ஆச்சிகளின் பாசம்
என்னுடைய பெற்றோர் என்னிடத்தில் எனக்குத் திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் திருமணம் குறித்து என்னுடைய கருத்தினைத் தெரிவிக்குமாறும் கேட்டனர் நான் உங்கள் விருப்பம் எனச் சொன்னேன்.
அப்போது வரன் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்னர் உன் மனதில் ஏதேனும் விருப்பங்கள் இருந்தால் தெரிந்து கொள்ளலாமே எனக் கேட்டோம் எனச் சொன்னார்கள். நான் பொதுவாக எனக்கு விருப்பம் என சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்று சொன்னேன்.
அப்போது என் பெற்றோர் என்னிடத்தில் அத்தை மகனையோ அல்லது மாமன் மகனையோ திருமணம் செய்து கொள்வதில் ஏதேனும் விருப்பம் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் முன்னமேயே தெரிவித்து விட்டால் சொந்தங்கள் விட்டுப் போகாமல் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருந்து வரும் நமது உறவினர்கள் வீட்டிலேயே வரன் பார்த்து திருமணத்தை முடித்து விடலாம் எனச் சொன்னார்கள்.
அப்போது நான் எனக்கு தாய் மாமன் மகனையும் பிடிக்கும். அத்தையின் மகனையும் பிடிக்கும். ஆனால் நான் இதுவரையில் இருவர் மீதும் அன்பு தான் செலுத்தி வருகின்றேன். இரண்டு உறவினர்களிடத்திலும் உள்ள முறைப் யையன்களை திருமணம் செய்து கொண்டு எதிர் கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இதுவரையில் எனக்கு எந்த எண்ணமும் இல்லை.
இருந்தாலும் அத்தை மகனை திருமணம் செய்து கொண்டால் மாமன் வீட்டில் என்னை மணமுடித்து வைக்கவில்லை என வருத்தப் படுவார்கள். மாமன் மகனை திருமணம் செய்து கொண்டால் அத்தை வீட்டில் தனது மகனை புறக்கணித்து விட்டார்கள் என வருத்தப் படுவார்கள். அதுவும் தவிர நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் பிற்காலச் சந்ததியினர் உடல் நலத்தில் தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் என நவீன உலகத்தில் மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றார்கள்.
எனக்கு யாரைத் திருமணம் செய்து வைத்தாலும் பூரண சம்மதம். நான் இது வரையில் யாரையும் விரும்பவில்லை. இது வரை யார் மீதும் ஆசை வைக்கவில்லை. இதுவரை யாருடனும் நெருக்கமாகப் பழகவில்லை. பச்சையாகச் சொல்லப் போனால் இது வரை நான் யாரையும் காதலிக்கவில்லை. எனவே பெற்றோர் யாரை சுட்டிக் காட்டி இவர் தான் எனக்கு மாப்பிள்ளை என்று சொல்கின்றார்களோ அவரை திருமணம் செய்து கொள்ள என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் எனச் சொல்லி விட்டேன்.
எங்கள் வீட்டில் என்னிடம் எனது பெற்றோர் திருமணம் பற்றிக் கேட்ட சமயம் நான் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் என்னுடைய நிலையிலைத் தெரிவித்து விட்டேன். ஆனாலும் எங்கள் வீட்டில் என் பெற்றோர் என்னுடைய தந்தையின் தாயார் மற்றும் என்னுடைய தாயின் தாயார் இருவரையும் கலந்து ஆலோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள் பொதுவாக இருவரையும் நான் ஆச்சி என்றழைப்பேன்.
எனது தந்தை தன்னுடைய தாயாரிடத்தில் எனது திருமணம் பற்றி யோசனை கேட்ட சமயம் அத்தையின் குடும்பம் மிகவும் வசதியானதாகவும் படித்தவர்களாகவும் பண்பானவர்களாகவும் நல்லவர்களாகவும் இருப்பதால் அத்தையின் ஒரே மகனை எனக்கு திருணம் செய்து வைக்கலாம் எனத் தெரிவித்து மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.
அதே சமயம் எனது தாயார் தன்னுடைய தாயிடம் எனது திருமணம் பற்றிச் சொன்ன சமயம் தாய் மாமன் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாணிபத்தில் ஈடுபட்டு பொறுப்புடன் இருக்கின்றார்கள் எனவும் தாய் மாமன் மகன் வாணிபத்தில் முழுமையாக ஈடுபட்டு நல்ல பெயர் வாங்கி ஊர் மக்கள் அனைவரும் தமது தேவைக்காக என்றும் எப்போதும் அந்தக் கடையினை நாடி வருவதால் தாய் மாமன் மகனை திருமணம் செய்து வைக்கலாம் எனவும் தெரிவித்து அவர்களும் மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.
எனது பெற்றோருக்கு இருவருடைய அன்னையரிடத்திலும் யோசனை கேட்டது மிகப் பெரிய சிக்கலாகி விட்டது. அப்போது தான் நான் சொன்ன வார்த்தைகள் என் பெற்றோருக்கு பொன் மொழிகளாக தெரிந்தது. அதாவது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டால் மாமன் வீட்டு உறவினர் வருத்தப் படுவார்கள். மாமன் மகனை திருமணம் செய்து கொண்டால் அத்தை வீட்டு உறவினர் வருத்தப் படுவார்கள். பிற்காலத்தில் ஏதேனும் ஒரு உறவு விட்டுப் போகலாம் என்னும் நிலையினைக் கூட எண்ணிப் பார்த்தார்கள். அத்துடன் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாரிசுகளின் உடல் நலம் பாதிக்கும் என்கின்ற மருத்துவர்களின் ஆலோசனை பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் என்னுடைய ஆச்சிகள் வருத்தப்படக் கூடாது என்னும் ஒரே நோக்கில் திருமண வயதாகி விட்ட எனக்கு வெளியில் வரன் தேட ஆரம்பித்தார்கள். அத்தை மகனையோ அல்லது மாமன் மகனையோ திருமணம் செய்ய நினைத்தால் ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத ஒரு முகூர்த்த நாளன்று திருமணத்தை வெகு சீக்கிரத்தில் முடித்து விடுவார்கள்.
ஆனால் உறவினர்களுக்குள் இல்லாமல் வெளியில் வரன் பார்க்க ஆரம்பித்த காரணத்தால் ஜாதகம் மற்றும் படிப்பு விவரங்கள் மற்றும் குடும்பம் பற்றிய அத்தனை தகவல்களையும் குறிப்பிட்டு திருமண தரகர்கள் மூலமாகவும் வலைத்தளங்கள் மூலமாகவும் வரன் தேட ஆரம்பிப்பார்கள். என்னுடைய ஜாதகப்படி திருமணத்திற்கான காலம் ஆரம்பித்து இருந்த காரணத்தால் விரைவில் வரன் அமைந்து விட்டது.
எனது ஆச்சிகள் இருவரும் உள்ளுரிலேயே மாப்பிள்ளை இருக்க வேண்டும் என ஆசைப் பட்டார்கள். மாப்பின்ளையின் குடும்பம் உள்ளுரில் இருந்தது. ஆனால் மாப்பிள்ளை வெளி நாட்டில் மிகப் பெரிய பதவியில் இருந்தார். இதுவரையில் விமானத்தில் பயணிக்காத நான் வெளி நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டால் விமானத்தில் பறக்க முடியும் என சந்தோஷப்பட்டேன்.
மாப்பிள்ளை என்னைப் பார்த்தவுடன் அங்கேயே பிடித்திருக்கின்றது எனச் சொல்லிவிட்ட காரணத்தால் அடுத்து வந்த சுபமுகூர்த்த நாளன்று 15 நாட்களுக்குள் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு மாத காலத்தில் திருமணம் முடிந்து நானும் வெளி நாடு புறப்பட்டேன்.
என்னைத் திருமணம் செய்து கொண்ட என் கணவர் என்னை மிகவும் அன்பாக கவனித்துக் கொண்டார். தினமும் இருவர் வீடடிற்கும் வீடியோ அழைப்பு மூலம் உரையாடி மகிழ்ந்தேன். சில மாதங்களில் நான் காப்பிணியானேன். அச்சமயம் வளை காப்பு நடத்துவதற்காக என்னை சொந்த ஊருக்கு வருமாறு அழைத்த காரணத்தால் ஐந்தாம் மாதத்தில் சொந்த ஊருக்கு திரும்ப வந்து வளை காப்பு முடிந்தவுடன் வெளி நாட்டுக்குத் திரும்பினேன்.
எனது ஆச்சிகள் இருவரும் கர்ப்பிணிப் பெண்ணான எனக்கு சத்தான உணவு வகைகளை தம் கைகளால் சமைத்துப் பரிமாற முடியவில்லை என ஏக்கமடைய ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் பிரசவத்திற்கு நான் சொந்த ஊருக்கு வருவேன் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் சொந்த ஊரில் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைக்கு தனியாக பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவை பெற வேண்டியிருக்கும் என பலப்பல சட்டங்களை சுட்டிக்காட்டி இருவரது பெற்றோரை மாத்திரம் வெளி நாட்டிற்கு வரவழைத்து பிரசவத்தை முடித்தார்கள்.
எனக்குப் பிறந்த ஆண் வாரிசை நான் மூன்று மாதங்கள் கழித்து தான் சொந்த ஊருக்கு அழைத்து வர முடிந்தது. அச்சமயம் சொந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தகவல் தெரிவித்து அனைவர் முன்னிலையிலும் குழந்தைக்குப் பெயர் சூட்டி அந்த விழா முடிந்த ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் வெளி நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
என்னுடைய ஆச்சிகள் இருவரும் என்னுடைய வாரிசை விட்டுப் பிரிய மனமில்லாமல் என்னை அத்தை மகனுக்கோ அல்லது மாமன் மகனுக்கோ திருமணம் செய்து வைத்திருந்தால் எனக்குப் பிறந்துள்ள குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க முடியும் எனச் சொல்ல அவர்களது கடந்த கால ஆசைகளையும் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் நினைத்து தமது ஏக்கங்களை தெரிவித்தனர்.
அவர்களது ஏக்கம் சரியாகத் தான் இருக்கின்றதென்பதனை நான் வெளி நாடு திரும்பச் சென்று குழந்தையை தனியே குளிப்பாட்டி பாலூட்டி உடைமாற்றி வளர்ப்தில் உள்ள சிரமங்களை அறிந்த சமயம் உணர்ந்தேன். விமானத்தில் பறக்காத நான் வெளி நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டால் சொகுசான வாழ்க்கை வாழ முடியும் என்று தான் நினைத்தேனே தவிர சொந்தங்களின் அன்பினை இழந்து விடுவோம் என நினைக்கவில்லை.
ஆமாம் எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே ஆசாபாசங்கள் சொந்த பந்தங்களின் அன்பான உபசரிப்பு நிறைய வித்தியாசப் படுகின்றது என்பதனை உணர்ந்து கொண்டேன்.