தவறான புரிதலின் காரணமாக காதல்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். வாயால் சொல்வதும் பொய். தீர விசாரிப்பதே மெய் எனப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் விஷயத்தில் மாத்திரம் நான் தீர விசாரிக்காமல் எனக்குள் நானே ஒரு தவறான முடிவுக்கு வந்து விட்டேன்.
என் தோழி திடீரென யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் விடுப்பில் சென்று விட்ட படியால் என் தோழி பணியாற்றிய பிரிவில் என்னை பணி நியமனம் செய்தனர். நானும் பணியில் சேர்ந்து கொண்டேன்.
பணியில் சேர்ந்ததும் முதல் வேலையாக என்னுடைய இருக்கையினை அருகிலுள்ள இருக்கையிலிருந்து இரண்டு அடி தூரம் தள்ளிப் போட்டுக் கொண்டேன். என்னருகில் அமர்ந்திருப்பவர் தானாக முன்வந்து எதுவும் பேச மாட்டார். நானும் அவசியமெனில் மட்டுமே அவருடன் மிக மிகச் சுறுக்கமாகப் பேசுவேன்.
ஒரு மாத விடுப்பில் சென்ற என்னுடைய தோழி ஒரு வாரம் கழித்து அலுவலகத்திற்கு அவரைக் காண வந்த சமயம் இரண்டு இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கண்டு ஏன் இந்த மாற்றம் என என்னிடத்தில் விசாரித்தாள். அதற்கு நான் உன்னிடத்தில் அவர் மிகவும் நெருக்கமாக பழகியதன் காரணமாக ஏற்பட்ட சம்பவத்தினால் திடீரென விடுப்பில் சென்றதாக கேள்விப்பட்ட காரணத்தால் அதனைத் தெரிந்து கொள்ளும் வரையில் விலகியிருப்பது என முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்தேன்.
என் தோழி அவரைப் பற்றியும் என்னைப் பற்றியும் என்ன கேள்விப் பட்டாய் என என்னிடத்தில் விசாரித்தாள். அதற்கு நான் என்ன கேள்விப் பட்டேன் என்பதனை கடைசியில் சொல்கின்றேன் எனச் சொல்லிவிட்டு என்ன நடந்தது எனக் கேட்டேன்.
அதற்கு என்னுடைய தோழி என்னிடத்தில் முதலில் விலக்கிப் போட்ட நாற்காலியினை நெருக்கமாகப் போட்ட பின்னர் பிறர் யாரும் கேட்காதபடி மெதுவான குரலில் சொல்வதாகச் சொன்னவுடன் நான் எனது நாற்காலியை அவருக்குப் பக்கத்தில் போட்டேன்.
இன்னுமொரு நாற்காலியினை எடுத்து மிக மிக நெருக்கமாக இடைவெளி எதுவும் இல்லாமல் போட்ட பின்னர் என் தோழி நடுவில் அமர்ந்து கொண்டாள். என் தோழி என்னிடத்தில் பேசுவதை அவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என அவரிடத்தில் கேட்டுக் கொண்டாள். அவரும் சரியென ஒப்புக் கொண்ட பின்னர் என் தோழி நடந்தவற்றை விவரிக்க ஆரம்பித்தாள்.
இவர் பணியில் சேர்ந்து அநேகமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் என்னுடன் மிகவும் கலகலப்பாக பேசி மகிழ்வித்து வந்தார். என் அருகில் இவர் வந்தமர்ந்தமைக்கு நான் மிக மிக சந்தோஷமடைந்தேன். வேலையில் சேர்ந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்த சமயம் என்னால் இவர் பேச்சினைக் கேட்காமல் வீட்டில் இருப்பது போரடித்து விட்டது. காரணம் நான் இரண்டு மூன்று நாட்களிலேயே அவருடன் அலுவலகத்தில் மிக மிக நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டேன். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஏன் வருகின்றன என எண்ணக்கூடிய அளவிற்கு என் நிலைமை மாறி விட்டது.
ஆனால் விடுமுறை முடிந்து அலுவலகம் திரும்பிய பின்னர் இவர் யாரிடத்திலும் எதுவும் பேசாமல் மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். நான் பல முறை துருவித் துருவி கேட்டுப் பார்த்த பின்னர் அவருடைய முதல் காதல் பற்றியும் காதலி பற்றியும் குடும்பம் பற்றியும் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் என்னிடத்தில் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து பலப்பல கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்ட பின்னர் அரசாங்க அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் காதலித்த அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
அவர் சொன்னது கேட்ட எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது. இருந்தாலும் நான் சட்டப்படிப்பு படித்த காரணத்தால் அவருக்கு சில அறிவுறைகளை சட்டப்படி வழங்கினேன். அவருடைய கடந்த கால துயரத்திலிருந்து மீண்டு வர நான் மிகவும் உறுதுணையாக இருந்தேன்.
என் உள்மனதில் உள்ளதனை இதுவரையில் யாரிடத்திலும் வெளிப்படுத்தியது கிடையாது. இருந்தாலும் உங்கள் இருவரிடத்திலும் சொல்கின்றேன். எனக்குத் திருமணம் நடைபெற்ற ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் இவர் இங்கு பணியில் சேர்ந்தார்.
என் திருமணத்திற்கு முன்னர் இவர் பணியில் சேர்ந்திருந்தால் கட்டாயம் நான் இவரை காதலித்து வற்புறுத்தி எப்படியாவது திருமணம் செய்து கொண்டு இருப்பேன். இவரும் நானும் கணவன் மனைவியாக திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையினை ஆரம்பித்து இருப்போம். எனக்கு இவரிடத்தில் மிக மிக குறுகிய காலத்தில் அவ்வளவு நெருக்கம் ஏற்பட்டு விட்டது.
எனக்குத் திருமணம் ஆகி விட்ட ஒரே காரணத்தால் இவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என இவரிடம் நான் சொன்னதனை நம்பவில்லை. எனவே வலுக்கட்டாயமாக ஒரு நாள் மாலையில் ஆட்டோவில் இவரை எனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று என் கணவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்த பின்னர் தான் எனக்குத் திருமணம் ஆகி விட்டது என்பதனை நம்பினார்.
என் கணவரிடத்தில் பேசும் நேரத்தை விட அதிக நேரம் இவரிடத்தில் தினந்தோறும் பேசி வந்த காரணத்தால் என்னைப் பற்றிய அந்தரங்க விஷயங்கள் எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் முதன் முதலாக இவரிடத்தில் சொல்லி பகிர்ந்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. இவர் என் பெயரினைக் கூட சொல்ல விடாமல் நான் எப்போதும் அருகிலேயே இருப்பேன். நான் இவரை விட்டு விலகவே மாட்டேன். எப்போதும் மிக மிக நெருக்கமாகவே அமர்ந்திருப்பேன். ஏதாவது பேசிக் கொண்டே இருப்பேன்.
நான் மூன்று மாதம் கர்ப்பம் என என்னுடைய கணவரிடத்தில் கூட தெரிவிக்காமல் இவரிடத்தில் என் வயிற்றினைக் காட்டி முதன் முதலில் தெரிவித்தேன். எனக்கு தாகமெடுத்த காரணத்தால் தண்ணீர் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் கேரளத்துப் பெண் குட்டிக்குத் தாகமோ (என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு) எனக் கேட்டுக் கொண்டே ஒரு நகைச்சுவை சொன்னார். என்னால் சிரிப்பினை அடக்க முடியவில்லை.
என்னுடைய வாய் நிறைய தண்ணீர் இருந்த சமயம் நான் சிரித்த காரணத்தால் என் வாயிலிருந்த தண்ணீர் அத்தனையும் இவரது முகத்திலும் சட்டையிலும் தெறித்து சட்டை முழுவதும் ஈரமாகி விட்டது. நானே என்னுடைய முந்தானை கொண்டு சட்டையினைத் துடைத்து விட்டேன். முகத்தினையும் துடைத்தேன். இந்த ஹாலில் உள்ள அனைவரும் என்னிடத்தில் என்ன நகைச்சுவைக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது என அலுவலக நேரம் முடியும் வரையில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நான் இன்று வரையில் அதனை வெளிப் படுத்தவில்லை எனச் சொல்லி விட்டு என்னிடத்தில் நான் கேள்விப்பட்டதை சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.
என் தோழிக்கும் அவருக்கும் இடையே நடந்த ஒரு சம்பவத்தில் அவர் மீது காரித்துப்பி விட்டு விடுமுறையில் சென்றதாகச் சொன்ன காரணத்தால் தான் நான் அவரைக் கண்டு பயந்து நாற்காலியினை தள்ளிப் போட்டிருக்கின்றேன் எனச் சொன்னேன். அதற்கு என் தோழி நான் பணியாற்றும் பிரிவில் பணியில் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களில் அனைத்துப் பெண்களிடத்திலும் சகஜமாகப் பழகுவதை பொறுக்க முடியாத சிலர் பொறாமையின் காரணமாக இவர் மீது அபாண்டமாக பழி சுமத்துவதனை நம்ப வேண்டாம் என எனக்கு அறிவுறை வழங்கினாள்.
என் தோழி என்னிடத்தில் அவர் ஒரு கன்னத்தில் முத்தமிட்டால் மறு கன்னத்தைக் காட்டுமளவிற்கு நீயே அவர் மீது அன்பு செலுத்தி காதலிக்க ஆரம்பித்து விடுவாய் எனச் சொன்ன சமயம் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதன் பின்னர் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவகம் சென்று மதிய உணவு உட்கொண்டோம். என் தோழி சொன்ன வார்த்தைகள் நான் இரவு படுக்கைக்குச் சென்ற சமயம் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
சில நாட்களில் என்னையும் அறியாமல் நான் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். நான் எப்போதும் அவருக்கு வலது பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எனது இருக்கையினை மாற்றியமைத்துக் கொண்டேன்.
எனக்கு அலுவலகத்திலோ அல்லது வெளியிலோ விரோதிகள் யாரும் கிடையாது. என்னுடைய அழகு தான் எனக்கு விரோதி. நான் எங்கு சென்றாலும் சுற்றிலும் உள்ளவர்கள் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். சில நேரங்களில் பொதிகை தொலைக் காட்சி நேயர்கள் வலிய வந்து என்னிடத்தில் பேச்சுக் கொடுப்பார்கள். என்னை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது.
தினமும் இரவு என்னுடைய தாயார் என்னை திருஷ்டி எடுப்பதாகச் சொல்லி சூடத்தினை ஏற்றி மூன்று சுற்று சுற்றி விட்டு எரிகின்ற சூடத்தினை வாசலுக்கு முன்னர் வைத்து விட்டு வருவார்கள். விடுமுறை நாட்களில் பொதிகை தொலைக் காட்சியில் ஒளி பரப்புவதற்காக நடைபெறும் சமையல் கலை படப்பிடிப்புக்குச் சென்று வருவேன். சமையல் கலை நிகழ்ச்சி ஒளி பரப்பானவுடன் என்னுடைய தாயார் கல் உப்பு மிளகாய் துடைப்பக் குச்சி மற்றும் சில பொருட்களைக் கொண்டு என்னை திருஷ்டி எடுத்து வாசலுக்கு முன்னர் தீ வைத்து கொளுத்தி விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவார்கள். இவ்வாறு செய்யத் தவறினால் என்னுடைய உடல் நலம் திருஷ்டியின் காரணமாக பாதிப்படையும்.
எல்லோராலும் அழகானவள் என வர்ணிக்கப்பட்டு கனவுக் கன்னியாக வலம் வரும் என்னை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை என்பதனை எண்ணும் போது அழகைப் பார்த்து ஆசைப்படாமல் உள்மனதைப் பார்த்து அன்பு செலுத்துகின்ற அவரை நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல் எனக்கு வந்து விட்டது. எனவே தொடர்ந்து ஓரிரு மாதங்களில் அவரிடத்தில் மிக மிக நெருக்கமாகப் பழகி மனதைப் பறி கொடுத்து விட்டேன். ஆனால் அவரிடமிருந்து எந்த விதமான சமிக்ஞையும் எனக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஒரு நாள் அவரை என்னுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று என் தாயாரிடத்தில் அறிமுகப்படுத்தி திருமணம் செய்து சொள்ள விரும்புவதாகத் தெரிவித்தேன். என்னுடைய தாயார் சற்று கூட யோசிக்காமல் அவருக்கு என்னைப் பிடித்திருந்தால் அவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள். அதனை அவரிடம் என் தாயார் முன்னிலையில் கேட்டதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் எனச் சொன்னார்.
என்னுடைய தாயார் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் திருமணமான 5 ஆண்டுகளில் கணவர் மறைவிற்குப் பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தால் கூட்டுக் குடும்ப உறவுகளின் தயவில் நன்கு வாழ்ந்திருக்க முடியும் எனவும் நினைப்பதால் பெற்றோர் சம்மதம் இருந்தால் மட்டும் இரண்டு குடும்பத்தார் நல்லாசியுடன் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் பெற்றோர் சம்மதம் கிடைக்காது எனில் காதலை மறந்து விடுமாறும் அறிவுரைகள் வழங்கினார். என் தாயார் தமது கடந்த கால வாழ்க்கையினைப் பற்றி முதல் முறையாக அழுது கொண்டே சொன்ன ஒரே காரணத்தால் அந்த வார்த்தைகளை என்னால் மீற முடியவில்லை.
ஆனாலும் அவரை என்னால் என் மனதிலிருந்து மறக்க முடியாத நிலையில் என்னையுமறியாமல் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யும் சமயம் அவரது பெயரினையும் என்னுடைய பெயரினையும் சேர்த்துச் சொல்லும் பழக்கம் மாறவேயில்லை.
நான் கடைப்பிடித்து வருகின்ற அனைத்து நோன்பு மற்றும் விரதங்களில் என்னையும் அறியாமல் அவரை நினைத்துக் கொண்டு விரதம் மற்றும் நோன்பினை முடிப்பேன். விரதம் மற்றும் நோன்பு நாட்களில் படைக்கும் பிரசாதத்தினை அவரிடத்தில் கொடுத்து அவரது மணிக்கட்டில் கயிறு கட்டும் பழக்கம் மாறவேயில்லை.
அவரை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சனிக்கிழமைகளில் காலையில் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பதனை கைவிட முடியவில்லை.
என்னுடைய தாயார் சொல்லுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பதனால் அவர் எனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்றும் அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் வழிபாடுகள் மேற்கொள்வேன். அதற்காக அவருக்கு லேசாக ஜலதோஷம் பிடித்து இருமினாலும் சரி தும்மினாலும் சரி உடனடியாக மருத்துவரிடத்தில் அவரை அழைத்துச் சென்று காண்பித்து மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளில் ஒரு செட் நான் சாப்பிட்ட பின்னர் தான் அவருக்குக் கொடுப்பேன். அவருக்கு தொண்டையில் சதை வளர்ந்ததனால் தான் அடிக்கடி உடல் நலமின்றி கஷ்டப்படுகின்றார் என அறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இடைப்பட்ட காலத்தில் இன்னுமொரு பெண் அவருக்கு இடது பக்கம் உள்ள நாற்காலியில் பணியாற்றியபடி நெருக்கமாகப் பழக ஆரம்பித்து அவளுடைய தந்தையிடத்தில் விவரம் சொல்லி தந்தையுடன் வந்து திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டதற்கு அவர் மறுப்.புத் தெரிவித்து விட்டார்.
அனைத்திற்கும் காரணம் அவர் முதன் முதலில் காதலித்த பெண் தான் எனவும் அவரது காதலுக்கு தாயார் சம்மதித்தும் தந்தையின் பிடிவாத குணத்தினால் அவளை இழக்க நேரிட்டது எனவும் தெரிய வந்தது.
ஒரு நாள் நானும் அவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரது காதலி வீட்டிற்குச் சென்ற பின்னர் தான் தெரிந்தது அவர்களுக்கிடையே இருந்து வந்த நெருக்கம். காதல் மற்றும் காதலின் புனிதம். அவரது முதல் காதலி அழகில் என்னை விட குறைவாக இருந்த போதிலும் இருவரும் தமக்குள்ளே உள்ள அன்பினைப் பரிமாறிக் கொண்டதனை கண்ட நான் வியந்து போனேன். ஒரு சாக்லெட் கூட அவர் கடித்து கொடுத்த பின்னர் தான் அவரது காதலி சாப்பிடுகின்றாள் நான் மாத்திரைகள் சாப்பிட்டது போல. அவர் குடித்துவிட்டுக் கொடுத்த பாதி டம்ளர் காபியினைத் தான் மிக மிக சந்தோஷத்துடன பருகுவது என்னை புல்லரிக்க வைத்து விட்டது.
நான் அழகாக இருந்த ஒரே காரணத்தினால் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் வீட்டிற்கு இரண்டு குடும்பத்தார் நல்லாசியுடன் மருமகளாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. திருமணம் நடைபெற்ற சமயம் அவரும் கலந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் கூட என்னால் அவரை மறக்க முடியவில்லை. தினந்தோறும் ஒரு முறையாவது அவரை நினைத்து ஏங்குவேன்.
என்னைத் தொட்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட கணவர் எனக்கு முதலாவதாக வைர மூக்குத்தி வாங்கி பரிசளித்தார். ஆனால் நானோ மூக்கு குத்திக் கொள்வதற்குக் கூட அலுவலகத்தில் பணியாற்றி வருகின்ற அவரிடத்தில் கலந்தாலோசித்தேன். அவர் சரியெனச் சொன்ன பின்னர் தான் வைர மூக்குத்தியினை அணிந்து கொண்டேன்.
யாரோ அவர் பற்றி அவதூறாகச் சொன்ன வார்த்தைகளை நம்பி அவரை வெறுத்த சமயம் அவரால் எனக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமோ என எதிர்பார்த்ததற்கும் என் தோழியிடமிருந்து உண்மையில் நடந்தவைகளை அறிந்து கொண்ட பின்னர் அவரால் எனக்கு எந்தவித பாதிப்புகளும் வராது என்னும் நம்பிக்கை வந்த பின்னர் அவர் மீது அன்பு செலுத்தி அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யுமளவிற்கு மாறிய நிஜ வாழ்க்கைக்கும் என் தாயார் சொல்லினை தட்ட முடியாத ஒரே காரணத்தால் நிஜ வாழ்க்கையில் அவரது வழிகாட்டுதலின் படி எனது திருமணத்திற்குப் பின்னரும் கூட நடந்து கொள்வதனையும் நினைக்கும் போது என் தோழி சொன்ன வாசகங்கள் ஒரு கன்னத்தில் முத்தமிட்டால் மறு கன்னத்தை காட்டுவாய் என்பது பலிக்காமல் போனதற்கு இன்று வரையில் வருந்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.