கவலையும் மகிழ்ச்சியும்
நான் இந்தப் பூவுலகில் பிறந்து கண்களை திறந்து பார்த்து அழ ஆரம்பிப்பதற்குள் என்னை ஈன்றெடுத்த தாய் தன் கண்களை மூடி விட்டு அனைவரையும் அழ வைத்து இறைவனடி சேர்ந்து விட்டார்கள். என்னை வளர்த்து ஆளாக்கும் பொருட்டு என் தந்தை இரண்டாம் தாரமாக ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்;.
ஒரே தந்தைக்குப் பிறந்த இரண்டு தங்கைகளுக்கிடையே ஒரே மாதிரியான தாயன்பு கிடைக்கவில்லை. எனவே தாயன்புக்காக ஏஙகித் தவிப்பேன். என் தந்தை தாயில்லாப் பிள்ளை என்பதன் காரணமாக என் மீது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தி வந்தார்.
நான் பருவமடைந்து கல்லூரியில் பட்டப் படிப்பினை முடித்தவுடன் வேலை கிடைத்த காரணத்தால் பணியில் சேர்ந்து கொண்டேன். என்னுடைய தாயார் அதாவது சித்தி மிகவும் கட்டாயப் படுத்தி என்னை திருமணம் செய்து வைத்தார்கள். என்னைத் திருமணம் செய்து கொண்டவருக்கு என்னை பிடித்திருக்கின்றதா இல்லையா என்பதனைக் கூட அறிந்து கொள்ளாமல் என்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்தார்கள். என்னிடமும் எனது சம்மதம் கேட்கவில்லை.
திருமணம் செய்வதில் சிக்கனம் என்னும் பெயரில் உற்றார் உறவினர் சொந்தங்கள் அக்கம் பக்கத்தினர் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் குல தெய்வ கோவிலில் வைத்து திருமணத்தை முடித்து விட்டார்கள். திருமண பத்திரிக்கை கூட அச்சடிக்கவில்லை. திருமணமானவுடன் என்னை மட்டும் தனியாக எனக்குத் தாலி கட்டியவருடன் அனுப்பி வைத்தனர். யாரும் கூட வரவில்லை.
திருமணமாகி முதல் நாளன்று என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் இல்லத்திற்கு நான் சென்ற போது என்னை ஆரத்தி எடுத்து வரவேற்று வலது காலை எடுத்து வைத்து வா எனச் சொல்வதற்கு சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லை. நான் மாத்திரம் தன்னந்தனியாக வீட்டிற்குள் சென்றேன். நான் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில் என் தந்தை எனக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த திருமண சீர் வரிசைப் பொருட்கள் யாவும் வந்து சேர்ந்தவுடன் அவற்றை பத்திரமாக இறக்கி சரி பார்த்து எந்தெந்த இடத்தில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டுமோ அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்களை வைத்து முடித்தவுடன் என் கழுத்தில் தாலி கட்டியவர் என்னிடத்தில் எதுவும் பேசாமல் சொல்லிக் கொள்ளாமல் வெளியில் சென்று விட்டார்.
அன்றைய தினம் இரவு நேரத்தில் அவர் வரும் சமயம் குடிபோதையில் தள்ளாடியவாறு ஒரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்தார். வந்தவர் என்னை திரும்பிக் கூட பார்க்காமல் நேரடியாக படுக்கை அறைக்கு அந்தப் பெண்ணுடன் சென்று தாளிட்டுக் கொண்டார். திருமணமான முதல் நாளன்று இரவு நான் எதுவும் பேசவில்லை. எதுவும் சாப்பிடவில்லை. இரவு முழுக்க தூங்கவும் இல்லை.
மறு நாள் காலையில் நான் எழுந்து குளித்து விட்டு என் கழுத்தில் தாலி கட்டியவருக்கு காபி கொடுக்கச் சென்ற சமயத்தில் இருவரும் ஒரே மெத்தையில் அலங்கோலமாக இருந்தனர். நான் எதுவும் சொல்லாமல் காபி கொடுத்தேன். அச்சமயம் என்னைத் தொட்டு தாலி கட்டியவர் காபியினை பெற்றுக் கொண்டு வீட்டின் பீரோ சாவியினை என் கையில் கொடுத்து விட்டு இன்று அலுவலகம் செல்லவில்லையா எனக் கேட்டார்.
அவரே என்னிடத்தில் தொடர்ந்து பேசினார். அலுவலகம் செல்வதற்குள் தந்தை போட்ட நகைகள் அனைத்தையும் பீரோவில் பத்திரமாக வைத்து விட்டு சாவியை கொடுத்து விட்டுச் செல்லும்படி கட்டளையிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்த போதிலும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என்னுடைய இரண்டு கைகளில் இரண்டு வளையல்கள் மற்றும் காதுகளில் தோடுகள் மற்றும் ஒரு செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை அணிந்து கொண்டேன்.
அச்சமயத்தில் என்னைத் திருமணம் செய்து கொண்டவர் ஒரு கையிலுள்ள வளையலை கழற்றி பீரோவில் வைத்து விட்டு வாட்ச் கட்டிக் கொண்டு அலுவலகத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார். நானும் சரியென ஒரு வளையலை கழற்றி பீரோவில் வைத்து விட்டு வாட்சினை கட்டிக் கொண்டேன். அதன் பின்னர் என்னை வலுக்கட்டாயமாக அலுவலகம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். நானும் வேறு வழியில்லாமல் அலுவலகத்திற்குப் புறப்பட்டேன்.
நான் அலுவலகம் சென்றடைந்த சமயத்தில் என்னுடைய அலுவலகத் தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் என்னிடத்தில் திருமணம் முடிந்து ஒரு நாள் கூட முடியவில்லை. அதற்குள் அலுவலகத்திற்கு வந்தமைக்கான காரணம் என்ன எனக் கேட்டனர். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
நான் திருமணத்திற்காகப் போட்டிருந்த விடுப்பினை ரத்து செய்து விட்டு பணியில் சேர்ந்து கொண்டேன். என்ன நடந்தது என்ற விவரங்கள் எதனையும் யாரிடத்திலும் சொல்லாமல் மாலை வரையில் நேரத்தைக் கடத்துவது பெரும் பாடாக இருந்தது.
மாலையில் அலுவலக நேரம் முடிந்தவுடன் இல்லம் திரும்பி பார்த்த சமயம் எனக்குத் தாலி கட்டியவரின் வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரணை செய்த சமயத்தில் மதியம் சுமார் மூன்று மணிக்கு யாரோ ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு சூட்கேசுடன் புறப்பட்டுச் சென்றதனை பார்த்ததாகவும் எங்கு செல்கின்றார்கள் எப்போது திரும்புவார்கள் என்பதனை தெரிவிக்கவில்லை எனவும் வீட்டின் சாவியினைக் கூட கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
உடனே நான் என்னுடைய தந்தை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற சமயம் என் தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில் என்னுடைய வளர்ப்புத் தாயார் அதாவது என்னுடைய சித்தி திருமணம் செய்து கொடுத்த பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என சொல்லி விரட்டியடித்தார்கள். நான் என் தந்தை வரும் வரையிலாவது காத்திருந்து பேசி விட்டுச் செல்கின்றேன் எனச் சொன்னதைகூட ஏற்றுக் கொள்ளாமல் என்னை விரட்டினார்கள்.
வேறு வழியில்லாமல் நான் அக்கம் பக்கத்தினரின் வீடுகளில் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். மறு நாள் காலையில் நான் குளித்து முடித்து விட்டு முதல் நாள் கட்டியிருந்த புடவை ரவிக்கையினை போட்டுக் கொண்டு விடை பெற முயற்சித்த சமயம் நல்ல உள்ளம் கொண்ட அந்த வீட்டுப் பெண்மணி எனக்கு மாற்று உடை கொடுக்க முன் வந்தார்கள். ஆனால் ரவிக்கையின் அளவு சரியாக இல்லாத காரணத்தால் முதல் நாள் அணிந்திருந்த அதே சேலை மற்றும் ரவிக்கையுடன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன்.
அலுவலகம் சென்றவுடன் அலுவலகத்தில் பணியாற்றும் சக தோழியர் முதல் நாள் போட்டிருந்த சேலை மற்றும் ரவிக்கையினை மாத்திரம் அணிந்து சென்ற காரணத்தால் வீட்டிற்குச் செல்லவில்லையா எனக் கேட்டனர். ஒரு சிலர் திருமணமான மறு நாளே பணிக்கு வந்தமைக்கான காரணம் என்ன எனக் கேட்டனர்.
நான் எதனையும் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளவில்லை. ஒருவர் பின் ஒருவராக வந்து என்னைப் பற்றிக் கேட்டவர்களிடத்தில் என்ன நடந்தது என்பதனை மறைக்க அலுவலக நேரம் முடியும் வரையில் நான் படாத பாடு பட்டேன்.
இதற்கிடையில் எனக்கருகில் அமர்ந்து பணியாற்றி வருகின்ற என்னுடைய உயிர்த்தோழி என்னிடத்தில் மிக மிக நெருக்கமாகப் பேசி என்னுடைய உண்மை நிலையினை அறிந்து கொண்டாள். அதற்குப் பின்னர் மாலையில் தம்முடன் விடுதிக்கு வந்து தங்கிக் கொள்ளுமாறும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆறுதல் கூறினாள்.
நானும் வேறு வழியின்றி என் தோழியுடன் சென்று விடுதியில் தங்கிக் கொண்டேன். மாற்றுத் துணி கூட இல்லாத நிலையில் நான் உடுத்திக்கொள்ள என் தோழியுடன் கடைக்குச் சென்று நான்கைந்து சேலைகள் மற்றும் ஆயத்த ரவிக்கைகள் மற்றும் உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கினேன்.
அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் நான் மூடி மறைத்த உண்மை வெளிப்பட்டது. உடனே எனது தோழியரும் தோழர்களும் என்னைப்பற்றியும் என்னுடைய எதிர்காலம் பற்றியும் விவாதிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது என் தோழிகளில் ஒருத்தி என்னை தாலி கட்டி ஏமாற்றியவரிடமிருந்து விவாக ரத்து பெற வேண்டும் என அறிவுரை வழங்கினாள். இன்னொருத்தி என்னுடைய தந்தை போட்ட அனைத்து நகைகளையும் திரும்ப பெற வேண்டும் எனச் சொன்னாள். இன்னொருத்தி தந்தை வாங்கிக் கொடுத்த சீர்வரிசை பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனச் சொன்னாள். இன்னொரு பெண் திருமணம் செய்து கொண்ட நாளன்று இரவே வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டவருடன் சேர்ந்து வாழவே கூடாது எனவும் காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சொன்னாள்.
எனது தோழியர் மற்றும் தோழர்கள் அனைவரது விருப்பப்படி நான் விவாகரத்து பெற விண்ணப்பிப்பது எனவும் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய காரணத்தால் காவல் துறையில் புகார் அளிப்பது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அச்சமயத்தில் ஒரு தோழி நகைகள் அத்தனையும் திரும்பப் பெற்றே தீர வேண்டும் என மீண்டும் சொன்ன சமயம் அவ்வாறு ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்தால் என்னுடைய மாதாந்திர சம்பளத்தின் மேல் ஆசைப்பட்டு என்னை விவாக ரத்து செய்ய மறுத்து சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தால் காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும் எனவும் அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப் பட்டது.
நான் என்னுடைய தோழியர் மற்றும் தோழர்கள் புடைசூழ காவல் நிலையத்திற்குச் சென்று தாலி கட்டியவருக்கு எதிராக புகார் மனு ஒன்றினைக் கொடுத்தேன். புகார் மனுவினை காவல் துறையினர் பெற்றுக் கொண்டு அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த சமயத்தில் இதுவரையில் இரண்டு மூன்று திருமணங்களை செய்துள்ளதாக தெரிய வந்தது.
எனவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து முடித்தவுடன் சூட்டோடு சூடாக என்னை விவாக ரத்து செய்வதற்கான விவாக ரத்து பத்திரத்திலும் போலீசார் முன்னிலையில் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதி மன்றத்தில் விவாக ரத்து கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தேன்.
காவல் நிலையத்திலிருந்து கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இதே போன்று ஏற்கனவே பல முறை திருமணங்கள் செய்து ஏமாற்றி வந்த காரணத்தாலும் என்னுடன் நடந்த திருமணத்திற்கான செயல்கள் முழுமையாக நிறைவேறாதனையும் (Unconsummated) கருத்தில் கொண்டும் எனக்கு விவாக ரத்து விரைவில் கிடைத்து விடும் என்பது தெரிய வந்தது.
அதற்குப் பின்னர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். இதற்கிடையில் எனது எதிர்காலம் பற்றி யோசித்த எனது தோழியர் மற்றும் தோழர்கள் ஒரு அறிவுரை எனக்குச் சொன்னார்கள்.
அது என்னவெனில் நமது அலுவலகத்திலேயே பணியாற்றி வருகின்ற எனது நண்பர் ஒருவருக்கு எனக்குத் திருமணம் செய்து வைக்கப் பட்ட நாளிலேயே திருமண நாள் குறிக்கப் பட்டதெனவும் திருமண நாளன்று அதிகாலையில் நண்பருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் வேறு யாரோ ஒருவருடன் ஓடிப் போய் விட்ட நிலையில் அவருக்குத் திருமணம் தடைப் பட்டு விட்டதெனவும் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறும் சொன்னார்கள். அதன் படி நான் நேரடியாக அவரிடத்தில் செல்லாமல் எனது தோழியர் மற்றும் தோழர்கள் சென்று அவரிடத்தில் பேசிய சமயம் பெற்றோர் சம்மதித்தால் அவர்கள் நல்லாசியுடன் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலையில் என்னை என்னுடைய விடுதியில் விட்டு விட்டு அனைத்து தோழியர் மற்றும் தோழர்கள் அவரது இல்லத்திற்குச் சென்று எனது நிலைமையினை தெரிவித்து திருமணத்திற்காகப் பேசினார்கள். ஆனால் அவரது பெற்றோர் தமது மகனிடத்தில் கலந்தாலோசித்த பின்னர் மணமகன் சம்மதம் தெரிவித்தும் கூட உடனடியாக திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் நியாயமாக இருந்தது.
ஒரே மகன் என்பதற்காக வசதி வாய்ப்பு உள்ள இடத்தில் பெண் தேர்வு செய்து மிகவும் ஆடம்பரமாகவும் தடபுடலாகவும் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு திருணத்தன்று அதிகாலையில் நிச்சயிக்கப்பட்ட மணமகள் வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்ட காரணத்தால் திருமணம் தடைப்பட்ட சமயம் பெண்ணிடத்தில் சம்மதம் கேட்டுக் கொள்ளாமல் திருமணம் பேசி முடித்து விட்டார்கள் என வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சொன்னது தமக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த திருமணத்தில் மணப்பெண் சம்மதம் கிடைத்து இருந்தாலும் அவளை தாலி கட்டி ஏமாற்றியவர் திரும்ப வந்து விவாகரத்து கிடைக்காமல் இருக்கும் நிலையில் மணப்பெண்ணின் மாதாந்திர வருமானத்திற்கு ஆசைப்பட்டு சேர்ந்து வாழ வேண்டுமென கட்டாயப் படுத்தினால் அவர்களின் மகனுக்கு செய்து வைக்கப் போகும் இந்த திருமணம் கூட சிக்கலாகி விடும் என பயப்படுவதாக தெரிவித்தனர். அந்த காரணத்தால் நீதி மன்றத்திலிருந்து சட்டப்படி விவாக ரத்து வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும் வரையில் காத்திருப்பது என அவர்களது முடிவினை தெரிவித்தார்கள்.
அதன்படி விவாகரத்து வழக்கு இறுதி தீர்ப்பு கொடுக்கப்படுகின்ற நாளன்று நானும் என் தோழியர் மற்றும் தோழர்கள் அனைவரும் நீதி மன்றத்திற்குச் சென்றிருந்தோம். நீதிமன்றத்தில் நீதிபதி தனது தீர்ப்பினை வழங்கினார்.
என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் திருமணம் முடிந்த பின்னர் நடைபெற வேண்டிய செயல்கள் அனைத்தும் முடிவு பெறாமையாலும் (Unconsummated) எனக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆமாம் சட்டப்படி எனக்கு நடைபெற்ற திருமணம் செல்லாது எனச் சொல்லி விவாகரத்து வழங்கப்பட்டது.
எனக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று எனது வருங்கால கணவரின் பெற்றோர் நீதி மன்றத்திற்கு நேரில் வந்து தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் என்னை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். என்னுடைய தோழியர் மற்றும் தோழர்கள் புடைசூழ பெண் பார்க்கும் படலம் முடிந்து விட்டது.
அடுத்து வந்த சுபமுகூர்த்த நாளன்று திருமணம் செய்வதென ஏற்பாடு செய்யப்பட்டது. அச்சமயத்தில் திருமண வைபவத்தில் என்னுடைய தந்தை கட்டாயம் பங்கேற்று எனக்கு நல்லாசி வழங்க வேண்டுமென எனது வருங்கால மாமனார் மற்றும் மாமியார் சொன்ன சமயம் திருமண நாளன்று எனது வீட்டில் என்னைச் சேர்க்காமல் விரட்டியடித்ததை சொன்னேன்.
ஆனால் அவர்கள் நிச்சயம் என்னுடைய தந்தையை எப்படியாவது திருமணத்தில் கலந்து கொள்ள வைப்போம் எனச் சொன்னார்கள். என்னுடைய சித்தி அதற்கு சம்மதிப்பார்களா என்பதனை நினைத்த சமயம் எனக்கு பயமாக இருந்தது.
திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு நானும் என் வருங்கால கணவரும் ஒன்றாகச் சேர்ந்து அலுவலகத்தில் கூட பணியாற்றும் தோழியர் மற்றும் தோழர்களுக்குக் கொடுத்தோம். அவரது பெற்றோர் உற்றார் உறவினர் சொந்தங்கள் அக்கம் பக்கத்தினர் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து திருமண ஏற்பாடுகள் மிக மிக ஆடம்பரமாக மேற்கொள்ளப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாளே நான் விடுதியினைக் காலி செய்து விட்டு திருமண மண்டபத்திற்குச் சென்று விட்டேன்.
திருணத்திற்கு முதல் நாளன்று என்னை எங்கள் குல தெய்வ கோவிலில் அமர வைத்து விட்டு என் வருங்கால மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் தனியாக என் வீட்டிற்குச் சென்று என் தந்தையிடத்தில் எனது திருமணத்திற்கு வாங்கிய கடனை முழுமையாக உடனே திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்திய சமயம் நான் என் மகள் திருமணத்திற்கு எந்த விதமான கடனும் வாங்கவில்லை எனச் சொல்ல அப்படியானால் குல தெய்வக் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்யுங்கள் எனச் சொல்லி அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் நான் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு என் தந்தை என்னிடத்தில் பல முறை வீட்டிற்குச் சென்று பார்த்த சமயத்தில் வீடு பூட்டியே இருந்த காரணத்தால் அக்கம் பக்கத்தில் விசாரித்த சமயம் வெளியூருக்கு இருவரும் புறப்பட்டுச் சென்றதனை அறிந்து திரும்பியதனையும் தெரிவித்தார். அதன் பின்னர் நடந்த விவரங்கள் அனைத்தையும் இரு வீட்டார் முன்னிலையில் நான் என் தந்தைக்கு விளக்கினேன்.
எனது தந்தைக்கு அங்கேயே திருமண பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுத்து விட்டு குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யச் சென்றோம். அச்சமயம் என் தந்தையிடத்தில் மறு நாள் காலையில் எனக்கு திருமணம் நடைபெறப் போகின்ற காரணத்தால் முதலில் கட்டப்பட்ட தாலியினை கழற்றி என் தந்தை கரங்களால் கோயில் உண்டியலில் காணிக்கையாக போட கோரிக்கை வைத்தனர். அதற்குக் காரணம் ஒரு திருமணம் நடக்கையில் வேறொருவர் கட்டிய தாலி கழுத்தில் இருக்கக் கூடாது என ஐதீகம் இருப்பதாகச் சொன்னார்கள்.
மறு நாள் காலையில் எனக்கும் என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றி வரும் நண்பருக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. எனது தந்தை மட்டும் என் வீட்டின் சார்பாக திருமணத்தில் பங்கேற்றார். அனைவரது நல்லாசியுடன் திருமணம் மிக மிக ஆடம்பரமாக நடந்தேறியது. திருமணமான பின்னர் நான் அவர்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த சமயம் மிக மிக சந்தோஷமாக இருந்தேன். இருக்கின்றேன். இனி எப்போதும் சந்தோஷமாகவே இருப்பேன் என்னும் பரிபூரண நம்பிக்கை என்னிடத்தில் வந்து விட்டது.
என் கணவர் இமைகள் கண்களைப் பாதுகாப்பது போல பார்த்துச் கொள்கின்றார். எனது மாமியாரை நான் அம்மா என அழைக்க ஆரம்பித்து விட்டேன். காரணம் எனக்கு உணவு ஊட்டுவதே என் மாமியார் தான். என் மாமனாரை நான் அப்பா என அழைக்க ஆரம்பித்து விட்டேன். காரணம் என் தந்தை என் மீது எவ்வளவு அன்பு வைத்து கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாரோ அதனை விட அதிக அன்பு வைத்து நான் கேட்பதற்கு முன்னமே எனக்கு வாங்கிக் கொடுக்கின்றார்.
பிறந்த தினத்திலிருந்து தாயன்புக்காக ஏங்கித் தவித்த சமயத்திலும் திருமணமான நாளன்றும் அதற்கு அடுத்த நாளன்றும் எனக்கு ஏற்பட்ட சம்பவம் ஆகியவற்றை எண்ணி கவலைப்பட்டு சோகமாக இருந்த சமயத்தில் என்ன நடக்குமோ எதிர்காலம் எப்படி அமையுமோ வாழ்வா சாவா என எதிர்பார்த்ததற்கும் எனது தோழியர் மற்றும் தோழர்களின் அறிவுறைகளின்படி என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியரை நான் திருமணம் செய்து கொண்டு வந்த சமயத்தில் எனக்கு கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை மற்றும் தாயன்பு மற்றும் தந்தைப்பாசம் ஆகியவற்றுடன் கிடைத்துள்ள நிஜ வாழ்க்கையினையும் எண்ணிப்பார்க்கும் சமயம் இறைவன் என்னை ஆரம்பத்தில் அழ வைத்து பிற்காலத்தில் மிக மிகச் சந்தோஷமாக வைத்துப் பார்க்கப் படைத்துள்ளான். அதற்கு வழிகாட்டியாக எனது தோழியர் மற்றும் தோழர்கள் இருந்தனர் என்பதனை நினைக்கும் போது நான் சந்தோஷத்தில் பூரிப்பு அடைகின்றேன். இறைவா உனக்கு நன்றி. இன்னல் நிறைந்து இருள் சூழந்த காலத்தில் எனக்கு சந்தோஷ வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்த அனைவருக்கும் எனக்குக் கிடைத்தது போன்றதொரு சந்தோஷமான இல்லற வாழ்வு கிடைக்க இறைவனிடத்தில் பிரார்த்திக்கின்றேன்.