கூட கடன் தொகையினை மொத்தமாக திருப்பிச் செலுத்தி விட்டு திரும்ப முடியாத படி சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் சொந்தமாக வாங்கிய வீட்டினை விற்காமல் தாய் நாடு திரும்ப முடியாத படி சில நாட்டு அரசியல் சட்டங்கள் தடை செய்கின்றன. வெளி நாட்டுக் காரர்கள் நம் நாட்டில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பது போல நாம் வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்க முடிவதில்லை.
யாரேனும் இரத்த சொந்தங்கள் இயற்கை எய்திய சமயங்களில் திடீரென தாய் நாடு வந்து திரும்ப பல இன்னல்கள் இருக்கின்றன. இதுவும் தவிர வெளிநாட்டில் வசித்துக் கொண்டு மனைவிமார்கள் கருவுற்றால் தாய் நாடு வந்து பிரசவம் செய்து கொண்டால் பிறக்கப் போகும் குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. அதனை தவிர்க்க அந்தந்த நாடுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயில் பெற்றோரை அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பயணியர் விசா என ஒன்று வாங்கி அதனைப் பயன் படுத்திக் கொண்டு வெளி நாடு செல்லும் பெற்றோர் ஆறு மாதங்கள் தான் வெளி நாட்டில் தங்க முடியும். ஆறு மாதங்கள் முடிந்தவுடன் மீண்டும் தாய் நாடு திரும்ப வேண்டும் என சட்டங்கள் சொல்கின்றன. இதுவும் தவிர கர்ப்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற வேண்டிய வளைகாப்பு சீமந்தம் போன்ற சடங்குகளும் குழந்தை பிறந்த பின்னர் நடைபெற வேண்டிய சேனைத் தொடுதல் போன்ற சடங்குகளையும் அறவே தவிர்க்க நேரிடுகின்றது. இதன் காரணமாக எனக்கு வெளி நாடு செல்வதில் விருப்பமில்லை.
முது கலை பட்டப்படிப்பு முடிந்து இரண்டாண்டுகள் முடிந்து விட்டன. எனக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை. நான் எங்கு வேலை தேடிச் சென்றாலும் முன் அனுபவம் வேண்டும் என்று சொல்கின்றார்கள் அல்லது தமது நிறுவனத்திற்கு அவ்வளவு பெரிய பட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் தேவையில்லை என்கின்றார்கள். என்னுள் எனக்கே வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு நிறுவனத்தில் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்னுடைய நேர்முகத் தேர்வின் சமயம் தம் நிறுவனத்தில் மேலாளரை அழைத்தார். ஒரு ஆச்சர்யம் நானும் அந்த நிறுவன மேளாளரும் ஒரே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள். இருவரும் நண்பர்கள் என்பதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. என்னுடன் படித்த என்னுடைய நண்பர் எனக்கு சிபாரிசு செய்தும் கூட எனக்கு வேலை கிடைக்கவில்லை.
நிறுவனம் ஆரம்பித்த போது முன் அனுபவமே இல்லாமல் அவன் வேலையில் சேர்ந்து விட்டான். நான் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் சமயம் நிறுவனம் வளர்ந்து விட்டது. எனவே முன் அனுபவம் தேவை என்கின்றார்கள்.
மீண்டும் வீட்டிலேயிருந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். அச்சமயத்தில் ஒரு நாள் நான் மழலையர் பள்ளியில் படித்த சமயம் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த சுமார் 50 வயது கொண்ட ஆசிரியை அதாவது பழைய நினைவுகளின் படி என்னுடைய மிஸ் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடத்தில் படித்த நான் முதுகலைப் பட்டம் பெற்று விட்டேன். ஆனால் அவர்கள் இன்னமும் ஏற்றி விடுகின்ற ஏணியாக மழலைக் கல்வியே ராகத்துடன் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
என்னுடைய தாயாரிடத்தில் என்னைக் காண்பித்து என்ன வேலை செய்கின்றான் எனக் கேட்ட சமயம் வேலை தேடிக் கொண்டு காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றான் எனச் சொன்னார்கள். அதனால் எனக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியையின் மனம் உடைந்து விட்டது. அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. என்னிடத்தில் நாளை காலை என்னுடைய வகுப்பிற்கு வா எனச் சொன்னார்கள். நான் பழைய பாணியில் இரண்டு பேரன் பேத்திகளைக் கொண்ட அந்த ஆசிரியையிடத்தில் “Yes Miss” எனச் சொன்னேன்.
அவர்கள் சொன்னவாறு மறு நாள் காலையில் நான் ஆரம்ப காலத்தில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் எனச் சொல்லி அழுது கொண்டே சென்ற எனது பள்ளிக் கூடத்திற்குச் சென்றேன். காவலாளி என்னை உள்ளே விடவில்லை. அதன் பின்னர் என் வகுப்பாசிரியரின் பெயரினைச் சொல்லி அவர்கள் வரச் சொல்லி இருக்கின்றார்கள் எனச் சொன்ன சமயம் அவர்களிடத்தில் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார். நானும் உள்ளே சென்றேன்.
ஆங்கிலப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் எனக்கு எப்படி ராகத்துடன் கற்றுக் கொடுத்தார்களோ அதே போல அதே இனிமையான குரலில் அப்போதும் கூட மழலையர் பாடல்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் வகுப்பு நேரம் முடிந்து விட்டது. வகுப்பறையில் உள்ள குழந்தைகள் அனைவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக எழுந்து சென்றனர். அதன் பின்னர் என்னுடைய முன்னாள் ஆசிரியர் என்னிடத்தில் பேச ஆரம்பித்தார்கள்.
அவர்கள் என்னிடத்தில் இப்போது வகுப்பழையிலிருந்து செல்லும் குழந்தைகளுக்கு என்ன வயது இருக்கும் எனக் கேட்க நான் மூன்று வயது அல்லது நான்கு வயதிற்குள் இருக்கும் எனச் சொன்னேன். இந்த வயதில் அவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுக்க வேண்டும் தெரியுமா எனக் கேட்டார்கள். எனக்கு பதில் தெரியவில்லை. ஆமாம் முதுகலை பட்டப்படிப்பு படித்த எனக்க அவர்கள் கேட்ட சின்னக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பது அறிந்து வெட்கப்பட்டேன்.
அவர்களே சொன்னார்கள். இந்த சின்னஞ்சிறு வயதில் அதாவது மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களிடத்தில் கற்றுக் கொடுக்க வேண்டியது. படிக்கும் போது படி. விளையாடும் போது விளையாடு. அல்லது தூங்கும் போது தூங்கு விளையாடும் போது விளையாடு. அல்லது சாப்பிடும் போது சாப்பிடு. விளையாடும் போது விளையாடு. இவை தான் நான் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் நான் கற்றுக் கொடுத்தது வேலை செய்யும் போது வேலை செய். விளையாடும் போது விளையாடு. இந்தச் சின்ன வயதில் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் நாம் கற்றுக் கொடுக்கும் கல்வி சின்னஞ்சிறு வயதில் உள்ள பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் பசுமரத்தாணி போல தவறாகப் பதிந்து விட்டால் வாழ்க்கையே வீணாகி விடும் என்பதன் காரணமாகத் தான் குழந்தைகளின் மூன்று வயதிலேயே இப்படி சொல்லிக் கொடுக்கின்றோம்.
எனவே நாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தால் தான் வேலைக்குச் செல்வது. இல்லையேல் வேலை தேடிக் கொண்டே சும்மா விளையாட்டாக இருப்பது என்னும் நிலையிலிருந்து எந்த வேலை கிடைக்கின்றதோ அந்த வேலையில் சேர்ந்து கொண்டு அதில் திறமையைக் காட்டி கட்டாயம் முன்னுக்கு வர வேண்டும் என அறிவுறைகள் சொன்னார்கள்.
சில நிறுவனங்களில் முன் அனுபவம் ஏதேனும் உள்ளதா எனக் கேட்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதற்குக் காரணம் கடமையினை ஒழுங்காகச் செய்கின்றார்களா என்பதனையும் கண்ணியமுடன் நடந்து கொள்கின்றார்களா என்பதனையும் கட்டுப்பாட்டுடன் செயல் படுகின்றார்களா என்பதனையும் அறிந்து கொள்ளத்தான்.
அதே நேரத்தில் காலையில் எழ வேண்டிய நேரத்தில் எழுந்து சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுபவர்களிடத்தில் வேலை வழங்கும் நிறுவனத்தினர் கட்டாயம் இத்தனை மணிக்கு வேலைக்கு வர வேண்டும் கடமையாற்ற வேண்டும் என அடிக்கடி நிர்ப்பந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
முன் அனுபவம் இருக்கின்றதா என்னும் கேள்வியினை படிக்கச் செல்லும் சமயத்திலோ அல்லது திருமணம் செய்து கொள்ளும் நேரத்திலோ கேட்காமல் வேலைக்குச் சேறும் சமயத்தில் மாத்திரம் கேட்பதற்கு ஒரே காரணம் முன் அனுபவம் இருந்திருந்தால் சரியான நேரத்தில் பணிக்கு வந்து தமது கடமைகளை அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்றி முடித்த பின்னர் இல்லம் திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டுமே. முன் அனுபவம் இருந்தால் சரியான நேரத்தில் பணிக்கு வந்து விடுவார்கள் பணிகள் ஒழுங்காக நடக்கும் என்னும் நம்பிக்கை தானே ஒழிய வேறொன்றுமில்லை.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் சமயம் நான் படித்த பள்ளியின் தiலாமை ஆசிரியை வருகை தந்து என்னைப் பற்றி விசாரித்த சமயம் எனக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு என்னிடத்தில் என்னுடைய படிப்பினைக் கருத்தில் கொண்டு எனக்கு அதே பள்ளியில் ஒரு வேலை வழங்க இருப்பதாகவும் அடுத்த நாள் முதல் பணியில் சேர்ந்து கொள்ள வேண்டுமெனவும் சொன்னார்கள். நான் மறு பேச்சு எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் காலையில் நான் பணியில் சேர்ந்து கொண்டேன்.
அதன் பின்னர் அந்தப் பள்ளியில் ஒரு மாதம் கூட பணியாற்றவில்லை. நான் படித்த படிப்பிற்கேற்ற வேலை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் எனக்கு அதே ஊரில் வழங்கினார்கள். நானும் வேலையில் சேர்ந்து கொண்டேன். என்னுடன் படித்த நண்பர்கள் பலரை அந்த ஒரு மாத காலத்தில் அவர்களின் குழந்தைகளுடன் சந்தித்த போது நான் வீணாக பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டோமே என வருந்தினேன். என்னுடைய படிப்பிற்கேற்ற பதவி மற்றும் பதவிக்கேற்ற வருமானம் கிடைப்பதற்கு நான் படித்த பள்ளி எனக்கு உதவியது.
முதுகலை பட்டப்படிப்பு முடித்த பின்னர் படிப்பிற்கேற்ற பதவி மற்றும் பதவிக்கேற்ற வருமானம் கிடைக்க வேண்டுமெனக் காத்திருந்த நேரத்தில் என்னுடன் கூடப்படித்த நண்பர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்து திருமணம் செய்து கொண்டு மனைவி அல்லது கணவன் மற்றும் குழந்தை குட்டிகள் என சந்தோஷமாக இருப்பதனை காணும் சமயம் எனக்கு இது போன்ற குடும்பம் அமையுமா அல்லது கடைசி வரையில் வேலை தேடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்குமா என எதிர்பார்த்ததற்கும் பல இடங்களில் வேலை தேடியலைந்து கொண்டிருந்த சமயம் என்னுடைய மழலைப்பள்ளி ஆசிரியை எனது இல்லத்திற்கு வந்து மறு நாள் என்னை பள்ளிக்கு வருமாறு சொல்லிச் சென்ற மறு நாள் நான் பள்ளிக்குச் சென்ற போது நான் ஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும் சமயம் படித்த பாடலுக்கு என் வயதிற்கேற்றபடி விளக்கத்தினை எடுத்துச் சொல்லி அவர்களின் அறிவுறைகளின்படி மறு நாள் வேலையில் சேர்ந்த பின்னர் என்னுடைய படிப்பு மற்றும் திறமைக்கேற்ற பதவி மற்றும் வருமானம் கிடைத்த நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப் பார்க்கும் போது நாம் கற்ற கல்வி நமக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தாலும் நாம் அதனை சரிவரப் பின்பற்றாத காரணத்தால் தான் நாம் இன்னல்களைச் சந்திக்க நேரிடுகின்றது என்பதனை அறிந்து கொண்டேன்.
எனது பெற்றோர் மற்றும் என் கூடப் பிறந்தவர்கள் எதிர்பார்த்தது போல அனைவருடைய எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றி வருகின்றேன் என்பதில் மனதிற்கு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. எனக்கும் சில நாளில் திருமணம் நடைபெற்று என் பெற்றோருக்கு பேரக்குழந்தைகள் என நம் குடும்பம் பெருகிக் கொண்டிருக்கின்றது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன்.